சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Sept 2015

ரிவால்டோ எனும் யானையும் மார்க் எனும் மனிதனும்!

நீலகிரி மலையின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் முதுமலை, கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர், கேரள மாநிலத்தின் வயநாடு ஆகியவை, இந்தியாவின் மிக முக்கியமான வன விலங்கு சரணாலயங்கள். இந்தப் பகுதியில் ஏராளமான கிராமங்களும், விளை நிலங்களும் இருக்கின்றன. மனிதர்கள் - விலங்குகள் மோதல் ஒரு பக்கம் நடந்தாலும், வனத்தையும் வன விலங்குகளையும் நேசிக்கும் மனிதர்கள்தான் இங்கு ஏராளம்.
ஊட்டியில் இருந்து கல்லட்டி, மசினகுடி வழியாக முதுமலை வனச் சரணாலயம் செல்லும் சாலை அது. பைசன் வேலி வியூ பாயின்ட் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்தது அந்த ஆண் யானை. அந்த வழியாக காரில் சென்றவர்கள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். அது பழகிய யானை அல்ல... காட்டு யானை. அதுவும் ஒற்றை ஆண் யானை. எப்போது சாந்தமாக இருக்கும்; எப்போது தாக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனாலும், அமைதியாக நிற்பது சிங்கம் என்றாலும், அதைச் சீண்டிப் பார்ப்பது நமது குணம் அல்லவா! அந்த வழியாக வந்த வனத்துறை ஊழியர், அங்கே நின்றிருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அனுப்பிவிட்டு, அமைதியாக நின்றிருந்த யானையை நோக்கிக் குரல் கொடுத்தார். சட்டென சரிவில் இறங்கி மறைந்தது அந்த யானை.


காட்டு யானை இயல்புக்கு மாறாக இருக்கிறதே என அவரிடம் விசாரித்தோம். ''அது காட்டு யானைதான். ஆனால், அது இந்தப் பகுதி மக்கள் சொல்வதைக் கேட்கும். அந்த யானையின் பெயர் ரிவால்டோ; அதனால் தும்பிக்கையால் சாப்பிட முடியாது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள்தான் அதற்கு பாறை மீதோ அல்லது மரத்தின் மீதோ உணவு வைப்பார்கள். அது நேரடியாக வாயால் கடித்துச் சாப்பிடும்'' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். மசினகுடியில் ரிவால்டோவைப் பற்றி விசாரித்தோம். அங்கிருக்கும் அனைவருக்கும் ரிவால்டோ பரிச்சயமான பெயர். முதுமலை சரகத்தில் வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவரான சார்லஸ் கார்பீல்ட், ரிவால்டோ அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.    
கடந்த 1998-ம் ஆண்டுவாக்கில் மசினகுடி அருகேயுள்ள மாவனல்லா கிராமத்துக்கு காயம்பட்ட நிலையில்,ணோர் ஆண் யானை வந்துள்ளது. அந்த யானையின் தும்பிக்கையின் முன் பகுதியில் பலத்த காயம். காட்டு பன்றிகளைப் பிடிக்க யாரோ வைத்த பொறியில் சிக்கி, யானையின் தும்பிக்கையின் முன் பகுதி 4 இன்ச் அளவுக்கு துண்டாகியுள்ளது. யானைக்கு பல் எப்படி முக்கியமோ, அது போலவே தும்பிக்கையும் மிக முக்கியம். காட்டு யானைகள், தும்பிக்கையை வைத்துதான் வாசனை பிடித்து, புற்களை இழை தழைகளைப் பறித்து அவற்றில் உள்ள மண்ணை காலால் உதறி தட்டிவிட்டு சாப்பிடும். தும்பிக்கையின் முனையில் இருக்கும் ஒற்றை விரல் போன்ற உறுப்புதான், மிக முக்கியமான பாகம். இதில்தான் இலை தழைகளை சுருட்டிப் பிடித்து எடுத்துச் சாப்பிடும். அந்த நுனிப்பகுதி துண்டானதால், எதையும் பற்றிப் பறித்துச் சாப்பிட முடியாமல் சோர்ந்து களைத்த நிலையில் இருந்தது. அதோடு, தும்பிக்கையில் புண் ஏற்பட்ட வலியிலும் அந்த யானை அவஸ்தைப்பட்டது. உணவு சாப்பிட முடியாமல் நாளுக்கு நாள் மெலிந்து போய் நடக்கவே முடியாத நிலையில் இருந்தது அந்த யானை.

ஊட்டியைச் சேர்ந்த மார்க் என்பவர், மாவனல்லா கிராமத்தில் வசித்துவந்தார். இவர் ஓர் இயற்கை நேசர். காட்டை பாதுகாப்பதிலும் வன விலங்குகளை நேசிப்பதிலும் வளர்ந்த ஆர்வம், ஒரு கட்டத்தில் ஊட்டியைவிட்டு காட்டுக்குள் இருக்கும் அவரது இடத்தில் விடுதி கட்டி வசித்துவந்தார். அவருக்கு வன விலங்குகளைக் கண்டு பயம் கிடையாது. அவரது விடுதியைச் சுற்றி வனவிலங்குகள் வருவது சாதாரணம். எதற்கும் இடைஞ்சல் தராமல் இருப்பவர். இவர் ஒரு ஃபுட்பால் பிரியரும்கூட. பொதுவாக, ஆண் யானைகள் தனியாகத்தான் காட்டுக்குள் சுற்றித் திரியும். அப்படி தனியே சுற்றும் ஆண் யானைகளை அடையாளம் கண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்திருப்பார். தும்பிக்கையில் காயம்பட்ட யானை இவரது விடுதிக்கு அருகே வந்துள்ளது. அதனால், தும்பிக்கையால் சாப்பிடமுடியாது என்பதை அறிந்தவர், அதற்கான தீனியை ஒரு மரத்தின் கிளை மீது வைக்கவும், வாயால் கடித்துச் சாப்பிட்டது அந்த யானை. காயம்பட்டிருந்ததால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தினசரி மார்க்கின் விடுதிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வர ஆரம்பித்தது. காட்டு யானைகளுக்குள் சண்டை வருவது சகஜமான விஷயம். அதில், யானைகள் இறந்த சம்பவங்களும் உண்டு. அப்படி காயம்பட்ட காட்டு யானைகளுக்கு, அவை விரும்பி உண்ணும் உணவில் வனத்துறையினர் மருந்தைக் கலந்துவைப்பார்கள். அதைச் சாப்பிடும் யானைகள் குணமடையும். அதேபோல, தும்பிக்கையில் காயம்பட்ட இந்த யானைக்கும் வைத்துள்ளனர். அதைச் சாப்பிட்டு காயம் ஆறிய யானை மார்க்கின் விடுதிக்கு ரெகுலர் விசிட்டை மறக்கவில்லை. 

கால்பந்து ரசிகரான மார்க், அங்கு வரும் யானைகளுக்கு ரொனால்டோ, சிடேன், காகா என்றெல்லாம் பெயர் வைப்பார். காட்டு யானைகளிடம் பழகவும் முற்படுவார். அந்த வகையில் காயம் பட்டுவந்த இந்த யானைக்கு பிரேசில் அணியின் புகழ்பெற்ற 'மிட்பீல்டர்' ரிவால்டோவின் பெயரைச் செல்லமாக சூட்டி அழைத்துவந்துள்ளார். ரிவால்டோவின் முன் நெற்றியில் வெள்ளையாக இருந்ததால், இதற்கு வெள்ளையன் எனப் பெயர் வைத்தது வனத்துறை. அதன் மெலிந்த தோற்றம் மார்க்குக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத் துறையினரோ அது விரைவில் இறந்துவிடும் என்றே நினைத்தனர். காரணம், மாற்றுத் திறனாளியாக, சுயமாக சாப்பிட முடியாத விலங்கு, காட்டில் வாழ்வது சாத்தியமே இல்லை. மேலும், மற்ற ஆண் யானைகளிடம் இருந்தும் ரிவால்டோ தப்பிக்க வேண்டும். ஆனால், மார்க் அதற்கு தொடர்ச்சியாக உணவுவைப்பது தொடர்ந்தது. அதனிடம் நெருங்கியும் பழக ஆரம்பித்தார். ஒரு கட்டத்திதில் உணவை நேரடியாக ரிவால்டோவின் வாயில் ஊட்டும் அளவுக்கு பழகிவிட்டார். இதனால் ரிவல்டோவுக்கும் மார்க்குக்கும் நெருக்கம் அதிகரித்தது. மார்க்கிடம் பழகும் காட்டு யானயைப் பார்க்க அவரது விடுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. காட்டு யானையை பழகிய யானை போல அருகே செல்வது ஆபத்து என்பதால், அதற்கு வனத்துறை எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் பின்பு, சுற்றுலாப் பயணிகளை ரிவால்டோ அருகே அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மார்க் இறந்துபோனார். ரிவால்டோவுக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது. ஆனால், மார்க்கின் விடுதி அருகே வந்து நிற்கும் வழக்கத்தை மாற்றாமல் இருந்தது ரிவால்டோ. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், ரிவால்டோவுக்கு உணவு வைப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர். இப்போது, அந்தப் பகுதி மக்களுக்கு ரிவால்டோ செல்லப் பிராணி போல மாறிவிட்டது. அது எங்கே நின்றாலும் அந்த வழியாகச் செல்பவர்கள் ஏதாவது உணவு கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதேசமயம், பலமுறை மற்ற யானைகளுடன் ஏற்பட்ட சண்டையால் காயம்பட்டும் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் வனத்துறை மருந்து உணவு கொடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. மர தழைகளை வெட்டி எடுத்து வந்து, அதனை ரிவால்டோ யானை சாப்பிடும் வகையில் உயரமான பாறை பகுதியில் வைத்தால், தும்பிக்கையை பயன்படுத்தாமல், வாயை வைத்து சாப்பிட ரிவால்டோ தற்போது நன்றாகப் பழகிவிட்டது. தற்போது சுமார் 45 வயதான ரிவல்டோ, கடந்த 17 ஆண்டு காலமாக இப்படிதான் உணவு உட்கொண்டு வருகிறது. 

கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு, யானை தந்தங்களை கடத்தும் கேரள கும்பல் ஒன்று ரிவால்டோ யானையை சுட்டு தந்தத்தை கடத்த திட்டமிட்டுருப்பதாக ரகசியத் தகவல் வனத்துறைக்குக் கிடைத்தது. இதையடுத்து முதுமலை வனச் சரணாலயத்துக்கு கொண்டுசென்று ரிவால்டோவை பழக்கப்படுத்த வனத்துறை முயற்சி எடுத்தது. இதற்காக, ரிவால்டோவை பிடிக்கவும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ஆவேசம் அடைந்த யானை, வனத் துறையினரை தாக்க முற்பட்டுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அந்த முயற்சியை கைவிட்டாலும், ரிவால்டோவை பாதுகாப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துவருகின்றனர். தற்போது வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது ரிவால்டோ.

''மார்க் எனும் மனிதரின் தொடர் முயற்சிதான், ரிவால்டோ உயிரோடு இருக்கக் காரணம்'' என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்!


No comments:

Post a Comment