சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Sep 2015

“ஸாரி வடிவேல் சார்!”

''நான் இதுவரைக்கும் 13 படங்கள் பண்ணியிருக்கேன். அதுல 'காதல் மன்னன்’, 'பார்த்தேன் ரசித்தேன்’, 'ஜே! ஜே!’ இதெல்லாம் காதல் ஜானர். 'அமர்க்களம்’, 'அட்டகாசம்’, 'அசல்’... ஆக்ஷன் ஜானர். இப்போ 'ஆயிரத்தில் இருவர்’ எனக்கு 14-வது படம். இதில் ஹீரோவுக்கு ரெண்டு கேரக்டர். அந்த ரெண்டு கேரக்டரையும் எவ்வளவு யதார்த்தமா வித்தியாசப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முயற்சி பண்ணியிருக்கேன்.
 ரெட்டை வேஷம் என்பது, ரசிகர்கள் தெரிஞ்சே சந்தோஷமா ஏமாறுகிற ஒரு விஷயம். பி.யூ.சின்னப்பாவில் ஆரம்பிச்சு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜித்னு பல நட்சத்திரங்கள் எப்படி எல்லாம் ஏமாத்துவாங்கனு நாம பார்த்திருக்கோம். ஆனா, ஒரு பெரிய ஸ்டார் படத்தில் ரெட்டை வேஷம் பண்றதுக்கும், வினய் மாதிரியான வளர்ந்துவரும் ஒரு நடிகரை வெச்சுக்கிட்டு ரெட்டை வேஷம் பண்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அப்படிப் பார்த்தா, இது என் சினிமா கேரியர்ல புதிய, பெரிய முயற்சி'' - மென்மையாக, தன்மையாகப் பேசுகிறார் இயக்குநர் சரண்.

''ஏன் நடுவுல அஞ்சு வருஷ இடைவெளி?''
''இந்தி படம் பண்ணலாம்னு மும்பையிலயே தங்கிட்டேன். ஆனா, பலப்பல காரணங்களால் அது தள்ளிப்போயிட்டே இருந்தது. சரி... இந்தி படம் அப்புறமா பண்ணிக்கலாம்னு,  இந்தப் படத்தை ஆரம்பிச்சுட்டேன். ஒரு விஷயம் புதுசா சிக்கியது. இந்தப் படத்தில் ஆறு லேயர்கள் வெச்சிருக்கேன். அதில் உள்ளுக்குள்ளே வளையம் மாதிரி திரைக்கதை ஒண்ணை ஒண்ணு இழுத்துட்டு வரும். 'அமர்க்களம்’ படத்தில் ரகுவரன் மகன்தான் அஜித்னு ரசிகர்களை கடைசிவரை நம்பவெச்சுட்டு, கடைசியில 'இல்லை... ஷாலினிதான் அவர் பொண்ணு’னு ட்விஸ்ட் காட்டியிருப்பேன். அதில் ரெண்டு லேயர்கள்தான். இந்தப் படத்தில் அப்படி ஆறு லேயர்கள். மொத்தக் கதையும் ஆறு பெண்களைச் சுற்றிவரும். இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் வடிவேல் நடிக்க ஆர்வமா இருந்தார். அவர் ஹீரோவா நடிச்ச படம் ரிலீஸ் ஆகிறவரைக்கும் வேறு படத்துல நடிக்கக் கூடாதுனு அவரோட அக்ரிமென்ட் இருந்தது. அதனால் அவரால் நடிக்க முடியலை... எங்களால காத்திருக்க முடியலை. ஸாரி வடிவேல் சார். படத்தில் டாட்டூக்களுக்கு பெரிய ஸ்பேஸ் உண்டு. ஹீரோயின் உடம்பில் முக்கியமான இடத்தில் ஒரு டாட்டூ உண்டு. அது சாதாரண டாட்டூ இல்லை; சுவிஸ் சீக்ரெட் கோட் உள்ள டாட்டூ. இப்படிப் படம் முழுக்க நிறைய கலர்ஃபுல் விஷயங்கள் உண்டு.''
''அஜித்தை வெச்சு நீங்க இயக்கியதில் 'அசல்’ படம் பெருசா போகலை... அதில் எதுவும் வருத்தம் உண்டா?''
''அந்தப் படம், பார்க்க ஐரோப்பிய ஃபீல்ல இருக்கணும்னு திட்டமிட்டுப் பண்ணது. அப்போ எல்லாரும் படங்களில் பன்ச் டயலாக் பேசிட்டு இருந்தாங்க. அந்தச் சமயம்தான் அஜித் சார் அதிரடியா தன் ரசிகர் மன்றங்களைக் கலைச்சார். படத்துல பன்ச் டயலாக் வேணாம்னு 'அசல்’ படத்துக்கு 'பவர் ஆஃப் சைலன்ஸ்’னு கேப்ஷன் கொடுத்தார். ஒரு மாஸ் நடிகர் ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாரான சமயம் அது. அதனால் அந்தப் படத்தில் வழக்கமான மசாலாக்களைக் குறைச்சுட்டோம். அஜித் சாரின் முந்தைய படங்களைப் பார்த்தவங்களுக்கு, 'அசல்’ படத்தில் கொஞ்சம் வேகம் குறைவா இருக்கும். ஆனா, அதுவும் செம ஸ்டைல் சினிமாதான்!''

''நிறையக் கடன் பிரச்னைகளில் சிக்கிட்டு இருந்தீங்களே...           அதுல இருந்து வெளியே வந்தாச்சா?''
''சினிமாவில் கடன் இல்லாம யாரும் இல்லை. எவ்வளவு கடன் இருக்குங்கிறதுதான் மேட்டர். இப்போ கொஞ்சம் கொஞ்சமா அதிலே இருந்து வெளியே வந்துட்டேன். ஆனா, நம்பிக்கை துரோகத்தின் வலி மட்டும் இன்னும் போகலை. இருந்தாலும் அதான் என்னை ஓடவெச்சுட்டே இருக்கு!''

வெள்ள துரையா... வெள்ளக்கார துரையா?

போலீசை பற்றி யார் அநாகரீகமான முறையில் பேசினாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஒழுக்கமான காவல் துறையை தவறாகப் பேசினால் கட்டாயம்  நீதிமன்றத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தேதுமில்லை.
  
அதே நேரத்தில் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு, லாக் அப் பலாத்காரம், வேண்டுமென்றே விசாரணையின் போது துப்பாக்கியால் சுடுவது என அநாகரீகமாக நடந்து கொள்ளும் போலீசார் பற்றி உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பத்திரிகைகள், நீதிமன்றங்கள், நேர்மையான காவல் துறை உயர் அதிகாரிகள், எப்படி நாகரீகமாக காவல் துறையை பற்றி சொல்ல முடியும்?

மக்கள் அடையாளம் காட்டும் நேர்மை இல்லாத போலீசை உங்களால் கைது செய்து சிறையில் தள்ள முடியுமா என்பதே கேள்விக்குறியதாக இருக்கும் போது, போலீஸ் மீதான    விமர்சனத்திற்கு சிறை என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. பிடிக்காதவர்களை சிறைக்கு அனுப்பவும், பிடித்தவர்களை வெளியே விடச் சொல்லி சிபாரிசு செய்யும் அரசியல்வாதியை சிறைக்கு அனுப்புவேன் எனச் சொல்ல முடியுமா?

சுடுவேன், கைது செய்து சிறைக்கு அனுப்புவேன் என நேர்மை அற்ற போலீசை, சமூக விரோதிகளை, அரசியல்வாதிகளை பார்த்து சொல்லுங்கள்... சமூக நோக்கத்துடன் நேர்மையான விமர்சனம் செய்யும் அப்பாவிகளைப் பார்த்து சொல்லாதீர்கள். உங்கள் வீரம் இலங்கை கடற்படைக்கு எதிராகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் இருக்கட்டும். உள்ளூர்  அப்பாவிகளிடம் வேண்டாம்.

நேர்மையான காவல் அதிகாரி, போலீசார் லஞ்சம் வாங்கினால் என்னிடம் சொல்லுங்கள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த காவலர்களை சிறைக்கு அனுப்புகிறேன், அடாவடி அரசியல்வாதியைப் பற்றி சொல்லுங்கள், ஊழல் செய்யும் அரசியல்வாதியை அடையாளம் காட்டுங்கள் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறேன், ஜாதி மத மோதலை ஏற்படுத்துபவர்களை என்னிடம் சொல்லுங்கள், குற்றவாளிக்கு அதரவாக பேசும் அரசியல்வாதியை பற்றி ஆதாரத்துடன் சொல்லுங்கள் சிறைக்கு அனுப்புகிறேன்    என்று சொல்லி இருந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

நேர்மையான போலீசை தவறாகப் பேச வேண்டும் என்ற வரம் யாரும் வாங்கவில்லை. தவறாக நடக்கும் அனைத்து துறைகளையும் மக்கள் தவறாகத் தானே பேசுவார்கள்.
காட்டில் வாழும் மிருகங்களை வாழ வைக்க வீரப்பனுக்கு முடிவு கட்டிய வெள்ளத்துரை, நாட்டில் வாழும் மக்களை வாழ வைக்க காவல் துறையில் லஞ்சம், அடாவடி அரசியல், ரௌடிகளின் ஆதிக்க  அரசியலுக்கு முடிவு கட்டாமல், காவல்துறை பற்றிய விமர்சனத்திற்கே சிறைக்கு அனுப்புவோம் என்று மக்களை மிரட்டுவது போல  பேசுவது துரதிஷ்டமே.  

அநாகரீகமாக திண்டுக்கல் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த எஸ்.ஐ. மீது  நாகரீகமான விமர்சனத்தை எதிர்பார்க்க முடியுமா? கண்பார்வை இல்லாதவர்களை சுடுகாட்டில் இறக்கி விட்ட காவல் துறையை யார் தான் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்? விமர்சித்தால் சிறை அனுப்புவேன் என்று சொன்னால், நாளை நீதிமன்றம் காவல் துறையை விமர்சித்தால், இதே நிலை நீதிமன்றத்திற்கும் வருமா? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் போலீஸ் உயர் அதிகாரி நடு நிலையோடு செயல்படாமல், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் செயல்பட்டதை  மக்கள் எப்படி விமர்சிக்காமல் இருப்பார்கள்?

காவல் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களது தற்கொலைக்கான உண்மைக் காரணம் அறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிறையில் தள்ள முடியுமா?

நீங்கள் சட்டம் ஒழுங்கைக் காக்க யாரையாவது சுட்டுக் கொல்ல  வேண்டும் என்று நினைத்தால் இந்த நாட்டில் துப்பாக்கி குண்டுகள்   சத்தம் ஓயாது. பல கோடிப்பேரின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவல் துறை ஒழுக்கச் சீரழிவை தடுத்து காவல் துறையின் புகழை நிலை நிறுத்துவது, பல கோடி ரௌடிகள் மேலும் உருவாகாமல் தடுத்து நிறுத்த உதவும். துப்பாக்கி தூக்கி காவல் துறை புகழை நிலைநாட்டுவதை விட, நாம் இருக்கும் துறையை சுத்தம் செய்தாலே விமர்சனங்கள் குறைந்து போலீஸ் மீது மதிப்பு கூடும்.


'அறம் செய விரும்பு' திட்டத்தில் களத்தில் 100 இளைஞர்கள் உள்ளது போல, லஞ்சம் ஒழிய 100 பேரை போலீஸ் துறையில் ஒன்று சேருங்கள். சமூகத்தில் நேர்மையானவர்கள் ஒன்று சேர்ந்தால் விமர்சனத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் விடிவு காலம் உண்டு.   போலீஸ் சங்கம் அமைக்கத்தான் தடை உள்ளது நேர்மையானவர்கள் ஒன்று சேர, சாதனை செய்ய தடை ஏதுமில்லை. அரசியலுக்கு, லஞ்சத்திற்கு அடிபணியாத நேர்மையான   போலீசுக்கு மக்கள் என்றும் உங்கள் நண்பன் தான்.


புலி... தல... சிங்கம் ஸ்ருதியின் ஹாட்ரிக் !

'ட்ரிபிள் டீல்’ உற்சாகத்தில் திளைக்கிறார்  ஸ்ருதி. விஜய், அஜித், சூர்யா... என மூன்று மாஸ் ஹீரோக்களுடன் ஒரே சமயத்தில் நடிப்பது, தென்இந்தியாவின் 'ஹிட் ஹாட் ஹீரோயின்’ அந்தஸ்து என, அழகியை பல சந்தோஷங்கள் இன்னும் அழகாக்கியிருக்கின்றன!   
''அதென்ன சொல்லிவெச்ச மாதிரி விஜய், அஜித், சூர்யாகூட நடிக்க ஒரே சமயத்துல கமிட் ஆகியிருக்கீங்க?''
''ஹாட்ரிக் ஜாக்பாட்! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வெர்ஷன். அவங்ககிட்ட பல விஷயங்கள் கத்துட்டே இருக்கலாம். விஜய் சார் ரொம்ப அமைதி... பொறுமை. ஆனா, அதெல்லாம் ஃப்ரெண்ட்லியா பழகும்போதுதான். கேமரா முன்னாடி நின்னுட்டா ஒரு ஃப்ளாஷ்ல  ஆளே மாறிடுவார். ஒரு சின்ன சிரிப்புல நம்மை ஓவர்டேக் பண்ணிடுவார். ஷாட்ல அவர்கிட்ட கேர்ஃபுல்லா இருக்கணும்.

தமிழ் சினிமாவில் நான் சந்திச்சவங்கள்ல அஜித் சார் எனக்கு ரொம்பப் பிடிச்ச, முக்கியமான நபர். இயக்குநர் தொடங்கி லைட்மேன் வரை எல்லாரிடமும் ஒரே மாதிரி  தன்மையாகப் பழகுவார். நம்ம பிரச்னையை நம்மளைவிட நல்லா புரிஞ்சுக்கிட்டு, நம்மளைக் கச்சிதமா வழிநடத்துவார். எதுவா இருந்தாலும் 'ப்ளீஸ் டேக் கேர்’னு அவர்கிட்ட கொடுத்துரலாம். அதுக்கு ரொம்பச் சின்ன உதாரணம், அவர் என்னை எடுத்த போட்டோஸ்.   அந்த போட்டோ எல்லாம் பார்த்துட்டு அப்பா, அம்மானு என் சர்க்கிள்ல எல்லாரும் பாராட்டினாங்க. 'சிலர் போட்டோ எடுப்பாங்க. சிலர் போட்டோவுல கதை சொல்வாங்க. இதில் அஜித் ரெண்டாவது பிரிவு’னு கமென்ட்ஸ் குவிஞ்சது.
சூர்யாவோடு வொர்க் பண்ண எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  அவர்கூட நடிக்கும்போது ஒரு ஹோம்லி ஃபீல் கிடைக்கும். வாழ்க்கையில் யாராவது ஏதாவது நல்லது செஞ்சா, அவங்களை மறக்கவே கூடாதுனு சொல்வாங்க. எனக்கு சூர்யா அந்த மாதிரியான மறக்கக் கூடாத மனிதர். 'சிங்கம்-3’-க்காக அவருடன் மறுபடியும் நடிக்கிற நாளை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கேன்!''
''அக்ஷரா என்ன பண்றாங்க... இன்னும் அடுத்த படம் கமிட் ஆகலைபோல?''
''யெஸ்... அது அவங்க முடிவு. அக்ஷராவுக்கு நான் சப்போர்ட் பண்ணலாம். ஆனா, அவங்களுக்கு எது பெஸ்ட்னு அவங்கதான் தீர்மானிக்கணும். அவங்களுக்கு நடிப்பைவிட டைரக்ஷன் மேலதான் ஆர்வம். பார்க்கலாம்... என்ன பண்றாங்கனு!''
''நீங்க நடிக்கிற படங்கள்ல ஹன்சிகா, லட்சுமி மேனன்னு... இன்னொரு ஹீரோயின் கட்டாயம் இடம்பிடிச்சுடுறாங்களே?''
''எனக்கு கதையும் கேரக்டரும்தான் முக்கியம். எத்தனை பேர் நடிக்கிறாங்கங்கிறது முக்கியம் இல்லை!''
'' 'ஹேய்... சூப்பரா நடிச்சிருக்கப்பா!’னு உங்க ஃப்ரெண்ட்ஸ் உங்களைப் பாராட்டின படங்கள்  என்னென்ன?''
''ம்ம்ம்... ரெண்டு படம். தமிழ்ல '3’, இந்தியில் 'டி டே’!''
''ஸ்ருதிக்கு ஸ்ருதிகிட்டயே பிடிச்சது... பிடிக்காதது?''
''பிடிச்சதுன்னா.... தீர்க்கமா முடிவெடுத்தா அதை ஃபாலோ பண்றது. அது கஷ்டமா இருந்தாலும், 'பரவாயில்லை... இது உன்னால முடியும்’னு தீர்மானமா இருப்பேன். பிடிக்காத விஷயம்னா... கோபம் அதிகமா வர்றது!''
''உங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர் யார்?''
''அனிருத். அவரோட மியூசிக்னா எனக்கு ஆல்வேஸ் இஷ்டம்!''
''மியூசிக் டைரக்டர் ஸ்ருதியை 'கேட்கவே’ முடியலையே...''
''இப்போ என் கவனம் முழுக்க நடிப்பில்தான். ஏன்னா, ஒரு ஹீரோயினா சில கேரக்டர்களைக் குறிப்பிட்ட வயசுலதான் பண்ண முடியும்.

70 வயசுலகூட 13 வயசுப் பொண்ணு மாதிரி பாடிரலாம். ஆனா, அப்படி நடிக்க முடியாதே. அதான் இப்போதைக்கு சினிமா அண்ட் சினிமா ஒன்லி. ஆனா, சீக்கிரமே மியூசிக் பண்ணுவேன்!''
''ஹீரோயினா அழகா, ஸ்லிம்மா இருக்கிறதுல என்ன கஷ்டத்தை உணர்றீங்க?''
''கஷ்டம்னு எதுவும் இல்லை. ஜிம் வொர்க்-அவுட், உடற்பயிற்சிகள், எண்ணெய் இல்லாத சாப்பாடுனு வழக்கமான விஷயங்கள் எல்லாம் பழக்கமாகிருச்சு. எனக்கு அரிசி சாப்பாடு ரொம்பப் பிடிக்கும். அதைச் சாப்பிடாம இருக்கிறதுதான் கஷ்டமா இருக்கு. ஐ மிஸ் ரைஸ்!''


பிரசவ அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் துணியை வைத்து தைத்த டாக்டர்கள்!

பிரசவ அறுவை சிகிச்சையின்போது ராணுவ வீரர் மனைவியின் வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டதாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி அருகே குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆனந்த் (31). இவரது மனைவி ராஜலட்சுமி (26). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ராஜலட்சுமி மீண்டும் கருவுற்றார். பிரசவத்திற்காக திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் உள்ள குழந்தை ஏசு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.


கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் ராஜலட்சுமிக்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதில் அவதிப்பட்டு வந்த ராஜலட்சுமிக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராஜலட்சுமியை உடனடியாக அவரது குடும்பத்தார் அருகில் இருந்த மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.

அந்த தனியார் மருத்துவமனையில் ராஜலட்சுமி 10 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமானது. இதில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமியின் குடும்பத்தார், பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ராஜலட்சுமியின் வயிற்றை ஏதோ ஒரு பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் ராஜலட்சுமியின் வயிற்றில் துணி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த துணியை அகற்றி வெளியே எடுத்துள்ளனர். அதன்பின் தொடர் சிகிச்சை முடிந்து ராஜலட்சுமி சகஜ நிலைக்கு வந்து வீடு திரும்பி இருக்கிறார். ராஜலட்சுமியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் எடுத்த அந்த துணி 1.29 மீட்டர் நீளமும், 11 சென்டி மீட்டர் அகலமும் இருந்துள்ளது. அது, சிகிச்சையின்போது பயன்படுத்தப்படக் கூடிய பேன்டேஜ் துணி என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த பேன்டேஜ் துணியை, ராஜலட்சுமிக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் தவறுதலாக அவரது வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனை மீதும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜலட்சுமியின் கணவர் ஆனந்த தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ''பிரசவத்திற்காக எனது மனைவி ராஜலட்சுமியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தேன். அங்கே எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.


குழந்தை பிறந்தது முதல் அவருக்கு வயிற்றில் கடுமையான வலி இருந்தது. இதை தொடர்ந்து வேறு ஒரு மருத்துவமனையில் என் மனைவியை அனுமதித்து சிகிச்சை அளித்தோம். அப்போது என் மனைவியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் பேன்டேஜ் துணி எடுத்துள்ளனர். என் மனைவிக்கு பிரசவ சிகிச்சை செய்தபோது அந்த மருத்துவமனை மருத்துவர்கள்  தவறுதலாக பேன்டேஜ் துணியை வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளனர். அந்த துணி ராஜலட்சுமியின் வயிற்றில் இன்னும் சில நாட்கள் இருந்தால் அவர் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால், கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவில் வருமானம் முக்கியம்.....கோவில் குளங்கள் ?

மிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுமார் 33,000 கோவில்கள் உள்ளன. இந்தியாவில் கோவில் மாநிலம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு ஆன்மிகத்தின் வேர்களாக தமிழகம் திகழ்கிறது. சுமார் 1586 கோவில்களில் கோவில் தீர்த்தம், திருக்குளங்கள் எனப் பெயர் பெற்ற குளங்கள் சுமார் 2359 உள்ளன. 

கடவுள் இல்லை என்று சொல்பவரின் வீட்டுக் கிணற்றுக்கும், ராட்சச குழாய் அமைப்பிற்கும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் நீராதார அமைப்பாக பாதுகாத்து வருவது திருக்குளங்களே என்றால் மிகையாகாது. 


பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்த பல்வேறு அந்நியர்கள் படை எடுப்பு , இயற்கைச் சீற்றத்திற்கு பின்னரும் கூட தலை நிமிர்ந்து நிற்கும் நம் திருக் கோவில்கள்,  தெய்வத்தின் பலம் என்ன என்பதை  நிருபித்துக் காட்டி வருகிறது.  

உண்டியலின் மேல் கண்காணிப்பு காமிரா வைத்து கண்காணிக்கும் அரசு, பல லட்சம் பேரின் தாகம் தீர்க்கும் நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு காரணமான தீர்த்தக் குளங்களை   கண்டுகொள்ளாமல் போய் விட்டது. கோவில் குளங்களின் முன் உண்டியல் வைத்தால் மட்டுமே, கோவில் குளங்களும் அரசின் கண்காணிப்பில் வரும் என்றே தோன்றுகிறது. கோவில் மூலம் கிடைக்கும்  நில குத்தகைப்  பணம், உண்டியல் வருமானம்,  நன்கொடைகள் , கடை வாடகை போன்றவற்றின் ஒரு பகுதியை கோவில் குளங்களுக்கு செலவு செய்திருந்தால் கூட இன்றைக்கு குளங்கள் நம்மை வறட்சியில் இருந்து காத்திருக்கும்.  

கோபுரத்திற்கு வர்ணம் பூசவும், பராமரிப்பிற்கும், கும்பாபிஷேகத்திற்கும் பல லட்சம் கணக்கு காட்டும் அரசு அதிகாரிகள், குளங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையானது.

தமிழகம் நீர் நிலைகளின் சொர்க்க பூமி. கோவில்களில் கூட குளங்களை அமைத்து நீரின் மகத்துவத்தை உணர்த்தி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது அரசை பற்றி கணித்த தீர்க்கதரிசிகள்  எப்படியும் தமிழக அரசு ஏரி, கண்மாய்களை  அரசு கட்டடமாக மாற்றும் எனக்  கணித்து கோவில்களில் குளத்தை அமைத்திருக்கிறார்கள்.  பல லட்சம் நீர் நிலைகளின் இருப்பிடமாக இருந்த தமிழகத்தில் இன்று 39,000 நீர் நிலைகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் கருவேல மர ஆக்கிரமிப்பிலும்,  எப்போது கண்மாயை    பேருந்து நிலையமாக   மாற்றலாம் அல்லது அதில் அரசு  கட்டடம் கட்டலாம் என்ற அரசின்  'தீவிர கண்காணிப்பில்' உள்ள நீர் நிலைகள் நிம்மதி இல்லாமல் தவித்து வருகின்றன.   
கோவில் குளங்கள் இருந்தும் அவற்றில் நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதும், கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவும்,  கோவிலில் கடை வைத்திருப்பவர்கள் கூட  குப்பை கொட்ட சிறந்த இடமாகவும், சிறு நீர் கழிக்கும் இடமாகவும் அசுத்தப்படுத்தி வருவது  பல பிறவிக்கும் தொடரும் பாவமாகும். சில கோவில் குளங்களில் நீர் இருந்தாலும், அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமும், இ.கோலி, வைரஸ் போன்ற கிருமிகளின் ஆதிக்கத்தால் குளங்கள் பயனற்றும் போய் விட்டன. குளத்தில் குளித்தால் பாவம் போகும் என்ற ஐதீக வாக்கு நடக்குமோ என்னவோ. ஆனால் கட்டாயம் தோல் வியாதிகள் வரும் என்று சொல்லுமளவிற்கு மோசமான நச்சுக்கள் கலந்துள்ளன.

கட்சி மாநாடு என்ற பெயரில் பல கோடிகள் செலவு செய்கிறார்கள். அதே பணத்தில் கோவில் குளங்களை தூர் வாரினால் புண்ணியமும், மக்களுக்கு பயனும், கட்சிக்கு நற்பெயரும் கிடைக்கும். எங்கோ இருக்கும் மக்கள் நடமாட்டம் இல்லாத, யாரும் எளிதில் சென்று பார்க்க முடியாத வனப்பகுதியில் பண்ணைக் குட்டைகள்  அமைக்க  பல லட்சங்கள் செலவிடும் அரசு, கண்முன்னே தெரியும் திருக்குளங்களை தூர் வாரி நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்யலாமே?

திருக் குளங்களின்  இந்த அவல நிலைக்கு மக்களும், அரசு அதிகாரிகளும் ஓர்  காரணம். குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாயை அடைத்து விடும் "பக்தியுள்ள நன்றிக்  கடன் " செய்யும் மனிதர்களும், அந்த மனிதர்களை கண்டுகொள்ளாமல் சட்டத்தின் முன் நிறுத்தாமல் இருக்கும் அலட்சியமான அரசு அதிகாரிகளுமே  காரணம். பக்தர்கள் குடிநீர் குடிக்க வரும் தொட்டியில் கூட கயிறு, சங்கிலி கட்டி குடிநீர் எடுக்க வைக்கும் அதிகாரிகள் பல கோடி லிட்டர் நீர் சேகரிக்கும் குளங்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்க முடியாமல் இருப்பது அரசுப்பணியின் லட்சணத்தை காட்டுகிறது.
திருக்குளங்கள் பாதுகாப்பிற்கு.....

சுற்றுலாத் துறைக்கு பல கோடி திட்டம் தீட்டும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விளம்பரம் செலவு செய்யும் அரசு, கொஞ்சம் மனது வைத்தால் கோவில் குளங்களை தூர்வாரி, நீர் நிரப்பி  அதிலேயே படகு சவாரி  மூலம் வருமானம் ஈட்ட முடியும். நீதிமன்றம் தானாகவே திருக்குளங்களின் அவல நிலையை நினைத்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும். 

ஆக்கிரமிப்பில் உள்ள வரத்துக் கால்வாய்கள் தூர் வாரப்பட வேண்டும். கோவிலின் மேல்தளத்தில் விழும் மழைநீரை நேரடியாக கோவில் குளங்களில் தேக்க வசதி வேண்டும். குளங்களை ஆழப்படுத்த , அசுத்தம் செய்யாமல் இருக்க நிரந்தர திட்டம் கொண்டு வர வேண்டும். பொது மக்களில் பலர் குளத்தை தூர் வார யாரிடம் அனுமதி பெறுவது, நடைமுறை என்ன என்பதை விபரமாக விளம்பரம் செய்தால் குளங்கள் கண்களுக்கு அழகாகுமே.

மதுரை தெப்பக் குளம், திருவாரூர் குளம், மகாமகக் குளங்களை தூர் வாரி,  மழை நீர் சேமிக்கப்படுவதுடன்  அங்கும் சுத்தகரிப்பு செய்யும் குடிநீர் நிலையம்  அமைத்து, தண்ணீரை குறைந்த விலைக்கு  அல்லது இலவசமாக கொடுக்க வேண்டும். மாநகராட்சியில், விவசாய பொறியியல் துறையில் உள்ள தூர் வாரும் எந்திரங்களை வைத்தே கோவில் குளத்தை தூர் வாரலாம்.

மழை வேண்டி கோவில்களில் ஜலகண்டேஸ்வரருக்கு யாகம் நடத்துவது போல மழை  நீரை சேகரிக்கவும், திருக்குளத்தை தூர் வாரவும் சிறப்பு யாகம் நடத்தினால்தான் அரசு மனம் வைக்குமோ.
"சிவன் சொத்து குல நாசம்,பெருமாள் சொத்து பெருத்த நாசம்"  என்பது கோவில் சொத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு மட்டுமல்ல.....கோவில் சொத்துக்களான நீர் நிலைகளை பாதுகாக்கத் தவறியவர்களுக்கும்தான்.

காந்தி ஜெயந்தியன்று சின்னத்திரைக்கு வருகிறார் கமல்ஹாசன்!

கமல் ஹாசன் முதன்முறையாக போத்தீஸ் விளம்பரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் சமூக அக்கறை, மற்றும் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே கமல் ஹாசன் நடித்துவந்தார். மேலும் கமல்ஹாசன் இந்தப் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்து அதன் மூலம் வரும் பணத்தை எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தவிருக்கிறார் எனத் தகவல் பரவி வருகின்றன. 
சுமார் 10 கோடி என சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த விளம்பரம் குறித்த தகவல்கள் அரிய விளம்பரத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம்.மிகவும் உற்சாகமானார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. பெரிய பெரிய இயக்குநர்கள் கமல் சாரை இயக்க தவம் இருக்கும் வேளையில் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை விட அதிகமாகவே நடிப்பில் வெளிப்படுத்துவார் என பலரும் சொல்வார்கள். நான் நேரிலேயே பார்த்துவிட்டேன். என்ன ஒரு மனிதர் அவர். இந்த விளம்பரம் முற்றிலும் மற்ற விளம்பரங்களிலிருந்து மாறுபட்டது. கமல் சாருக்கும், போத்தீஸுக்குமான ஒற்றுமையை காட்டப்போகிறது . 
பட படவென பேசியவரிடம் , விளம்பரம் எப்போது வரும் என்ற கேட்டபோது, காந்தி ஜெயந்தி திருநாளில், அக்டோபர் 2ம் தேதி வரப்போகிறது. அதுவரைக் காத்திருங்கள். கமல்ஹாசன் தனது திரைப்பயணத்தில் முதன்முதலாக ஒரு விளம்பரம் நடித்தார் என்று அவர் யோசிக்கும் போது கண்டிப்பாக என் பெயர் தான் அவருக்கு நியாபகம் வரும். ஒரு ரசிகனாக அவரை சிறு வயதிலிருந்து பார்த்துப் பார்த்து வளர்ந்த எனக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றார். 

அந்தப் பத்துக் கோடி ? என்றவுடன் அச்சச்சோ இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. அதெல்லாம் கம்பெனியின் ரகசியம் என ஜூட் விட்ட கிருஷ்ணகுமார் ஃபைவ் ஸ்டார் படத்தில் நடிக்கத் துவங்கி அறிந்தும் அறியாமலும், திருடா திருடி, சரவணா, ஆயுத எழுத்து, யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 


நடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: தயாரிப்பாளர் போலீசில் பரபரப்பு புகார்!

காமெடி நடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று எலி பட தயாரிப்பாளர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். அதன்பின் நடிகை சதாவுடன் 'எலி' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கமிஷனர் ஜார்ஜை சந்தித்து நடிகர் வடிவேல் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அந்த புகாரில், ''நான் ‘சிட்டி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம் நடிகர் வடிவேலு, ‘தான் ‘எலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளரான ராம்குமார் சரிவர படத்துக்கு செலவு செய்யமுடியாத நிலையில் இருக்கிறார். எனவே ‘எலி’ படத்தை உங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


நானும், நடிகர் வடிவேலுவும் நீண்டகால நண்பர்கள் என்பதால் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கு மேல் நடந்து கொண்டிருந்தபோது, நடிகர் வடிவேலுவும், படத்தின் இயக்குனர் யுவராஜ் ஆகியோர் கூறிய ‘பட்ஜெட்’ தொகை ரூ.14 கோடியை தாண்டி விட்டது. வடிவேலுவின் பேச்சை நம்பி ரூ.17 கோடியை முதலீடு செய்தபின்னும், படம் சரிவர ஓடவில்லை. இதனால் எனக்கு ரூ.9.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. படம் சரியாக ஓடாததால் ஒரு சில தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் போலியான கணக்கை காண்பித்து என்னிடம் கந்துவட்டி போட்டு பணத்தை கேட்டு மிரட்டுகின்றனர்.

இந்தநிலையில் மீண்டும் நடிகர் வடிவேலு, முன்னாள் தயாரிப்பாளர் ராம்குமாருக்கு ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அடையாளம் தெரியாத 6 பேர் காசோலையை என்னிடமிருந்து மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வாங்கியதோடு, தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் என்னுடைய சூழ்நிலைகளை நடிகர் வடிவேலுவிடம் கூறியபோது, ‘அவரும், அவருடைய மானேஜர் பன்னீரும், கணக்காளர் முத்தையாவும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, இப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை தர முடியாது என்று மிரட்டும் தோனியில் பேசுவதோடு பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

அதனால், நடிகர் வடிவேலுவினால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடமிருந்து பெற்று தருவதோடும், என்னை மிரட்டுகின்ற வடிவேலு உள்ளிட்டவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்" என்று கூறி உள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த புகார் குறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, ''எலி படத்தை முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால் அவர் ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த தயாரிப்பாளர் சதீஷ்குமார், எலி படத்தை தயாரிக்க முன் வந்தார். படம் வெளியான பின், எதிர்பார்த்தபடி ஓடவில்லை, நஷ்டமாகிவிட்டது அடுத்து ஒரு படம் நடித்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார் சதீஷ்குமார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே படம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது, நான் மதுரையில் இருக்கிறேன். தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் நல்ல மனிதர் தான், அவர் இப்படி புகார் கொடுக்க தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி அவர்களை சமாளிக்க முற்பட்டிருக்கலாம்.


சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகரை எனக்கு தெரியாது. எலி படத்திற்கு எனக்கு பேசிய சம்பளத்தில், 2 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தார். மீதி சம்பளத்தை தரவில்லை. நஷ்டம் என்று கூறியதும், நானும் பாக்கி சம்பளத்தை கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற முறையில் இதை தான் நான் செய்ய முடியும். நண்பராக இருந்த தயாரிப்பாளர் திடீரென எதிரியைபோல் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.பேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர் உகுத்தார் பிரதமர் மோடி

மெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, ஃபேஸ்புக் தலைமையகமான மெல்னோ பார்க்கில், அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர்  மார்க் ஸகர்பெர்க்குடன்  ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தியாவை 20 ட்ரில்லியன் பொருளாதார இயங்குதளமாக மாற்றுவதே இச்சந்திப்பின் மூலம் தெரிவிக்க விரும்பும் தனது இலட்சியம் என்றார் பிரதமர்.

இச்சந்திப்பை பொதுஇடத்தில் வைத்துக்கொள்ளச் சம்மதித்தத் மோடி, ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் விருப்பம் தெரிவித்தார். அந்தக் கேள்வி- பதில் கலந்துரையாடலின் விவரங்கள் இதோ: 
மார்க் ஸகர்பெர்க்: இந்திய அரசியலிலும், அரசு செலுத்துவதிலும், திட்டங்கள் தயாரிப்பதிலும், சமூக வலைதளங்களின் பங்களிப்பு என்ன?

பிரதமர் மோடி:
 'ரியல்டைம் நியூஸ்’ எனப்படும் உடனடிச் செய்திகளைப் பகிர்வதில் பெரும் பங்காற்றுகின்றன சமூக வலைதளங்கள். முன்பெல்லாம் ஆட்சியாளர்கள் தவறு செய்தால், மக்கள் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்; தற்போது ஐந்து நிமிடங்களில் மக்கள் தீர்ப்பளித்து விடுகின்றனர்; என் செயல்பாடுகளையே கூட, சமூக வலைதளங்களில் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர். பன்னாட்டுக் கொள்கைகளிலும் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இஸ்ரேல் பிரதமரை நான், ஹீப்ரூ மொழியில் வாழ்த்தியதும், அவர் எனக்கு ஹிந்தியில் நன்றி தெரிவித்ததும் சமூக வலைதளங்களின் சாதனையே.

வீர் கஷ்யப் (பாபாஜாப்ஸ் நிறுவனம்): டிஜிட்டல் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், இந்தியாவில் டிஜிட்டல் கட்டுமானங்களுக்காக நீங்கள் செய்யவிருக்கும் முதலீடு என்ன?
பிரதமர் மோடி:  இன்றைய சூழலில், ‘ஹை-வே’ எந்த அளவு முக்கியமோ அதே அளவு ‘ஐ-வே’ வும் முக்கியம். அதாவது, வெளியுலகக் கட்டுமானங்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இணையக் கட்டுமானம் விளங்குகிறது.
இந்தியாவிலுள்ள 6,00,000 கிராமங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ‘ஆப்டிக் ஃபைபர்’ வசதியுடன் கூடிய இணையதள வசதி ஏற்படுத்தித் தருவதே எனது திட்டமாகும். பணத்தை எங்கு முதலீடு செய்வதென்று தெரியாமலிருக்கும், உலகப் பெரு முதலீட்டாளர்களுக்கு நான் இந்தியாவின் விலாசத்தை வழங்குகிறேன்.

டி.எஸ். கரோனா (அமெரிக்க வணிகர்): 'மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றி அடையும் என்று நினைக்கிறீர்களா?
பிரதமர் மோடி:  தடம்புரண்ட இரு சக்கர வாகனத்தைத் திருப்புவது எளிது; ஒரு பெரிய ரயிலைத் தடம் திருப்புவது கடினம்; அரசாங்கத்திற்கு கொஞ்சம் அவகாசம் தேவை. 40 ஆண்டுகளாக வங்கிக் கணக்குக் கூட இல்லாத, 180 மில்லியன் குடிமக்களுக்கு, இந்த அரசு, 100 நாட்களுக்குள் வங்கிக் கணக்குத் திறந்து கொடுத்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் 3டி மந்திரத்தை நம்புகிறோம். அது முறையே, டெமாகிரஃபி, டெமாக்ரசி, டிமாண்ட் அதாவது, மக்களியல், குடியரசு மற்றும் பொருளாதாரத் தேவை இங்கு நிறைந்திருக்கிறது.

நான்காவது ’டி’ யாக ‘டி-ரெகுல்ரைசேஷன்’  அதாவது, முறைச்சுருக்குதல் யுக்தியைக் கையாள்கிறேன். இதன் மூலம் அரசாங்கத்தைச் சுருக்கி, வளர்ச்சியை மேம்படுத்துவேன். எனவே ’மேக் இன் இந்தியா’ திட்டம் நிச்சயம் வெற்றியுடன் நிறைவேறும்.

இரஞ்சனா குமாரி (
முனைவர்)பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்கு என்ன?
பிரதமர் மோடி:  உலகிலேயே, பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாடு நம் பாரத பூமிதான். 50 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கும் இந்த மனித சக்தியை, வீட்டிற்குள் பூட்டி வைக்க இயலாது. ‘பேட்டி பசாஓ, பேட்டி படாஓ’ திட்டத்தின் மூலம் எத்தனையோ கிராமத்துப் பெண்கள் கல்வி பெற்று முன்னேறி வருகின்றனர். அடுத்த கட்டமாக, முடிவெடுக்கும் பொறுப்புகள் இருக்கும் பணியிடங்களுக்குப் பெண்கள் வர வேண்டும் என்பதே என் கனவு.
மார்க் ஸகர்பெர்க்: எனக்கும், உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. நாம் இருவருமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள்; எனவேதான் என் தாய்- தந்தையரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் தாயைப் பற்றிய உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?
பிரதமர் மோடி: முதலில் உங்கள் தாய்க்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தையே இணைக்கும் ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக அவர் பெருமைப்பட வேண்டும். என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் இரண்டு பேரை மறக்க முடியாது. ஒன்று ஆசிரியர்; மற்றொன்று தாய்.
என் தாய்தான் என் வாழ்வின் ஆக்க சக்தி. சிறிய வயதில், நான் டீ விற்றுக்கொண்டிருந்தேன். இன்று உலகின் மாபெரும் குடியரசின் பிரதமராக வீற்றிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் என் தாய்தான். என்னைப் பொறுப்புடன் வளர்ப்பதற்காக அவர் உழைக்காத நாளேயில்லை.
(இந்தச் சொற்களை உதிர்க்கையில் தன்னையும் மீறித் தொண்டை செருமி, கண்ணில் சிறு துளிகள் பனிக்கின்றன. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதிலளிக்கிறார் பிரதமர்.)


என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லுவார். தள்ளாத இந்த வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். தினந்தோறும் செய்திகள் கேட்பார். என் தாய் மட்டுமல்ல; நம் நாடு முழுவதும் இலட்சக்கணக்கானத் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகின்றனர். அந்தத் தாய்மார்களின் ஆசீர்வாதம் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கட்டும் என்று, பிரதமர் தன் பதிலை நிறுத்திக்கொண்டவுடன், அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

முகநூலுடன் இணைந்திருப்பது உலகத்துடன் இணைந்திருப்பதற்குச் சமம் என்று கூறிய பிரதமர், இந்த சந்திப்பின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.


வந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... டி - சர்ட்!

லைவர்கள் படங்கள் பொறிக்கப்பட்ட அரசியல் டி சர்ட்டுகள், தலைவர்களது பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட  டி- சர்ட்டுகள் கடைகளில் விற்பனைக்கு வருவதுதான் இதுவரை வாடிக்கையாக இருந்தது.
முக்கியமாக அரசியல் கட்சிகளின் மாநாட்டின் போது, தலைவர்கள் படங்கள் பொறிக்கப்பட்ட டி- சர்ட்டுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். தொண்டர்கள் அந்த டி - சர்ட்டுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

தற்போது முதல் முறையாக அரசியல்கட்சித் தலைவர் ஒருவர்  பயன்படுத்திய கோபமான  வார்த்தைகள் பொறிக்கப்பட்ட  டி- சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. குறிப்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பொன்மொழியாக  பயன்படுத்திய 'தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க.. !' என்ற வாசகம்  பொறிக்கப்பட்ட டி சர்ட்டுகள் அதிகமாக மக்களை கவர்கிறது.

காவிரி பிரச்னைக்காக தமிழக எதிர்காட்சித் தலைவரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த்,  'தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க...! என்ற டயலாக்கை கோபத்துடன் பயன்படுத்தினார். அந்த டயலாக் அப்போது வெகு பிரபலமானது. இணைங்களிலும் தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க  டயலாக் பரவலாக வலம் வந்தது. தற்போது அந்த வாசகம் பொறிக்கப்பட்ட டி சர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இது மட்டுமல்ல தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான' இப்படி பண்றீங்களேமா...!' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி சர்ட்டுகளும் சந்தைக்கு வந்துள்ளன.

காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் பயன்படுத்தும் 'ஆஹான்' என்ற வார்த்தையும் நான் 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ' போன்ற வாசகங்கள்  பொறிக்கப்பட்ட டிசர்ட்டுகளும் தயாரிக்கபபட்டுள்ளன.


நகருக்குள் ஒரு ராட்சஸன் ! டுகாட்டி மான்ஸ்ட்டர் 821

டுகாட்டியின் புதிய என்ட்ரி லெவல் பைக்காக அறிமுகமாகியிருக்கிறது, மான்ஸ்ட்டர் 821. என்ட்ரி லெவல் என்றால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட நன்றாக இருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறது?
டிஸைன்
பழைய மான்ஸ்ட்டர் பைக்குகளைவிட பெரிதாக, கட்டுமஸ்தாக இருக்கிறது புதிய மான்ஸ்ட்டர் 821. புதிய 821 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் சேர்க்கப்பட்டதால், பைக்கின் வீல்பேஸ் மற்றும் நீளம் அதிகரித்துவிட்டன. இதனால், ஒரு விஷுவல் டேஸ்ட்டுக்காக பைக்கின் பாடி பெரிதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 17.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், ரொம்பப் பெரிசு.
ஹேண்டில்பார் கிளாம்ப், கைப்பிடிகள், மிரர்கள் போன்றவை தரமாக இருக்கின்றன. எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டுகாட்டி ரேஸ் பைக்கில் இருப்பதுதான். பைக்கில் இருக்கும் சில பிளாஸ்டிக், ரப்பர் பாகங்களின் தரம், சுமார். பைக்கின் கட்டுமானத் தரம் நன்றாக இருந்தாலும், இதுபோன்ற சின்ன விஷயங்கள் தரமாக இல்லாதது உறுத்தலாக இருக்கிறது.

ஹேண்டில்பார், பழைய மான்ஸ்ட்டர் பைக்கைவிட 40 மிமீ உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். லிக்விட் கூலிங்குக்கான ரேடியேட்டர், ஃப்ளூயிட்ஸ் போன்றவை பைக்கின் எடையை அதிகரித்துவிட்டன. மான்ஸ்ட்டர் 821 பைக்கின் எடை 205.5 கிலோ.
இன்ஜின்
821 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் 110.5 bhp சக்தியை அளிக்கிறது. பழைய மான்ஸ்ட்டர் 796 பைக்கின் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினைவிட இதன் டார்க் அதிகம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் கியரிங் இடைவெளி குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.
‘Urban’ மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சாஃப்ட்டாக இருப்பதால், சிட்டி டிராஃபிக்கை எளிதாகச் சமாளிக்கலாம். இன்ஜினின் சக்தியும் 75 bhp-ல் லிமிட் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது கியரில் 30 கி.மீ வேகத்தில் ஓட்டினாலும்கூட இன்ஜினில் தடங்கல்கள் எதுவும் இல்லை. இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் அளவுக்கு ஸ்மூத் இல்லை இந்த L-ட்வின் இன்ஜின்.
ஆனால், நெடுஞ்சாலையில் இது வியக்க வைக்கிறது. டூரிங் மோடில் மான்ஸ்ட்டர் 821 அருமையாக இருக்கிறது. ‘ஸ்போர்ட்’ மோடில் மொத்த பவரும் வெளிப்படுவதால், செம த்ரில்லிங். 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் இன்ஜின் நல்ல பெர்ஃபாமென்ஸை அளிக்க, 8,000 ஆர்பிஎம்-க்கும் பவர் டெலிவரி சூப்பர். கியர் ஷிஃப்ட் தரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 6-வது கியரில் இருந்து டவுன்-ஷிஃப்ட் செய்யும்போது, அவ்வப்போது ஃபால்ஸ்-நியூட்ரல் விழுவது கடுப்பு.
ஓட்டுதல் தரம், கையாளுமை
அதிக வேகத்தில் ஓட்டும் போது மான்ஸ்ட்டர் 821 பைக்கின் எடையை அதிகம் உணர முடியவில்லை. ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாக இருப்பதால், வளைத்து ஓட்ட சிறப்பாக இருக்கிறது. ஆனால், எடை அதிகமாக இருப்பதால், செக்மென்ட்டில் கையாளுமைக்கு சிறந்த பைக்காக இருக்க வாய்ப்பு இல்லை.
முன்பக்கம் நான்-அட்ஜஸ்டபிள் 43 மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கம் ப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் Sachs மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. புதிய சேஸிக்கு ஏற்றவாறு சஸ்பென்ஷனும் டியூன் செய்யப்பட்டுள்ளது. தார் சாலையிலும், மேடு பள்ளமான சாலைகளிலும் சஸ்பென்ஷன் சிறப்பாக இருந்தது. பைரலி டியாப்லோ ரோஸோ II டயர்கள் நல்ல க்ரிப்பை அளிக்கின்றன. முன் வீலுக்கு உள்ள ட்வின் ப்ரெம்போ 320 மிமீ டிஸ்க் பிரேக்ஸ் பர்ஃபெக்ட்

பழைய மான்ஸ்ட்டர் பைக்குகளை விட, புதிய 821 பைக் சிறப்பாகவே உள்ளது. இதன் பெர்ஃபாமென்ஸும் மிரட்டலாக இருக்க, எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் பைக்கை சிறப்பாகக் கையாள உதவுகின்றன. செக்மென்ட்டில் சிறப்பான பைக் என்று சொல்ல முடியாவிட்டாலும், அனைத்துவிதமான ரைடர்களுக்கும் ஏற்ற பைக்காக இருப்பதால், ‘ஓகே’ சொல்ல வைக்கிறது மான்ஸ்ட்டர் 821.


26 Sep 2015

அ.தி.மு.க-வில் ‘மாவட்ட’ மல்லுக்கட்டு!

ரத்தம் இல்லாத யுத்தம்!
ன்றைக்கு போஸ்டர் ஒட்டியவர் நாளைக்கு மந்திரி ஆகலாம்! காலையில் சைரன் வைத்த காரில் போனவர் சாயங்காலம் இறக்கிவிடப்படலாம். இதுதான் ஜெ. பாணி. அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் பல கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. கிளை தொடங்கி மாவட்டம் வரையில் போஸ்டிங்க்காக மல்லுக்கட்டுகள் நடக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கின்றன. அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தால் எம்.எல்.ஏ. ஸீட் தேடி வரும். தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட தொகுதிகளில் இருந்து சிலரை பரிந்துரைக்கலாம். பண மழையும் பொழியலாம் என்பதால், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்துவிட மகாபாரதம் ரேஞ்சுக்குப் போர்க்களத்தில் நிற்கிறார்கள். விரைவில் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் ரிலீஸ் ஆகப் போகிறது. தலைவியிடம் மாவட்டச் செயலாளர் வரம் கேட்டு காத்துக்கிடக்கிறார்கள். பூசாரிகள் மூலம் கடவுளின் கண்ணைத் திறந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தப்படுகிறது. யார் யார்? எந்த ரூட்டில் மூவ் செய்கிறார்கள்? மேற்கு மண்டலத்தில் ஒரு மினி ட்ரிப்.
நீலகிரி: மலையரசி மகுடம் யாருக்கு?

சிறிய மாவட்டமான குளுகுளு பிரதேசத்தில் வெப்பம் தகிக்கிறது. புத்தி சந்திரன், கே.ஆர்.அர்ச்சுனன், பால நந்தகுமார், தேனார் லட்சுமணன், சிவக்குமார், வினோத், சக்ஸஸ் சந்திரன், பலராமன் என மாவட்டச் செயலாளர் பதவிக்கு 16 பேர் களத்தில் நிற்கிறார்கள். இதில் 12 பேர் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மாவட்டச் செயலாளராக இருக்கும் கலைச்செல்வன் ஆதிதிராவிடர். முன்னாள் மாவட்டச் செயலாளர்களான கே.ஆர்.அர்ச்சுனன், புத்தி சந்திரன், பால நந்தகுமார் ஆகியோர் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட கலைச்செல்வன் குன்னூர் தொகுதிக்கு ஸீட் கேட்டபோது கிடைக்கவில்லை. அதனால் தி.மு.க வேட்பாளர் செளந்தரபாண்டியனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதால் அ.தி.மு.க வேட்பாளர் தோற்றார். இதனால் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டார் கலைச்செல்வன். இழந்த செல்வாக்கை ராவணனின் சிபாரிசால் மீட்டு, மாவட்டச் செயலாளர் ஆகி பதவி வகித்துவருகிறார். இவரைப் பற்றிய புகார் நால்வர் அணிக்கும், ஜெயலலிதாவுக்கும் அனுப்பப்பட்டிருப்பதால், கலைச்செல்வனின் மா.செ. பதவி பறிபோகும் என்கிறார்கள். மனு செய்வதற்கான கடைசி நாளுக்குப் பிறகு, கலைச்செல்வன் தேர்தல் ஆணையரான அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கே சென்று பணம் கட்டியிருப்பது தேர்தல் விதியை மீறிய செயல் என்ற கொந்தளிப்பும் கேட்கிறது.
புத்தி சந்திரன், மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் மூலம் காய் நகர்த்தி மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முயற்சிசெய்து வருகிறார். அர்ச்சுனன் இன்னொரு பக்கம் முயன்று வருகிறார். கட்சியில் சேர்ந்து 15 நாட்களே ஆன ஒரு பெண்ணுக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பதவியும், சொந்த தம்பிக்கு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியும் வாங்கிக் கொடுத்தவர் என்ற புகார், அர்ச்சுனன் மீது பாய்கிறது. நால்வர் அணியை அர்ச்சுனன் வளைக்கும் முறையே வித்தியாசமானது. ராஜ்யசபா எம்.பி-யான அர்ச்சுனன் தனக்கு ஒதுக்கப்படும் எம்.பி நிதியை நால்வர் அணியினர் இருக்கும் அமைச்சர்களின் தொகுதிக்குத்தான் அதிகம் ஒதுக்கி அவர்களைக் குளிரவைக்கிறார். அதனால், ‘நால்வர் அணியின் ஆசி அர்ச்சுனனுக்குத்தான் உண்டு’ என அவரது ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். 20 நாட்கள் மட்டும் மாவட்டச் செயலாளராக இருந்தவர் பால நந்தகுமார். தலைமைக்குத் தெரிவிக்காமல் தேயிலை வாரியத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்ற புகாரில் பதவியை பறிகொடுத்தவர். ‘அம்மா என்னை மன்னித்துவிட்டார். அம்மாவே மீண்டும் எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்குவார்’ என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார். படுகர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வினோத்தும் ரேஸில் ஓடுகிறார். மலையரசி மாவட்டத்தில் மகுடம் சூட்டப்படுவது யார் என்கிற சஸ்பென்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.
கோவை மாநகர் மாவட்டம்: வேலுமணியா? வேலுசாமியா?
அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க குஸ்தி நடக்கிறது. கோவை மாநகர மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் தனித்தனி கோஷ்டிகள். முன்னாள் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி மாவட்டச் செயலாளராக இருந்தபோது, த.மலரவன், ஆறுக்குட்டி, சேலஞ்சர் துரை, ஓ.கே.சின்னராஜ் ஆகிய 4 எம்.எல்.ஏ-க்களும் மாவட்டச் செயலாளர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு செ.ம.வேலுசாமியின்  மா.செ. பதவி பறிபோக... யாரும் எதிர்பார்க்காத வகையில் மா.செ. ஆனார் ராஜ்குமார். இதனாலோ என்னவோ, இப்போது மா.செ. பதவிக்கு ஏக போட்டி நிலவுகிறது. ராஜ்குமார், செ.ம.வேலுசாமி, த.மலரவன், சேலஞ்சர் துரை, ஓ.கே.சின்னராஜ், ஆறுக்குட்டி, எம்.பி. நாகராஜ் என ஆரம்பித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் வரை 22 பேர் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் பதவியை பிடித்துவிட துடிக்கிறார்கள். தற்போதைய மா.செ-வான ராஜ்குமார், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். எப்படியாவது மா.செ. பதவியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார் ராஜ்குமார். வேலுமணி, ராஜ்குமாருக்கு பதவி வாங்கி தந்துவிட நினைக்கிறார். அதன்மூலம் எதிரி வேலுசாமியை வீழ்த்த நினைக்கிறார். “அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்பேச்சு கேட்டு ஆடும் பொம்மையாகத்தான் இருக்கிறார் ராஜ்குமார். இவருக்கு சீனியாரிட்டியும் கிடையாது. கட்சியில கஷ்டப்பட்டு வந்தவரும் கிடையாது. கட்சி பதவிகளைக்கூட விற்கிறார்கள். அம்மாவின் காதுக்குப் போனால் நிச்சயம் இவரை மாற்றிவிடுவார்கள்’’ என புலம்புகிறார்கள் கட்சியினர். மேயர் பதவியை பறிகொடுத்து அடுத்து மா.செ. பதவியையும் இழந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி எப்படியாவது மீண்டும் மாவட்டச் செயலாளராகி விட வேண்டும் என்பதற்காக மேலிடத்தில் பகிரத முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். சசிகலா குடும்பத் தொடர்புகள் தாண்டி கார்டனில் தனிப்பட்ட முறையில் ‘மூவ்’ செய்திருக்கிறார் வேலுசாமி. வேலுமணியும் வேலுசாமியும் நகர்த்தும் காய் நகர்த்தல்கள் கார்டன் வரை எதிரொலிக்கிறது. யாருக்கு வெற்றி வேல் கிடைக்கும் என்பதுதான் இன்று வரை சஸ்பென்ஸ்.
கோவை புறநகர் மாவட்டம்: ஒன் மேன் ஆர்மி!
கோவை மாநகர் அளவுக்குப் போட்டியும் இல்லை. கோஷ்டிப் பூசலும் இல்லை. இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர் என தற்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கும்தான் மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவி மாறிமாறி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மா.செ. பதவிக்கு வேலுமணி, தாமோதரன் தவிர, செ.ம.வேலுசாமியும் போட்டியிடுகிறார். மாநகர் மா.செ-வுக்கு வேலுசாமி குறி வைத்திருந்தபோதும் புறநகர் மாவட்டத்திலும் ஒரு கண் பதித்திருக்கிறார். மாநகரில் கிடைக்காவிட்டால் புறநகரிலாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கேயும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் செ.ம.வேலுசாமி. இவர்களைத் தவிர, பொள்ளாச்சி எம்.எல்.ஏ. முத்துகருப்பண்ணசாமி உட்பட 12 பேர் களத்தில் இருக்கிறார்கள். அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் என இரு பதவிகளும் பறிக்கப்பட்டு, எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டதால் அதனை மீண்டும் பெற பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறார் தாமோதரன். ராவணனின் தீவிர ஆதரவாளராக இருந்ததால்தான் முன்பு தாமோதரன் அமைச்சர் ஆனார். ஆனால் அதன்பிறகு, ராவணனின் ஆசி எஸ்.பி.வேலுமணிக்குக் கிடைக்க... தாமோதரனுக்கு மந்திரி பதவி போனதோடு வாய்ஸும் குறைந்து போனது. ராவணனின் ஆசியில் மீண்டும் மாவட்டச் செயலாளராகிவிடுவோம் என கணக்குப் போடுகிறார் எஸ்.பி.வேலுமணி. பதவியைத் தக்க வைப்பதற்காகக் கணக்கு வழக்கு பார்க்காமல் கரன்ஸியை செலவு செய்து வருகிறார் எஸ்.பி.வேலுமணி. ‘‘மாவட்டத்தில் ஒன்மேன் ஆர்மியா இருக்கணும்னு நினைக்கிறார் வேலுமணி. அதற்காக அவர் எதையும் செய்ய துணிவார்”’ என்கிறார்கள் கட்சியினர். வேலுமணிக்கு இருக்கும் எதிர்ப்பை வைத்தே மீண்டும் மா.செ. ஆகிவிடலாம் என நினைக்கிறார் தாமோதரன்.
திருப்பூர் மாநகர் மாவட்டம்: பாலியல் புகார்காரருக்கா பதவி?
முன்னாள் எம்.பி. சிவசாமியை கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற்றியதற்கு பிறகு எம்.எஸ்.எம்.ஆனந்தன்தான் மாவட்டத்தில் கோலோச்சுகிறார். ஆனந்தனை எதிர்த்து கோஷ்டி நடத்த ஆளில்லை. அதனால் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடவும் ஆளில்லை. ஆனந்தனின் எதிர் கோஷ்டியில் இருக்கும் மாநகராட்சி மேயர் விசாலாட்சி எதிர்த்துப் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ஆப் ஆகிவிட்டார். அவிநாசியைச் சேர்ந்த விஜய் ஆனந்த், திருப்பூரைச் சேர்ந்த ஜீப்ரா ரவி ஆகிய இருவர்தான் எம்.எஸ்.எம்.ஆனந்தனை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். இடையில் அமைச்சர் பதவியை எம்.எஸ்.எம். ஆனந்தன் இழந்தபோதும்  மாவட்டச்  செயலாளர் பதவிக்கு பங்கம் வரவில்லை. மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆபத்தில்லாமல் பார்த்துக்கொண்ட ஆனந்தன், அரும்பாடுபட்டு மீண்டும் அமைச்சரானார். அதனால் அவருடைய கை ஓங்கியது. ‘‘அம்மா ஆதரவு எனக்கு உண்டு. மீண்டும் நான்தான் மாவட்டச் செயலாளர்’’ எனச் சொல்லி வருகிறார் ஆனந்தன். “எல்லாத்துக்கும் பணம்தான். கட்சிப் பதவிகூட பணம் கொடுத்தால்தான் கிடைக்குது. குற்றவாளிகளுக்கெல்லாம் பதவி கொடுத்திருக்காங்க. பாலியல் புகார் தொடங்கி எல்லா புகாரும் ஆனந்தன் மீது சொல்லப்பட்டிருக்கு’’ என்கிறார்கள் எதிர் அணியினர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம்: ஜெயராமனுக்கு ஜெயமா?
திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் கோஷ்டிப் பூசலுக்கு அளவே இல்லை. மாவட்டச் செயலாளராக இருக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்குப் போட்டியாக முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சண்முகவேல் உட்பட 10 பேர் களமிறங்கி இருக்கின்றனர். கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கும் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்களை அள்ளி வீசிவருகின்றனர். பொள்ளாச்சி ஜெயராமன், ராதாகிருஷ்ணன், சண்முகவேல் ஆகிய மூன்று பேரும் முக்கோணப் போட்டியில் இருக்கிறார்கள். பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும்தான் போட்டி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவருக்கு இப்போது இறங்குமுகம். ஆனாலும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் இருந்து மா.செ. பதவியைப் பெற்றுவிட துடிக்கிறார். பொள்ளாச்சி ஜெயராமனும் தனி ரூட்டில் மூவ் பண்ணி வருகிறார்.

சேலம் மாநகர்: எடப்பாடி பறிக்கும் குழி!
மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலெட்சுமி பழனிச்சாமி என சேலம் மாநகர் மாவட்டத்தில் 32 பேர் களத்தில் நிற்கிறார்கள். புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.கே.செல்வராஜை வளரவிடக் கூடாது என நினைக்கிறார். அதனால், எம்.பி-யாக இருக்கும் பன்னீர்செல்வத்தை மாநகர் மாவட்டச் செயலாளராக்குவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வரும் சட்டசபைத் தேர்தலில் சேலம் தெற்குத் தொகுதியில் போட்டியிட நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு வசதியாக பன்னீர்செல்வம் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும். அவர் எம்.பி-யாக இருப்பதால் எம்.எல்.ஏ-வுக்கு நிற்க மாட்டார். இதையெல்லாம் கணக்குப் போட்டுதான் அவரை மா.செ. ஆக்க முயல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இங்கே பா.ம.க வேகமாக வளர்ந்து வருவதால், அதைச் சமாளிக்க வன்னியருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது. எம்.கே.செல்வராஜ் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பன்னீர்செல்வத்தின் பக்கம் பார்வை திருப்பப்படுகிறது. அதனால் எம்.கே.செல்வராஜ், மன்னார்குடி சேனல் வழியாக மூவ் நடத்துகிறாராம். இந்தப் போட்டிக்கு இடையில் சீனியர் அரசியல்வாதி, வன்னியர் என்ற தகுதிகளோடு விஜயலெட்சுமி பழனிச்சாமியும் தலைவியை மட்டும் நம்பி களத்தில் இருக்கிறார்.
சேலம் புறநகர் மாவட்டம்: மாநில பதவிக்குக் குறி!
சேலம் புறநகர் மாவட்டம் இப்போது அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கன்ட்ரோலில் இருக்கிறது. அவரை எதிர்த்து 10 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அமைச்சரின் ஏரியா என்பதால் அதிகமாக யாரும் மனுப் போடவில்லை. எஸ்.கே.செல்வம், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோ ஆகிய இருவரும்தான் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்கள். மாநில பொறுப்பை வாங்கிவிடுவதில் கவனம் பதித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்காகதான் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கப் போகிறாராம். மாநில பொறுப்பு கிடைத்துவிட்டால் மா.செ. தேவையில்லாமல் போய்விடும். அதனால் அதை எல்லாம் கணக்குப் போட்டு தன்னுடைய ஆதரவாளரான இளங்கோவை மாவட்டச் செயலாளராகக் கொண்டு வந்துவிட நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி. மற்றவர்கள் வேறு வழிகளில் ரூட் போட்டாலும் எடப்பாடியைத் தாண்டி எதுவும் நடக்காது.தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை!

தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக கூறப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையற்கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

அப்போது விகாஸ்கன்னா, இந்திய தேசியக்கொடியில் மோடியின் கையெழுத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, தான் வெகுமதியாக கொடுக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ்கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.


இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க கையெழுத்திடப்பட்ட தேசியக் கொடியை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தேசியக் கொடியில் மோடி கையெழுத்திடவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் மையத்தின் (பி.ஐ.பி.) இயக்குநர் பிராங்க் நொரோன்ஹா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மோடி கையெழுத்திட்ட தேசியக் கொடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. தலைமை சமையற் கலைஞரின் (விகாஸ்கன்னா) மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில் வெள்ளை நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது" என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.

தேசியக்கொடியின் மீது பிரதமர் கையெழுத்திட்டது, இந்திய தண்டனை சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதா? என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''இதுபோன்ற விஷயங்களை, பா.ஜ.க.போல் நாங்கள் பெரிதுபடுத்தமாட்டோம். நாங்கள் பிரதமர் அலுவலகத்தை எப்போதும் மதிக்கிறோம். தேசியக்கொடிக்கு மரியாதை அளிப்பது, 125 கோடி மக்களுக்கு செய்யும் மரியாதை ஆகும்.

பிரதமர் மோடி எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அதைவிட உயர்வானது தேசியக் கொடி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரை பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்" என்றார்.அன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தில் ஒரு பாசப் போராட்டம்!

50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய வளர்ப்பு பெற்றோரை விட்டுவிட்டு, பெற்ற தாயாரிடம் செல்வதற்கு சிறுவன் மறுத்துவிட்டான். இந்த உருக்கமான சம்பவம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொன்னுவார்பட்டியை சேர்ந்த குமார்- மாரியம்மாள் தம்பதியின் 3 வயது மகன் வேல்முருகன். குமார் தனது மகனை, குழந்தையில்லாத தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் கணவரையும், குழந்தையையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரியம்மாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாரியம்மாளும், வளர்ப்பு பெற்றோரும் சிறுவனை உரிமை கொண்டாடியபடி இருந்தனர். ஆனால் சிறுவனோ வளர்ப்பு தாயின் மடியில் இருந்து கீழே இறங்காமல் இருந்தான்.

மகனை அழைக்குமாறு மாரியம்மாளிடம் நீதிபதிகள் கூறினர். அதையேற்று மகனை தூக்குவதற்கு முயன்றார் மாரியம்மாள். ஆனால், மாரியம்மாளிடம் செல்ல மறுத்து அழுத சிறுவன், வளர்ப்பு தாயைவிட்டு நகரவில்லை.

இதை பார்த்த நீதிபதிகள், "சட்டப்படி தாயாரிடம்தான் குழந்தை இருக்க வேண்டும். இருப்பினும் இந்த சிறுவன், வளர்ப்பு பெற்றோரிடம் வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும் போது அன்பு, அரவணைப்புக்கு முன் சட்டம் தோற்றவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது" என தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பாக  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சிறுவன் வளர்ப்பு பெற்றோரிடம் 15 நாள் இருக்க வேண்டும். சிறுவனின் தாயார் மாரியம்மாள் தினமும், வளர்ப்பு பெற்றோரின் வீட்டிற்கு சென்று அவரது மகனை பார்த்து, அவனின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது மனுதாரர், வளர்ப்பு பெற்றோர், சிறுவன் ஆகியோர் ஆஜராக வேண்டும். சிறுவன் யாருடன் இருக்க ஆசைப்படுகிறான் என்பதை அப்போது பார்க்கலாம்" எனக் கூறியதோடு, மாரியம்மாளின் கணவர் குமாரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் டிஎஸ்பி வனிதாவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.பவர் கட்... ஸ்டாலின் டென்ஷன்... கேகேஎஸ்எஸ்ஆருக்கு டோஸ்!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த 20ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை சந்திக்கும் விதமாக 'நமக்கு நாமே விடியல் மீட்பு' என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நெல்லை, தூத்துக்குடி உள்பட ஒவ்வொரு இடத்திலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இது அ.தி.மு.க.வினரிடத்தில் கடும் எரிச்சலை கிளப்பி உள்ளது. சமீபத்தில் கூட, மு.க.ஸ்டாலின் மதுரைக்குள் நுழையக்கூடாது என்று மதுரை மாநகராட்சியில்  தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கிடையே ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் ஏதாவது குளறுபடி பண்ணும் வகையில், ஸ்டாலின் இருக்கும் பகுதியில் பவர் கட் பண்ணும்படி மின் வாரிய அதிகாரிகளுக்கு அ.தி.மு.க.வினர் மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில், அவர் வரும் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

நேற்று விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அப்போது முதல் அவர் சுற்றுப்பயணம் செய்த ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய இடங்களில் பவர் கட் தொடர்ந்தது. இதன் உச்சக்கட்டமாக விருதுநகரில் மாலை ஒரு திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலின் பேச தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே வழக்கம் போல் திடீரென்று பவர் கட் ஆனது. அப்போது திருமண மண்டபத்தில் இருந்த ஜெனரேட்டரை வைத்து அந்த நிகழ்ச்சியை முடித்தனர் தி.மு.க.வினர்.

இதற்கிடையே மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு,  அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள காரியாபட்டி அருகே தி.மு.க.வை சேர்ந்த மந்திரி ஓடை பஞ்சாயத்து தலைவர் கண்ணன் என்பவரது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சில லட்சங்கள் செலவழித்து ஸ்டாலின் தங்கும் அறையில் பாத்ரூம், ஏ.சி. உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தங்கும் மந்திரி ஓடை பகுதியில் இரவில் கரண்ட் கட் செய்ய ஆளும்கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, இதை சமாளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் நேற்று தங்கிய கண்ணன் வீட்டின் வெளியே பெரிய ஜெனரேட்டரை தி.மு.க.வினர் தயாராக வைத்திருந்தனர். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற கொஞ்ச நேரத்தில் பவர்கட் ஆனது. உடனே ஜெனரேட்டரை வைத்து நிலைமையை சமாளித்தனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு டோஸ்

 நமக்கு நாமே திட்ட பயணத்திற்காக வரும் தனக்கு தி.மு.க.வினர் ஆடம்பர விளக்குகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது. ஆடம்பர வரவேற்பு கூடாது. குறிப்பாக ஆட்களை திரட்டிக்கொண்டு வரக்கூடாது. இது முழுக்க முழுக்க பொது மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் மு.க.ஸ்டாலின் முன்னரே எச்சரித்திருந்தார். அதனால்தான் நமக்கு நாமே திட்டத்தில் முக்கிய புள்ளிகள் யாரும் ஸ்டாலினுடன் வருவதில்லை.
இந்நிலையில், விருதுநகரில் பயணத்தை முடித்துக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு மாலை வந்தார் மு.க.ஸ்டாலின். அருப்புக்கோட்டை சவுண்டம்மன்கோவில் உள்பட சில இடங்களில் அவர் மக்களை நேரடியாக சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க. நிகழ்ச்சிகளை எப்போதுமே ஆடம்பரமாகவே செய்து பழகிப்போன விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., வழக்கம் போல் ஸ்டாலின் மனதை கவருவதற்காக அவர் பேச இருந்த மீட்டிங் பாயிண்டுகளில் அதிக அளவில் டியூப்லைட்டுகள், போகஸ் லைட்டுகள் வைத்து ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தார்.

இதைக் கண்ட மு.க.ஸ்டாலின் டென்ஷனாகி விட்டார். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எல்லா இடங்களிலும் பேசி முடித்து விட்டு, அருப்புக்கோட்டையில் இருந்து கல்குறிச்சிக்கு செல்லும் வழியில் தன்னுடன் காரில் வந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம், "ஏன் இப்படி ஆடம்பர ஏற்பாடுகள் செய்கிறீர்கள். இப்படி செய்தால் நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமே வீணாகிப்போய் விடும்" என்று டோஸ் விட்டாராம். இதனையடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர் ஏற்கவில்லையாம்.


அதனால், மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சி முடியும் வரை அப்செட் மூடில் வலம் வந்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிறகு அருப்புக்கோட்டை தொகுதியான கல்குறிச்சி, காரியாபட்டி பகுதிகளுக்குள் மு.க.ஸ்டாலின் நுழைந்ததுமே  கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு விழுந்த டோஸ்  குறித்து முன்னமே அறிந்து வைத்திருந்ததாலோ என்னவோ,  முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும், அவரது ஆதரவாளர்களும் மு.க.ஸ்டாலினை விட்டு கொஞ்சம் தூரத்திலேயே அவருடன் வலம் வந்தனர்.


ரஜினி பற்றி ரஜினி!

'இது நம்ம ரஜினி படம்’ என்று தன்னை ரசிப்பவர்களையும், 'என்ன பெரிய ரஜினி படம்?’ என்று விமர்சிப்பவர்களையும் தான் நடித்த படங்களை முதல் நாளே பார்க்கத் தூண்டும் தமிழ் சினிமாவின் 'பாட்ஷா’ ரஜினிக்கு இப்போது வயசு 64. கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் ரஜினி குறிப்பிட்டவற்றின் தொகுப்பு இங்கே...
''சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல 'அபூர்வ ராகங்கள்’ படத்தை முதன்முதலாப் பார்த்தேன். நான் நடிச்ச காட்சி வந்ததும் பக்கத்து சீட்டுல இருந்த குட்டிப்பொண்ணு, என்னைப் பார்த்துட்டே இருந்துச்சு. படம் முடிஞ்சு வெளியே வரும்போது என்கிட்ட ஓடிவந்து, சினிமா டிக்கெட் பின்னாடி ஆட்டோகிஃராப் கேட்டுச்சு. என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்; நான் போட்ட முதல் ஆட்டோகிஃராப் அதுதான்!''
''எனக்கும் லதாவுக்கும் திருப்பதியில் கல்யாணம். பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, 'யாரும் கல்யாணத்துக்கு வராதீங்க. கல்யாண போட்டோ உங்க ஆபீஸ் தேடி வரும்’னு சொன்னேன். 'மீறி நாங்க வந்தா என்ன செய்வீங்க?’னு ஒருத்தர் கேட்டார். 'உதைப்பேன்’னு சொன்னேன். இப்படிச் சொன்னதுக்காக பின்னாடி ரொம்ப வருத்தப் பட்டேன்!''

''சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரை போயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள் என்கிட்ட, 'உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, 'தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு 'சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!''
 ''நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோல எனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!''
 ''சம்மர் வந்துட்டா, 'போன வருஷத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்க முடியலைங்கிறதை மறந்துடு றாங்க!''
 '' 'நான் யார்?’னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமை தேவைப்படுது. அதனால இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள் தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி. அங்கே 'நான் யார்?’னு என்னைச் சுலபமாக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம். அதான் அடிக்கடி போறேன்!''
 ''இந்தம்மா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது!''
'' 'பாபா’ படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்த ஒரு கட்சியைக் கண்டிச்சு கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என் ரசிகர்கள். அவங்களை அந்தக் கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான் அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன், 'மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா... என எல்லா நாட்லயும் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?’ ''

 ''யானை, கீழே விழுந்தா... அதால சீக்கிரம் எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிட வேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!''
 ''சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை அழித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதாவை, 'பராசக்தியின் மறு உருவமாகப் பார்க்கிறேன்’!''
 ''கமல்கூட 'அவர்கள்’ படம் நடிச்சேன். என் சீன் எடுத்து முடிச்சாச்சு. அடுத்து கமல் நடிக்கணும். அந்த கேப்ல ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டு வெளியில கிளம்பினேன். அப்போ 'எங்கடா... சிகரெட் பிடிக்கக் கிளம்பிட்டியா? உள்ளே போடா... அங்கே கமல்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான். அவன் நடிக்கிறதைப் பார்த்துக் கத்துக்கோ’னு பாலசந்தர் சார் சொன்னார்!''
 ''ஒரு தடவை ஃப்ளைட்ல அமிதாப் சாரைச் சந்திச்சேன். நான் போட்டிருந்த கறுப்பு கலர் டிரெஸைப் பார்த்தவர், 'ரஜினி... உனக்கு வெள்ளை கலர் டிரெஸ் நல்லா இருக்கும்’னு சொன்னார். அதுக்குப் பிறகு ஒயிட் டிரெஸ்தான் நிறைய அணியுறேன்!''
 ''சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட், மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர்ஸ், 'நாங்க தர்ற மருந்துகள் நிறையப் பேர் உடம்பு ஏத்துக்காது. தவிர இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் க்யூர் ஆனதே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக் குணமாகுது?’னு ஆச்சர்யமாக் கேட்டாங்க. 'நீங்க கொடுக்கிற மருந்து மாத்திரைகளைவிட என் ரசிகர்கள் பிரார்த்தனைக்கு பவர் அதிகம். அதுதான் என்னைக் காப்பாத்துச்சு’னு சொன்னேன்!''
 '' 'எம்.எஸ்.வி-யைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழி இல்லை; சந்திச்சப் பின் சோறு திங்க நேரம் இல்லை’னு வாலி சார் அடிக்கடி சொல்வார். அதுபோலதான், எனக்கு கே.பி-சார். எனக்குள்ளே இருக்கிற நடிகனை முதன்முதலாக் கண்டிபிடிச்சவர் அவர். அப்புறம்தான் உலகத்துக்குத் தெரிஞ்சேன். 'கேமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே’னு அவர் சொன்னதை இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன்!''

'நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?’ என்ற கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ''இல்லை. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடையப் போராடினேன். இப்போ அந்தப் புகழுக்குக் களங்கம் வராமக் காப்பாத்தப் போராடிட்டு இருக்கேன். அப்பவும், இப்பவும்... எப்பவும் நமக்குப் போராட்டம்தான்!'' என்பார்.