சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Sept 2015

அ.தி.மு.க-வில் ‘மாவட்ட’ மல்லுக்கட்டு!

ரத்தம் இல்லாத யுத்தம்!
ன்றைக்கு போஸ்டர் ஒட்டியவர் நாளைக்கு மந்திரி ஆகலாம்! காலையில் சைரன் வைத்த காரில் போனவர் சாயங்காலம் இறக்கிவிடப்படலாம். இதுதான் ஜெ. பாணி. அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் பல கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. கிளை தொடங்கி மாவட்டம் வரையில் போஸ்டிங்க்காக மல்லுக்கட்டுகள் நடக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கின்றன. அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தால் எம்.எல்.ஏ. ஸீட் தேடி வரும். தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட தொகுதிகளில் இருந்து சிலரை பரிந்துரைக்கலாம். பண மழையும் பொழியலாம் என்பதால், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்துவிட மகாபாரதம் ரேஞ்சுக்குப் போர்க்களத்தில் நிற்கிறார்கள். விரைவில் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் ரிலீஸ் ஆகப் போகிறது. தலைவியிடம் மாவட்டச் செயலாளர் வரம் கேட்டு காத்துக்கிடக்கிறார்கள். பூசாரிகள் மூலம் கடவுளின் கண்ணைத் திறந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தப்படுகிறது. யார் யார்? எந்த ரூட்டில் மூவ் செய்கிறார்கள்? மேற்கு மண்டலத்தில் ஒரு மினி ட்ரிப்.
நீலகிரி: மலையரசி மகுடம் யாருக்கு?

சிறிய மாவட்டமான குளுகுளு பிரதேசத்தில் வெப்பம் தகிக்கிறது. புத்தி சந்திரன், கே.ஆர்.அர்ச்சுனன், பால நந்தகுமார், தேனார் லட்சுமணன், சிவக்குமார், வினோத், சக்ஸஸ் சந்திரன், பலராமன் என மாவட்டச் செயலாளர் பதவிக்கு 16 பேர் களத்தில் நிற்கிறார்கள். இதில் 12 பேர் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மாவட்டச் செயலாளராக இருக்கும் கலைச்செல்வன் ஆதிதிராவிடர். முன்னாள் மாவட்டச் செயலாளர்களான கே.ஆர்.அர்ச்சுனன், புத்தி சந்திரன், பால நந்தகுமார் ஆகியோர் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட கலைச்செல்வன் குன்னூர் தொகுதிக்கு ஸீட் கேட்டபோது கிடைக்கவில்லை. அதனால் தி.மு.க வேட்பாளர் செளந்தரபாண்டியனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதால் அ.தி.மு.க வேட்பாளர் தோற்றார். இதனால் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டார் கலைச்செல்வன். இழந்த செல்வாக்கை ராவணனின் சிபாரிசால் மீட்டு, மாவட்டச் செயலாளர் ஆகி பதவி வகித்துவருகிறார். இவரைப் பற்றிய புகார் நால்வர் அணிக்கும், ஜெயலலிதாவுக்கும் அனுப்பப்பட்டிருப்பதால், கலைச்செல்வனின் மா.செ. பதவி பறிபோகும் என்கிறார்கள். மனு செய்வதற்கான கடைசி நாளுக்குப் பிறகு, கலைச்செல்வன் தேர்தல் ஆணையரான அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கே சென்று பணம் கட்டியிருப்பது தேர்தல் விதியை மீறிய செயல் என்ற கொந்தளிப்பும் கேட்கிறது.
புத்தி சந்திரன், மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் மூலம் காய் நகர்த்தி மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முயற்சிசெய்து வருகிறார். அர்ச்சுனன் இன்னொரு பக்கம் முயன்று வருகிறார். கட்சியில் சேர்ந்து 15 நாட்களே ஆன ஒரு பெண்ணுக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பதவியும், சொந்த தம்பிக்கு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியும் வாங்கிக் கொடுத்தவர் என்ற புகார், அர்ச்சுனன் மீது பாய்கிறது. நால்வர் அணியை அர்ச்சுனன் வளைக்கும் முறையே வித்தியாசமானது. ராஜ்யசபா எம்.பி-யான அர்ச்சுனன் தனக்கு ஒதுக்கப்படும் எம்.பி நிதியை நால்வர் அணியினர் இருக்கும் அமைச்சர்களின் தொகுதிக்குத்தான் அதிகம் ஒதுக்கி அவர்களைக் குளிரவைக்கிறார். அதனால், ‘நால்வர் அணியின் ஆசி அர்ச்சுனனுக்குத்தான் உண்டு’ என அவரது ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். 20 நாட்கள் மட்டும் மாவட்டச் செயலாளராக இருந்தவர் பால நந்தகுமார். தலைமைக்குத் தெரிவிக்காமல் தேயிலை வாரியத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்ற புகாரில் பதவியை பறிகொடுத்தவர். ‘அம்மா என்னை மன்னித்துவிட்டார். அம்மாவே மீண்டும் எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்குவார்’ என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார். படுகர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வினோத்தும் ரேஸில் ஓடுகிறார். மலையரசி மாவட்டத்தில் மகுடம் சூட்டப்படுவது யார் என்கிற சஸ்பென்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.
கோவை மாநகர் மாவட்டம்: வேலுமணியா? வேலுசாமியா?
அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க குஸ்தி நடக்கிறது. கோவை மாநகர மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் தனித்தனி கோஷ்டிகள். முன்னாள் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி மாவட்டச் செயலாளராக இருந்தபோது, த.மலரவன், ஆறுக்குட்டி, சேலஞ்சர் துரை, ஓ.கே.சின்னராஜ் ஆகிய 4 எம்.எல்.ஏ-க்களும் மாவட்டச் செயலாளர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு செ.ம.வேலுசாமியின்  மா.செ. பதவி பறிபோக... யாரும் எதிர்பார்க்காத வகையில் மா.செ. ஆனார் ராஜ்குமார். இதனாலோ என்னவோ, இப்போது மா.செ. பதவிக்கு ஏக போட்டி நிலவுகிறது. ராஜ்குமார், செ.ம.வேலுசாமி, த.மலரவன், சேலஞ்சர் துரை, ஓ.கே.சின்னராஜ், ஆறுக்குட்டி, எம்.பி. நாகராஜ் என ஆரம்பித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் வரை 22 பேர் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் பதவியை பிடித்துவிட துடிக்கிறார்கள். தற்போதைய மா.செ-வான ராஜ்குமார், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். எப்படியாவது மா.செ. பதவியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார் ராஜ்குமார். வேலுமணி, ராஜ்குமாருக்கு பதவி வாங்கி தந்துவிட நினைக்கிறார். அதன்மூலம் எதிரி வேலுசாமியை வீழ்த்த நினைக்கிறார். “அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்பேச்சு கேட்டு ஆடும் பொம்மையாகத்தான் இருக்கிறார் ராஜ்குமார். இவருக்கு சீனியாரிட்டியும் கிடையாது. கட்சியில கஷ்டப்பட்டு வந்தவரும் கிடையாது. கட்சி பதவிகளைக்கூட விற்கிறார்கள். அம்மாவின் காதுக்குப் போனால் நிச்சயம் இவரை மாற்றிவிடுவார்கள்’’ என புலம்புகிறார்கள் கட்சியினர். மேயர் பதவியை பறிகொடுத்து அடுத்து மா.செ. பதவியையும் இழந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி எப்படியாவது மீண்டும் மாவட்டச் செயலாளராகி விட வேண்டும் என்பதற்காக மேலிடத்தில் பகிரத முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். சசிகலா குடும்பத் தொடர்புகள் தாண்டி கார்டனில் தனிப்பட்ட முறையில் ‘மூவ்’ செய்திருக்கிறார் வேலுசாமி. வேலுமணியும் வேலுசாமியும் நகர்த்தும் காய் நகர்த்தல்கள் கார்டன் வரை எதிரொலிக்கிறது. யாருக்கு வெற்றி வேல் கிடைக்கும் என்பதுதான் இன்று வரை சஸ்பென்ஸ்.
கோவை புறநகர் மாவட்டம்: ஒன் மேன் ஆர்மி!
கோவை மாநகர் அளவுக்குப் போட்டியும் இல்லை. கோஷ்டிப் பூசலும் இல்லை. இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர் என தற்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கும்தான் மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவி மாறிமாறி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மா.செ. பதவிக்கு வேலுமணி, தாமோதரன் தவிர, செ.ம.வேலுசாமியும் போட்டியிடுகிறார். மாநகர் மா.செ-வுக்கு வேலுசாமி குறி வைத்திருந்தபோதும் புறநகர் மாவட்டத்திலும் ஒரு கண் பதித்திருக்கிறார். மாநகரில் கிடைக்காவிட்டால் புறநகரிலாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கேயும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் செ.ம.வேலுசாமி. இவர்களைத் தவிர, பொள்ளாச்சி எம்.எல்.ஏ. முத்துகருப்பண்ணசாமி உட்பட 12 பேர் களத்தில் இருக்கிறார்கள். அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் என இரு பதவிகளும் பறிக்கப்பட்டு, எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டதால் அதனை மீண்டும் பெற பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறார் தாமோதரன். ராவணனின் தீவிர ஆதரவாளராக இருந்ததால்தான் முன்பு தாமோதரன் அமைச்சர் ஆனார். ஆனால் அதன்பிறகு, ராவணனின் ஆசி எஸ்.பி.வேலுமணிக்குக் கிடைக்க... தாமோதரனுக்கு மந்திரி பதவி போனதோடு வாய்ஸும் குறைந்து போனது. ராவணனின் ஆசியில் மீண்டும் மாவட்டச் செயலாளராகிவிடுவோம் என கணக்குப் போடுகிறார் எஸ்.பி.வேலுமணி. பதவியைத் தக்க வைப்பதற்காகக் கணக்கு வழக்கு பார்க்காமல் கரன்ஸியை செலவு செய்து வருகிறார் எஸ்.பி.வேலுமணி. ‘‘மாவட்டத்தில் ஒன்மேன் ஆர்மியா இருக்கணும்னு நினைக்கிறார் வேலுமணி. அதற்காக அவர் எதையும் செய்ய துணிவார்”’ என்கிறார்கள் கட்சியினர். வேலுமணிக்கு இருக்கும் எதிர்ப்பை வைத்தே மீண்டும் மா.செ. ஆகிவிடலாம் என நினைக்கிறார் தாமோதரன்.
திருப்பூர் மாநகர் மாவட்டம்: பாலியல் புகார்காரருக்கா பதவி?
முன்னாள் எம்.பி. சிவசாமியை கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற்றியதற்கு பிறகு எம்.எஸ்.எம்.ஆனந்தன்தான் மாவட்டத்தில் கோலோச்சுகிறார். ஆனந்தனை எதிர்த்து கோஷ்டி நடத்த ஆளில்லை. அதனால் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடவும் ஆளில்லை. ஆனந்தனின் எதிர் கோஷ்டியில் இருக்கும் மாநகராட்சி மேயர் விசாலாட்சி எதிர்த்துப் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ஆப் ஆகிவிட்டார். அவிநாசியைச் சேர்ந்த விஜய் ஆனந்த், திருப்பூரைச் சேர்ந்த ஜீப்ரா ரவி ஆகிய இருவர்தான் எம்.எஸ்.எம்.ஆனந்தனை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். இடையில் அமைச்சர் பதவியை எம்.எஸ்.எம். ஆனந்தன் இழந்தபோதும்  மாவட்டச்  செயலாளர் பதவிக்கு பங்கம் வரவில்லை. மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆபத்தில்லாமல் பார்த்துக்கொண்ட ஆனந்தன், அரும்பாடுபட்டு மீண்டும் அமைச்சரானார். அதனால் அவருடைய கை ஓங்கியது. ‘‘அம்மா ஆதரவு எனக்கு உண்டு. மீண்டும் நான்தான் மாவட்டச் செயலாளர்’’ எனச் சொல்லி வருகிறார் ஆனந்தன். “எல்லாத்துக்கும் பணம்தான். கட்சிப் பதவிகூட பணம் கொடுத்தால்தான் கிடைக்குது. குற்றவாளிகளுக்கெல்லாம் பதவி கொடுத்திருக்காங்க. பாலியல் புகார் தொடங்கி எல்லா புகாரும் ஆனந்தன் மீது சொல்லப்பட்டிருக்கு’’ என்கிறார்கள் எதிர் அணியினர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம்: ஜெயராமனுக்கு ஜெயமா?
திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் கோஷ்டிப் பூசலுக்கு அளவே இல்லை. மாவட்டச் செயலாளராக இருக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்குப் போட்டியாக முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சண்முகவேல் உட்பட 10 பேர் களமிறங்கி இருக்கின்றனர். கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கும் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்களை அள்ளி வீசிவருகின்றனர். பொள்ளாச்சி ஜெயராமன், ராதாகிருஷ்ணன், சண்முகவேல் ஆகிய மூன்று பேரும் முக்கோணப் போட்டியில் இருக்கிறார்கள். பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும்தான் போட்டி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவருக்கு இப்போது இறங்குமுகம். ஆனாலும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் இருந்து மா.செ. பதவியைப் பெற்றுவிட துடிக்கிறார். பொள்ளாச்சி ஜெயராமனும் தனி ரூட்டில் மூவ் பண்ணி வருகிறார்.

சேலம் மாநகர்: எடப்பாடி பறிக்கும் குழி!
மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலெட்சுமி பழனிச்சாமி என சேலம் மாநகர் மாவட்டத்தில் 32 பேர் களத்தில் நிற்கிறார்கள். புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.கே.செல்வராஜை வளரவிடக் கூடாது என நினைக்கிறார். அதனால், எம்.பி-யாக இருக்கும் பன்னீர்செல்வத்தை மாநகர் மாவட்டச் செயலாளராக்குவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வரும் சட்டசபைத் தேர்தலில் சேலம் தெற்குத் தொகுதியில் போட்டியிட நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு வசதியாக பன்னீர்செல்வம் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும். அவர் எம்.பி-யாக இருப்பதால் எம்.எல்.ஏ-வுக்கு நிற்க மாட்டார். இதையெல்லாம் கணக்குப் போட்டுதான் அவரை மா.செ. ஆக்க முயல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இங்கே பா.ம.க வேகமாக வளர்ந்து வருவதால், அதைச் சமாளிக்க வன்னியருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது. எம்.கே.செல்வராஜ் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பன்னீர்செல்வத்தின் பக்கம் பார்வை திருப்பப்படுகிறது. அதனால் எம்.கே.செல்வராஜ், மன்னார்குடி சேனல் வழியாக மூவ் நடத்துகிறாராம். இந்தப் போட்டிக்கு இடையில் சீனியர் அரசியல்வாதி, வன்னியர் என்ற தகுதிகளோடு விஜயலெட்சுமி பழனிச்சாமியும் தலைவியை மட்டும் நம்பி களத்தில் இருக்கிறார்.
சேலம் புறநகர் மாவட்டம்: மாநில பதவிக்குக் குறி!
சேலம் புறநகர் மாவட்டம் இப்போது அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கன்ட்ரோலில் இருக்கிறது. அவரை எதிர்த்து 10 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அமைச்சரின் ஏரியா என்பதால் அதிகமாக யாரும் மனுப் போடவில்லை. எஸ்.கே.செல்வம், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோ ஆகிய இருவரும்தான் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்கள். மாநில பொறுப்பை வாங்கிவிடுவதில் கவனம் பதித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்காகதான் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கப் போகிறாராம். மாநில பொறுப்பு கிடைத்துவிட்டால் மா.செ. தேவையில்லாமல் போய்விடும். அதனால் அதை எல்லாம் கணக்குப் போட்டு தன்னுடைய ஆதரவாளரான இளங்கோவை மாவட்டச் செயலாளராகக் கொண்டு வந்துவிட நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி. மற்றவர்கள் வேறு வழிகளில் ரூட் போட்டாலும் எடப்பாடியைத் தாண்டி எதுவும் நடக்காது.



No comments:

Post a Comment