சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Aug 2015

இந்திய அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது!

லங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொழும்பு நகரில் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரஹானே 8 ரன்களில் வெளியேறினார்.

தொடக்க ஆட்டக்காரர் புஜாரா மட்டுமே பொறுமையுடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் எடுத்தார். சர்வதேச அரங்கில் புஜாரா அடிக்கும் 7வது சதம் இதுவாகும். இவருக்கு பக்கபலமாக இருந்த மிஸ்ரா அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது.  இலங்கை வீரர் பிரசாத் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இலங்கை அணியும் முதல் இன்னிங்சில் மள மளவென்று விக்கெட்டுகளை இழந்தது. இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட் பறிகொடுத்தனர்.  இலங்கை அணி 201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இலங்கை  அணியில்  அதிகபட்சமாக பெரைரா 55 ரன்களும், ஹெராத் 49 ரன்களும் எடுத்தனர். . இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 111 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 7வது முறை.  பின்னியும் 2 விக்கெட்டுகளை கழற்றினார்.
இதற்கிடையே இந்த ஆட்டத்தின் போது இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கும் இலங்கை பேட்ஸ்மேன் ஹெராத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கோபமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.
 
2வது இன்னிங்சில் இந்திய அணிக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2 பந்துகளை சந்தித்த நிலையில் புஜரா' டக் அவுட்' ஆனார். தொடர்ந்து ராகுலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். ராகுல் 2 ரன்னிலும் ரஹானே 4  ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய  அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விராட்கோலி, ரோகித் களத்தில் உள்ளனர்.இந்திய அணி 21 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
கவாஸ்கர் கருத்து
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் புஜாரா அடித்துள்ள சதத்தால் தேர்வு குழுவினருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், '' இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று சாதித்தது புஜாராவின் ஆட்டத்திறமையை காட்டுகிறது. அவரது நங்கூரம் போன்ற ஆட்டம் பாராட்டத்தக்கது. ஆனால் ஏற்கனவே ஷிகர் தவான், முரளி விஜய், ராகுல் போன்ற தொடக்கவீரர்களும் அணியில் இருப்பதால் புஜாராவை என்ன செய்வது என்று தெரியாமல் தேர்வுக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்" என்றார்

ஏற்கனவே 3வது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், தவான் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாத நிலையில்தான் இந்திய அணிக்காக மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.ரஜினி, கமல் இல்லாத 80 -களின் சந்திப்பு!

டந்த 1980ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு தொடர்ந்து 6வது ஆண்டாக நடைபெற்றது. ஆனால் இந்த முறை  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் சில நடிகர் -நடிகைகள் பொறுப்பேற்று  நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நடிகைகள் லிசி, குஷ்பூ, சுகாஷினி ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.

சென்னையை அடுத்த ஓலீவ் கடற்கரை சாலையில் நீனா ரெட்டி விடுதியில் நேற்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு கூடிய ஹீரோ- ஹீரோயின்கள் கூடி பழங்கதைகள் பேசி மகிழ்ந்தனர். இந்த முறை  முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிந்து கொண்டு நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னக நடிகர்கள் மோகன்லால், சீரஞ்சிவி, வெங்கடேஷ் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களான ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் ஆகியோரும், நடிகர்கள் சத்யராஜ், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் பார்வதி, ஜெயசுதா ஆகியோர் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. மாமன்னர் ராஜேந்திரச் சோழனின் சாதனைகள்: பள்ளிகளில் கொண்டாட மத்திய அமைச்சகம் உத்தரவு!

டாரம் கெண்டான் என்றும், கங்கை கொண்டான் என்றும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மாமன்னன் ராஜேந்திரச் சோழன் பதவியேற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
கி.பி. 1014ஆம் ஆண்டு,  ராஜ ராஜ சோழனுக்கு பிறகு அரியணையில் அமர்ந்த ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில், தமிழகம் உன்னத நிலையை அடைந்தது. இவரது ஆட்சி காலத்தில் தென்னாடு முழுவதும் ராஜேந்திர சோழனின் கட்டுப்பாட்டில் இருந்தது. 


கங்கை வரை சென்று பல போர்களை நடத்தி வெற்றி கண்டு, கங்கை நீரை கொண்டு வந்து, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, வரலாற்றில் இடம் பெற்றவர் ராஜேந்திரச் சோழன். 'யுனெஸ்கோ' பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கங்கை கொண்ட சோழேச்ரம் கோயிலும்  ராஜேந்திரச் சோழன் ஆட்சி காலத்தில்  கட்டப்பட்டதுதான். இதனாலேயே கங்கை கொண்டான் என்ற சிறப்பு பெயரும் அவருக்கு உண்டு. 

இவரது ஆட்சி காலத்தில் வர்த்தகம், கட்டடக்கலை ,சிற்பக்கலை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறந்து விளங்கியது. இலங்கை, மியான்மர், இந்தோனேஷியா, மலேசியா, லாவோஸ், கம்போடியா நாடுகள் வரை சோழரின் புலிக் கொடி ராஜேந்திர சோழன் காலத்தில் பறந்தது. அந்த காலத்திலேயே ராஜேந்திர சோழனின் ராணுவத்தில் 10 லட்சம் வீரர்கள் இருந்ததாகவும், மிகவும் வலிமையான கப்பற்படை இருந்தாகவும் வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
இத்தகைய பெருமை வாய்ந்த ராஜேந்திர சோழனின் வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் ராஜேந்திரச் சோழன் பதவியேற்று ஆயிரமாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில், காலை அசெம்பிளியின் போது,  ராஜேந்திர சோழன் பற்றிய வரலாறு, அவரது சாதனைகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படியும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கைவிட்ட பிள்ளைகள்... வற்றாத காதல்... கணவரை இடுப்பில் சுமந்து வாழ்க்கை நடத்தும் மனைவி!

தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது விஹாராபாத். இந்த ஊரை சேர்ந்த ஜெகன்நாத் (56) பிறவியிலேயே ஊனமாக பிறந்தவர். இரண்டு கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சி பெறாத நிலையில் உடல் பகுதி மட்டும் வயதுக்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைந்தது. முழுமையான ஊனத்துடன் வளர்ந்த ஜெகன்நாத் வாழ்க்கை நடத்த எந்த வழியும் இல்லாத நிலையில் பிறரின் உதவியை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவர் மீது இரக்கம் கொண்ட சங்கரம்மா என்பவர் ஜெகன்நாத்தை மணம் முடித்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் பிறந்தது. ஜெகன்நாத்தும், சங்கரம்மாவும் ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பதுடன், ஊனமுற்ற காலின் விரலை கொண்டு கீ போர்டு எனும் இசை கருவியையும் வாசிக்கிறார். இதன் மூலம் தங்கள் குழந்தைகளை இந்த தம்பதியினர் வளர்த்தனர்.

அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மூவரும் பருவ வயதை அடைந்ததும் தங்கள் தாய்- தந்தையை கவனிக்க தவறினர். இதனால் ஊனமுற்ற கணவருடன் திருப்பதி, காளஹஸ்தி, சென்னை, மதுரை, ராமேஸ்வரம் என ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் சங்கரம்மா. தான் செல்லும் ஊருக்கு எல்லாம் தனது ஊனமுற்ற கணவனை ஒரு குழந்தையை போல் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டே செல்லும் சங்கரம்மாவின் நிலையை எண்ணி வருந்தும் பொதுமக்கள் அவருக்கு தங்களால் இயன்ற உதவியை கொடுத்து வருகிறார்கள். பிறரிடம் பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையுடன் இரவு நேரங்களில் இவர்கள் பொது வெளிகளில் தங்கியிருக்கும் போது அந்த காசையும் கயவர்கள் களவாடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் கோயில் தலங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் இவர்களை அனுமதிக்க மறுப்பதுடன் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவதாகவும் இவர்கள் வருந்துகின்றனர்.
கை, கால் நல்ல நிலையில் இருப்பவர்களே அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் இந்த உலகில் கை, கால் முற்றிலும் வளர்ச்சியற்ற நிலையில் ஜெகநாத் போன்றவர்களும் நேர்மையுடன் வாழத்தான் செய்கிறார்கள். அதைவிட பெருமை ஊனத்தை ஒரு பொருட்டாக கருதாமல் ஜெகநாத்தை வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டதுடன் அவரை தான் செல்லும் ஊருக்கு எல்லாம் இடுப்பில் தூக்கி செல்லும் சங்கரம்மாவின் அன்பிற்கு இல்லை அளவு கோல்.

ஊனத்தை ஊனமாக கருதாமல் தனக்கு தெரிந்த கலையை பிறருக்கு வாசித்து காண்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கஷ்ட ஜீவணம் நடத்தி வரும் ஜெகநாத்தை ஊர் ஊராக அழைத்து செல்ல தள்ளுவண்டி ஒன்று கொடுத்து உதவினால் நன்றியோடு இருப்போம் என்கிறார் சங்கரம்மா. உதவும் நினைக்கும் நல்ல உள்ளங்கள் 9989871585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி தரத் தயார்: விஜயகாந்த் அதிரடி!

"சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன்!" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, 'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து, அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக திருச்சி, கரூர் மாவட்டங்களில் நடந்த நிகழ்சிகளில் கலந்து கொண்டார் விஜயகாந்த்.


நேற்றிரவு கரூரை அடுத்த தரகம்பட்டியில் 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டத்தின் கீழ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.வி.தங்கவேல் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில்,  விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கடந்த 2001-ல் நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோதே கோரிக்கை விடுத்தேன். அதை இப்போது, ஜெயலலிதா 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால், ஓட்டுக்காகவே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வர இந்த விஜயகாந்த் விடமாட்டான்.
 
கரூர் மாவட்டம் புகளூரில் தமிழ்நாடு காகித ஆலை உள்ளது. இதில் 800 பேர் அதிகாரிகள் என்றால் 700 பேர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். தற்போது உங்கள் ஆட்சியில் அந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தீர்களா?. மக்களுக்கு நான் என்றும் துரோகம் செய்ய மாட்டேன். அதிமுக கூட்டணியில் இருந்தபோது பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்ததை தட்டிக்கேட்டேன். அதை பொறுக்காத ஜெயலலிதா, என் மீது அவதூறுகளை பரப்பினார். இதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது.

தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கக்கூடாது என அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தகுந்த பாடம் புகட்டினால் இரண்டு கட்சிகளுமே இல்லாமல் போய் விடும். மக்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதாக ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். இலவசமாக கொடுக்கும் அனைத்தும் பொதுமக்களாகிய உங்கள் பணம்.  எத்தனை இலவசங்கள் அறிவித்தாலும் இனி யாரும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடமாட்டார்கள். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்ந்தான் என சரித்திரம் பேச வேண்டும். எந்த இடத்திலும் நான் யாரையும் கண்டு பயப்பட மாட்டேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான நானும் இல்லை. தி.மு.க.வும் இல்லை. நான் சட்டசபைக்கு போகவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? ஜெயலலிதாவை புகழும் ஒரு இடமாகவே உள்ளது. அதனால்தான் சட்டசபை நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்கிறேன்.

சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது நான் சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன். சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை' என கூறுகிறார்.  ஆனால் ஜெயலலிதா 3 பேர் மட்டும் தற்கொலை செய்ததாக கூறுகிறார். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், நீங்கள் அனைவரும் உத்தமர்தானா?. மக்களுக்கு துரோகம் செய்யும் யாரையும் விடமாட்டேன்.

இடைத்தேர்தலில், ஜெயிக்கபோவது ஆளுங்கட்சியினர்தான். அதனால்தான் நாங்கள் போட்டியிடவில்லை. இன்னும் 6 மாதத்தில் நடக்கபோகும் தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்க போகிறீர்கள். டெபாசிட் இழக்க வைப்பது இளைஞர்களாகிய உங்களின் கடமை.

என் மீது போடப்படும் வழக்குகளை பற்றி பயப்பட மாட்டேன். தேர்தலின்போது மோடியா? லேடியா என பேசினார்கள். இப்போது மோடி வென்றதும் ஜெயலலிதா ஓடோடி செல்கிறார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போலீஸ் நிலையத்துக்கு செல்வதற்கு முன்பாகவே அவரை தாக்குவதற்காக செருப்பு, முட்டைகளை தயாராக வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் மிலிட்டரி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். அவர்களை தூண்டி விடுவதே ஜெயலலிதாதான். இவர்தான் தமிழகமே மதுஒழிக்க போராடியபோது அந்த போராட்டத்தை திசை திருப்பியவர். மதுவை ஒழிக்கப் போராடிய காந்தியவாதி சசிபெருமாளின் சாவில் மர்மம் உள்ளது. அந்த மர்மத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார்.


விஜயகாந்துதான் அடுத்த முதல்வர்: அடித்து சொல்லும் பிரேமலதா!

எத்தனை பேர் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தாலும் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார்" என்று பிரேமலதா விஜயகாந்த் உறுதிபட கூறினார்.
'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இந்நிலையில்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கரூரை அடுத்த தரகம்பட்டியில் 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டத்தின் கீழ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தே.மு.தி.க. 10 ஆண்டு கட்சி என்று சொல்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றமாக உருவாகி, தற்போது தே.மு.தி.க. தமிழகம் முழுவதும் ஆலவிருட்சமாக உருவாகி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளில் சாப்பாடு, அரிசி, குவார்ட்டர் பாட்டில் கொடுக்காமல் ஒரு கட்சி கூட கூட்டம் கூட்ட முடியாது. ஆனால் இங்கு மக்கள், மாநாடு கூட்டம் போல் அமர்ந்து உள்ளனர்.

கேப்டன் விஜயகாந்த்  மக்களை பற்றி சிந்திக்கிறார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 50 ஆண்டுகள் கொள்ளையடித்து போதாதா? தமிழக மக்களுக்கு என்ன தேவை என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த தேர்தலை பற்றிதான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சிந்தித்து வருகின்றனர். 50 ஆண்டுகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தை சீரழித்துவிட்டது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பது நமது கடமை.
 
 
இன்று வளர்ச்சியில் பீகார் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு கடைசியில் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை குறைசொல்லிதான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கும் வரை எங்கள் மக்கள் பணி ஓயாது. தி.மு.க.வினர் ஒரு மடங்கு மணல் கொள்ளையடித்தால் அ.தி.மு.க.வினர் 10 மடங்கு மணல் கொள்ளையடித்து உள்ளனர். 
மதுவினால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது என புள்ளி விபரம் கூறுகிறது. இதற்கு மதுதான் காரணம். திமுக ஆட்சியில் போட்ட திட்டங்களை அதிமுக முடக்குகிறது. இதேபோல், அதிமுக போடும் திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முடக்குகிறது. ஆனால், தி.மு.க.வால் கொண்டு வரப்பட்ட மதுக்கடையை மட்டும் இரு அரசுகளும் முடக்குவதில்லை. காரணம், தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மது ஆலைகள், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பினாமிகள் பெயரால்தான் நடத்தப்படுகிறது. 

தி.மு.க. ஆட்சியில் 90 ஆயிரம் கோடியாக இருந்த தமிழக கடன் தொகை, இன்று ரூ.4½ லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 110 வது விதியின் கீழ் பல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் எந்த அறிவிப்பும் செயல்திட்டமாக வடிவம் பெறவில்லை. தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு என்றால், அனைத்திலும் முரண்பட்ட ஜெயலலிதா மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்யும், லஞ்சம் இல்லாத, எளிமையான, திமிர் இல்லாத ஆட்சியை விஜயகாந்த் தருவார். அவர் முதல்வர் பதவியில் அமராமல் ஓயமாட்டார். நாங்கள், 'மக்களுக்காக நான்' என்ற திட்டத்தை தொடங்கியவுடன், தி.மு.க.வில் தமக்குத்தாமே என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

அ.தி.மு.க.வினர் இப்போதே 64 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கத் தொடங்கிவிட்டனர்.
அனைவரும் வரும் 2016 சட்டப்பேரவை  தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவிட்டனர். எத்தனை பேர் தேர்தலை சந்தித்தாலும் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார்" என்றார். 


சர்வே முடிவு: அடுத்த முதல்வர் யார்? கருணாநிதியை முந்தினார் ஸ்டாலின்!

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கருணாநிதிக்கு 21.33 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக, லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. 28 மாவட்டங்களில், 80 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 3,320 பேரிடம்  நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு,  இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1 சதவீதம் பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6 சதவீதம் பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர். அதாவது அ.தி.மு.க.வை விட 1.5 சதவீதம்தான்  தி.மு.க.வுக்கு ஆதரவு குறைவு.

தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக தே.மு.தி.க. உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தே.மு.தி.க.வுக்கு 4 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

4வது இடத்தில் பா.ம.க. 3 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பா.ஜனதா கட்சிக்கு 2.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஜெயலலிதா முதலிடத்தையும், ஸ்டாலின் இரண்டாவது இடத்தையும், கருணாநிதி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கருணாநிதிக்கு 21.33 சதவீதமும், விஜயகாந்திற்கு 6.24 சதவீதமும், அன்புமணிக்கு 2.27 சதவீதமும், வைகோவுக்கு 1.85 சதவீதமும், சீமானுக்கு 1.84 சதவீதமும், திருமாவளவனுக்கு 1.13 சதவீதமும், ஜி.கே.வாசனுக்கு 1 சதவீதமும், தமிழிசைக்கு 0.93 சதவீதமும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!

ற்போதையை விலைவாசி உயர்வினால் ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாத நிலையில், ஈரோட்டில் இன்னமும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு போடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ஏ.எம்.வி வீட்டு சாப்பாடு மெஸ் செயல்பட்டு வருகிறது. இந்த மெஸ்சினை வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனை அருகே மெஸ் இருப்பதால் பெரும்பாலும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு சாப்பாடு வாங்க வருவார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இந்த மெஸ்சுக்கு தோசை வாங்க பெண் ஒருவர் வந்துள்ளார். 10  ரூபாய்க்கு  வெங்கட்ராமன் 3 தோசை கொடுத்துள்ளார். 


அப்போது அந்த பெண்,  இந்த 3 தோசையைதான் தானும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரும் பங்கிட்டு சாப்பிட வேண்டுமென்று வெங்கட்ராமனிடம் கூறியிருக்கிறார். இதனால் மனம் இளகி போன  வெங்கட்ராமன் மேலும் 3 தோசைகளை கட்டி அவரிடம் கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் வார்த்தைகள் வெங்கட்ராமனின் மனதை உறுத்தியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு மனம் கலங்கியுள்ளார் வெங்கட்ராமன்.  அங்கு பணி புரியும் செவிலியர்கள், பெரும்பாலான நோயாளிகள் இங்கு இட்லி, தோசை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் பன், டீ-யுடன் பசியாற்றி கொள்வதாகவும் அவரிடம் கூறியுள்ளனர்.  அந்த சமயத்தில் வெங்கட்ராமன் எடுத்த முடிவுதான் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் இந்த திட்டம்.
முதலில் தினமும்  10 நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் மதிய உணவு வழங்கி வந்தார்.  மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் டோக்கன் அளிக்கப்பட்டு கஷ்டப்படும் நோயாளிகள் அடையாளம் கண்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனை கொண்டு வந்து வெங்கட்ராமன் மெஸ்சில் அவர்கள் உணவு பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு சென்று பங்கிட்டு சாப்பிட்டு கொள்ள வேண்டும். தற்போது  இதுவே தினமும்  70 டோக்கன்களாக உயர்ந்துள்ளது.  

இது குறித்து வெங்கட்ராமன் கூறுகையில், ''கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறேன். காலையில் 10 டோக்கன் அளிப்பேன். ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வழங்கப்படும். அதே போல் மதியம் 40 டோக்கன்கள் வழங்குவேன். இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் வகையில் கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறேன். இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இதே மெஸ்சில் பொதுமக்களுக்கு 50 ரூபாயில் உணவு வழங்கப்படுகிறது. இவரது மெஸ்சில் 8 பேர் வேலை பார்த்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இந்த உணவகம் செயல்படுவதில்லை. நஷ்டம் ஏற்பட்டாலும் சேவை மனப்பான்மையுடன் வெங்கட்ராமனும், அவரது மனைவியும் இந்த பணியை செய்து வருகின்றனர்.
முதலில் இலவசமாகவே நோயாளிகளுக்கு உணவு வழங்கலாம் என்று வெங்கட்ராமன் முடிவு செய்திருந்தாராம். ஆனால் உணவுப் பொருட்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து கொள்ள 
வேண்டும்,வீணாக்கி விடக் கூடாது என்பதற்காகவே பின்னர் ஒரு ரூபாய் வாங்க முடிவு செய்திருக்கிறார். 

சாப்பாடு வாங்க வரும் ஒவ்வொருவரிடமும் வெங்கட்ராமன் சொல்லும் ஒரே வார்த்தை ... உணவை வீணடிச்சுடாதீங்க  என்பதுதான்!சிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின சிறப்பு பகிர்வு!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று (ஆகஸ்ட் 30). நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்


29 Aug 2015

இந்திய விளையாட்டில் தயான் சந்த் எனும் சகாப்தம்!

யான் சந்த் எனும் மாயஜால மாந்த்ரீகனின் பிறந்த நாளைதான் (29 ஆகஸ்ட் 1905)இந்தியாவில் தேசிய விளையாடுத் தினமாக கொண்டாடுகிறோம். கொண்டாடி வருகிறோம்.
இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அலகாபாத்தில் எளிய  ராஜ்புத் வம்சத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிரான அணியை  இளைஞன் உற்சாகபடுத்த ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ இறங்கி வேண்டுமானால் ஆடேன் என்று நக்கலாகச் சொல்ல அந்தப் போட்டியில் அவன் அடித்த கோல்கள் நான்கு. 

மிகப்பெரிய மின்விளக்குகள் இல்லாத காலத்தில் நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. அதனாலேயே அவர் சந்த் என அழைக்கப்பட்டார் என்பார்கள். நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக இந்திய அணி ஒன்று தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். அந்த காலக்கட்டத்தில் எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது.அந்தக் கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. 

அப்பொழுது இரண்டு பெண்கள் இவருக்கு ரசிகையாகி தொடர்ந்து வந்திருக்கிறார்கள். டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்.

1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் ஒலிம்பிக் போட்டி நடந்தது.  இந்திய அணி இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்குப் பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தைப் பெற்றது. தயான்  சந்த் அடித்தது இரண்டு கோல்கள். ஒரு சுவாரசியமான விஷயம் போகிற பொழுது வழியனுப்ப வெறும் மூன்றே பேர்தான் தான் இருந்தார்கள். வருகிற பொழுது பம்பாய் நகரே வரவேற்க வந்தது. 

                                     
                                          ' கண்டோர் நடுங்கும் காலன்' ஹிட்லர் தயானின் தீவிர ரசிகர்
அடுத்த ஒலிம்பிக்கிலும் அப்படியே கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி.  அமெரிக்காவோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்கள். இதில் சந்த் ஒரு எட்டு கோல்கள், அவரின் தம்பி ஒரு பத்துக் கோல்கள் அடித்தார்கள்.
பெர்லின் ஒலிம்பிக் ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது. ஒழுங்கான ஆடைகள் இல்லாமல், மூன்றாம் கம்பார்ட்மென்ட்களில் வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியை பயிற்சி போட்டியில் எதிர்கொண்டார்கள். 4-1 என்று அணி தோற்றது. என்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. 

பெர்லின் நகரில் இறுதிப்போட்டி. ஹிட்லர் அமர்ந்து இருந்தார். ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவைத் தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது. முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்து இருந்தது. தயான் சந்த் ஸ்பைக் ஷூவை கழற்றி எறிந்தார். வெறுங்காலோடு களம் புகுந்தார். ஆர்ப்பரிப்பு ,வியர்வை எல்லாமும் வழிய அவர் அங்கே மாயஜாலம் செய்தார். மூன்று கோல்களை அவர் அடிக்க, இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்றது.

தயான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார். வறுமை வாட்டிகொண்டு இருந்த பொழுது வேட்டை,மீன் பிடித்தல் ஆகியனவே அவருக்கு இருந்த பொழுது போக்கு 

அவர் மரணமடைந்த பொழுது யாரும் கண்டுகொள்ள இல்லாமல் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு அடுத்த வருடம் அஞ்சல் தலையை மறக்காமல் வெளியிட்டோம். அவரின் பிள்ளை ஆக்லாந்து நகருக்கு வெகுகாலம் கழிந்து போன பொழுது, ஐம்பாதாண்டுகள் கடந்தும் தியான் சந்த் பிரமிக்க வைத்த இடங்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. வியன்னாவில் நான்கு கரங்கள் ஒவ்வொன்றிலும் ஹாக்கி ஸ்டிக் ஏந்தி ஒரு சிலை சிரிக்கிறது. அது தயான் சந்த் எனும் சகாப்தம். ‪ ‎தனிஒருவன்‬ ‪ = திரைவிமர்சனம்‬

அண்ணன் உருவாக்கிய காவலதிகாரி வேடத்தில் பசை போட்டு தன்னை ஒட்டிக்கொண்டுவிட்டார் ஜெயம்ரவி. கதாநாயகன் என்பதால் ஒரு வரையறைக்குள் செயல்பட்டாக வேண்டியிருந்தாலும் பாத்திரப்படைப்பில் மட்டுமின்றி நடிப்பிலும் பலமாக எதிர்நிற்கும் அரவிந்த்சாமியைச் சரியாக எதிர்கொண்டிருக்கிறார்.
Thani Oruvan
நாயகி நயன்தாராவின் பாத்திரமும் அரவிந்த்சாமியின் பாத்திரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் இருவர் முன்னாலும் ரவி வீழ்ந்திருப்பார். ஆனால் அவர்களுக்கு ஈடுகொடுத்து தன்னைக் காத்துக்கொண்டிருக்கிறார்.  

பதினைந்துவயதிலேயே சமயோசிதமாகச் செயல்பட்டு தான் சிறைக்குப் போனாலும் தன்னுடைய அப்பாவை சட்டமன்றஉறுப்பினராக்கிவிடும் மூளைக்காரரான அரவிந்த்சாமி வளர்ந்து பெரியஆளாகும்போது, அறிவியலாளராகவும் வியாபாரப்புள்ளியாகவும் மாநிலஆட்சியையே தன் சுட்டுவிரலுக்குள் வைத்திருக்கும் சகலசக்தியும் பொருந்தியவராக இருக்கிறார். சித்தார்த் என்கிற அந்த வேடத்துக்கு நூறுசதம் பொருத்தமாக இருக்கிறார் அரவிந்த்சாமி. 

மிகஅலட்சியமாகச் சிக்கல்களை எதிர்கொள்வதும் மிகப்பெரிய பாதகத்தையும் இதழ்க்கோடியில் புன்னகையுடன் மிகஎளிதாகச் செய்வதும் என்று எல்லாக்காட்சிகளிலும் வரவேற்புப் பெறுகிறார். அதுவும் கடைசிக்காட்சி சிறப்பு.


படத்தின் கதையில் கறிவேப்பிலை அளவுக்கே பயன்பட்டாலும் நயன்தாரா தன்னுடைய உடல்மொழியாலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களாலும் ஈர்த்துவிடுகிறார். ஜெயம்ரவியை அவர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார் என்றாலும் அதற்குள்ளும் ஒரு கம்பீரம் இருக்கிறது. 

அவனை எதிர்க்கிறேன்னு உன் நிதானத்தை இழந்துட்டியே என்று ரவியிடம் சொல்லுமிடத்திலும் எதுவாக இருந்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டே பேசவும் என்று எழுதிக்காட்டுவதும் ரசிக்கத்தக்க காட்சிகள்.
ஓரிடத்தில்கூட நல்லவெளிச்சத்தில் நயன்தாராவைப் பளிச்சென்று காட்டாமல் பாடல்காட்சி உட்பட அவர் வருகிற எல்லாக்காட்சிகளிலும் அவர் முகத்தில் நிழல்படிகிற மாதிரியே படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு ஒரு விசாரணைக்கமிஷன் வைக்கவேண்டும். எல்லா நேரங்களிலும் ரவியுடனிருக்கும் நயன்தாரா உச்சக்கட்டக்காட்சிகளில் ஓரிடத்திலும் தென்படவில்லை, அவற்றை எடுக்கும்போது அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லையா?

அரவிந்த்சாமியின் அப்பாவாக நடித்திருக்கும் தம்பிராமய்யா போல் ஒரு அப்பாவியை இந்த உலகம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது. அவர் வருகிற காட்சிகள் சிரிப்பாக இருந்தாலும் அவருடைய வேடம் நம்பும்படியாக இல்லை. 

ஜெயம்ரவியின் நண்பர்கள் அரவிந்தசாமியின் பினாமிகள் என்று படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்துவிட்டார்கள்.

ஹிப்ஹாப்தமிழாவின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. பின்னணிஇசையிலும் அவர் குறைவைக்கவில்லை. தன்னைவிட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்த எதிரியான அரவிந்த்சாமியை நாயகன் ஜெயம்ரவி எப்படி எதிர்கொள்கிறார்? என்கிற பழைய கதையை திரைக்கதையில் சில யுக்திகளைச் சேர்த்து புதிதாக்கிக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. 

ஒவ்வொரு சின்ன குற்றத்துக்கும் பின்னால் பெரியகுற்றங்கள் இருக்கின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் நடக்கிற பெரியகுற்றங்களுக்கு முன்பாக சின்னக்குற்றங்கள் இருக்கின்றன என்று சொல்வதோடு அதற்குச் சான்றாக, இப்போது நாட்டில் நடக்கிற நிகழ்வுகளையே காட்டியிருக்கிறார் இயக்குநர்.  

எதிரியைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி ஜெயம்ரவி விளக்குமிடங்கள் சலிப்பூட்டுபவை. அவர் முன்னால் வருகிறவர்களை எதிர்கொண்டாலே அந்தஇடத்தில்தான் போய்நிற்பார்.

நாயகனின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் புதியவழிமுறை அது புதிதாக இருப்பதால் ரசிக்கமுடிகிறது. நுணுகிப்பார்த்தால் அதிலும் குறைகள் உண்டு.
ஆனாலும் அந்த உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் ஜெயம்ரவி ஒரேநேரத்தில் இரண்டுபெண்களின் உயிர்களைக் காப்பாற்றுவது வரவேற்புக்குரிய காட்சியாக இருக்கும். 

முதலமைச்சர், அமைச்சர் என்று குறிப்பிட்டுக்காட்டிவிட்டு அவர்களை எதிர்க்கும் காவல்அதிகாரிக்கு உயர்மட்டத்திலிருந்து எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் இருக்கிறது, உலகஅளவில் கவனம் பெற்ற ஒரு மருந்துநிறுவனத்தின் தலைவர் மரணம் தொடர்பாக எவ்வித விசாரணையும் இல்லை என்பது உட்பட திரைக்கதையில் உள்ள பலவீனங்களை விறுவிறுப்பைக் கொண்டு மறைத்திருக்கிறார்கள்.தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விரைவில் ஓய்வு பெற இதுதான் காரணம்!

விராட் கோலி நல்ல கேப்டனாக உருவாக வாய்ப்பளிக்கும் வகையில்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி விரைவில் ஓய்வு அறிவித்ததாக இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் தோனி, உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி இவ்வளவு விரைவாக ஓய்வு அறிவித்தற்கான காரணத்தை, தற்போது இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ளார்.   

இது தொடர்பாக ரவி சாஸ்திரி, '' கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை கடந்து தற்போது  டி 20 என மூன்று வகையாக விளையாடப்படுவதையடுத்து  தோனி, அதில் உள்ள கடினத்தை உணர்ந்து கொண்டார். அதே வேளையில் அணியை வழிநடத்த, விராட் கோலி தயாராகி விட்டதையும் தோனி தெரிந்து கொண்டார். இதையடுத்து விராட் கோலிக்கு தக்க தருணத்தில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்து விட்டு, தோனி ஒதுங்கி கொண்டார்.

தோனியின் முடிவு நல்லதொரு முடிவு ஆகும். தோனியின் ஓய்வுக்கு பிறகு, விராட் கோலிதான் அந்த இடத்திற்கு வரத் தகுதி வாய்ந்தவராக இருந்தார். காலம் செல்ல செல்ல விராட் கோலி வெற்றி கேப்டனாக வலம் வருதை நீங்கள் காண முடியும்.  ஒவ்வொரு கேப்டனக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. விராட் கோலி எதிலும் சிறந்து விளங்கக் கூடியவர் '' என்றார்.

வெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்சந்த்!

ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்தின் பிறந்த தினமான இன்று இந்திய விளையாட்டுத்தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் தயான் சந்த் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம்

இந்திய ராணுவத்தின் தனது 16வது வயதில் இணைந்த தயான்சந்த், நிலவொளியில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர். இதனால்தான் தயான் சிங் என்ற இயற்பெயருடன் 'சந்த்' என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.' சந்த் 'என்றால் ஹிந்தி மொழியில் நிலவு என்று அர்த்தம். 'சந்த் பாய்' என்று சக வீரர்கள் அழைக்க இயர் பெயரான தயான் சிங்கில் இருந்து சிங் மறைந்து தயான் சந்த் என்று ஆகி விட்டது.

1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தயான்சந்த் மொத்தம் 14 கோல்களை அடித்தார். இந்திய ஹாக்கி மந்திரவாதி ஆம்ஸ்டர்டாமில் மேஜிக் செய்கிறார். தவறாமல் பார்க்க வாருங்கள் என்று ஆம்ஸ்டர்டாம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 

1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணியை 24-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் தயான் சந்த் 8 கோல்கள் அடித்தார். இவரது சகோதரர் ரூப்சிங் 10 கோல்களை அடித்தார். இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 35 கோல்களை அடித்தது. இதில் 25 கோல்கள் தயான், ரூப்சிங் சகோதரர்கள் அடித்தது. 

1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. போட்டியை காண ஹிட்லரும் வந்திருந்தார். ஜெர்மனி அணியை ஹிட்லர் முன்னிலையில் இந்தியா அணி 10 கோல்கள் அடித்து வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் தயானிடம் வந்த ஹிட்லர், ''ஜெர்மனிக்கு வந்து விடுங்கள் இந்திய ராணுவத்தில் மேஜராக இருக்கும் உங்களை ஜெர்மனி ராணுவத்தில் அதை விட உயர்ந்த பதவி தருகிறேன் என்றார்.  இந்திய அணியை தவிர எந்த அணிக்கும் விளையாடும் எண்ணம் இல்லை என்று நேரடியாக ஹிட்லரிடம் மறுப்பு தெரிவித்தார் தயான்.
ஒரு ஆட்டத்தில் தயான் பல முறை கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. நடுவரிடம் சென்று கோல் கம்பம் சர்வதேச விதிகளின்படி அமைக்கப்படவில்லை. எனவே அளந்து பார்க்க வேண்டுமென்றார். தயானின் கூற்றுபடி கோல்கம்பத்தின் அளவில் மாறுதல் இருந்தது. 

1935ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஹாக்கி போட்டியை காண 'ரன் மெஷின்' டான் பிராட்மேன் வந்திருந்தார். தயானின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட்டில் ரன் அடிப்பது போலல்லவா தயான் கோல் அடிக்கிறார் என்று வியப்படைந்தார்.

நெதர்லாந்தில் ஒரு முறை தயானின் ஹாக்கி மட்டை உடைத்து உள்ளே ஏதாவது காந்தம் இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில்  தயானுக்கு 4 கைகளுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கைகளிலும் அவர் ஹாக்கி மட்டையை பிடித்திருப்பார். பொது இடம் ஒன்றில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்தான்.

இத்தகைய பெருமை வாய்ந்த தயானுக்கு பாரத ரத்னா விருது வழங்காமல், மற்றொருவருக்கும் வழங்கப்படுவதும் சாத்தியமாவது இந்தியாவில் மட்டும்தான். ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!

வறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
புகைபிடித்தல்  மது அருந்துதல்

சந்தோஷம், சோகம், டென்ஷன்... என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது. புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல; அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.
பல் துலக்காமல் தூங்குதல்
காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விஷயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.
வேகமாக உண்ணுதல்
சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி... பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக 'களி’ போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது. ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, செரிமானம் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.
காலை உணவைத் தவிர்ப்பது
அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் காபி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் செரிமான மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.
உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது. மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.
நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது
மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.
டிவியில் மூழ்குவது
மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.
கலர்ஃபுல் ஜங்க் ஃபுட்
இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், 'நார்ச் சத்து’ கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.  சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் 'ஃப்ரூட் சாலட்’ செய்து தரலாம்.
ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை

உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொலஸ்ட்ரால் படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைட்ரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.
டீ, காபி தவிர்க்கலாமே!
டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, காபி அருந்துபவர்களுக்கு அந்தத் 'தூண்டுதல்’ அதிகமாகி மூளையைத் 'தொந்தரவு’ செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். கலோரிகள் அதிகரிக்கும். காபி, தேநீருக்குப் பதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.

அமெரிக்காவில் தமிழ்குழந்தையை அடித்து கொன்ற குஜராத் பெண்ணுக்கு 14 ஆண்டு சிறை!

மெரிக்காவில் தமிழ் தம்பதியினரின் 19 மாத குழந்தையை கொடூரமாக அடித்து கொன்ற குஜராத் பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சிவகுமார்- தேன்மொழி தம்பதி அமெரிக்காவில் கனெடிக்ட் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அத்தியன் என்ற 19 மாத குழந்தை இருந்தது. குழந்தையை கவனிக்க, குஜராத்தை சேர்ந்த கின்ஜால் படேல் என்ற பெண்ணை சிவகுமார் தம்பதியினர் வேலைக்கு வைத்திருந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 3 நாட்கள் கழித்து குழந்தை இறந்து போனது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடல் முழுவதும் காயம் இருந்ததும், மண்டை உடைந்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். வேலைக்கார பெண் கின்ஜால் பாதுகாப்பில் குழந்தை இருந்ததால், அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.  இதையடுத்து கின்ஜால் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

குழந்தை அத்தியன் சாப்பிடாமல் அடம் பிடித்ததால், ஆத்திரத்தில் குழந்தையை அடித்து மாடிப்படியில் இருந்து தள்ளியதாகவும் பின்னர் தலையை பிடித்து சுவற்றில் மூன்று முறை மோதியதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் நேற்று நியூஹெவன் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொலையாளி கின்ஜால் படேலுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின், கின்ஜால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்.

ஏற்கனவே கின்ஜால், குழந்தை அத்தியனை ஒரு முறை அடித்து காயப்படுத்தியுள்ளார். அப்போதே அவரை வேலையை விட்டு நீக்கியிருந்தால், குழந்தை அத்தியன் உயிரிழந்திருக்காது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கின்ஜால் படேலை பாவம் பார்த்து சிவகுமார் தம்பதி வேலையை விட்டு நீக்காமல் இருந்துள்ளனர். இது  தொடர்பாக சிவகுமார்- தேன்மொழி தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் தொழிலாளர்களின்  குறைந்தபட்ச மாத சம்பளமாக  20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி  பதில் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறையில்  பல்வேறு சீர்திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இல்லை என தெரிவித்து தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம்  2ஆம்  தேதி  நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், டெல்லியில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், கடந்த சில நாட்களாக, மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. 

பாஜகவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழு  இந்தப் பேச்சில் ஈடுபட்டு உள்ளது.அமைச்சர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில் மத்திய அரசு தரப்பில் சில அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. அதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம்  20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்ற தகவல், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டு வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது.


இப்போதைய குறைந்தபட்ச மாத சம்பளம்  4,160ஐ உயர்த்த வேண்டும் என்பது தான், வேலை
நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கை என்பதால்  மத்திய அரசின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் முன்வந்து உள்ளன. எனினும்  தங்கள் தலைவர்களிடம் கலந்தாலோசித்து  முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளன.

 குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டால்  இப்போது மிகக்குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது கட்டாயமாகி விடும், இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதோடு, தொழிலாளர்களின் வாக்குகளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வரும் தேர்தல்களில் கிடைக்கும் என்பது மத்திய அரசின் எண்ணமாகவுள்ளது.

இப்போதைய நிலையில் மாதம், 10 ஆயிரத்திற்குள் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே போனஸ் பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். அதை இரட்டிப்பாக்க உள்ள மத்திய அரசு  மாதம்  21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களும் போனஸ் பெற தகுதியுடையவர்கள் என பென்ஷன் சட்டத்தை மாற்ற உள்ளது. அதுபோல், குறைந்தபட்ச போனஸ் தொகை 3,500 ரூபாயாக இருப்பதையும் 10 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது.

அனைத்து தொழிலாளர்களுக்கும்  குறைந்தபட்ச மாத சம்பளம்  20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப் போவதில்லை என்பது தான்  மத்திய அரசின் சூட்சுமமான முடிவு. மாநிலங்களுக்கு ஏற்ப, தொழிலாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளனர். அதன்படி, குறைந்தபட்ச மாத சம்பளம்  7,100 ரூபாயாகவும் அதிகபட்ச சம்பளமாக, 20 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும்.

தற்போதுள்ள மாநிலங்கள்  ஏ - வளர்ச்சி அடைந்த  பி - வளரும்  சி - வளராத என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளன.
 
-  'ஏ' பிரிவில் உள்ள  திறனே இல்லாதவர்களுக்கு மாதம்  10 ஆயிரம், 'பி' பிரிவில் உள்ள திறனே இல்லாதவர்களுக்கு  மாதம் 8,500  'சி' பிரிவில் உள்ள திறனே இல்லாதவர்களுக்கு 7,100 ரூபாய் வழங்கப்படும்.

-  'ஏ' பிரிவில், 'செமி ஸ்கில்டு' எனப்படும், கொஞ்சம் திறன் வாய்ந்தவர்களுக்கு  15 ஆயிரம் 'பி' பிரிவில் இத்தகையவர்களுக்கு  12 ஆயிரத்து 750 'சி' பிரிவில் 10 ஆயிரத்து  650 ரூபாய் வழங்கப்படும்.

-  'ஸ்கில்டு' எனப்படும் திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு  'ஏ' பிரிவில்  20 ஆயிரம்  'பி' பிரிவில்  17 ஆயிரம்  'சி' பிரிவில் 14 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும். இதற்காக குறைந்தபட்ச கூலி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.நிலவுக்கு சென்று வர கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, இரண்டு பேருக்கு 8,250 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்க உள்ளது.

1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு, குடியேற வேண்டாம், சும்மா ஜாலியாக சுற்றி வரலாம் என்று திட்டம் போட்டார்கள். அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின், இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது. மக்களுக்கும் நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
 

இப்போது அதை நிறைவேற்ற ‘கோல்டன் ஸ்பைக்’ என்ற நிறுவனம், நிலாவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த போகிறது. இந்த நிறுவனத்தின் தலைவரான கெர்ரி கிரிப்பின், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதனால் இவர் தரும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த, சுமார் 38,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருப்பதால், நிலாவுக்கு பயணம் மேற்கொள்ள இரண்டு பேர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர், அதாவது ரூ.8,250 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு பேர் நிலாவுக்கு பயணம் சென்று, இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூட்டவோ, குறைக்கவோ அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து கெர்ரி கிரிப்பின் கூறுகையில், "நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத் தகுந்த விதத்தில் பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்" என்கிறார்.

நிலாவுக்கு முதல் உல்லாசப் பயணம் 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப் பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்புள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.