சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

விளம்பரத்துக்கு நடிகைகள்...! பலகோடி சுருட்டிய ரவிச்சந்திரனின் தில்லாலங்கடி கதை!

'ஒரு லட்சம் ரூபாய் கொடு ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' - இது புதுக்கோட்டை மாவட்டத்தில் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நடத்திய ரவிச்சந்திரனின் தாரக மந்திரச் சொல். இந்த சொல்லை நம்பி அவரிடம் ஏமாந்தவர்கள் பல ஆயிரம் பேர். லட்சக்கணக்கான ரூபாயை சுருட்டி ஏப்பமிட்ட ரவிச்சந்திரனை, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி கைது செய்தார். காவல்துறையின் விசாரணையில் ரவிச்சந்திரனின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகி இருக்கிறது.
 

இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் கூறுகையில், "கடந்த வாரம் ஈரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ரவிச்சந்திரனிடம் 3 கோடி ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி ரவிச்சந்திரன், அன்சர்கான், தேவராஜன், அகஸ்டின் லியோ, சுந்தர் ஆகிய 5 பேரை கைது செய்தோம். மோகன்ராஜ் மட்டுமல்ல பலரை ரவிச்சந்திரன் அன்கோ ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ரவிச்சந்திரன், அகஸ்டின் லியோ, சுந்தர் ஆகிய மூன்று பேரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தோம். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையை சேர்ந்த ரவிச்சந்திரன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். பி.ஏ வரை படித்துள்ளான். எல்லோரிடமும் அன்பாக பேசுவான். அவனது பேச்சு பலருக்குப் பிடித்துள்ளது. ஆடம்பரமாக வாழ நினைத்த ரவிச்சந்திரனுக்கு பணம் ஒரு தடையாக இருந்தது. அதை குறுகிய காலத்தில் சம்பாதிக்க திட்டமிட்டான். தனக்கு வெளிநாட்டு லாட்டரியில் கோடிக்கணக்கான பணம் விழுந்துள்ளது. அதை வாங்க சில லட்சங்கள்  கொடுக்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் நம்புவதற்காக தன்னுடைய செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சை காண்பிப்பது ரவிச்சந்திரனின் வழக்கம். 'நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் அதை உங்களுக்கு 5 மடங்காக தருவேன்' என்று கூறுவான். எஸ்.எம்.எஸ் மற்றும் ரவிச்சந்திரனின் பேச்சை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இருக்கிறார்கள். மோகன்ராஜை தவிர இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால் அவனிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர்? எவ்வளவு தொகை? என்ற விவரம் தெரியவில்லை.
மக்கள் நம்புவதற்காக நடிகைகள் சிநேகா, நமிதா, நடிகர்கள் ராதாரவி, வடிவேலு, தாமு உள்ளிட்டவர்களை அழைத்து வந்து நலத்திட்ட உதவிகள் செய்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். இதனால் ரவிச்சந்திரனை எல்லோரும் முழுமையாக நம்பி அவனிடம் பணத்தை கொடுத்துள்ளனர்" என்றார்.

ரவிச்சந்திரன் குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் கிர்ரடிக்க வைக்கிறது.
"புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 'பெரிய மனிதர்', 'எட்டாவது கொடை வள்ளல்', ஆன்மீக ரத்னா, லயன் என்ற பெயர்களில் வலம் வந்த ரவிச்சந்திரன் சறுக்கியதற்கு முக்கியக்காரணம் ஆடம்பர வாழ்க்கையே என்று சொல்லப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு தன்னுடைய தாத்தா பெயரான சவரிமுத்துவையும், தந்தை பெயரான அருள்தாஸையும் சேர்த்து சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையை செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கினார். அறக்கட்டளையின் அறங்காவலரான ரவிச்சந்திரனுக்கு அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த 2010ல் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஜோதிடத்திலும், வரலாறு பாடப்பிரிவிலும் இளங்கலை படித்துள்ளார்.

ரவிச்சந்திரன் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுக்க முடியவில்லை. கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்தன. பணம் கொடுத்து ஏமாந்த பலர் ரவிச்சந்திரனிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார்கள். ஆனால் அதை எதையும் ரவிச்சந்திரன் தரப்பு கண்டுக்கொள்ளவில்லை. அதோடு ரவிச்சந்திரனிடம் ஏமாந்தவர்கள் பலர், கறுப்பு பணத்தையே அவனிடம் கொடுத்துள்ளார்கள். இதனால் அவர்களால் காவல்துறையில் புகார் கொடுக்க முடியவில்லை. இது ரவிச்சந்திரன் தரப்புக்கு சாதகமாகி விட்டது.
 
ஆடம்பர வாழ்க்கையோடு, விளம்பரப் பிரியராகவும் வலம்வந்த ரவிச்சந்திரன், கோயில் திருவிழா தொடங்கி அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்து அமர்க்களப்படுத்தி வந்துள்ளார். ஒரு கோயில் விழாவுக்கு 1001 ரூபாய் நன்கொடையாக கொடுத்தாலும், அதற்கு சில ஆயிரங்கள் செலவழித்து பேனர் வைப்பது ரவிச்சந்திரன் தரப்பு ஸ்டைலாக இருந்து வந்துள்ளது. 'நாடோடிகள்' படத்தில் பேனர் வைத்து பந்தா காட்டுவதைப் போல ரவிச்சந்திரனும் விளம்பரப் பிரியராகவே இருந்துள்ளார். நடிகைகள் சினேகா, நடிகர்கள் ராதாரவி, வடிவேலு, சார்லி உள்ளிட்டவர்களை அழைத்து நலத்திட்ட விழாவை நடத்தி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்" என பல கதைகளை சொல்கிறார்கள் அவ்வூர் வாசிகள்.
நடிகர், நடிகர்களை அழைத்து நடத்திய விழாவில் நடிகர் வடிவேல், "இப்படி தர்ம சிந்தனை படைத்தவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது’’ என்றதோடு, ரவிச்சந்திரனை வாழ்த்தி 'தர்மம் தலைகாக்கும்.. தக்க சமயத்தில் உயிர்காக்கும்' என்ற பாடலைத் தனது பாணியில் பாடி இருக்கிறார்.

நடிகை சினேகா, "முதல்ல ஜோசியரை யாருன்னே எனக்குத் தெரியாது. அழைப்பிதழ் கொடுக்க வந்தப்பதான் அவரோட தாராளத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். நானே அவருக்கு ஃபேனாகிவிட்டேன்'' என்று ரவிச்சந்திரனை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார். 


அந்நிகழ்ச்சியில் நிறைவாக மைக் பிடித்த ஜோதிடர் ரவிச்சந்திரன், "என்னோட வளர்ச்சிக்கே காரணமா இருப்பது சினேகாதான். அவங்க படத்தைப் போட்டு ஜோசியத்தை ஆரம்பிச்சேன். அவங்களால அமோகமா வளர்ந்திருக்கேன். நான்தான் அவங்களுக்கு ஃபேன். எனது லட்ச ரூபாய்க்கு ஒருகோடி ரூபாய்த் திட்டத்தை லோக்கல் ஆளுங்கதான் நம்பாம திட்டறாங்க. ஆனா வெளியூர்க்காரங்க என்னை ரொம்ப நம்பறாங்க. எனது இந்த சேவை எப்போதும் தொடரும்" என்று கூறியுள்ளார்.

மணப்பாறை மஞ்சம்பட்டியில் நடந்த விழாவில் நடிகர் ராதாரவி, ரவிச்சந்திரனை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த விழாவில் பெற்றோர்களை மதித்தவர்கள் வாழ்க்கையில் வீணாகுவதில்லை என்று பேசியதுடன் ரவிச்சந்திரனின் தாயாரிடமும் ஆசி பெற்றார்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்!


No comments:

Post a Comment