சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பெரிச்சிக்கோவில். இங்கே, கஷ்டங்களில் இருந்து நம்மைக் கடைத்தேற்றும் தனிச்சிறப்புடன் அருள்பாலிக்கிறார் ஒற்றை சனீஸ்வரர்.
தமிழகத்திலேயே வன்னிமரத்தடியில் ஒற்றைச் சனீஸ்வரராய், சனிபகவான் அருள்பாலிப்பது இங்கு மட்டும்தான் என்பது, இந்த க்ஷேத்திரத்தின் தனிச்சிறப்பாகும்.
கி.பி.13ம் நூற்றாண்டில் மங்குச்சனியால் பாதிக்கப்பட்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் எனும் மன்னர், 'கதம்பவனம்’ எனப்படும் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தார். இங்கு பெருகி ஓடிக்கொண்டிருந்த மணிமுத்தாறில் நீராட எண்ணி, ஆற்றில் இறங்கிக் கால் நனைத்தார். அப்போது, அரசரின் கையிலிருந்த பொற்கிண்ணம் தவறி, ஆற்றுக்குள் மூழ்கியது. மன்னரோடு வந்த படை வீரர்கள் நீரில் குதித்து, பொற்கிண்ணத்தைத் தேடி எடுக்க முற்பட்டார்கள். அங்கே, எம்பெருமான் சுயம்புலிங்கமாக நீருக்கடியில் படை வீரர்களுக்குக் காட்சி தந்தார். காவலர்கள் மூலம் செய்தி அறிந்த மன்னர், இப்படி நடந்தது மங்குச்சனியின் பாதிப்பில் இருந்து தாம் விடுபட ஈசன் நடத்திய திருவிளையாடலே என்பதை உணர்ந்து, அந்த இடத்தில் ஈசனுக்குக் கோயில் கட்டி, சுகந்தவனேஸ்வரர் என்ற பெயரில் இறைவனைப் பிரதிஷ்டை செய்ததுடன், வன்னி மரத்தின் அடியில் ஒற்றைச் சனீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சனி பகவானையும் பிரதிஷ்டை செய்தார்.
முற்காலத்தில், மூலவரான சுகந்தவனேஸ்வரருக்கு அடியில், திருவானைக்காவல் தலத்தில் அமைந்திருப்பது போன்று, நீர் வழிப்பாதை இருந்ததாம்.
மங்குச் சனி போக்குபவர்:
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனிக்கு ஆளாகி, நோய்களாலும், கடன்களாலும், பகைவர்களாலும் ஒருவர் துன்பப்பட்டால், அவர் இந்தத் திருத்தலத்துக்கு வந்து வேண்டி, எள் விளக்கேற்றி வழிபட, துன்பங்களின் தாக்கம் குறையும்; திருமணத் தடை உள்ளவர்கள், கறுப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட, திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
அதுமட்டுமா? ஒருவரின் வாழ்க்கையில் சனீஸ்வர பகவான் 30 வருடத்துக்கு ஒருமுறை மங்குச்சனி, பொங்குச்சனி, மாரகச்சனி என மூன்று முறை இடம் பெறுவார். இதில், மங்குச்சனியால் ஒருவருக்குக் கல்வித்தடை, தொழிலில் ஆர்வமின்மை, கடன் தொல்லை, உடல் உபாதைகள் ஏற்படலாம். இப்படி, மங்குச்சனியால் பாதிக்கப்படுபவர்கள், சனிக்கிழமைகளில் இங்கு வந்து, எள் சாதம் படைத்து வேண்டிட, சனியின் தாக்கம் குறையும்.
மேலும், சனிப்பெயர்ச்சியின்போது திரவியம், மா, சந்தனம், பால், தேன், பன்னீர் ஆகியவற்றால் இங்கே நடக்கும் அபிஷேக ஆராதனைகளிலும், சனிப்பெயர்ச்சி ஹோமத்திலும் பங்கேற்றால், சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைவதோடு, நன்மைகளும் ஏற்படுவதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
இங்கு சனிபகவான் அவர்தம் குருவான பைரவருடன் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத் தக்கது.
கோயில் தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், விசேஷ தினங்களில் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்திருத்தலத்துக்கு சிவகங்கையில் இருந்து, திருப்பத்தூர் செல்லும் பேருந்துகளில் ஏறி, திருக்கோஷ்டியூர் என்னும் இடத்தில் இறங்கி, 8 கி.மீ பயணித்து, பெரிச்சிக்கோவிலை அடையலாம்.
சனியின் தாக்கத்தால் துன்புறும் அன்பர்கள் வாழ்வில் ஒருமுறையாவது இத்திருத்தலத்துக்கு வந்து வணங்கிச்செல்ல, சங்கடங்கள் அகன்று, வாழ்க்கையில் சந்தோஷம் காண்பர் என்பது நிச்சயம்!
No comments:
Post a Comment