சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Aug 2015

பள்ளம் இங்கே... பல கோடி எங்கே?

லகில் எந்த மூலையிலும் நாம் வண்டி ஓட்டலாம். ஆனால், தமிழகத்தில் வண்டி ஓட்ட வண்டியை விட பலமான முதுகும், ஆன்மிகம் சொல்லும் சகிப்புத் தன்மையும், பொறுமையும் இருக்க வேண்டிய இடமாக தமிழக சாலைகள் உள்ளன.

மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரையில் உள்ள சாலைகள், சங்கத் தமிழ் வளர்த்த பாண்டியர் காலத்தில் போடப்பட்ட சாலைகள் போலவும், அன்றாடம் பல லட்சம் பேர் வந்திறங்கும் சென்னையில், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் போடப்பட்ட சாலைகள் போலவும் தார்ச் சாலைகளா, தார் இல்லாமல் போடப்பட்ட சாலைகளா எனக் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, தமிழகத்தின் அடையாளமாக  கோவில்களும், குளங்களும் மனதில் நிற்பதற்கு பதிலாக மோசமான சாலைகள் மட்டுமே மனதில் நிறைந்து, அடுத்த முறை தமிழகத்தின் பக்கம் வர முடியாதபடி பயமுறுத்தி வருகின்றன.

ஆறு நாட்களுக்கு முன் போட்ட சாலை அரை மணி நேர மழையில் காணாமல் போய் விட்டதா? நேற்று போட்ட சாலையில் பள்ளம் போட்டு ஆட்கள் வேலை செய்கிறார்களா? திடீர் மெகா பள்ளங்கள், மேடுகள் தோன்றி ஏதோ இமய மலையில் வண்டி ஓட்டுவது போல உள்ளதா... கட்டாயம் நாம் தமிழகத்தில் வண்டி ஓட்டுகிறோம் என்று மாநிலம் தெரியாதவர்கள் கூட எளிதாக கண்டுபிடிக்கும் அளவிற்கு சாலையின் நிலை உள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வாகனம் ஓட்டுபவரின் முதுகை வளைத்து வலி கொடுக்கும் 'பொறுப்பான' தரமற்ற சாலைகளும் தமிழகத்திற்கே சொந்தம் என்று சொல்லுமளவிற்கு, ஆங்காங்கே பள்ளங்களும், நீர் குட்டைகளும், கொசுக்கள் விளையாடும் நீர் தேங்கிய கழிவு நீர் தேக்கங்களும் இல்லாத சாலைகளை பார்ப்பது அரிதானது.


அரசு பேருந்துகளின் மோசமான நிலைக்கு அரசின் சாலைகளே   காரணம் என்றால் மிகையாகாது. மோடி அரசு நிலத்தைப் பறிக்க   திட்டமிட்டாலும், விவசாயத்தை மறக்க முடியாயாதபடி, சாலைகள் சேறும் சகதியுமாக நெல் நடவு செய்யும் அளவிற்கு உள்ளது. கட்சியினரின் ப்ளெக்ஸ் போர்டு ஆக்கிரமிப்பு, கடைக்காரர்களின்   ஆக்கிரமிப்பு என பல வகைகளில் சாலையின் அகலம் குறைக்கப்பட்டு வாகனம் ஓட்டுவது உலக சாதனையாக கருதப்படும் நிலைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

முன்பெல்லாம் சம்பாதிக்க பத்து வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். இப்போது அரசியல்வாதி அதரவு பெற்ற அரசு ஒப்பந்த வேலை எடுத்தால் போதும் ஒரு வருடத்திலேயே கோடீஸ்வரன் தான் என்ற நிலைக்கு தமிழகம் முன்னேறி விட்டது.  மத்திய அரசு ரயில், விமானம் சார்ந்த ஒப்பந்த வேலைகளோ ஆறே  மாதத்தில் கோடீஸ்வர யோகம் தான். இவர்கள் போட்ட ஊழல் சாலையில் நாம் எல்லாம் நடக்க முடியாதபடி திணற ஒப்பந்த வேலை எடுத்தவர் பல கோடிக்கு அதிபதியாகி விமானத்தில்  பறக்க வைப்பார்கள் நம் அரசு அதிகாரிகள். வெட்டாத கண்மாயை வெட்டியதாகவும், போடாத சாலையை போட்டதாகவும் கூட கணக்கெழுதி சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

ஒரு பக்கம் அரசு வாகன எரி பொருளை சேமிக்க பக்கம் பக்கமாக செய்திதாளில் விளம்பரம் கொடுப்பதும், மறு பக்கம்  தரமற்ற சாலை அமைத்து மக்களின் பணத்தையும், எரி பொருளையும் வீணாக்கி வருகிறது. வாகன நெரிசலால் நகரங்கள் நகர முடியாதபடி உள்ள சூழலில், மக்களின் வரிப்பணம் பல கோடிகளைத் தின்ற தரமற்ற சாலைகள், மேலும் வாகன நெரிசலில் பெட்ரோல், டீசலை வீணாக்கி பண இழப்பை ஏற்படுத்துகிறது.
சாலையை போடுவோம் எனச் சொல்லும் அரசியல் கட்சிகள் எல்லாம் காலம் கடந்து சாலையின் மூலமாக ஊழல் செய்வோம், பல கோடிகள் சம்பாதிப்போம் என்ற நிலைக்கு தள்ளி விட்டதே இன்றைய மோசமான சாலைக்கு சாட்சி. கமிஷனில் பொதுப்பணித் துறை என்று ப்ளெக்ஸ் போர்டு வைத்தும் நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஹெல்மெட் மூலம் நீதியை நிலை நாட்டி வருவது ஏழைக்கு மட்டுமே சட்டம் என்பதை புரிய வைக்கிறது.

ஆண்டுக்காண்டு வாகனத்தின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் சாலைகளின் தரம் குறைந்து வருவதும், சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாவதும் விபத்தின் விகிதத்தை, நெரிசலை மேலும் அதிகமாக்கும். ஒரு கி.மீ.க்கு 12 லட்சம் செலவழித்து போடப்படும் சாலைகள், ஒப்பந்ததாரர் பணம் எண்ணி முடிப்பதற்குள் காணாமல்  போய் விடும் தரத்தில் போடப்படுகின்றன.

ஒரு பயணி பேருந்தில் பயணச் சீட்டை தொலைத்து  விட்டால், வாங்க மறந்து விட்டால், வேண்டுமென்றே பயணசீட்டு எடுக்கவில்லை என்றால் கேவலப்படுத்தி, அபராதம் விதித்து அனுப்பும் அரசின்   சட்டம், பல கோடிகள் சாலைகள் பெயரில் கணக்கு காட்டப்படுவதை, வீணாக்கப்படுவதை நீதிமன்றமும் வேடிக்கை தான் பார்க்கிறது. திருட்டு என்பது பணத்தை திருடுவது மட்டுமல்ல. இது போன்ற தரமற்ற அரசு ஒப்பந்த வேலைகள் மூலம் சம்பாதிப்பதும் திருட்டு தான். அரசு ஆதரவு பெற்ற திருட்டுக்கள் என்றால் அது ஒப்பந்த வேலைகள் என்று சொல்லுமளவிற்கு சாலைகளும், பாலங்களும், கட்டடங்களும் தரமற்ற வகையில் மக்கள் பணம் வீணாக்கப்படுகிறது.
நம்மை கொள்ளை அடித்த ஆங்கிலேயர் உள்கட்டமைப்பு வசதிகளை தரமுடன் கொடுத்து விட்டார்கள். ஆங்கிலேயர் காலத்து பாலங்களும், கட்டடங்களும் இன்றும் பலமாக  நிமிர்ந்து நிற்கின்றன. மக்களுக்காக சேவை செய்ய நாடாளுமன்றமும், சட்ட சபைக்கும் சென்றவர்கள் கட்டிய பாலமும், சாலைகளும் அவர்கள் ஆட்சி முடிவதற்குள் பலமில்லாமல் அவைகளும் முடங்கி விடுகின்றன.

சமீபத்தில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் லஞ்சப்பணம் 41% கேட்கிறார்கள் என்று வெளிப்படையாகவே தெரிவித்தும், நீதிமன்றம் தானாகவே வழக்கை  விசாரிக்காமல் போனது, தமிழக மக்கள் பெற்ற சாபம். லஞ்ச ஒழிப்புத் துறையும் கண்டுகொள்ளவில்லை.

நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?

1. அரசிடம் இதுவரை சாலை வசதிக்கென செலவழித்த தொகையும், போடப்பட்ட சாலைகளின் தரச் சான்றையும் கேட்க வேண்டும்.

2. சென்னை, கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களைக் கொண்டு தர மதிப்பீட்டை கணக்கீடு செய்ய வேண்டும். அவர்கள் ஒப்பந்த  வேலைக்கு இவ்வளவு தொகை சரிதானா என்பதை பொறியியல்  திட்ட வலுனர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

3. அடிக்கடி சாலை போடும் மர்மம் ரகசியத்தை ஒப்பந்ததரகள் மூலம் பெற வேண்டும்.

4. ஏற்கனவே டாப் 10 லஞ்ச அரசு அதிகாரிகளின் பட்டியலை கொடுத்த ஒப்பந்ததாரர்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
5. இனி சாலை போடும் முன் சாலையின் ஆயுள், உத்தரவாதத்திற்கு ஒப்பந்ததாரர்கள், தரச் சான்று கொடுத்த பின்பே அரசு பணம்  வழங்க வேண்டும். பணம் வழங்க பொறுபேற்கும் அரசு அதிகாரி  மூலம் போடப்பட்ட சாலை தரமற்றதாக இருந்தால்   ஒப்பந்ததாரர், அரசு அதிகாரி அவர்களது சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும். அவர்களது வாரிசுகள் அரசு வேலையில் சேர தடை வேண்டும்.

6. பகுதி வாரியாக போடப்படும் சாலையின் தரம், சாலை போடுபவர் விலாசம் போன்றவற்றை மக்கள் எளிதில் அறியும் வகையில் வெளிப்படையாக இணையதளத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட வேண்டும்.

7. பொதுப்பணித் துறையில் உள்ள அரசு அலுவலர்கள், அதிகாரிகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் வேலை நடக்கும் போது சென்று பார்க்க முடியாது. அப்படியே சென்று பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தால் எதுவும் பேசவும் முடியாது. ஆகவே தர நிர்ணயக் குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

அணைத்து மாவட்ட நீதிமன்றங்களும் அரசு ஒப்பந்த வேலைகளின் தர ஆய்வை உறுதிப்படுத்த நீதிமன்ற கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே பணம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை அரசு ஊழல் அதிகாரிகளை, திடீர் கோடீஸ்வரர் ஆன ஊழல் ஒப்பந்ததாரர்களை 'கவனித்தால்' பயணம் எளிதாவதோடு, மக்கள் பணமும் மிச்சமாகும்.

பள்ளத்தை பார்க்கும் போதெல்லாம் பல கோடிகள் காணமல் போய்  விட்டதை நினைக்கும் போது.., பல கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள நீதிமன்றம் நமக்காக குரல் கொடுக்குமா? இல்லை பல கோடீஸ்வரர்களை உருவாக்கும் ஊழல் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுமா என்பது மக்களின் முதுகு வலியுடன் கூடிய கேள்வியாக உள்ளது.


No comments:

Post a Comment