சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

பாசக்கார விஜயகாந்த்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்து வருகிறது.
இந்தாண்டுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சேகர் ஆகியோர் செய்திருந்தனர். சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
 
கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விஜயகாந்த் அவசர அவசரமாக பேசி முடித்தார். விஜயகாந்த் பேசுகையில், " இந்த ஆட்சியில் குடிநீர், கரண்ட், சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் மக்களுக்கு இல்லை. திருச்சியில் காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மது விலக்கு போராட்டத்தை திசை திருப்ப ஜெயலலிதா கபட நாடகமாடுகிறார்" என்றார்.


மழையில் நனைந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, அவர்களை தன் அருகே  வரும்படி பாசமாக அழைத்தார். இதனால் புகைப்படக்காரர்கள் அவரின் அருகே சென்றனர். மழையின் காரணமாக தொண்டர்களும், மக்களும் உட்காந்திருந்த நாற்காலிகளை குடையாக மாற்றி கொட்டும் மழையில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரின் பேச்சை ஆவலாக கேட்டுக் கொண்டு இருந்தனர்.
இதைக்கவனித்த பிரேமலதாவின் முகத்தில் மகிழ்ச்சி. மழையின் தூறல் மேடைக்குள்ளேயும் வந்தது. சில இடங்களில் மேடை ஒழுக ஆரம்பித்தது. இதனால் நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டத்தை முடிக்க விஜயகாந்த் தயாரானார். நலத்திட்ட உதவிகளாக மீனவர்களுக்கான வலை உள்ளிட்ட உபகரணங்கள் பாக்ஸாக மேடையின் கீழே வைக்கப்பட்டு இருந்தன. மழையில் நனைந்த அந்த பாக்ஸை, பாதுகாப்பாக தொண்டர்கள் மேடைக்கு மேலே கொண்டு வந்தனர். அதை மக்களுக்கு வழங்கினார் விஜயகாந்த்.
 
திருவள்ளூர் மாவட்டம் சார்பில் விஜயகாந்துக்கு வெள்ளியிலான வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. அடுத்து ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. இந்த வைபவம் முடிந்ததும், விஜயகாந்தும், பிரேமலதாவும் அங்கிருந்து புறப்பட்டனர். அதன்பிறகு விஜயகாந்துக்கு அணிவிக்கப்பட்ட ஆளுயர மாலையை சில தொண்டர்கள் தங்களுக்குள் அணிவித்து, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலைஞர்கள்,  'நாளைய முதல்வர் விஜயகாந்த்' என்பதை மையப்படுத்திய பாடல்களுக்கு நடனமாடினர். மேடையின் அருகே வைக்கப்பட்டு இருந்த ஒரு பேனரில் எம்.ஜி.ஆர், காமராஜர் ஆகியோருக்கு நடுவில் சிரித்த முகத்துடன் விஜயகாந்த் போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தார். உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒரு சவுண்ட் பாக்ஸ் (ஸ்பீக்கர்), மழையில் நனையாமலிருக்க, பயன்படுத்தப்பட்ட ஒரு அ.தி.மு.க பேனரைக் கொண்டு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை.
 
நலத்திட்ட பாக்ஸ்களில் சிலவற்றை சம்பந்தமே இல்லாத சிலர் தூக்கிக் கொண்டு சென்றனர். அடுத்து மழைக்காக குடையாக பயன்படுத்தப்பட்ட நாற்காலிகளையும் சிலர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கூட்டம் நடந்த இடத்தில் முழங்கால் வரை மழைத்தண்ணீர் தேங்கி இருந்தது. மழையால் அவசர அவசரமாக கூட்டம் முடிக்கப்பட்டாலும், மழை நிற்க ஒரு மணிநேரத்துக்கு மேலானது. இதன்பிறகே பலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மழை வெளுத்து வாங்கியபோது பிரேமலதா, ஜெயலலிதாவை காட்டமாக அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். அதை தே.மு.தி.க தொண்டர்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தனர். அடுத்து ஸ்டாலின் குறித்து பேச ஆரம்பித்த போது மைக் அருகே வந்தார் விஜயகாந்த். இதைக்கவனித்த பிரேமலதா, கண் சைகையால் என்ன என்று கேட்க, "மழை ஓவராக இருக்கிறது...சீக்கிரம்!" என்று விஜயகாந்த் சொல்ல, "நான் பேசட்டுமா..?" என்று தொண்டர்களைப் பார்த்து பிரேமலதா கேட்டார்.
அவர்களும் பேசுங்கள் என்று சொல்ல, திருவள்ளூர் மாவட்டம் கேப்டனின் கோட்டை என்று பிரேமலதா சொல்ல, தொண்டர்களின் கரவோசை மழையின் சத்தத்தை விட அதிகமாக கேட்டது.



No comments:

Post a Comment