சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

இந்தியாவின் அடையாளம்!: ஃபியட் வரலாறு

ஃபியட் (FIAT) என்ற வார்த்தைக்கு விரிவாக்கம் சொன்னால்... 'அசிலி பிசிலி ரசக்கலி'
பாட்டு மாதிரி இருக்கும். அதனாலேயே இந்த வார்த்தைக்கு விரிவாக்கம் சொல்லாமல் இருக்க முடியாது.
'ஃபேப்ரிகா இட்டாலியானா ஆட்டோமொபிலி டொரினோ' (Fabbrica Italiana Automobili Torino) என்ற இத்தாலியப் பெயர்தான் ஃபியட் (FIAT). ஆங்கிலத்தில் 'இத்தாலியன் ஆட்டோமொபைல் ஃபேக்டரி ஆஃப் டூரின்' (Italian Automobile Factory of Turin). கார் பாடி கட்டுமானத் தரத்தில் கில்லி என்று பெயரெடுத்த ஃபியட் நிறுவனம் 1899-ம் ஆண்டு, ஜியோவன்னி அன்னெல்லி (Giovanni Agnelli) என்பவரால் இத்தாலியில் தொடங்கப்பட்டது. மேலும் ஃபெராரி, மஸராட்டி, ஆல்ஃபா ரோமியோ, லான்ஸியா, இவிகோ போன்ற பல பிரபல நிறுவனங்களும் ஃபியட் நிறுவனத்துக்குச் சொந்தமானதுதான்!
இந்தியாவில் ஃபியட் என்றாலே நமக்கு ஆழமாகப் பதிந்துபோனது பிரீமியர் பத்மினி கார்தான். ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 1905-ம் ஆண்டு முதலே ஃபியட் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. 'பாம்பே மோட்டார் கார் ஏஜென்ஸி' என்ற நிறுவனம் மூலம், ஃபியட்டின் கார்கள் நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரீமியர் பற்றி எழுதாமல் ஃபியட் பற்றிய வரலாற்றை எழுத முடியாது. காரணம், ஆரம்ப காலம் தொட்டே, ஃபியட் நிறுவனத்தின் கூட்டாளியாகத் திகழ்ந்தது புனேவைச் சேர்ந்த பிரீமியர் ஆட்டோமொபைல் லிமிடெட் - இதுதான் PAL.
ஆனால், ஃபியட்டோடு சேருவதற்கு முன்பிருந்தே பிரீமியர் நிறுவனம், க்ரைஸ்லர் என்ற அமெரிக்க நிறுவனத்தோடு சேர்ந்து கார், பஸ், ட்ரக் போன்ற வாகனங்களை அசெம்பிள் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தது.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகுதான் 1951-ல் ஃபியட் நிறுவனத்துடனும் கூட்டணி அமைத்தது பிரீமியர். இத்தாலியில் இருந்து ஃபியட் கார்களின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, புனேவில் அசெம்பிள் செய்து முழு ஃபியட் கார்களாக விற்பனை செய்து வந்தது பிரீமியர் நிறுவனம்.
பிரீமியர் - ஃபியட் கூட்டணியில் வெளிவந்த முதல் கார் ஃபியட் 500. 1954-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் தொழிற்சாலை துவக்கினால்தான் கார்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டபோது, கிரைஸ்லர் நிறுவனம் தனது வாகனங்களுக்கான உரிமையை பிரீமியர் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு, நம் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. ஆனால், ஃபியட் நிறுவனம் இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பிரீமியர் கூட்டணியில் நீடித்தது. இதைத் தொடர்ந்து 1954-ல் ஃபியட் 1100 மாடல் காரையும் அசெம்பிள் செய்து விற்பனை செய்தது பிரீமியர். 1965-ல் இந்த கார் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களுடன் உற்பத்தியானது.
பிரீமியர் உடனான ஃபியட்டின் உறவு நீண்ட காலம் நீடித்தாலும் 1973-ம் ஆண்டில் முறிந்துவிட்டது. அதே சமயம், பிரீமியர் ஏற்கெனவே ஃபியட்டிடம் இருந்து பெற்ற இரண்டாம் தலைமுறை 1100 காரின் வடிவமைப்பைக் கொண்டு 'பிரீமியர் பிரஸிடென்ட்' என்ற காரைத் தயாரித்து விற்றது. இதுவே பின்னர் 'பிரீமியர் பத்மினி' என்ற பெயரில் விற்பனையானது. இந்த கார்தான் இந்தியாவில் கார் போக்குவரத்தை அதிகப்படுத்திய கார் எனலாம். போக்குவரத்தில் மட்டுமல்லாது ரேஸிலும் கலக்கியது இந்த கார். சென்னை சோழவரத்தில் நடைபெறும் 'குரூப் 2 ஃபியட் டிராபி' போட்டியில், 1200 சிசி பிரிவில் ரேஸுக்கென ட்யூனிங் செய்து ஓட்டப்பட்ட பத்மினி கார்கள், அதிகபட்சம் 180 கி.மீ வேகம் வரை சென்று வியக்க வைத்தன. இந்தப் பிரிவில் பெரும்பாலும் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது கோவை ரேஸர்கள்தான். இன்றளவும் மும்பையில் டாக்ஸியாக ஓடிக்கொண்டு இருக்கும் பத்மினி, நம் நாட்டு கார்களின் அடையாளமாக மாறிப் போனது.
ஃபியட் நிறுவனத்தின் 124 ப்ளாட்ஃபார்மில் தயாரான கார்கள், உலகெங்கும் பல நாடுகளில், பல பெயர்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஃபியட், சியட், லாடா போன்ற பெயர்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகிக் கொண்டு இருந்தன. 1966-ம் ஆண்டு உருவான இந்த ஃபியட் 124 ப்ளாட்ஃபார்ம் கார்களை, 131 பிளாட்ஃபார்ம் கார்களாக 1979-ல் மாற்றியது ஃபியட் நிறுவனம். அதனால், 124 ப்ளாட்ஃபார்ம் உபயோகப்படுத்தப்படாமல் இருந்தது.
நம் நாட்டில் 1983-க்குப் பிறகு இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தத்தால், வெளிநாட்டு உபகரணங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து உற்பத்தி செய்யலாம் என்கிற நிலை உருவானது. அதனால், ஃபியட் நிறுவனம் பயன்படுத்தாமல் இருந்த 124 பிளாட்ஃபாரத்தின் டை மற்றும் உபகரணங்களை பிரீமியர் நிறுவனம் விலைக்கு வாங்கி இந்தியாவில் நிறுவியது. நிஸான் நிறுவனத்திடம் இருந்து இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸுக்கான உபகரணங்களை வாங்கி இரண்டையும் இணைத்து 1986-ல் 'பிரீமியர் 118 என்.இ' என்ற காரை அறிமுகம் செய்தது. (1180 சிசி, நிஸான் இன்ஜின் - இதுதான் 118 என்.இ) இந்த கார் அப்போது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டு இருந்த 'ஸ்டாண்டர்டு ரோவர் 2000' மற்றும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் 'கான்டெஸா' கார்களுக்குப் போட்டியாக விளங்கியது.
1990-களில் உலகின் மிகப் பெரிய கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவுக்குள் கூட்டணி அமைத்து நுழைய ஆரம்பித்தன. 1991-ல் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டு இருந்த பத்மினி காரில் '138 டி' என்ற புதிய வேரியன்ட் 1366 சிசி டீசல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், 1993-ம் ஆண்டில் 'பிரிமியர் 118 என்.இ' காரிலும் டீசல் இன்ஜினைப் பொருத்தி வெளியிட்டது பிரீமியர்.
ஃபியட் நிறுவனத்தின் கூட்டணி இல்லாமலேயே அதன் டிசைன் மற்றும் உபகரணங்களை வாங்கி விற்பனை செய்து கொண்டு இருந்தது பிரீமியர் நிறுவனம். கூட்டணி முறிந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் ஃபியட் நிறுவனம் மீண்டும் பிரீமியர் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. அப்போது உருவான கார்தான் 'ஃபியட் யுனோ.' ஆனால், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் இந்தக் கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டதால் ஃபியட் நிறுவனம் விலகிக்கொண்டது. இதன் பிறகு சியன்னா, பேலியோ ஆகிய மாடல் கார்களைத் தனியாகவே தயாரித்து விற்பனை செய்தது ஃபியட் நிறுவனம்.
இந்தியாவில் தனக்கு நம்பகமான கூட்டாளி வேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட ஃபியட் நிறுவனம், 2007-ம் ஆண்டு டாடா நிறுவனத்துடன் சேர்த்து புதிய கூட்டணியை உருவாக்கியது. அதன் பின்பு வந்த ஃபியட் கார்கள் அனைத்துமே டாடா - ஃபியட்டின் கூட்டணிதான்!



No comments:

Post a Comment