சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய்... வசூலிப்பது யார் தெரியுமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில்தான் தெற்கு ரயில்வே நிர்வாக அலுவலகமும், ரயில்வே உயரதிகாரிகளின் அலுவலகங்களும் செயல்படுகின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டி உள்ள மூர்மார்கெட் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் கவுன்டர், ரயில்வே மேலாளர் அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. இருப்பினும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் சரிவர செய்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
 

பொதுவாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் தங்களின் வாகனங்களை நிறுத்த இடவசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த வாகன நிறுத்துமிடங்களை ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்தும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் இடத்துக்கு ஏற்ப மாறுப்படும். 

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் முதல் மூன்று மணி நேரத்துக்கு 15 ரூபாயும், அடுத்த மூன்று மணி நேரத்துக்கு 25 ரூபாயும், அதற்குப்பிறகு 60 ரூபாயும் என்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிமீயம் கார் பார்க்கிங்கில் முதல் மூன்று மணி நேரத்துக்கு 30 ரூபாயும், அடுத்த மூன்று மணி நேரத்துக்கு 40 ரூபாயும், அதன்பிறகு ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 65 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சைக்கிள்களுக்கு முதல் 4 மணி நேரத்துக்கு 2 ரூபாயும், 8 மணி நேரத்துக்கு 5 ரூபாயும், 12 மணி நேரத்துக்கு 10 ரூபாயும், 24 மணி நேரத்துக்கு 15 ரூபாயும், மறுநாளுக்கு 15 ரூபாயும், மாதம் 200 ரூபாயும் கட்டணமாகும். மோட்டார் சைக்கிள்களுக்கு முதல் 4 மணி நேரத்துக்கு 5 ரூபாயும், 8 மணி நேரத்துக்கு 10 ரூபாயும், 12 மணி நேரத்துக்கு 15 ரூபாயும், 24 மணி நேரத்துக்கு 20 ரூபாயும், அடுத்த நாளுக்கு 25 ரூபாயும், மாதம் 400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்ணயித்த கட்டணத்தை கூடுதலாக சில இடங்களில் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார் கொடுத்தாலும் நடவடிக்கை என்பது பெயரளவுக்கே உள்ளது. அதோடு வாகன நிறுத்துமிடங்களில் பெட்ரோல் திருட்டு, உதிரி பாகங்கள் திருட்டு ஆகியவை சர்வசாதாரணமாக நடக்கிறது. இது தெரிந்தும் வேறுவழியின்றி மக்கள் வாகனங்களை அங்க நிறுத்துகின்றனர்.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த கார்களை நிறுத்துமிடம் அருகே மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடந்தன. இதனால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி மற்றும் இட நெருக்கடி காரணமாக கார் பார்க்கிங் வசதி ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்ட்ரலுக்கு வருபவர்கள் காரை நிறுத்த இடவசதியில்லாமல் சிரமப்பட்டனர். இதற்கிடையில் சிலர் சட்டவிரோதமாக கட்டணமும் வசூலித்தனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.சுதன் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அதில், 'சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கார் நிறுத்தும் இடத்தை சட்டவிரோதமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தும் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணத்தை சில சமூக விரோதிகள் வசூலிக்கின்றனர். இதை தட்டிக் கேட்டால் அவர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர். கார் நிறுத்தும் இடத்தில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வாகன நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து அதிக கட்டணத்தை வசூலிக்கும் கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம், தமிழக டி.ஜி.பி, ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புள்ள இடத்தில் பெரும் பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக பல மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கார் நிறுத்தம் இடத்தின் வரைபடம் எங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ஏ" என்று வரையறை செய்யப்பட்டுள்ள இடத்தில் 61 கார்கள் நிறுத்த முடியும். இந்த கார் நிறுத்தம் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டு விட்டது. மேலும், பிரிமீயம் கார் நிறுத்தம் இடத்தில் 48 கார்கள் நிறுத்த முடியும். இந்த கார் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்த ஒப்பந்த பணி நடவடிக்கை அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யும் வரை பிரிமீயம் கார் நிறுத்தம் பகுதியை தெற்கு ரயில்வே நிர்வாகமே கண்காணித்து கட்டணத்தை வசூலிக்கவேண்டும். அந்த ரயில்வே ஊழியர்களுக்கு, தமிழக போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு போலீசார் தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும். இந்த வழக்கை பைசல் செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் கார்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கார்களை நிறுத்துபவர்களை பெரிதும் பாதித்துள்ளது. கூடுதல் கட்டணம் காரணமாக புதியதாக திறக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் வெறிச்சோடி காணப்படுகிறது. இத்தகைய கட்டண கொள்ளைக்கு ரயில்வே நிர்வாகம் கடிவாளம் போட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து ரயில்வே கமர்சியல் பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், "பயணிகள் வசதிக்காக இந்த கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



No comments:

Post a Comment