சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

பேரவைக்கு வந்த ஜெ.வை குளிர வைத்த சபாநாயரின் கவிதையை பாருங்கள்!

சிம்மம் சிம்மாசனத்தில்... வரவேற்கிறோம்... சிவப்புக் கம்பளத்தில்.
பேரவையிலே குலசாமி.. பேருவகையில்... இப்பூமி என்று முதல்வர் ஜெயலலிதாவை, சபாநாயகர் தனபால் கவிதை வடிவில் வரவேற்று பேசினார். 
 
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, வரவேற்று சபாநாயகர் தனபால் பேசியதாவது:


இயற்கையான அறிவுக் கூர்மையும்,
உயர்வான நூலறிவும்,
கூர்மையும்
ஒருசேரப் பெற்றவர்களுக்கு
தீர்த்து வைக்க முடியாத
மிக நுட்பமான செயல்கள் என்று
எதுவும் இல்லை.... 
இருக்கவே இருக்காது. 

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தர்மமே வெல்லும் என பகவத் கீதை உரைக்கிறது. 

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும்...  

சதி சூழ்ந்த
சக்கர வியூகத்தில் வீழ்ந்திட
மாண்புமிகு அம்மா அவர்கள் ஒன்றும்
அபிமன்யு அல்லவே?
சக்கரத்தையே கையில் சுழலவிட்டு
சதிகளை
சம்ஹாரம் செய்கின்ற
மகாவிஷ்ணுவின்
மனித வடிவமன்றோ
மாண்புமிகு அம்மா அவர்கள்.  

அச்சமின்றி
தடைகளை அகற்றி,
துணிவோடு
நீதியை நிலைநாட்டும்
தைரிய லட்சுமி அன்றோ
மாண்புமிகு அம்மா அவர்கள். 

காலம் தரும் சோதனை
கடவுளையும் விடுவதில்லை.
ஆனால்,
தருமம்
சத்தியமாய் வெல்லாமல் விட்டதில்லை.

தர்மத்திற்கு வருகின்ற சோதனை
அச்சமற்ற போர்க் குணத்தை
அள்ளிக் கொடுக்கும்.
விவேகத்தைக் கூட்டி,
வீரத்தைப் பெருக்கி,
விபரீதத்தைக் கழித்து,
வியூகத்தை வகுக்கும் வாய்ப்புக்களை
அள்ளிக் கொடுக்கும்.  

நதி,
இனம்,
மொழி
என அனைத்திலும் 
தமிழகத்தின் உரிமையை,
தமிழ் இனத்தின் உடமையை

விழிப்பால்
விவேகத்தால் வென்றெடுத்து
வெற்றிகளைக் குவித்து வரும்
கடமை குன்றா தாயின்
கம்பீரப் போராட்டங்கள்
சரித்திரமாகி வருகையில்,
சத்தியமே வெல்லும்....
தர்மமே வெல்லும்... 
ஆம்... 
தர்மம் வென்றது.

ஆர்.கே.நகர் தொகுதியில்
ஒன்றரை இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று,
மகத்தான வெற்றி பெற்று
மாண்புமிகு முதலமைச்சர்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
பேரவைக்கு வருகை புரிந்துள்ளார்கள். 
இந்த வெற்றி
அன்னைத் தமிழ் பூமி
அறிந்திராத வெற்றி,
அளப்பரிய வெற்றி,
மகத்தான வெற்றி, 
விண் தொட்ட வெற்றி,

தாயுருவப் போராளிக்கு
தலைநகர் தந்த வெற்றி,

நற்றமிழ்த் தாயின்
நான்காண்டு சாதனைக்கு
நற்சான்று அளிக்கும் வெற்றி. 

உலகத்துத் தமிழினமே
கொண்டாடும்
உன்னத வெற்றி. 

அம்மாவுக்கு நிகர் எவரும் இல்லை
என பதிய வைத்த வெற்றி,

காரிருளைக் கிழித்து, வெற்றிதனைக் குவித்து,  
வந்துள்ள தாயே வருக!
புடம்போட்ட தங்கமென புறப்பட்டு
வந்துள்ள புறநானூறே வருக!
   
சட்டப் பேரவைக்குப் புகழ் சேர்க்க
முடிசூடி வந்துள்ள
முழுமதியே வருக! வருக என வரவேற்கிறேன்.
    
சிம்மம் சிம்மாசனத்தில்...
வரவேற்கிறோம்... சிவப்புக் கம்பளத்தில்.
பேரவையிலே குலசாமி..         
பேருவகையில்... இப்பூமி. 

மகராசி வந்துள்ளார்,
மாதரசி வந்துள்ளார்.
மனித சக்தி கடந்த
மகா சக்தியாக வந்துள்ளார்.   

புகழரசி வருகையால்,
பேரவையும் வெற்றி நடையில்.

உலகமெங்கும் உலவுகின்ற தமிழினத்தை
தம் உயிராய் காக்கின்ற
தாய்க்கே
இனி எப்போதும்,
எக்காலமும்,
எதிலும்
வெற்றி, வெற்றி என
தரணி முழுவதும் ஒலிக்கட்டும்.

பத்து கோடி தமிழ் இனமும்
பயன் பல பெற்று,
பரணி பாடட்டும்,  
பல்லாண்டு, பல்லாண்டு
நலமோடு, புகழோடு, உயர்வோடு,
வளமோடு, சிறப்போடு
வாழ்வாங்கு வாழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மாண்புமிகு அம்மா அவர்களை வருக, வருக என பணிந்து வணங்கி, வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



No comments:

Post a Comment