சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Aug 2015

திரையுலகின் மன்னன்... ராஜாதி ராஜா...!

ஜினி என்ற மூன்று எழுத்து 'தமிழ்' என்ற மூன்று எழுத்துக்குச்    சொந்தம் என்று சொல்லுமளவிற்கு ரஜினியின் நடிப்பும், சிந்தனையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினிக்கே சொந்தம். ரஜினி உழைப்பால் உயர்ந்தவர். வறுமையின்  வலி அறிந்தவர். இன்று வரை எளிமையின் முகவரியாய் வாழ்பவர்.

சிவாஜி நடிப்பின் உச்சம் என்றால், இந்த சிவாஜி ராவ் (ரஜினி) தமிழக மக்களின் அன்பால் உயர்ந்தவர் என்றே சொல்லத் தோன்றும். அந்த அளவிற்கு சிறுவர் முதல் முதியவர் வரை ஆபாசமில்லாத  நகைச்சுவை உணர்வும், மாறுபட்ட உச்சரிப்பும், நடிப்பும் கொண்ட ரஜினிக்கு, யாரும் நெருங்க முடியாத தனி இடத்தை தமிழர்கள் வழங்கி விட்டனர். வேறு எந்த நடிகருக்கும், மொழிப்படத்திற்கும்  கொடுக்காத மரியாதையை தமிழ்த் திரை உலகிற்கு, ரஜினி மூலம் ஜப்பான் மக்கள் முக்கியத்துவம் கொடுத்தது மாபெரும் சாதனை என்றால் மிகையாகாது. ரஜினி... திரை உலகின் மன்னன், ராஜாதி ராஜா என்ற அளவில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

சமீப காலமாக ரஜினியின் வயது குறித்தும், நடிப்பு குறித்தும் தேவை அற்ற விமர்சனங்கள் இணைய தளத்தில் விவாதமாக மாறி வருகிறது. கிராபிக்ஸ் காட்சிக்கும், செயற்கையான ஏமாற்று சினிமாவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள், இயல்பாக நடிக்கும் ரஜினியின் வயது, இளவயது நடிகையுடன் ஆடல் என்ற தேவையற்ற விமர்சனங்கள், குறைகள் சொல்லுபவர்களை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் விரும்பாத விமர்சனமாகும்.

வயதை காரணமாகச் சொல்லுபவர்கள், வயதான பெற்றோரின் சொத்துக்களை வாங்காமல் விட்டு விடுவார்களா? வயதான பெற்றோரை வெளியேற்ற முடியுமா? வயதான வழக்கறிஞர்களை, மருத்துவர்களை ஓய்வெடுக்கச் சொல்ல முடியுமா? அவரவர் தொழிலை அவரவர் பார்க்கும் இந்த நாட்டில், ரஜினியின் வயதை குறை சொல்ல அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.

"வயதாகி விட்டது.. ஆகவே நடிகையுடன் காதல் பாடல்கள் கூடாது!" என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். நடிகையுடன் நடிக்கத்தானே செய்கிறார். எத்தனையோ பேர் குடும்பம் இருந்தும், டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு ஆடுவதை நிறுத்தச் சொல்ல தைரியம் உள்ளதா? ரஜினி படத்தில் இளம் கதாநாயகியுடன் நடிப்பதையே   கேலி பேசும் கூட்டம், முலாயம் சிங் யாதவ் பாலியல் பலாத்காரம்  பற்றி பேசியுள்ளதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? இளம் நடிகையுடன் காதல் பாடல்கள் நடிக்க கூடாது என்றால், படத்தில்  காதல் பாடல்கள் வரும் போது வயதானவர்கள் திரை அரங்கை விட்டு வெளியேறி விடுவார்களா? வயதிற்கும், நடிப்பில் காதல் பாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

ரஜினி சினிமாவில் மட்டுமே நடிக்கிறார். வாழ்வில் நடிக்கவில்லை. நம்பி வந்தவர்களை அழிக்கவில்லை. பாபா படம் தோல்வியில் கூட 110 தியேட்டர் அதிபர்களுக்கும், 10 வினியோகஸ்தர்களுக்கும் கோடிக்கணக்கில் பணத்தை திருப்பி தந்தார் ரஜினி. இவ்வாறு தன்னால் யாரும் நஷ்டமடையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ரஜினி. நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்று பணத்தைத் திருப்பித் தந்தவர்களை இந்திய சினிமா வரலாறில் விரல் விட்டு எண்ண முடியும்.


நாம் கால் கடுக்க நின்று ஓட்டுப்போட்டு அமரவைத்த  எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் எல்லாம் நம்மை அழ வைக்கும் அளவிற்கு மக்கள் பணத்தில் சொத்து குவித்து, வாழ் நாள் முழுவதும் பதவி சுகத்தில் பணம் சம்பாதிக்கும் வெறியுடன் உள்ள போது, வயதனாலும் நடிப்பை தொழிலாகக் கொண்டவர்களை வயதைச் சொல்லி ஓரம் கட்ட நினைப்பது ஏன்? ரஜினியின் வயதைக் குறை கூறுபவர்கள், "உங்களுக்கு வயதாகி விட்டது. உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டோம்!" என அரசியல்வாதியிடம் சொல்லும் தைரியம் உள்ளதா? நடிப்பையே மூச்சாகக் கொண்ட ரஜினிக்கு தடை சொல்லும் இவர்கள், ரஜினியைப்போல வெளிப்படையாக மக்களுக்காக குரல் கொடுத்ததுண்டா?

ரஜினி மக்களுக்கு என்ன செய்தார் எனக் கேட்பவர்களும் அதிகம். ரஜினி மக்களுக்கு நன்மை செய்ய அவர் ஒன்றும் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அமைச்சர் அல்ல. அவர் ஒன்றும் அரசியல்வாதியாக பதவியில் இல்லை. தன்னால் முடிந்த அளவு சமூக நற்காரியங்களில், ஆன்மிக வழியில் மக்களை நடத்தி வரும் ரஜினியை கேள்வி கேட்கும் முன், நாம் என்ன மக்களுக்கு செய்தோம் என்று கேட்டுக்கொண்டால் நல்லது.

ரஜினி ஓய்வெடுக்க வேண்டும் என்ற விமர்சனமும் தவறானதே. அவர் ஒன்றும் அரசு பதவியில் இல்லை. அவரது நடிப்பு, செயல்பாடு அவரது உடல், மனதை பொறுத்த விஷயம். ரஜினியின் ஓய்வை பேசுபவர்கள், அவர் தம் வீட்டில் உள்ள பெரியவர்களை ஓய்வெடுக்கச் சொல்லி, அவர்களுக்காக மாதாமாதம் செலவுக்கு பணம் கொடுப்பது நல்லது.
ரஜினி வித்தியாசமான வசனம் பேசுவதில் 'அவரது வழி தனி வழி' என்று சொல்லும் அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். மேடையில் பேசும் போதுகூட, இயல்பாகவும், வித்தியாசமாகவும் பேசுபவர். ஒரு முறை மேடையில் அவர் சொன்னது, "நான் உண்மையையே பேசிப் பழகிவிட்டேன். இந்தப் பணம், புகழ், பேர் வந்திட்டா பொய் பேசவேண்டிய நிலைமையும் வந்துவிடும். இனிமேல் வாழப்போற காலம் முழுவதும் பொய் பேசாமல் இருந்து விடவேண்டும் என்று தோன்றுகிறது" என எதார்த்தமான உண்மையை இயல்பாக சொன்னவர் ரஜினி.

ரஜினி தமிழர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். தனது பேட்டியில் ஒரு முறை,  "உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும், எங்கேயும் கிடையாது" என வெளிப்படையாக சொன்னவர்.
ரஜினி அரசியலுக்கு வர பயந்தாலும் மக்களுக்காக குரல் கொடுக்க பயந்ததில்லை. விவசாயத்தின் அடிப்படையான நீர் வள மேம்பாட்டிற்கு, தென்னிந்திய நதிகளை இணைக்க ரூ.1 கோடி தருகிறேன் என்று சொன்ன இந்திய நடிகர்களில் முதன்மையானவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் ரஜினி மட்டுமே. தென் இந்திய நதிகளை இணைக்க திட்டம் வரும்போது ரஜினியின் பங்கு இதை விட அதிகமாக இருக்கும் என்பது உறுதி.

ஆசியாவில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். அதே நேரத்தில் ஆன்மிகத்தில், மத நல்லிணக்கத்தில், மக்களுக்கான குரல் கொடுப்பதில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர். மக்கள் திசை மாறி செல்லாத வகையில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக தத்துவப் பாடல்களும், யதார்த்தமான உண்மையைச் சொல்லும் வசனமும், மக்களுக்கு நல்வழியை ஏற்படுத்தியதில் ரஜினியின் பங்கு மகத்தானது. மத ரீதியில் மக்கள் பிளவுபடாமல், ஒற்றுமையுடன் வாழ ரஜினி குரல் கொடுத்தது முக்கியத்துவம்   வாய்ந்தது.

ரஜினி 'படிக்காதவர்' தான், ஆனால் 'உழைப்பாளி'. 'முரட்டுக் காளை'யாக வந்தவர், ஆனால் 'நல்லவனுக்கு நல்லவனாக' வாழ்பவர். 'தர்ம துரை'யாகவும், தமிழர்களின் 'அன்புக்கு அடிமை'யாகவும், என்றும் 'அன்புள்ள ரஜினிகாந்த்'தாகவும் உள்ள இவர் மீதான விமர்சனங்களை யாரும் வரவேற்பதில்லை.


No comments:

Post a Comment