சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

”அர்விந்த் சுவாமி சந்தோஷமா இருக்கான் !”

மீண்டும் வருகிறார் அர்விந்த் சுவாமி... வில்லனாக! 
ஒரு காலை நேரத்தில் அவருடன் நடந்த கலகல சந்திப்பில் இருந்து...
''இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 'ரோஜா’, 'பம்பாய்’ படங்களின் ஹீரோ நீங்க. அந்த வெற்றியைத் தக்கவெச்சுக்காம மிஸ் பண்ணிட்டோமேன்னு நினைச்சிருக் கீங்களா?''
''இல்லை... அப்படி நினைச்சிருந்தா 'ரோஜா’ வெற்றிக்குப் பிறகு, படிக்கிறதுக்காக நான் அமெரிக்கா போயிருக்கவே மாட்டேனே! மறுபடியும் திரும்பிவந்து 'பம்பாய்’ பண்ணினேன். அதுவும் பெரிய ஹிட். அப்பவும்கூட 'நிறையக் கத்துக் கணும்’னு நினைச்சு மலையாளத்துல பரதன் சார்கூட 'தேவராகம்’ பண்ணினேன். தவிர, 'ரெண்டு, மூணு வருஷத்துல சினிமாவைவிட்டுப் போகப்போறேன்’கிற எண்ணம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அதனால ஒரு நடிகனா பெரிய ஆளாகணும், இந்த மார்க்கெட்டைத் தக்கவெச்சுக்கணும்... இந்த நினைப்பு எல்லாம் எனக்கு இருந்ததே இல்லை. நல்ல படங்கள் பண்ணணும்; நல்ல கேரக்டர் பண்ணணும்... அவ்வளவுதான்!''
'' 'தளபதி’யில் தொடங்கி 'கடல்’ வரை... தொடர்ந்து மணிரத்னத்துடன் பயணம் செய்யும் அனுபவம் எப்படி இருக்கிறது?''

'' 'தளபதி’யில் நடிக்கும்போது எனக்கு சினிமாவைப் பற்றி பெருசா எதுவும் தெரியாது. மணி சார், சந்தோஷ் சிவன் ரெண்டு பேரும் சொல்லிக்கொடுப்பாங்க. சொல்றதைக் கேட்டுட்டு அப்படியே நடிக்கவும் மாட்டேன். 'ஏன் இப்படி வர்றாங்க? ஏன் ரைட், ஏன் லெஃப்ட் போகணும்?’னு நொச்சுநொச்சுனு ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பேன். அந்தச் சூழல்ல வேற யாரா இருந்தாலும் 'போடா’னு சொல்லிட்டுப் போயிருப்பாங்க. ஆனா, அவங்க பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்க. உண்மையைச் சொல்லணும்னா எனக்கு அப்பவும் இப்பவும் நடிப்பைவிட டைரக்ஷன் பக்கம்தான் ஆர்வம்.''
'' 'தளபதி’ படத்துக்குப் பிறகு ரஜினியைச் சந்திச்சுப் பேசினீங்களா?''
'' 'தளபதி’ படம் பண்ணும்போது எனக்கு 20 வயசு. யார்கிட்டயும் எந்தத் தயக்கமும் கிடையாது. 'ஹலோ சார், எப்படி இருக்கீங்க?’னு போய் பேசிக்கிட்டே இருப்பேன். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரம் வந்துட்டேன். ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னு ஒரு ரூம்ல போய் படுத்துத் தூங்கிட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு எழுந்து பார்த்தா, பக்கத்துல உள்ள ஒரு சோபாவுல கை கால்களைக் குறுக்கிக்கிட்டு ரஜினி சார் படுத்திருந்தார். மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி சார்கிட்ட, 'ஏன் சார் அங்கே படுத்திருக்கார்? நல்லா வசதியா ஏதாவது பெட்ல படுக்கவேண்டியது தானே?’னு கேட்டேன். 'இது அவர் ரூம். நீங்க வந்து படுத்தீட்டீங்க’னு சொன்னார். 'எழுப்பி இருக்கலாமே!’ கேட்டேன். ''டிஸ்டர்ப் பண்ண வேணாம், தூங்கட்டும்’னு சொல்லிட்டார்’னு சொன்னார். அதேபோல, மைசூர்ல ஷூட்டிங். ஒரு இடத்துல யோசிக்கிற மாதிரி நின்னு பார்த்துக்கிட்டே இருந்தார். சுத்தியும் ஆயிரக்கணக்கில் கூட்டம். 'என்ன சார்... என்ன யோசனை’ங்கிற மாதிரி போய் நின்னேன். தன் சின்ன வயசுல பசியில ரெண்டு மூணு நாட்கள் அந்த இடத்துல படுத்துக்கிடந்ததைச் சொன்னார். இப்படி நிறைய அனுபவங்கள்... ரொம்ப வருஷம் ஆச்சு அவரைப் பார்த்து. மறுபடியும் பார்க்கணும்.''
''விபத்து... உடல்நிலை பாதிப்புனு ஆளே அடையாளம் தெரியாமல் இருந்த நீங்க, எப்படி அதில் இருந்து மீண்டுவந்தீங்க?''
''ஒரு விபத்து. தண்டுவடத்தில் அடி. ஒரு வருஷம் படுத்த படுக்கை. அதில் இருந்து மீள நாலு வருஷங்கள் ஆச்சு. படுக்கையில் இருந்து எழக்கூட முடியாத சூழல். கடுமையான வலி. ஒரு கால் வேற வராமல்போயிடுச்சு. அந்த சமயத்தில் நண்பர் பிஜு, 'ஆயுர்வேத சிகிச்சை முயற்சி பண்ணு’னு சொன்னார். வேண்டாவெறுப்பாதான் அந்தச் சிகிச்சையைத் தொடங்கினேன். ஆனா, இரண்டு மூணு நாட்கள்ல ரிலீஃப் தெரிய ஆரம்பிச்சுது. மூணு மாச சிகிச்சையில் மொத்த வலியில் இருந்தும் விடுதலை. ஆனா, அதுக்கு முன் ஏகப்பட்ட மாத்திரைகள் எடுத்துக்கிட்டதால முடி உதிர்ந்து, உடல் எடை கூடி... நான் நானாக இல்லை. 110 கிலோ எடை இருந்தேன். அந்தச் சமயத்துலதான் மணி சார் கூப்பிட்டார். 'படம் பேர் 'கடல்’. நீதான் இந்த கேரக்டர் பண்ற. உனக்கு ரெண்டு மாசம் டைம்... வா’னு கூப்பிட்டார். திரும்ப எக்சர்சைஸ்னு ஆரம்பிச்சு, வலி வந்துடுமோனு பயம். ஆனா, அவரின் ஊக்கத்தால் ரெண்டு மாசத்துல 15 கிலோ குறைச்சேன். 'கடல்’ படம், என் வாழ்க்கையை மாத்திப்போட்ட ஒரு அனுபவம்.''
'' 'அர்விந்த் சுவாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்’னு சொல்றதை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. இப்படி உங்க அழகைப் பற்றி வரும் கமென்ட்களை எப்படிப் பார்ப்பீங்க?''
'' 'என்னடா இது நம்ம நடிப்பைப் பற்றி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்களே’னு அப்போ வருத்தமா இருக்கும். 'அழகு’னு பாராட்டினப்பவும் நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. விபத்துக்குப் பிறகு என் போட்டோக்களை ஷேர் பண்ணி, 'எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் பாருய்யா?’னு சொன்னபோதும் அதைப் பத்தி கவலைப்படலை. நானாவது பரவாயில்லை... ஐஸ்வர்யா ராய், 'உலக அழகி’னு கொண்டாடப்பட்டவங்க. குழந்தை பிறந்த பிறகு அவங்க வெயிட் போட்ட படத்தையும் பக்கத்துலயே நான் குண்டா இருக்கும்போது எடுத்த படத்தையும் வெச்சு, 'அர்விந்த் சுவாமி மாதிரி மாப்பிள்ளை வேணும், ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு வேணும்னு சொன்னவங்கள்லாம் இப்ப வாங்கடா பார்ப்போம்’னு ஜோக் பண்ணினாங்க. உண்மையிலேயே அந்த கமென்டைப் பார்த்து நான் பயங்கரமா சிரிச்சேன். ஆனா, அவங்களைப் பார்க்கும்போதுதான் பாவமா இருந்துச்சு. அழகை ஒரு காம்ப்ளிமென்டா நான் நினைச்சதே இல்லை. ஏன்னா, அதில் என் உழைப்போ, திறமையோ எதுவும் இல்லையே!''
''மென்மையான இயல்பான நாயகன். இதுதான் அர்விந்த் சுவாமியின் முகம். அப்படி இருக்கையில் இப்ப 'தனி ஒருவன்’ல வில்லன். எப்படிச் சம்மதிச்சீங்க?''
''நெகட்டிவ் ரோல்தான் எப்பவுமே எனக்கு இஷ்டம். பண்ணினால் ஒரு பவர்ஃபுல் கேரக்டரா இருக்கணும்னு நினைச்சேன். அப்பதான் 'தனி ஒருவன்’ வந்துச்சு. இந்தியில 'டியர் டாடி’னு ஒரு படம். அதுல லீட் ரோல். ஹீரோ, வில்லன்னு எந்த வரைமுறையும் வகுத்துக்கலை. நல்ல கேரக்டர்னா பண்ணலாம். இல்லைன்னா, நம்ம பிசினஸை மட்டும் பார்த்துட்டு இருக்கலாம். அவ்வளவுதான்.''
''ஜெயம் ரவி, நயன்தாரானு... கூட நடிக்கிறவங்களிடம் உங்க நட்பு எப்படி?''
''நயன்தாராவை முதன்முறையா இப்பதான் சந்திச்சேன். அவங்க நடிக்க வர்றதுக்கு முன்னாடி என் படங்களைப் பார்த்ததுனாலயா என்னனு தெரியலை... ஆரம்பத்தில் அந்த ஐஸ் பிரேக்குக்குக் கொஞ்சம் டைம் ஆச்சு. ஒருவேளை அது என் வயசுனாலகூட இருக்கலாம். 'எனக்கு ஒண்ணும் அவ்வளவு வயசாகலை. நான் நடிக்க வர்றப்ப 20-தான். என் காலேஜ் ரெக்கார்டை வேணும்னா எடுத்துப் பாருங்க’னு சொன்னேன். அவ்வளவு ஏன், ரவிக்கே சில தயக்கங்கள். 'டேய்... நானும் உன்னை மாதிரிதான் வாடா’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்.''
'' 'அர்விந்த் சுவாமி நல்ல மனுஷன். அவரை மாதிரியான ஒருத்தர் கணவரா வரணும்’னு பெண்கள் ஃபீல் பண்ணிட்டிருந்த சூழல்ல, உங்க வீட்டிலேயே பிரச்னைனு கேள்விப்பட்டோமே?''
''அதைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. எல்லாரும் நல்லவங்கதான். ஒவ்வொருத்தருக்கும் அப்படியான சூழல் வரும். அப்ப அதுக்கு ஏத்த மாதிரி நாம புரிஞ்சுக்கிட்டு அடுத்து என்னன்னு போகணுமே தவிர, அதைப் பற்றி பேசிக்கிட்டிருக்கிறது சரியில்லை. ஏன்னா, அது மத்தவங்களையும் பாதிக்கும். இப்ப, எனக்கு மனைவி இருக்காங்க. யெஸ், நாலு வருஷத்துக்கு முன்ன ரீ-மேரேஜ் ஆச்சு.''

''பசங்க என்ன படிக்கிறாங்க? மனைவி வேலை பார்க்கிறாங்களா?''
''பொண்ணு அமெரிக்காவில் பிரபல ஓவியக் கல்லூரியில் படிக்கிறா. பையன், இங்கே 10-வது படிக்கிறான். மனைவி அபர்ணா முகர்ஜி ஒரு வழக்குரைஞர். ஐ.நா சபை, உலக வங்கி தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் முக்கியமான லாயர். அறிவியல், ராணுவம், சுதந்திரப் போராட்டம், சட்டம்னு நாட்டுக்கு பல்வேறு துறைகள்ல சேவை செய்த குடும்பத்தைச் சேர்ந்தவங்க. சீனியர் அட்வகேட் கோவிந்த் சாமிநாதனின் பேத்தி. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த கேப்டன் லட்சுமி செகால், இந்தியாவின் முதல் ஏர் சீஃப் மார்ஷல் சுப்ரதோ முகர்ஜி, விக்ரம் சாரா பாய்னு பலர் அவரின் பெருமையான சொந்தங்கள். எனக்கு அவங்களை சின்ன வயசுல இருந்தே தெரியும். எப்பவுமே லைஃப் இஸ் பியூட்டிஃபுல். இப்போ இன்னும் மீனிங்ஃபுல்!''


No comments:

Post a Comment