சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Aug 2015

சேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...? ( மினி தொடர்- பகுதி - 3 )

சேது சமுத்திரத் திட்டத்தில் திமுக பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளதால், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் இத்திட்டமே தமிழகத்துக்கு வேண்டாம் என்ற கொள்கையில் உள்ளது. மாற்றுப்பாதையில் கூட வேண்டாமென்று ஒரே முடிவில் உள்ளது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியின் கொள்கையாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒரேடியாக  வெறுத்து ஒதுக்குவது ஏன் என்று அக்கட்சி தலைமையிடம் யாராலும் கேட்க முடியவில்லை. 

அதனால்தான், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், ‘’ராமர் பாலத்தை, புராதன சின்னமாக அறிவிக்கலாம்; மத்திய அரசு இத்திட்டத்தை அமல்படுத்த கூடாது. சேது சமுத்திர திட்டத்தை, நிறைவேற்றுவது உகந்ததல்ல என்ற பச்சோரி குழுவின் அறிக்கையை ஏற்கிறோம் ’’ என்று, வேண்டாம் என்பதற்கான அனைத்து காரணங்களும்  கூறப்பட்டு இருந்தது.

மதிமுகவின் கனவு திட்டம் என்று முழங்கி வந்த வைகோவும், பழ.நெடுமாறனும் இவ்விஷயத்தில் வாயே திறப்பதில்லை. பல கட்சிகள் சேது சமுத்திர திட்டம் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.

இந்த நிலையில்தான் கடந்தாண்டு பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றது. ஆரம்பத்தில் முழு மூச்சாக  இத்திட்டத்தை எதிர்த்து வந்தவர்கள், திடீரென்று,  'இது வாஜ்பாய் கொண்டு வந்த திட்டம். எந்த பிரச்சனையும் வராமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தனர். 

இதில் உள் அரசியலும் உள்ளது. இந்து மக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை பாதிக்காமல், நான்காவது பாதை வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றலாம், அதன் மூலம் தமிழகத்துக்கு நன்மை தரும் இத்திட்டத்தை கொண்டு வந்தது தாங்கள்தான் என்று பெருமையடித்துக் கொள்ளலாம். அது வருகின்ற காலங்களில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கணக்கு போட்டனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம்  தேதி,  மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. பா.ஜ.கவினால் முழுமையாக கைவிடப்பட்ட திட்டம் என்று நினைத்திருந்த வேளையில் ‘சேது சமுத்திர திட்டம் ராமர் சேது பாலத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மாற்று வழியில் நிறைவேற்றப்படும்’ என பாராளுமன்றத்தில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்தார். எப்படியோ திட்டம் வந்தால் தேவலாம் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்,  சேதுசமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்துவது குறித்து நேரில் ஆராய நிதின் கட்கரியை தமிழகம் அனுப்பி வைத்தனர். இதற்காக  அவர் தனி விமானத்தில் மதுரை வந்தார். அவருடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கடலோர காவல்படை கமாண்டர்கள், சேது சமுத்திர திட்ட அலுவலர்கள் வந்தனர். 

மதுரையிலிருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானம் மூலம் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து, அதில் இருந்தபடியே இந்திய-இலங்கை கடல் எல்லை, தனுஷ்கோடி பகுதி, ராமர் பாலம், சேது சமுத்திர திட்ட வழித்தடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். அங்கு நிருபர்களிடம் பேசிய நிதின்கட்கரி, ‘’முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட இந்த திட்டத்தை, இன்றைய மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்போடு மக்களின் சமய உணர்வுகளை புண்படுத்தாத வகையில் செயல்படுத்த முன்வந்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றும்போது, ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் செலவு உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சில யோசனைகள் பரிசீலனையில் உள்ளன.
இந்தியா 3 ஆயிரத்து 554 கடல் மைல் தூரத்துக்கு கடற்கரையை கொண்டு பல்வேறு நாடுகளோடு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்திய கடல்வாணிபம் கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையேயும் நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் கிழக்கு, மேற்கு கரைகளை இணைத்து கப்பல் போக்குவரத்து பாதை அமையப்படாத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு கரையோரங்களில் இருந்தும், மேற்கத்திய நாடுகளில் இருந்தும் கிழக்கு கரையோர துறைமுகங்களுக்கு வரவேண்டிய கப்பல்கள், இலங்கையை சுற்றி நீண்ட பாதையை கடக்க வேண்டியுள்ளது. 

கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையேயான கடல்வழி பாதையை குறைக்கும் நோக்கத்தோடும், இந்த பாதை இந்திய கடல் எல்லைக்கு உட்பட்டதாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடும் கடந்த காலங்களில் ஏராளமான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சுதந்திர காலத்துக்கு முன்னரே 1860-ல் தொடங்கி 1922-ம் ஆண்டு வரையில் சுமார் 9 திட்டங்கள் உருவாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் ராமேசுவரம் தீவை ஒட்டி மன்னார் வளைகுடாவையும், பாக்.ஜலசந்தியையும் இணைக்கும் வகையில் கடல் வழியில் கப்பல் போக்குவரத்துக்கு உகந்ததாக ஒரு வாய்க்கால் அமைப்பது என்பதுதான். 
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்திய கடற்கரை முழுவதும் இந்திய எல்லைக்கு உட்பட்டு கப்பல் போக்குவரத்து பாதை அமையும். முக்கியமாக கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையே விரைவான கடல்வழி போக்குவரத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். மேலும் விரைவான மற்றும் கூடுதலான கப்பல் போக்குவரத்தின் மூலம் அபரிமிதமான கடல்சார் வணிகம் வளர்ச்சியடையும். 

தொடக்கத்தில் தற்போது இருக்கும் ரெயில் பாதையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி பாம்பன் வழியையும் முறைப்படுத்தி 30,000 டன் எடையை சுமந்து செல்லும் கப்பல்களுக்கு வழி அமைக்கப்படும். காலப்போக்கில் இதே பாதையில் பெரிய கப்பல்களும் செல்லும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடம், சுமார் 3,000 கப்பல்கள், ஏராளமான சிறிய கப்பல்கள், ராணுவ கப்பல்கள் மற்றும் கப்பல் இழுவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு உதவிடும். 
இந்த திட்டம் நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான பாம்பன் பாலம் வழியில் அமைக்கக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை இந்த அரசு முனைந்து செயல்படுத்தும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களும், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டமும் பெருமளவில் பொருளாதார நன்மைகளை அடைவதோடு ஏராளமான வேலை வாய்ப்பையும் பெறும்’’ என்றார்.
‘’எந்த வழியிலாவது சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் சரி’’ என்று,பா.ஜ.க.வின் இந்த முயற்ச்சியை கலைஞர் மனம் திறந்து பாராட்டினார்.

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இலங்கையிலுள்ள சில துறைமுகங்களை சீனா, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டுமென்றால் இந்திய பெருங்கடலில் இந்திய கப்பல் படையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 

அதற்கு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால்தான் நம் நாட்டு எல்லைக்குள், நம் போர் கப்பல்கள் சுலபலாமக் சென்று வர முடியும். இல்லையென்றால் இலங்கையை சுற்றி வரும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை யோசித்துதான் மத்திய அரசு, இத்திட்டத்தின் மேல் ஆர்வம் கொண்டுள்ளது என்கிறார்கள். 

இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திர திட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது. அதற்கு தமிழக அரசும், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழங்குவார்களா? 

அப்படி ஒரு ஒத்துழைப்பு மாநில அரசிடமிருந்து கிடைத்து, சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் என்னவெல்லாம் நடக்கும்....

சேது சமுத்திர திட்டம் வேண்டுமா? வேண்டாமா என்கிற வழக்கு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடுத்தக் கட்டமும், சேது சமுத்திர திட்டமும் பா.ஜ.க.அரசின் கைகளில் உள்ளது. 

ராமர் பாலம் விவகாரத்தில் சர்ச்சை எழாமல் இருந்திருந்தால்,  பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை தொடர்ந்திருக்கும். ராமரை வைத்து பிரபலமடைந்த கட்சி என்பதால் சேது கால்வாய் திட்டம் நல்ல திட்டம் என்றாலும், மத நம்பிக்கை பாதிப்படைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக  இருக்கிறது.

அதனால்தான் சில மாதங்களுக்கு முன் மாற்று வழியான நான்காவது வழித்தடத்தில் திட்டத்தை செயல் படுத்தலாம் என்று முடிவு செய்த மோடி அரசு, மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரியை அனுப்பி  ராமேஸ்வரத்தில் ஆய்வு செய்து வர பணித்ததும், அந்த ஆய்வின்போது, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியதையும் கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், அதற்கு பின் மத்திய அரசு சேது கால்வாய் திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. மவுனம் நிலவுகிறது. இதற்கு காரணம், பாஜகவில் தீவிர இந்துத்துவ சிந்தனையோடு இருக்கும் சில தலைவர்கள் எந்த வழித்தடத்திலும் அத்திட்டம் வரக்கூடாதென்று போடும் முட்டுக்கட்டைதான் என்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட மக்களோ, வறட்சியான, வேலையில்லா நிலை தொடரும் எங்கள் பகுதியில் எப்படியாவது எந்த வழியிலாவது இத்திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

150 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாயால் அரபு நாடுகள் ஐரோப்பாவுடன் வணிகத் தொடர்புகளை அதிகம் ஏற்படுத்திக்கொண்டு உள்ளன. அது மட்டுமில்லாமல், மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்தின் பாலைவனத்தின் வழியே செயற்கையாக தோண்டப் பட்ட நீர்வழித்தடத்தில் செல்லும் அந்த கால்வாயால் எகிப்து அதிக வருவாய் ஈட்டுகிறது. அது மட்டுமன்றி அரபு நாட்டு கப்பல்கள் ஐரோப்பா செல்வதற்கு இந்த கால்வாய் அதிகமாக பயன்படுகிறது. 

இதற்கு முன்பு ஆப்ரிக்காவை சுற்றிக்கொண்டுதான் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அதனால், எரி பொருள், பயண நேரம் அதிகம் செலவாகின. அது மட்டுமில்லாமல் சோமாலிய கடற்கொள்ளையரின் அட்டகாசம் வேறு. இந்த தொந்தரவுகள் இல்லாமல் சூயஸ் கால்வாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இதில் உள்ள ஒரே பிரச்சனை, பாலைவனம் வழியில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால், அடிக்கடி மணல் சேர்ந்து கொண்டிருக்கும், இதை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இதைப் பார்த்து தான் பனாமா கால்வாய் 1915 ல் உருவாக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க செயற்கை கால்வாய். பசிபிக் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் கால்வாய். வட, தென் அமெரிக்காவை இணைக்கும் வகையில் பிரேஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது. 

இந்த கால்வாய் வழியாக ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு கால்வாய்களையும் விட இயற்கையானது சேது கால்வாய். காரணம், இது முழுக்க கடலுக்குள் தான் தோண்டப்படுகிறது. நிலத்தில் தோண்டப்படவில்லை. இத்திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந் தால் மேலே குறிப்பிட்ட இரண்டு கால்வாய்களையும் விட சேது முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி யிருக்கும். தென்மாவட்டங்கள் வளர்ச்சியடைந்திருக்கும். ஏன், இந்தியாவே கடல் வழி வாணிபத்தில் பெரு முன்னேற்றம் கண்டிருக்கும்.
இன்று பஞ்சம் பிழைக்க தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த நிலை மாறி வெளிநாட்டினர் இங்கு வேலைக்கு வந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் எல்லாம் கனவாகிப் போனது.
 
அறிஞர் அண்ணா அவர்கள் சேதுகால்வாய் திட்டம் பற்றி 25.04.1968 தேதியிட்ட காஞ்சி இதழில், ‘’தனுஷ் கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய் எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது. தனுஷ்கோடியைக் கடல் விழுங்கியதால் ஆயிரக் கணக்கான மக்கள் வீடு வாசல் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க சேதுக் கால்வாய் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. இத்திட்டம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே உருவாக்கப்பட்ட நல்ல திட்டமாகும். 
வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுக்க இத்திட்டம் உதவுவது ஒருபுறம் இருக்க, இத்திட்டத்தின் மூலம் எவ்வளவோ நன்மைகள் நமக்கு கிடைக்கும். இது மட்டும் அல்ல கப்பல்கள் இலங்கையை சுற்றுவதால் கூடுதலாக ஒன்றரை நாள் பிரயாணம் செய்யவேண்டி உள்ளது. கூடுதல் பணம் செலவாகிறது. 

சேதுக் கால்வாய் அமைத்தால் இந்தப் பணம் மிச்சப்படும் விரைவாகவும் கப்பல் போய்வரும். மேலும் இந்தக் கால்வாய் திட்டத்தினால் தூத்துக்குடி துறைமும் வளர்ச்சியடையும். அங்கு ஏற்றுமதி இறக்குமதி அதிகமாகும். அத்துடன் நமது கப்பல்கள் வெளிநாட்டு நீர்பரப்பில் செல்லாமல் இந்திய நீர்பரப்பில் சென்றுவர வழி ஏற்படும்.’’ என்று சேதுகால்வாய் நடைமுறைக்கு வந்தால் ஏற்படப்போகும் நன்மைகள் குறித்து கணித்து எழுதினார். 

அவர் மட்டுமல்ல, அப்போது பல அரசியல் தலைவர்களும் இத்திட்டம் வரவேண்டுமென்று பேசினார்கள். எல்லோரும் சேது கால்வாய் திட்டம் வரவேண்டுமென்று ஆர்வமாய் இருந்த காலகட்டத்தில், அப்போது இருந்த எந்தவொரு அமைப்பும், ராமேசுவரம் கடலுக்குள் ராமர் பாலம் இருந்ததை  சுட்டிக்காட்டவில்லை. இந்த பிரச்சனை திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் செயல்படுத்த முயற்சிக்கும்போதுதான் ராமர் பாலம் பிரச்சனை விஸ்வ ரூபமேடுத்தது. 

இது ஒருபக்கமிருந்தாலும், ராமர் பால சர்ச்சை கிளம்பியபோது திமுக அரசும், காங்கிரஸ் அரசும் இந்து அமைப்புகளை சமாதானப்படுத்தாமல், இந்துக்களின் மத நம்பிக்கையை கிண்டல் செய்யும் வகையில் பேசியது அவர்களை மேலும் ஆத்திரம் கொள்ள வைத்தது. இதே திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்திருந்தால் யாரும் வாயை திறக்க மாட்டார்கள் என்று சொல்வோரும் உண்டு.

இத்திட்டத்தை வேறொரு அமைச்சர் மூலம் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்கிறார்கள். டி.ஆர். பாலுவின் தொழில், நடவடிக்கைகளை ஊடகங்கள்  வெளிப்படுத்தியதால், இத்திட்டமே அவர் பயன்பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்று எல்லோரும் நினைக்கும் வகையில் அமைந்துவிட்டது. அவருடைய நடவடிக்கைகளும் அதுபோலவே இருந்தது.
சேது சமுத்திரத்தில் தற்போது தோண்டப்பட்ட மணல் கால இடைவெளியால் மீண்டும் கடலில் சேர்ந்து விட்டது என்கிறார்கள். ஆனால், அதில் போடப்பட்ட இரண்டாயிரத்து நானுாறு கோடி பணம் எங்கே சேர்ந்துள்ளது என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை.

கனவுத் திட்டமான சேதுகால்வாய் திட்டம் கடைசி வரையில் தமிழர்களுக்கு கைக் கூடாமலேயே போய் விடுமா அல்லது பின்னொரு நாள் நனவாகுமா என்பதற்கு இப்போதைக்கு பதில் இல்லை. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தங்கள் மதவாத முகங்களை கழட்டிவீசிவிட்டு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முன்வந்தால் ஒருவேளை இதற்கு விடை கிடைக்கலாம்.


No comments:

Post a Comment