சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

சென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது!

ரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே இரு அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக டெல்லியில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் அடுத்து உருவாகவுள்ள புதிய ஐ.பி.எல். அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்டு விடும். அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடரில் இடம் பெறும் அணிகள் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட்டில் சென்னை போன்ற பிரமாண்டமான நகரத்தை ஒதுக்கி விட்டு ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தி விட முடியாது என்பதை பி.சி.சி.ஐ. நன்றாகவே உணர்ந்துள்ளது. அதேபோல் ஜெய்ப்பூர் மையமாக கொண்டு மற்றொரு அணியும் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏனென்றால் இப்போதைக்கு சென்னை அணிக்கென்றும் ராஜஸ்தான் அணிக்கென்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். எனவே புதிய நகரில் இருந்து அணிகள் உருவாக்கப்பட்டால் அவற்றிக்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற ஐயமும் பி.சி.சி.ஐ.யிடம் உள்ளது. 

விக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜோடி 503 ரன்கள் குவித்து புதிய சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து  சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி சிட்னியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கார்ட்டர்ஸ் களமிறங்கினர். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கி ரன் குவித்தது. அதாவது தொடக்க விக்கெட்டுக்கு 503 ரன்களை விளாசியது. நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பரைத் தவிர மற்ற அனைவரும் பந்துவீசியும், இந்த ஜோடியை 503வது ரன்னில் பிரிக்க முடிந்தது. 

இதில் கார்ட்டர்ஸ் 364 பந்துகளில் 209 ரன்கள் எடுத்த நிலையில் லாதம் பந்தில் வீழ்ந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். அதே வேளையில் பின்ச் 363 பந்துகளில், 24 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உதவியுடன், 288 ரன் எடுத்தார். இவர் கடைசி வரை அவுட் ஆகவில்லை. ஒரு கட்டத்தில் பிட்ச்சின் மோசமான தன்மை காரணமாக இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்த வரை, ஒரு ஜோடி 503 ரன்களை சொந்த மண்ணில் எடுத்துள்ளது புதிய சாதனைதான்.


“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு!”

'காதலித்துப் பார்... உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்!’ எனும் கவிதை வரிகளுக்கு ஏற்பவிதார்த்-காயத்ரி ஜோடி முகங்களில் பிரகாச ஒளிவட்டம். கூடவே சேர்ந்துகொண்டிருக்கிறது 'தலை தீபாவளி’ குதூகலம்.  
''எனக்குப் பொண்ணுபார்க்க ஆரம்பிச்சப்ப நான் பார்த்த முதல் பொண்ணு போட்டோ இவங்களோடதுதான். மறுநாள் அவங்ககிட்ட போன்ல பேசினேன். நான் பேசுறதை எல்லாம் கேட்டு 'ம்’ கொட்டிட்டே இருந்தாங்க. 'அமைதியான பொண்ணுபோல’னு நினைச்சேன். ஆனா, அதுக்கு அடுத்த நாள்ல இருந்து அவங்க பேசிட்டே இருக்காங்க. நான் கேட்டுட்டே இருக்கேன்'' - விதார்த் சிரிக்க, செல்லமாக அவர் தோளில் இடிக்கிறார் காயத்ரி.
''இவரே சொன்னாலும் அது உண்மைதான். இவரை மாதிரி ஒரு அமைதியான ஆளைப் பார்க்க முடியாது. இவரைப்போல ஒரு நல்லவரும் இருக்க முடியாது. ரொம்ப ஸ்மார்ட்'' என கணவருக்கு 'வெரிகுட்’ சான்றிதழ் கொடுத்துவிட்டு தொடரும் காயத்ரி, ''என் ஊர் பழநி. இவர் வருஷாவருஷம் பழநிக்கு வந்து சாமி கும்பிடுவாராம். அப்ப எங்க வீட்டு வழியாத்தான் போயிருக்கார். இவர் கும்பிட்ட பழநி முருகன்தான் கைவிடாம என்னை மாதிரி ஒரு நல்ல பெண்ணை  இவருக்கு ஜோடி ஆக்கியிருக்கார்'' என 'தனக்குத்தானே’ ஸ்கோர் செய்துகொள்கிறார்.
''நீ சொன்னா சரிதான் கண்ணு... உன் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா செல்லம்?'' என விதார்த் சொல்ல, ''உங்களுக்கு எப்பவும் கலாட்டாத்தான். பேசிட்டு இருங்க. தோ வந்துர்றேன்'' என கிச்சனுக்குள் செல்கிறார் காயத்ரி.  
''போட்டோ பார்த்துப் பேசிப் பழகினதுல ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிச்சிருச்சு. அவங்க கூட்டுக் குடும்பம், நாங்களும் கூட்டுக் குடும்பம். ரெண்டு குடும்பத்துக்கும் பரஸ்பரம் பிடிச்சிருச்சு. திருப்பதியில கல்யாணம் முடிச்சுட்டு மொரீஷியஸ், கேரளா, திருநெல்வேலினு பெரிய ஹனிமூன் போனோம். நான் பிறந்த இடம், அவங்க காலேஜ் படிச்ச இடம், அவங்க விரும்பிச் சாப்பிடும் ஹோட்டல்னு ஒண்ணுவிடாம நான் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களும் என்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாங்க. இப்ப பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் இருக்கோம்'' என்றபோது சுடச்சுட டீ கொண்டுவரும் காயத்ரி விதார்த்தைப் பார்க்க, பார்வையின் அர்த்தம் உணர்ந்து, ''உன்னைப் பத்திதாம்மா... நல்லவிதமா சொல்லிட்டு இருந்தேன்'' என அவர் சொல்ல, ''நம்ம்ம்பிட்டேன்!'' எனச் சிரிக்கிறார் காயத்ரி.
''ரொம்ப நல்ல ஹஸ்பெண்ட் இவர். நான் ஆபீஸுக்குக் கிளம்புறப்போ அவரே சமைச்சு டிபன் பாக்ஸ்ல போட்டுக் கொடுப்பார். கூடவே நிறையப் பழங்கள் கட் பண்ணி வெச்சுடுவார். 'நீ ஏன்ப்பா இதெல்லாம் பண்ற?’னு கேட்டா, 'என் குழந்தைக்கு நான் பண்ணாம யார் பண்ணுவா!’னு சொல்வார். உருகிருவேன். நான் எது கேட்டாலும் வாங்கித் தந்துடுவார். கோபக்காரர்தான். ஆனா, என்கிட்ட கோபமே வராது!'' என காயத்ரி சொல்ல, விதார்த் முகத்தில் மின்மினிகள்.  ''நான் நடிச்சதுல 'மைனா’ படம் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல நான் ஒரு டயலாக் சொல்வேன்... 'லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்’னு. இப்ப தினமும் நான் காயத்ரியை லவ் பண்ணிட்டு இருக்கேன். லைஃப் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு'' என விதார்த் சொல்ல, காயத்ரி முகத்தில் காதல் வெட்கம்!

“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா !”

''பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இருக்கும் தொழில் சினிமா. ஆனால், அதன் வெற்றி சதவிகிதம் என்னவோ உலகெங்கும் 8 முதல் 10 சதவிகிதம்தான். மற்ற வியாபாரங்கள் போல இல்லாமல் சினிமாவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.அது ஏன்?' என்ற கேள்வியை முன் வைக்கிறார் யூகிசேது. கதாசிரியர், நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர்... எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். இப்போது, ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை முன்னரே கணிக்கும் மாடல் ஒன்றை எழுதி, அதன் மூலம் பிஹெச்.டி பட்டமும் பெற்றிருக்கிறார். 
'சென்னையில் ஒரு சீனுக்குக் கைதட்டல் கிடைச்சா, நெல்லையிலும் அது நடக்குது. கோவையில் ஒரு படம் முடியும் முன்னாடியே மக்கள் எழுந்து வெளியே போனா, தஞ்சாவூர்லயும் அதுதான் நடக்குது. அப்ப வெற்றிப் படங்களுக்கு ஒரு பேட்டர்ன் இருக்கு. அதைக் கண்டுபிடிக்கணும். பல நூறு படங்கள் பார்த்து, இதுக்கு நான் சில விஷயங்களை லிஸ்ட் போட்டேன். அந்த மாடல்படி பார்த்ததில் 95 சதவிகிதம் அதோட முடிவுகள் சரியா இருந்திருக்கு. அதைத்தான் முறையாக சப்மிட் பண்ணி மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் டாக்டரேட் வாங்கியிருக்கேன்' என்கிறார் யூகி சேது.
'' 'ஒரு சினிமாவின் வெற்றியைக் கடவுளாலும் நிர்ணயிக்க முடியாது’ என்பார்களே... அதற்கு ஒரு தீர்வு என்பது சாத்தியமா? என்னென்ன விஷயங்கள் ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவை?''
''நிர்ணயிக்க முடியும்னு சொல்லலை. ஆனா, ஒரு ஸ்க்ரிப்ட் ஓடுமா இல்லையா என்பதை நிச்சயமாகக் கணிக்க முடியும். ஒரு படத்தை உதாரணமாக வெச்சு, என் மாடலை விவரிக்கிறேன். 'குணா’ படத்தை எடுத்துப்போம். முதல் பாயின்ட், கதை என்ன வகை? நேராக சொல்லப்படுகிறதா, நான்-நேரேட்டிவ் வகையா, அல்லது என்டெர்டெய்ன்மென்ட் அதிகம் இருக்கும் கதையா? இதற்கு எவ்வளவு மார்க் போடலாம் என்பது. 'குணா’வைப் பொறுத்தவரை நல்ல கதை, நேரேட்டிவ் வகை. ஆனால், கிளைக் கதைகள் அதிகம். இதற்கு ஐந்துக்கு, நான்கு மார்க். அடுத்து கதை நாயகனின் பிரச்னை, பார்வையாளனால் அடையாளம் காணமுடிகிறதா? ஐடெண்டிஃபிகேஷன் என்பது மிக முக்கியம். இதில் அது கிடையாது.
150 படங்கள் நடித்த ஒரு நடிகனை அசிங்கமாகப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. எனவே, இதற்கு ஜீரோ மார்க். அடுத்து முடிவு. எஸ்டாபிளிஷ் ஆன நடிகர்கள் படத்தில், நெகட்டிவ் க்ளைமேக்ஸ் வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் தயங்குவார்கள். அதனால் இதற்கும்  ஜீரோ மார்க். இந்த மூன்று தலைப்புகளில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. அதை எல்லாம் வைத்துத்தான் மார்க். கடைசியாக வேறு ஏதாவது சிறப்பு அம்சங்கள் உண்டா? உதாரணமாக, 'அபூர்வ சகோதரர்’களில் குள்ளமாக நடித்தது, 'மைக்கேல், மதன, காம, ராஜன்’-ல் நான்கு வேடங்கள் என்பது போல. 'குணா’வைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை. எனவே, இதன் ஆவரேஜ் மார்க் 1.3 வருகிறது. இது ஹை ரிஸ்க் படம்!''
''அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட இதே கதை இருந்த 'காதல் கொண்டேன்’ ஓடியதே?''
''மிகச் சரி. அதில் நடிக்கும்போது தனுஷின் இமேஜ் என்ன? 'துள்ளுவதோ இளமை’யில் அவரது தோற்றம்தானே அதிகம் கிண்டலடிக்கப்பட்டது? அப்படி என்றால், அந்தக் கதைக்கு அவர் சரியான சாய்ஸ். அங்கே பார்வையாளனுக்கு ஐடெண்டிஃபிகேஷன் கிடைக்கிறது. முடிவில் தனுஷ் சாவதும் பார்வையாளனுக்குப் பிரச்னையாக இல்லை.  என் மாடல் வெறும் கதையை மட்டும் அலசுவது இல்லை. ஸ்க்ரிப்ட், கேஸ்ட்டிங், புரொமோஷன், வெளியாகும் நேரம் எனப் பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதன்படி 'குணா’ ஹை ரிஸ்க் படம், ஆனால், 'காதல் கொண்டேன்’ ரிஸ்க் இல்லாத படம்.
இது மட்டுமில்லாமல் ஒரு நல்ல படத்துக்கு காரணங்களும் விளைவுகளும் தேவை. 'ராஜா இறந்தார்... ராணியும் இறந்தார்’ என்பது கதை. 'ராஜா இறந்தார். அதனால் ராணியும் இறந்தார்...’ என்பது களம். ராஜா இறந்ததன் விளைவு... ராணியும் இறந்தார். ராணி இறக்கக் காரணம்... ராஜாவின் இறப்பு. காரணங்களும் அதனாலான விளைவுகளும் இல்லாத கதை நிச்சயம் ஜெயிக்காது.''
''உங்க மாடல் தமிழுக்கு மட்டுமா அல்லது மற்ற சினிமாக்களுக்கும் பொருந்துமா?''
''நான் வகைப்படுத்தி இருக்கும் காரணிகள் உலக சினிமாக்கள் அனைத்துக்குமே பொருந்தும். ஆனால், விடைகள் மாறும். அதாவது, பார்வையாளனால் அந்தப் பிரச்னையை அடையாளம் காண முடியுமா என்பது பொது. ஆனால், தமிழ் ரசிகனுக்குப் பொருந்தும் ஒரு களம், தெலுங்கு ரசிகனால் ஏற்க முடியாமல் போகலாம். அது மாறும்.''
''ஒரு ரசிகன் சினிமாவில் எதிர்பார்ப்பது என்னவென்று நினைக்கிறீர்கள்?''
''உலகத்திலேயே ஒரு புராடக்ட் குறித்து முழுசாகத் தெரியாமல் முழுக் காசையும் கொடுக்கிற ஒரு தொழில் சினிமா. அதுக்கு ரீஃபண்டும் கிடையாது. ஆக, ரசிகன் உள்ளே வரும்போதே 'என்னோட பங்கை நான் செஞ்சிட்டேன். இப்ப நீ என்னை திருப்திப்படுத்து’ என்ற மனநிலையில்தான் வருகிறான். டிரெயிலர், விளம்பரங்கள் மூலமா நாம என்ன சொன்னோமோ, அது படத்தில் இருக்க வேண்டும். சினிமா என்பதே ரசிகன் 'என்னை ஏமாற்று... நான் மகிழும் வகையில் என்னை ஏமாற்று’ என்பதுதான். அதை மட்டும்தான் ரசிகன் எதிர்பார்க்கிறான்.''

'குசேலன்’ எவ்வளவு மார்க்?
'குசேலன்’ படத்தை யூகி சேதுவின் மாடலை வைத்து ஆராய்ந்து பார்த்தோம். கதை, ஏற்கெனவே தெரிந்த புராணக்கதை. மேலும் அந்தச் சின்னக்களம் 3 மணி நேரத்துக்குப் போதாது. எனவே, முதல் பாயின்ட்டில் ஜீரோ மார்க்தான். அடுத்து, 'சினிமாவுக்குள் சினிமா’ என்ற விஷயத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வரலாறு. இது தமிழுக்கே உரிய பிரச்னை. இது நெகட்டிவ். முடிவை எதிர்நோக்க எந்தக் காரணமும் இல்லை. ரஜினி என்பதால் எதிர்பார்த்த முடிவுதான் நடக்கும் என ரசிகன் அறிவான். ரஜினியை இதற்கு கேஸ்டிங் செய்தது தவறு. இதுவும் நெகட்டிவ். ஆக, 'குசேலன்’ தமிழில் ரஜினி நடித்தால் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்கிறது இந்த மாடல்.

ஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாசம், கேரளாவை அசத்தும் பிரித்விராஜ்

ப்ரித்விராஜ். கிட்டத்தட்ட மலையாளத்தில் ஒரு ரஜினி + கமல் காம்போவாக இருக்கும் மாஸ் + க்ளாஸ் நடிகர். ஃப்ளாஷ் பேக் போட்டு ஒரு 13 வருடத்திற்கு முன்பு சென்றால் ப்ரித்விராஜ் அறிமுகமான நந்தனம் படம் நிற்கும்.
தந்தை சுகுமாரன் இறந்ததால் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த ப்ரித்வி கேரளாவிற்கு வந்தார். நந்தனம் பட வாய்ப்பு கிடைக்க படத்தில் நடித்து படமும் வல்லிய ஹிட். அதன் பிறகு நடிப்பைத் தொடர்வது என முடிவெடுத்தார். அன்று தொடங்கியது ப்ரித்வியின் பயணம். தமிழில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு ஹீரோவின் படம் அதிகம் வரும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வருடத்தில் ஏழு படங்களுக்கு மேல் கூட வெளியாகியிருக்கிறது. ஆனால் அதன் பின் அதிக படங்கள் வெளியிடும் அந்த ரேஸ் மேல் அக்கறை குறைந்தது. ஒரு ஸ்டார் டம் கிடைத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த ரேஸ் மறுபடி தொடங்கியது மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில் மூலம். 2013 சின்னதும் பெரியதுமாக வளைத்துக் கட்டி 12 படங்கள் வெளியானது. அதே விஷயம் தான் இந்த வருடம் ப்ரித்விராஜுக்கு நடக்கிறது. 

மசாலா படங்களும், மாஸ் படங்களுமாக நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென புதுப் புது ரோல்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார். சரியாக மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த போக்கிரி ராஜா மற்றும் அன்வர் போன்ற மாஸ் அட்டம்ட்டுகளுக்கு அடுத்ததாக வைத்த அடி 'உருமி'. உருமி  ப்ரித்விராஜுக்கு ஒரு சேஞ் ஓவர் கொடுத்த படம் என்று தான் சொல்ல வேண்டும். இடையில் 'ஹீரோ' போல் கமர்ஷியல் படங்கள் செய்து கொண்டே 'மஞ்சடிக்குரு', 'முன்னரியிப்பு' போன்ற தரமான படங்களில் கேமியோ ரோலும் செய்தார். மொத்த லிஸ்ட்டில் ப்ரித்விராஜின் தைரியமான முயற்சியாக பாராட்டப்பட்டதும் அதிரடி ஹிட்டானதும் 'மும்பை போலீஸ்' அதைத் தொடர்ந்து வந்த மெமரீஸ், செவன்த் டே என வரிசை கட்டி ஹிட். 

இந்த வருடம் இதுவரை வெளிவந்திருப்பது ஆறு படங்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஃப்ளேவர்.
1. பிக்கெட் 43:

பொதுவாக ஒவ்வொரு எல்லையிலும் காவல் காக்கும் வீரர்களின் சின்ன இருப்பிடம் போன்ற அமைப்பு தான் இந்த பிக்கெட். இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பிரிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த பிக்கெட் 43யில் இந்திய இராணுவ வீரராக ப்ரித்விராஜ். அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளும் ப்ளாஷ் பேக்கில் அவரின் சொந்த வாழ்க்கையுமாக நகரும் படம். கச்சிதமாக அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பார்.
2. இவிடே: 

அமெரிக்க டிடெக்டிவ் வருணாக ப்ரித்வி. தொடர்ந்து நடக்கும் சில இந்திய பெண்களின் கொலை பற்றி விசாரிக்கிறார். அந்த வழக்கில் கிடைக்கும் ஒரே ஒரு க்ளூ இறந்தவர்கள் அனைவருக்கும் க்ரிஷை (நிவின் பாலி) தெரியும். ஆனால் அவரை கைது செய்து விசாரிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. இதற்கு இடையில் குடும்ப பிரச்னை, மனைவியைப் பிரிந்து வாழும் ப்ரித்வியின் மன அழுத்தம் என வருண் கதாப்பாத்திரத்திற்கு செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம். அத்தனையும் அட்டகாசமாய் நிறைவு செய்திருப்பார்.
3. டபுள் பேரல்: 

சீரியஸ் பயணத்தில் சற்று வித்தியாசமான கேங்ஸ்டர் காமெடிப் படம் எடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது தான் டபுள் பேரல். விலை மதிப்பு மிக்க இரண்டு கற்கள்  அதனை வாங்கி அதிக விலைக்கு விற்க முயற்சிப்பவர்களாக ப்ரித்வியும், இந்திரஜித்தும் (ப்ரித்விராஜின் அண்ணன்). படம் தோல்வியடைந்தாலும் வித்தியாசமான முயற்சியாக பலராலும் கவனிக்கப் பட்டது. இதை ஒரு கௌரவமான தோல்வியாகத் தான் பார்க்கிறேன் என்பது ப்ரித்விராஜின் முடிவும் கூட. இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் பெரிய ஒரு மாற்றம் நிகழும், இல்லை என்றால் படு தோல்வியாக இருக்கும் இதில் எனக்கு இரண்டுமே சம்மதம் தான் என்ற முடிவு தான் இதை ப்ரித்வி கௌரவமாக கருதக் காரணம்.
4. என்னு நின்டே மொய்தீன்:

கேரளாவில் வாழ்ந்த மொய்தீனுக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிற காஞ்சனமாலாவுக்கும் இடையேயான காதல் தான் படத்தின் கதை. மொய்தீன் காஞ்சனாவுடைய தந்தை இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் காதல் தெரியும் போது மதத்தை முன்வைத்து எதிர்த்தார்கள் பெற்றோர்கள். இறுதியில் மொய்தீன் இறந்து விட காஞ்சனா இன்னும் மொய்தீனின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் விதவையாக என்று நிறைவடையும் படம். நிஜமும் அது தான். மொய்தீனாக ப்ரித்வியின் நடிப்பைவிட காஞ்சனாவாக நடித்த பார்வதிக்கு நடிப்பதற்கு அத்தனை ஸ்கோப், அதிலும் தன்னை நிரூபித்தார் ப்ரித்வி.
5. அமர் அக்பர் ஆண்டனி:

ஒரு கமர்ஷியல் காமெடி படம். அதில் சின்ன மெசேஞ். மூன்று நண்பர்களுக்குள் நடக்கும் கலாட்டா, அவர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் பட்டாயா, காதல் என பல விஷயங்களை காமெடியாக சொல்லிக் கொண்டே இருக்க. இடையில் ஒரு விபரீதமும் நிகழ்கிறது. அதை மூவரும் இணைந்து சரி செய்கிறார்கள். இந்தப் படம் தேவையே இல்லை என்று எளிதாக சொல்ல முடியாது. டபுள் பேரல் போன்ற பரிசோதனை முயற்சிகளுக்கு நடுவே இப்படி படங்களையும் தேர்வு செய்து பேலன்ஸுடன் போகும் வழி ப்ரித்விக்கு தெரிந்திருப்பது இதில் விளங்கும்.

இது சும்மா டிரெய்லர் தான் என்பது போல இந்த வருடம் வெளியிட இன்னும் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அதுவும் ஏதோ ஒரு வகையில் புதிய முயற்சியாகத் தான் இருக்கும் என்பது உறுதி.

’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க!’ நடிகை கஸ்தூரி ஆதங்க பேட்டி

ஓரிரு தினங்களாக வாட்ஸப், சமூக வலைதளங்கள் என ட்ரெண்டில் இருக்கிறார் நடிகை கஸ்தூரி. காரணம் ‘அன்னையின் தேகங்கள்’ (Bodies Of Mothers) என்ற ஆல்பத்துக்கு அவர் கொடுத்த செமி நியூட் போஸ். 

’’அது மூணு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த ஸ்டில்ஸ். அதை இப்போ ட்ரெண்ட் ஆக்கியிருக்காங்க!’’ என சிரித்துக் கொண்டே பேசுகிறார் கஸ்தூரி.
எப்படி இருக்கீங்க?
ரெண்டு குழந்தைகள், அன்பான கணவன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் முதல் குழந்தை பிறந்தப்போ சில உடல்ரீதியான பிரச்னைகளால் அவஸ்தைப்பட்டேன். ரெண்டு வருஷம் பெரிய பெரிய சோதனைகள். அதிலிருந்து மீண்டு இப்போதான் நிம்மதியா இருக்கேன்!  

என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க.. நடிப்ப விட்டு விலகிட்டீங்களே?

விலகவே இல்ல. நான் இப்பவும் நடிச்சிக்கிட்டு தான் இருக்கேன். ஜப்பான் சார்ந்த ஒரு கல்வி படம், இந்த மாதிரி சில நல்ல படங்கள்ல என்னால முடிஞ்ச நடிப்பை நான் கொடுத்துட்டுதான் இருக்கேன். ஆனா, என்னைப் பத்தி ஏதேதோ தகவல்கள் திடீர்னு பரவிருச்சு. என் கணவர் பேர் கூட யாருக்கும் தெரியலை. ரவிகுமார்னு சொல்றாங்க. ’அது யாரு ரவிகுமார்... உன் ஹஷ்பண்டாமே’னு கேட்டு என் ஹஸ்பண்டே என்னைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. என் பிறந்த நாள் கூட விக்கிபீடியாவுல தப்பா இருக்கு. என்னைப் பத்தி எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளுங்க... ப்ளீஸ்!

இப்போ அந்த புகைப்படம் பத்தி சொல்லுங்களேன்
உண்மைய சொன்னா என் வாழ்க்கைல பெஸ்ட் மொமெண்ட்னு சொல்லலாம். ஒரு பொண்ணுக்கு குழந்தை பிறந்தா அவ அழகெல்லாம் போயிடும், வயித்துல சுருக்கம் விழும். இப்படி பொண்ணுங்களே நிறைய பேர் நினைக்கிறாங்க. அந்த விஷயத்த உடைக்கணும். ஒரு பையனுக்கு அவன் மனைவியைவிட அவன் குழந்தையோட தாயான பெண்ணைத்தான் ரொம்பப் பிடிக்கும். அந்த போட்டோக்கள்ல நிறைய பெண்கள் அவங்க கணவனோட அழகா நிப்பாங்க. அதுல ஒரு உணர்ச்சிப்பூர்வமான பந்தம் இருக்கும். என் தொழில் அடையாளம் நடிகையா இருந்தாலும்.. நான் ஒரு அழகான அம்மா. அம்மா எப்படி இருந்தாலும் அழகுதான்னு சொல்ல நினைச்சு எடுத்த போட்டோஸ்தான் அது. சரும சுருக்கம், முகத்துல இருந்த கருமை அதெல்லாம் மறைக்கிற மேக்கப், போட்டோஸ் இல்லாம எடுத்த போட்டோஸ் அது. நம்ம அழகை நாம ரசிக்கணும். முக்கியமா அந்த போட்டோஸ் எடுத்த ஜேட் அவங்களும் ஒரு தாயா, தன் குழந்தையோட போஸ் கொடுத்திருப்பாங்க. இன்னொன்னு... பொண்ணுங்க தேகம் அழகானது, இயற்கையின் அற்புதங்களில் ஒண்ணு. அதை வன்மையா பார்க்காதீங்க, வன்மத்தோட அணுகாதீங்கனு சொல்றதுக்காக நடந்த போட்டோஷூட்!  

ஜேட்- கஸ்தூரி ஃப்ரண்ட்ஷிப் பத்திச் சொல்லுங்களேன்?
ஜேட் நான் நல்லா இருக்கணும்னு நினைச்ச ஆத்மா. மிகப்பெரிய போட்டோகிராபர். ஆனா, ரொம்ப நல்ல மனுஷி. நீங்க பேசுறதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் ரெண்டு பேரும் பேசினோம். ’நாம என்ன நினைச்சு ஒரு போட்டோ கொடுத்தோம்... என்ன நடந்துருக்குனு பாத்தீங்களா’னு கொஞ்சம் வருத்தமாதான் இருந்துச்சு. எனக்கு கஷ்டத்துல நிறைய ஹெல்ப் பண்ணாங்க. நல்ல தோழி.  

யார் மேல கோபம்?
சத்தியமா விசாரிக்காம நியூஸ் போடுற  சிலர் மேலதான். போன்ல கூப்பிட்டா நான் எடுத்து பதில் சொல்லப் போறேன். எனக்கு தெரிஞ்சு விகடன்ல இருந்து மட்டும்தான் இது பத்தி விசாரிச்சு போன் வந்துருக்கு. சில தலைப்பெல்லாம் அரை நிர்வாணம், ஆடையின்றி, டாப்லெஸ்னு ஏதோ நான் அடல்ட்ஸ் ஒன்லி படத்துல நடிச்ச மாதிரி விஷயத்தை திரிக்குது. என்ன இதெல்லாம்...! மக்களுக்கு நல்ல விஷயத்தைக் கூடவா இப்படிக் கொடுப்பாங்க. ஆனா, மக்கள் முட்டாள் இல்லை. அவங்க போட்டிருக்கிற எல்லா நியூஸுக்கும் கீழ பப்ளிக் அவ்ளோ நல்ல கமென்ட்ஸ் கொடுத்திருக்காங்க. ’எந்த போட்டோவுக்கு எப்படி தலைப்பு வைச்சிருக்கீங்க’னு சிலர் என் சார்பா கோபப்பட்டதைப் படிச்சதும் எனக்கு கண்ணீரே வந்துடுச்சு. அவங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சு வெச்சுருக்காங்க. மக்களை ஏமாத்தவே முடியாதுன்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்!

சினிமான்னாலே பெண்கள் இப்படித்தான்னு வரையறுத்து வெச்சிட்டாங்களே? கல்யாணம் ஆனாலோ, அல்லது 35 வயச தாண்டினாலோ இண்டஸ்ட்ரில சரியான கேரக்டர்கள் கிடைக்கறது இல்லையே, ரொம்ப அரிதாதானே 36 வயதினிலே நடக்குது?
உண்மைதான். ஹீரோக்கள் 60 வயசுலயும் அழகா ஹீரோயின்களோட டான்ஸ் ஆடுவாங்க. பெண்களைப் பொருத்தவரை அது வேற மாதிரி தான் இருக்கு. ஆனாலும் ஜோதிகா, ஐஸ்வர்யா ராய், அமலா பால் மாதிரி இப்ப கொஞ்சம் முன்னேற்றம் வந்துருக்கு. இது இன்னும் அதிகரிக்கணும். நடிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகணும். பார்க்கலாம்.


ஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை!

பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் கடைகளில் இருந்து அதிகாரிகள் யாரும் ஓ.சி. பட்டாசு வாங்க கூடாது என்று விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை மீறி ஓ.சி. பட்டாசு வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
சீன பட்டாசு வருகையால், சிவகாசி பட்டாசு தொழில் நலிந்து வருவதாகவும், இதனால் அரசுத்துறை அதிகாரிகள் ஓ.சி. பட்டாசு கேட்டு வரவேண்டாம் என்றும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சமீபத்தில் நெத்தியடியாக வேண்டுகோள் விடுத்து, அது தொடர்பான போஸ்டர்களையும் ஒட்டியிருந்தது. இருந்தது. இது தொடர்பான செய்தி விகடன் டாட் காமில் வெளியானது. இது பற்றி உயர் அதிகாரிகள் வரை புகார் சென்றது.
இதை தொடர்ந்து,  விருந்துநகர் மாவட்ட கலெக்டர் ராஜாராமன், அவசர அவசரமாக நேற்று முன் தினம்  கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிவகாசி தாசில்தார் உள்பட அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர், ''அதிகாரிகள் யாரும் ஓ.சி. பட்டாசு கேட்டு பட்டாசு ஆலைகளுக்கோ, பட்டாசு கடை ஏஜென்ட்களிடமோ செல்லக்கூடாது.

இதையும் மீறி ஓ.சி. பட்டாசு வாங்கும் அதிகாரிகள் பற்றி புகார் வந்தால் அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அதே நேரம், தலைமைச்செயலகம் உள்பட வேறு உயர் அதிகாரிகளிடம் இருந்து ஓ.சி. பட்டாசு கேட்டு வந்தால் அது பற்றி என்னிடம் தகவல் சொல்லுங்கள்.
நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். மேலும், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சீன பட்டாசு இருக்கிறதா என்பது பற்றி அதிரடி சோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று சிவகாசி பகுதியில், சிவகாசி தாசில்தார் அய்யாகுட்டி, தனி தாசில்தார் உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமையில் அடங்கிய தீயணைப்பு படையினர் மற்றும் சிவகாசி டி.எஸ்.பி. வெள்ளையன் ஆகியோர் தனித்தனியாக பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு ஏஜென்ட், கடைகளுக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.
இதில், சாத்தூர் ரோட்டில் உள்ள ஜீவஜோதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஏஜென்சியில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த பட்டாசு ஏஜென்சிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தற்போது சிவகாசி பகுதியில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி வருவதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு ஏஜென்சி உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

புரட்சித் திருமணங்கள்!

சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கி, சாதி, மதத்தை ஒதுக்கி, புதுமைத் திருமணமும், புரட்சித் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகள் இவர்கள். பல ஆச்சர்யக்குறிகள் தரும் இவர்களின் வார்த்தைகள் இதோ...
ஜான்சன் - சமந்தா (சென்னை)
‘‘நான் பிராமணப் பெண். அவர் கிறிஸ்தவர். இருவரும் காதலித்தோம். இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. இருந்தாலும் நாங்கள் மண வாழ்வில் இணைவதில் உறுதியாக இருந்தோம். நான் ஆசாரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் அப்பா இறந்ததிலிருந்து கடவுள் மேல் இருந்த நம்பிக்கை வற்றியது. எங்கள் திருமணத்தில் எந்த சடங்குகளும் தேவையில்லை என்று இருவருமே முடிவு செய்தோம். தாலியும் இல்லை, மோதிரமும் இல்லை. மாலை மாற்றிக்கொண்டு, உறுதிமொழி ஏற்க, இனிதே முடிந்தது திருமணம். செய்யும் சடங்குகள் மூலமாகத்தான் திருமண பந்தம் நிலைக்கும் என்பதில்லை. அதற்குத் தேவை, பரஸ்பர புரிதல்; அதில்தான் இருக்கிறது ஒரு திருமணத்தின் வெற்றி!’’
ஜார்ஜ் - ஜெயா, (சென்னை)
‘‘நான் கிறிஸ்தவன், ஜெயா இந்து. கல்லூரிக் காலக் காதல். இருவீட்டிலும் எதிர்ப்பு. வேலையில் சேர்ந்த பின்தான் திருமணம் என்று நாங்கள் உறுதியேற்று, பின்னர் நான் சென்னையில் ஒரு வேலையிலும், ஜெயா சொந்த ஊரில் பள்ளி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தோம். பகுத்தறிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நாங்கள், வேண்டுமென்றே ஆடி மாதத்தில் மணநாள் குறித்தோம். மகள் யாழினியுடன், ஐந்தாவது மண ஆண்டில் ஆனந்தமாக இருக்கிறோம்!’’
இனியன் - கோமதி, (கடலூர்)
‘‘சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டதால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்துகொண்டே இருந்தது. என் தோழர் சிற்றரசு, சாதியை மறுத்து காதல் திருமணம் செய்துகொண்டதால், அடுத்த வருடமே படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஆதரவற்று நின்றிருந்த சிற்றரசுவின் மனைவியை, நான் மறுமணம் செய்துகொண்டேன். எங்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ‘சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சிற்றரசு படுகொலை செய்யப்பட, அவர் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்த தோழர் இனியன் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி’ என்றுதான் பேனர் வைத்திருந்தோம். இந்தச் சமூகத்தில் கடவுளை மறுத்திருக்கிறோம், மதத்தை மறுத்திருக்கிறோம், சாதியை மறுத்திருக்கிறோம், ஏற்றுத்தாழ்வுகளை மறுத்திருக்கிறோம். தமிழ்ச்செல்வி, செந்தனன், செங்கதிர் என்று மூன்று குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறோம்!’’


டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்!

ழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க  கீழ்க்கண்ட எட்டு  வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். 

1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். 

தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள். 

2. சித்த மருத்துவத்தில்  டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள்  போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.
4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில்  மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை  அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம்.  ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது. 

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப்  போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.
7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு  பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச்  சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். 

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள். 

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.


ஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு திறந்த மடல்!

ந்திய வருகையின்போது, இணைய சமநிலை தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனர் சக்கர்பர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு, இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு பதிலடி கொடுத்துள்ளது. கட்டுப்பாடில்லாத இணையத்தை அனைவரும் அணுகுவதே முக்கியம் என்றும், சக்கர்பெர்க் இணையத்தை வடிகட்டி அளிக்க முயற்சிக்கிறார் என்றும் இந்த குழு குற்றம் சாட்டியுள்ளது.

முன்னணி சமூக ஊடக சேவையான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அண்மையில் இந்தியா வந்தபோது, டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைக்கும் இண்டெர்நெட்.ஆர்க் திட்டம், இணைய சமநிலைக்கு எதிராக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுவதுவது பற்றியும் அவர் பதில் அளித்தார். இணைய சமநிலையை ஆதரிப்பதாக கூறிய அவர், அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைக்கச்செய்வதை நோக்கமாக கொண்ட இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் இதற்கு எதிரானதல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
இணையத்தை அணுகும் வசதி இல்லாவிட்டால், போராட்டங்களுக்கான இணைய மனுவில் எப்படி கையெழுத்திட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் இணைய சமநிலை காக்க போராடி வரும் 'சேவ் தி இண்டெர்நெட்' ( Save the internet.in ) ஆர்வலர்கள் குழு,  சக்கர்பர்க்கிற்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது.

இந்த மடலில்,  இணைய சமநிலை தொடர்பாக சக்கர்பர்க் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதோடு, அவருடைய இண்டெர்நெட். ஆர்க் திட்டம் எப்படி இணைய சமநிலைக்கு விரோதமானது என்றும் விளக்கி உள்ளது.
"இண்ட்நெர்நெட். ஆர்க் திட்டத்தை எதிர்ப்பவர்கள்,  இணைய வசதி இல்லாதவர்களுக்கு இணையத்தை கொண்டு சேர்க்க முயற்சிப்பவர்கள் என்பது போல நீங்கள் ( சக்கர்பர்க்) கருத்து தெரிவித்திருந்தாலும்,  உண்மையில் கட்டுப்பாடில்லாத இணையம் மூலமே பலரும் பலனடைந்துள்ளோம். 

அனைவருக்கும் இணைய வசதி தேவைதான்; ஆனால் முழு இணையமாக இருக்க வேண்டும். நீங்கள் முயற்சிப்பதுபோல வடிகட்டப்பட்ட இணையமாக இருக்க கூடாது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய தந்தை டிம் பெர்னர்ஸ் லீ குறிப்பிட்டது போன்று, பொருளாதார ஏற்றத்தாழ்வுபோல தொழில்நுடப் ஏற்றத்தாழ்வும் ஆபத்தானதுதான் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆர்வலர்கள், இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் வெளிப்படையானது அல்ல என்றும், அவ்வாறு எனில் அதில் பங்கேற்கும் தளங்களுக்கான அனுமதி மற்றும் நிராகரிப்பை உங்கள் வசம் வைத்திருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இண்டெர்நெட்.ஆர்க் (ப்ரிபேசிக்ஸ்) திட்டம், எதிர்காலத்தில் லாப நோக்கில் பயன்படுத்தப்படாது என உறுதி அளிக்காதது ஏன் என்றும், இணைய இணைப்பு வழங்கும் ப்ரிபேசிக்ஸ் தளத்தின் முகவரியை லாப நோக்கிலான டாட்.காம் என பதிவு செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இணைய சமநிலை காரணமாகவே ஃபேஸ்புக் வளந்தது என்றும், இணைய சமநிலையை பாதிக்காமல் அனைவருக்கும் இணைய வசதி அளிப்பது முக்கியம் மற்றும் சாத்தியம் என்றும் அந்த கடிதம் குறிப்பிடுகிறது.

கடிதம்: http://blog.savetheinternet.in/response-to-facebook-townhall/


வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்!

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் அதிகளவில் உலாவும் இந்த காலத்தில்தான் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நிலவுகிறது. 

இந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு  பாதுகாப்பு கவசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இல்லாத பெண்கள் இல்லை என்றாகிவிட்ட இந்த காலத்தில் அதில் விதவிதமான செயலிகளை பயன்படுத்து கின்றனர் நம் யுவதிகள். அவை வெறும் பொழுதுபோக்கிற்கு என்று மட்டுமில்லாமல் பாதுகாப்பு தருபவையாகவும் இருந்தால் எத்தனை உதவியாக இருக்கும்?

பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணின் ஃபோனிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான 3 செயலிகள் இவை...

SOS - safety first :

இந்த செயலி மிகவும் துரிதமானது. நமக்கு நெருக்கமானவர்களை மட்டுமல்லாமல் நமக்கு அருகில் பிரச்னையில் இருக்கும் யாருக்கு வேண்டுமாயினும் நம்மால் உதவ முடியும். இதில் பெயர், அலைபேசி எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. GPS இருந்தால் போதும். 

நமக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் நேரத்தில் அதனை Broadcast செய்தால் சுற்றியிருப்பவர்களுக்கு தகவல் போகும். அவசர குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் இந்த செயலியில் உண்டு. இதன் அளவு வெறும் 376KB மட்டுமே. இது ஒரு இந்திய செயலி என்பது கூடுதல் செய்தி.

bSafe :
இந்த செயலியின் மூலமாக நம்மால் நம் உறவினர்களையோ, நண்பர்களையோ ஆபத்து ஏற்படும் நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். நமக்கு வேண்டிய அளவு நபர்களை இணைத்து நெட்வொர்க் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். “Live GPS trace” மூலமாக நாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

பிரச்னையில் சிக்கிக் கொண்டால் “Guardian alert button”ஐ அழுத்தினால் நம் நெட்வொர்க்கில் உள்ள அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும். இது ஒரு US செயலி. இதன் அளவு 11.80MB.

Women security :

இந்த செயலியின் மூலமாக, நாம் பதிந்து வைத்திருக்கும் அனைத்து எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தியோடு நாம் இருக்கும் இடமும் அதில் பதிவாகி செல்லும். இந்த செயலியின் தனித்தன்மை, கேமரா நாம் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து நம் Contacts ல் இருக்கும் அனைத்து Mail id களுக்கும் அனுப்பிவிடும்.
மேலும், நாம் activate செய்த பிறகு 3 முறை அனைத்து எண்களுக்கும் அழைப்பு விடும். இது அனைத்துமே நாம் பிரச்னையில் மாட்டிய 5-10 நிமிடங்களில் நடந்து முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய செயலியின் அளவு 1.62MB.

சாதாரண ஒரு செல்ஃபியை எடிட் செய்ய பல செயலிகளைப் பயன்படுத்தும் நாம், பாதுகாப்பிற்காக இவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாமே?

ரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: பரபரப்பு கிளப்பும் கருணாநிதி!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் மேலும் பல திரையரங்குகளை வாங்கிட உள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன.

சென்னை வேளச்சேரியில் “ஃபீனிக்ஸ் மால்” என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வணிகவளாகம் ஜனவரி 2013 ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் “லுக்ஸ்” சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன.
வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டன. சென்னை மாநகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரை “ஜாஸ்” சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது.
மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.

முன்பு தமிழகமெங்கும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்....
தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா? இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

உலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப் பாசம்!

மிஸ் தாய்லாந்து அழகி பட்டம் வென்ற இளம்பெண், குப்பைத் தொட்டிகளைக் கழுவி சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் தனது தாயிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றி பெற்று அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார். பின்னர் அவர், அழகிப் போட்டி  நிகழ்ச்சி முடிந்த உடன்  அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல,  மேற்குலக மக்களையும் நெகிழச் செய்துள்ளது.
தாய்லாந்து அழகி மின்ட்டின்  தாயார், பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி அதில்  கிடைக்கும் பணத்தில்தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். 'கடும் கஷ்டத்திற்கு மத்தியில் தன்னை வளர்த்து ஆளாக்கியதற்காகவே  நன்றிப் பெருக்கோடு  நான் அவர் காலில் விழுந்தேன்' என்று  கூறி, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் மின்ட். 


‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே.பி கூட்டணி வைக்காது!’’

முற்றுப்புள்ளி வைக்கும் முரளிதர் ராவ்
டந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘வானவில் கூட்டணி’ அமைய மையப்புள்ளியாக இருந்தவர் தமிழக பி.ஜே.பி-யின் மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ். வரும் சட்டசபைத் தேர்தலை பி.ஜே.பி. எப்படி எதிர்கொள்ளப் போகிறது, என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறது என்ற கேள்விகளுடன் முரளிதர் ராவை சந்தித்தோம்.
‘‘தமிழகத்தில் பி.ஜே.பி. காலூன்ற முடிய வில்லையே... எப்படித் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது?’’
‘‘தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தின் கலாசாரம், தனித்துவமான அடையாளம், மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை உணர்ந்து செயல்படுகிறோம். முன்னோடியான விஷயங்கள் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது. காமராஜர் வெறும் நாடார் சமூகத்தினருக்கு மட்டும் அடையாளம் அல்ல. அவர் ஒரு தலைமுறைக்கே உணவும், கல்வியும் அளித்தவர். அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் அமலில் இருக்கிறது. அவரை மறந்துவிட்டார்கள். விமான நிலையத்தில் இருந்து பொதுக் கழிப்பிடம் வரை நேரு குடும்பத்தினரின் பெயர்கள்தான் இருக்கின்றன. நேதாஜியோடு நெருக்கமான தொடர்பில் இருந்த பசும்பொன் தேவரை திராவிடக் கட்சிகள் மறந்துவிட்டன. அந்தச் சமூகத்தினரை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். இப்படி, தமிழகத்தின் முன்னோடி தலைவர்கள் ஆற்றிய சேவைகள் மறக்கடிப்பட்டு இருக்கின்றன.
பி.ஜே.பி., அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியில் நடக்க ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் ஏதோ சாதிய அரசியல் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நாட்டில் எங்கு பார்த்தாலும் சாதி இருக்கிறது. அதை வாக்கு வங்கி அரசியலாகப் பயன்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.”
“திராவிடக் கொள்கைகளைத் தாண்டி தமிழகத்தில் நீங்கள் ஆட்சி அமைக்க முடியுமா?”
“சாதி மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கைகளை தி.மு.க. பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது குடும்ப அரசியலும், கருணாநிதி, ஸ்டாலின் என்ற தனிமனித வழிபாடும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோலதான் அ.தி.மு.க-வும் இருக்கிறது. மோசமான நிர்வாகத்தை அ.தி.மு.க. நடத்துகிறது. திராவிடக் கொள்கைகளை மக்கள் மறந்து வருகின்றனர். புதிய தலைமுறையினரிடம் திராவிட, பெரியார் கொள்கைகள் மீது ஈர்ப்பு இல்லை. அவர்கள் எல்லா இடங்களிலும் நிரம்பியிருக்கும் ஊழலை மட்டுமே பார்க்கிறார்கள். பி.ஜே.பி-தான் சரியான தலைமை என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.’’
“அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைக்க விரும்பு வதால்தான் ஜெயலலிதாவை மோடி சந்தித்தாரா?”
“கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. எங்களுடன் பல இயக்கத்தினரும் பேசிவருகிறார்கள். எங்கள் கூட்டணியில் இணைய இருக்கிறார்கள். ஒரு வானவில் அரசியல் கூட்டணி அமையவிருக்கிறது. பிரதமர் என்கிற முறையில்தான் ஜெயலலிதாவை மோடி சந்தித்தார். அப்போது, கூட்டணி பற்றிப் பேசவில்லை. முதல்வரிடம் தமிழகத்தின் தேவைகள் குறித்து விசாரித்தார். இதைத் தவறாக சித்தரித்துப் பேசுகிறார்கள். வட, தென் துருவங்கள் இணைய வாய்ப்பே இல்லை. மோசமான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் எழுப்பும் நாங்கள் எப்படி அ.தி.மு.க-வை ஆதரிப்போம்?’’
 “எம்.பி. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியின் நிலை என்ன? ராமதாஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டாரே?”
“வைகோவைத் தவிர, பிற கட்சிகள் கூட்டணியில்தான் இருக்கின்றன. விஜயகாந்த், ராமதாஸ் இருவரும், ‘நாங்கள் பி.ஜே.பி. கூட்டணியில் இல்லை’ என்று வெளிப்படையாகச் சொல்ல வில்லை. தேர்தலை ஒன்றாகச் சந்தித்ததால், எல்லா விஷயங்களிலும் அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என அவசியமில்லை.  ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது அவர்களின் விருப்பம். நேரம் வரும்போது மீண்டும் இணைந்து செயல்படுவோம். அரசியலில் தனித்தனி நிலைப்பாடுகள் எடுத்தால்தான் பேச்சுவார்த்தை நடத்தி சீட் வாங்க முடியும். அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”
“வைகோ இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“வைகோ எடுத்திருக்கும் முடிவுக்கு அவரே வருந்தி இருப்பார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசியக் கட்சிகள் என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டன. அப்படி இருக்கையில் அவர்களுடன் கூட்டணிச் சேருவது எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை அவர் உணரவில்லை. வைகோ சரியான மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை சீக்கிரம் உணர்வார்.”
“ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?”
“ஸ்டாலினின் பயணம் பி.ஜே.பி-க்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ‘ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அவரை மாற்றித் தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்’ என்று அவர் பேசி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது என்னென்ன ஊழல்கள் நடந்தன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஸ்டாலின் பயணத்தின் மூலம் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அது பி.ஜே.பி-க்கு மறைமுகமாக உதவும்.’’
“சிறுபான்மையினரை அழித்துவிட்டு இந்தியாவை இந்து நாடாக்கப் பார்க்கிறது என பி.ஜே.பி. மீது குற்றம்சாட்டப் படுகிறதே?”
“இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அவர்களின் வழிபாட்டுத்தலங்களும் அதிகரித்து வருகின்றன. நாங்கள் அவர்களை அழிக்க நினைக்கிறோம் என்பது தவறு. பி.ஜே.பி-யைப் பிடிக்காதவர்கள்தான் இப்படி பரப்புகிறார்கள். எல்லா மதங்களோடு சேர்ந்துதான் இந்தியா என்கிற நாடு இருக்க வேண்டும். அதை அழித்துவிட்டால், இவர்கள் எங்கு போய் வாழ்வார்கள்? சிறுபான்மை மக்களுக்காக போராடுகிறோம் எனச் சொல்லும் யாருமே இந்துக்களைப் பற்றி வாய் திறப்பதுகூட இல்லை.’’


மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது ! சரி யார் இந்த கோவன்?

கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!

“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.

ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.

இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.

நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.

எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.

இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.