சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Oct 2015

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போலீசில் மோசடி புகார்!

பொருட்களை வாங்குங்க தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க' என நாளிதழ்களில் விளம்பரங்களை அள்ளி வழங்கியது அமேசான் ஆன்லைன் நிறுவனம். ஆனால் ஒரு கண்டிஷன் தமிழ்நாட்டில் வசிக்கறவர்களுக்கு இந்த போட்டியில் இடம் கிடையாது என சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில தினங்களாகவே நாளிதழ்களின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துள்ளன ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள். அந்த ஆப்பர், இந்த ஆப்பர் என குவிந்துள்ள விளம்பரங்களை கண்டு, ஏதாவது பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் தான் அமேசான் நிறுவனத்தின் அந்த விளம்பரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'ரூ.299க்கு மேல் பொருட்களை வாங்குங்க. தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க. தினமும் மாலை 6 மணிக்கு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்' என முழுப்பக்கத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஆர்வத்தோடு பொருட்களை வாங்கி, போட்டியில் கலந்து கொண்டு தங்கத்தை அள்ள எல்லோரும் கிளம்பினர். ஆனால், அங்கே தான் அமேசான் ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தது. அலுவலக விதிமுறைகள் எனச்சொல்லி, 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு இந்த போட்டியில் பங்கேற்கும் தகுதி கிடையாது' என குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம்.

இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அச்சாகி, தமிழகத்தில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் எப்படி? என கொதித்து விட்டனர் இணையவாசிகள். இந்த பிரச்னை தற்போது காவல்துறை வரை எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், ''இது தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சி. அமேசானின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து அவர் அளித்துள்ள புகாரில், ''தமிழ்நாட்டில் காலை, மாலை வரும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் கடந்த இரு தினங்களாக அமேசான் எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்துள்ளது. இந்தியாவின் ஈடு இணையற்ற விற்பனை என்று கொடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் 'அமேசான் ஆப்'பில் பொருட்களை வாங்குங்கள் தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றிடுங்கள்' என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதை படிக்கும் பாமர மக்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை வாங்கினால் ஒரு கிலோ தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், அமேசான் நிறுவனத்தின் இணைய தள முகவரியில் அதிகாரப்பூர்வமான விதிகள் என்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், தினமும் ஒரு கிலோ தங்கம் வெல்லும் தகுதி தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இல்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி பத்திரிகைகளில் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நூதன மோசடி ஆகும். இதனால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஏமாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால், உடனடியாக இந்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். மோசடியாக தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளதாம். எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா!

No comments:

Post a Comment