சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Oct 2015

நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ்!

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி யுவராஜ், நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று சரணடைந்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அக்டோபர் 11ஆம் தேதி (இன்று) சரண் அடையபோவதாக யுவராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு தொப்பி, கருப்பு சட்டை, கைலி மற்றும் கழுத்தில் துண்டுடன் யுவராஜ் வந்தார். பின்னர், விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் அவர் சரணடைந்தார். இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவராஜ் சரணடைந்த வந்தபோது, ஏராளமானோர் திரண்டதால் நாமக்கல்- சேலம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

முன்னதாக வாட்ஸ்-அப் மூலம் புதிய ஆடியோ ஒன்றை யுவராஜ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், "சுமார் 100 நாட்களுக்கு மேலாக என் மீதும், நமது சொந்தங்கள் மீதும் சுமத்தப்பட்ட கொலை குற்ற வழக்கு தொடர்பான பதற்ற சூழ்நிலையானது வருகிற 11ஆம் தேதி காலை 10.30 மணியுடன் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன். அதாவது, நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் நான் சரண் அடைய உள்ளேன். 

இதற்கு முக்கிய காரணம், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவர்கள் எனது குடும்பத்தாரிடமோ அல்லது பேரவை நிர்வாகிகளிடமோ அராஜகமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான். எனவே நான் ஆஜராவதில் எந்த பிரச்னையும் இல்லை. என் ஒருவனை பிடிக்க தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் உண்ணாமல், உறங்காமல் இரவு, பகலாக தேடுவதை தவிர்க்க விரும்புகிறேன். சட்டத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரிகளின் கீழ் அவர்கள் செயல்பட்டது ஒன்றே நான் ஆஜராகாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் ஆகும். 

துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பின்னணியில் இருந்து இயக்கியது நீங்கள் (தனியரசு எம்.எல்.ஏ.) என்பது எனக்கு தெளிவாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் என்னை முடிக்க முயற்சி நடந்தது. அதுமுதல் நான் தொடர்ந்து உங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறேன்.

நான் ஜெயிலுக்கு போன பிறகும் 4 ஆடியோ வெளிவர உள்ளது. அதில் தனியரசு எம்.எல்.ஏ.விடம் பேசியது தொடர்பான ஆடியோ சுமார் 57 நிமிடங்கள் உள்ளன. இதில் நான், உங்களிடம் (எம்.எல்.ஏ.) பேசியது 15 நிமிடங்கள் மட்டுமே. மீதி நீங்களும், நீங்கள் தவறு செய்ய சொன்ன நபரும் பேசியது. அந்த ஆடியோ வெளிவரும் பட்சத்தில் நீங்கள் போலீசாரால் கைது செய்யப்படுவீர்கள். நான் ஒரு மாவட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் வீதம், சுமார் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே தெரிந்தவனாக இருந்தேன். ஆனால் இன்று நீங்கள் என்னை வடஇந்திய அரசியல்வாதிகள், இந்தியா மட்டும் இன்றி, உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு தெரியப்படுத்தி விட்டீர்கள்.

நான் திட்டமிட்டப்படி இன்று நேரில் காவல்துறையினர் முன்னிலையில் ஆஜராக உள்ளேன். இதில் மாற்றம் இல்லை. என்னை சுட்டு பிடிக்க போவதாக தகவல் வெளியானது. இதை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரே மறுத்தனர். ஏதாவது சூழ்நிலையில் நான் கைது செய்யப்பட்டால், பதற்றம் ஏற்படும். நான் சட்ட விரோதமாக நடக்கவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். என் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது அவ்வளவுதான். எனவே, எனது தரப்பு நியாயத்தை சொல்ல உரிமை உள்ளது.

எங்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானவர்களை தவிர அனைவரும் வெளியே வந்து விட்டனர். நான் இதுவரை முன்ஜாமீன் கேட்டு மனு போடவில்லை. நான் காவல்துறைக்கு எதிரானவன் அல்ல. காவல்துறைக்கு தான் என் மீது தவறான கண்ணோட்டம் உள்ளது. நான் அப்போதே ஆஜராகி இருந்தால், விஷ்ணுபிரியா இறந்து இருக்கமாட்டார் என்கிறார்கள். அது உண்மை தான்.

நான் காவல்துறையில் ஆஜராவதை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் போன்ற தூரமான பகுதிகளில் உள்ள பேரவையினர் வர வேண்டாம். ஜாமீனில் வரும்போது வாருங்கள். நாம் பொறுமை காத்து, பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். நான் மேலும் 4 ஆடியோ மற்றும் 2 வீடியோ தயார் செய்து வைத்து உள்ளேன். நான் ஜெயிலில் இருந்தாலும் அது வெளிவரும். எந்த சூழ்நிலையிலும் பேரவையினர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது. கோழையாக இருந்து தினம், தினம் சாவதைவிட வீரனாக ஒருமுறை சாவது மேல். நியாயம், தர்மம் ஜெயிக்கும். விரைவில் சிறையில் இருந்து நான் மீண்டு வருவேன். என் மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் அனைத்தையும் சட்டப்படி சந்திப்பேன்" என்று கூறினார்.

No comments:

Post a Comment