சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

பொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட்கள்!

நமது பொருளாதாரம் இனி எப்படி இருக்கப் போகிறது? வளர்ச்சிப் பாதை தொடருமா? பணவீக்கம் குறையுமா, கூடுமா? விலைவாசி கட்டுக்குள் இருக்குமா? தறிகெட்டுப் போகுமா? வேலை வாய்ப்பு பெருகுமா, சுருங்குமா...? 
இன்னும் சுமார் நூறு நாட்களில் அநேகமாக, அத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிடும். அது என்ன நூறு நாள் கணக்கு..? 
மூன்று முக்கிய நிகழ்வுகள் இந்தியப் பொருளாதார நிலையை நிர்ணயிக்க இருப்பவை. இவை எழுப்பும் காற்று எந்தப் பக்கம் பலமாக வீசுகிறதோ அந்த திசையில் பொருளாதாரம் எனும் கலம் பயணிக்கப் போகிறது. 

முதல் நிகழ்வு: மழை!
தென்மேற்குப் பருவ மழை, பல இடங்களில் சராசரிக்கும் கீழேதான் பதிவாகி உள்ளது. முற்றிலுமாகப் பொய்த்துவிடவில்லை என்பது மட்டுமே ஆறுதலான செய்தி. 
விவசாயத்துக்கான பாசனத்தில் இருந்து குடிநீர்த் தேவை வரை, பல பிரச்னைகள் பூதாகரமாக எழுவதற்கான அச்சமூட்டும் சாத்தியங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த நிலையில்தான், இப்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்க இருக்கிறது. 

தமிழகம், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் விவசாய உற்பத்தி, இந்தப் பருவ மழையை நம்பியே இருக்கிறது. சராசரிக்கும் மேலாக மழை பொழிகிறபட்சத்தில் (நம்புவோம்) வேளாண் உற்பத்தி, சிறப்பாக இருக்கும். உணவுப் பொருட்களின் விலையும், அதன்மூலம் பணவீக்க விகிதமும் கட்டுக்குள் இருக்கும். மாறாக, பருவ மழை பொய்த்து விடும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். 
வேளாண்மை மட்டும் அல்லாது, பொதுவாகவே தண்ணீர்த் தேவைக்கு, பருவ மழையை மட்டுமே சார்ந்து உள்ளோம். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், நதிநீர் இணைப்புத் திட்டம் போன்றவை பெரும்பாலும், மேடை முழக்கங்கள் என்கிற நிலையைத் தாண்டி வரவே இல்லை. ஆனாலும், சொட்டு நீர்ப் பாசனம், மழை நீர் சேமிப்பு போன்ற சில முயற்சிகள் பெற்று வருகிற வெற்றி, சற்றே நம்பிக்கையை ஏற்படுத்துவதாய் உள்ளது. 

சாமான்யர்களின் வாழ்க்கை நிலையைப் புரட்டிப் போடுகிற காரணியாக விளங்கும் பருவ மழையை, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் போதிய கவனம் செலுத்தப்படவேயில்லை. நீர்நிலைகளில் தூர்வாருதல், நீர்வழிப் பாதைகளை செப்பனிடுதல், புதிய நீர்த் தேக்கங்கள் கட்டுதல் என எதுவும் யாருடைய சிந்தனையிலும் இல்லை. 
பல பத்தாண்டுகளாக மக்கள் தொகை எந்த அளவுக்குப் பெருகி இருக்கிறது..? இதன் நேரடி விளைவாக, தண்ணீருக்கான தேவை, எத்தனை பெருகி இருக்கிறது, இதற்கொப்ப தண்ணீருக்கான வழிவகைகளைக் கண்டறிந்தோமா..? குறைந்தபட்சம், இதற்கான அவசரம், அவசியம், தீவிரம் நமது திட்டங்களில் காணப்படுகிறதா..? நம் நாடு ஒரு விவசாய நாடு. அதிலும் வெப்ப நாடு. இருந்தும், தண்ணீர் மேலாண்மை என்கிற ஒன்று, நம் நாட்டில் ‘சிந்தனை அளவில்’ கூட, இல்லவே இல்லை! இத்தகைய நிலையில், நமது பொருளாதாரம், ‘கருமேகங்களுக்குள்’ ஒளிந்துகொண்டு இருக்கிறது. நல்ல மழை ஒன்றே, நம்மைக் காப்பாற்றும். 
இரண்டாவது நிகழ்வு: தொழில் துறை செயல்பாடு!

இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு தொடங்கி விட்டது. முதல் காலாண்டு, திட்ட மிடுதலில் போய்விடுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் தொடங்கிய பணிகளின் பலன்கள்,  இந்தக் காலாண்டில்தான் தெரியவரும். ஓரிரண்டு தவிர்த்து, பெரும்பாலும் எல்லாத் தொழில் நிறுவனங்களும், சீராகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இது போதவே போதாது. 

இப்போதுள்ள நிலைமையே தொடர்வது நல்ல அறிகுறி அல்ல. வளர்ச்சி வேண்டும். அதுவும் அசுரப் பாய்ச்சலில் அமைய வேண்டும். அப்போதுதான், நாம் எதிர்பார்க்கிற வளர்ச்சியான 7.5 சதவிகிதத்தை நம்மால் எட்டிப் பிடிக்க முடியும்.  

எந்தவொரு துறையிலும், மிகப்பெரிய நம்பிக்கை தென்படவில்லை. நாம் சொல்வது, அதீத வளர்ச்சிக்கான நம்பிக்கை. எங்குமே, எந்தவிதமான ஆர்வமும் உந்துதலும் இருப்பதாகத் தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு, தொழில் துறையில் எந்த அளவுக்கு நேர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்தக் காலாண்டில் தெரிந்து விடும். 
நடப்புக் காலாண்டில் இதே நிலை நீடிக்கக் கூடாது. அரசுத் துறைகள், வங்கிகள், நிறுவனங்கள், சந்தைகள் என நாள் முழுதும் ‘ஓடிக் கொண்டே’ இருக்க வேண்டும்.  உற்பத்தி, விற்பனை, வருமானம், ஆதாயம் போன்ற அத்தனையும் ஏறிக் கொண்டே இருந்தாக வேண்டும். இந்தக் காலாண்டில் தொழில் துறையின் வேகமான, மிதமான, மந்தமான செயல்பாடு, அப்படியே நமது பொருளாதாரத்தில் பிரதிபலிக்கும். ஓரிரு துறைகளில் சுணக்கம் ஏற்பட்டாலும், ‘சரி செய்ய’, ஈடு கட்ட, போதுமான அவகாசம் இல்லை. 

இந்த நிதியாண்டைப் பொறுத்த மட்டில், பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகளுக்கான காலம் முடிவடைந்து விட்டது. செயல்களும் விளைவுகளும் ஆக்கிரமிக்க வேண்டிய நேரம் இது. ஆகவே, இந்தக் காலாண்டின் உற்பத்தி, விற்பனை, வளர்ச்சி போன்றவை மிக முக்கியம் ஆகிறது. ஏறுமுகமா, இறங்குமுகமா, எத்தனை சதவிகிதம் என்பதை முன்நிற்கும் மூன்று மாதங்கள் தீர்மானிக்கும். 
மூன்றாவது நிகழ்வு: கொந்தளிப்பற்ற அரசியல் சூழல்!

‘ஒரு வழியாய்’, பரபரப்பான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்து உள்ளது. தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பீகார் தேர்தல் நடந்துகொண்டு இருக்கிறது. மழைக்காலத் தொடர், பொதுவாக, குறைவான நாட்களே நடைபெறும்; சர்ச்சைக்குரிய விவாதங்கள் எதுவும் ‘முளைக்க’ சாத்தியங்கள் குறைவு என்பதாலும், இந்தத் தொடர் ‘பிரச்னை’க்குரிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. ஆகவே, அடுத்த சில மாதங்களுக்கு (சில வாரங்களுக்கேனும்) சற்றே அமைதியான அரசியல் சூழல் நிலவும் வாய்ப்புகள் மிக அதிகம் தென்படுகின்றன. 

ஒரு ஜனநாயகக் குடியரசு நாட்டில், விவாதங்களும் சர்ச்சைகளும், தவிர்க்கப் பட முடியாதன; இன்றியமையாதனவும் கூட. ஆனால் இதுவே, பல சமயங்களில், முக்கிய முடிவுகளைத் தீர்மானிப்பதில், காலதாமதம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. இந்தக் காலாண்டில் இந்தச் சூழல்மாறி, பொருளாதார நடவடிக்கைகள் முன்னுரிமை பெறலாம். இதன்விளைவாக, தடையற்ற, ஸ்திர மான, உற்பத்தி சார்ந்த தொழில் நடவடிக்கைகள், நமது பொருளாதார நிலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கலாம். வெப்பத்தின் ஆட்டம் முடிந்தது. பருமழை பொழிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நெருக்கடிகளுக்கு இடையில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் சற்றே தளர்ந்து இருக்கிறது. 

போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்றவற்றுக்கு (காரணங்கள் எத்தனை வலுவாக இருந்தபோதிலும்) சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு, உற்பத்தி மட்டுமே இப்போதைய இலக்கு என்று அனைவரும் பொறுப்புடன் செயல் பட்டால், இந்த சாதகமான நாட்களில், நாம் அடைய நினைக்கும் வளர்ச்சி விகிதம் நிச்சயமாக சாத்தியம் ஆகும். 

மாறாக, இந்த மூன்று நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று பிறழ்ந்தாலும், மிகப் பெரிய சவாலை நம் பொருளாதாரம் சந்திக்க வேண்டி இருக்கும்! 

No comments:

Post a Comment