சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

சரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார் யுவராஜ்! புலம்பும் போலீஸார்

லைமறைவாக இருந்தபோது, தொடர்ந்து வாட்ஸ்அப் மெஸேஜ் அனுப்பி எங்களுக்குப் பெரும் பிரச்னையைக் கொடுத்துவந்த யுவராஜ், சரண்டர் ஆகி உள்ளே வந்தபிறகும் எங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறார்’ என்று புலம்புகிறார்கள் போலீஸ்காரர்கள்.
பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டு உள்ள யுவராஜ், கடந்த 11-ம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்பாக சரணடைந்தார். அதன் பிறகு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். யுவராஜை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அனுமதி கேட்டனர். ஆனால், முதலில் 5 நாட்களும், பிறகு 2 நாட்களும் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, நாமக்கல் - சேலம் ரோட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, கோகுல்ராஜை கொலை செய்ததாக யுவராஜ் ஒப்புக்கொண்டார் என்று போலீஸ் தரப்பு செய்திகளை கசிய விடுகிறது. 
உண்மையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை எப்படி நடக்கிறது? இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘‘யுவராஜுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரிய தீவிரவாதிகளுக்குக்கூட இந்த அளவுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க மாட்டார்கள். காரணம், யுவராஜ் சரண் அடைந்த சில மணி நேரங்களிலேயே, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து இருந்தது, நீதிமன்ற கூண்டுக்குள் நின்றுகொண்டிருந்தது மற்றும் நீதிபதி, வழக்கறிஞர் உரையாடல் என அனைத்தும் புகைப்படங்களாக, வீடியோவாக வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டார்கள். இந்த சம்பவத்தால் எங்கள் உயர் அதிகாரிகள் டென்ஷனாகிவிட்டார்கள். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி-யான நாகஜோதிக்கு செம டோஸ் விழுந்தது. அதையடுத்து, அன்று பணியில் இருந்த ஒவ்வொரு போலீஸாரையும் தனித்தனியே 4 மணி நேரம் விசாரித்தார் நாகஜோதி. நம்மோடு இருக்கும் ஒரு கறுப்பு ஆடுதான் இந்த வேலையை செய்திருக்கிறது என்று அவர் கடிந்துகொண்டார். ரிசர்வ் போலீஸ், ஸ்பெஷல் போலீஸ் என யாரும் இப்போது, அலுவலக வாசல் படியைத் தாண்டி உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
யுவராஜ் எப்போதும் சிரித்த முகத்தோடு ஜாலியாகத்தான் இருக்கிறார். விசாரணை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுகிறார். புரட்டாசி மாதம் என்பதால் அசைவ சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். டீ, காபி குடிப்பது இல்லை. ஏன் என்று கேட்டதற்கு ‘எனக்கு டீ, காபி, சிகரெட் பழக்கம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். ‘எதற்காக தேவையில்லாமல் பிரச்னைகளுக்குப் போகிறாய்?’ என்று கேட்டதற்கு, ‘இது சமூகப்பணி’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். துருவித் துருவி விசாரித்தும் முதல் இரண்டு நாட்கள் யுவராஜ் வாய் திறக்கவே இல்லை.
மூன்றாவது நாள், ‘நான் அந்தப் பையனை (கோகுல்ராஜ்) திட்டியது உண்மைதான். ‘இப்படி பெண்களை ஏமாத்துறியே. உனக்கெல்லாம் அக்கா தங்கச்சி கிடையாதா? இந்தப் பிழைப்புக்கு எங்காவது போய் செத்துடலாம் என்று மிரட்டியதும் உண்மை. அப்புறம் நான் காரில் வீட்டுக்குப் போயிட்டேன். அவன் எப்படி செத்தான் என்றெல்லாம் தெரியாது. ஒருவேளை நான் திட்டியதால் செத்துப் போயிட்டானோ? என்ற பயத்தில்தான் தலைமறைவாக இருந்தேன்’ என்று ஒரே விஷயத்தைத் தேய்ந்த ரெக்கார்டைப்போல சொல்லிக்கொண்டிருந்தார்.
பின்னர், யுவராஜின் கார் டிரைவர் அருண், கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை 14-ம் தேதி கஸ்டடி எடுத்து விசாரித்தோம். ஒரு கட்டத்தில் அருணிடம், ‘அனைத்து உண்மைகளையும் யுவராஜ் சொல்லிவிட்டார். நீ அடித்ததில்தான் கோகுல்ராஜ் இறந்தாராம். உண்மையைச் சொல்லி விடு. இல்லையென்றால், உண்மையைக் கண்டறியும் சோதனைக்கு உன்னை உட்படுத்துவோம். இப்போதே உண்மையைச் சொல்லிவிட்டால் உனக்கு நல்லது’ என்று சொன்ன பிறகு, அருண் அப்ரூவராக மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தொடங்கினார்.
‘நான் யுவராஜுக்கு கார் டிரைவர் கிடையாது. நான் ஒரு தனியார் நிறுவனத்தின் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ். யுவராஜின் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையில் இருக்கிறேன். எனக்கு கார் டிரைவிங் தெரியும். அதனால், சம்பவத்தன்று கூப்பிட்டார்கள். நான்தான் காரை ஓட்டிச்சென்றேன். எங்கள் அமைப்பைச் சேர்ந்த சிலரும் எங்களுடன் காரில் வந்தார்கள். காரை நேராக திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு தலைவர் விடச் சொன்னார். கோயிலுக்கு 50 மீட்டர் முன்பே காரை நிறுத்திக்கொண்டேன். தலைவர் இறங்கி கோயிலுக்குச் சென்றார்.
அங்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்து விசாரித்து சத்தம் போட்டார். பிறகு, அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அந்தப் பையனை எங்கள் காரிலேயே பள்ளிப்பாளையம் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்குக் கூட்டிச்சென்று, அங்கு விட்டுவிட்டு நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்த குடோனில் ஒரு நாள் இரவு முழுவதும் கோகுல்ராஜ் வைக்கப்பட்டிருக்கிறார். அதை தலைவரே வீடியோ பதிவும் செய்திருக்கிறார்’ என்று அருண் சொன்னார். 
அருண் சொன்னதை அப்படியே வாக்குமூலமாகப் பதிவுசெய்து இருக்கிறோம். சாட்சி எந்த நேரத்திலும் மாறிவிடலாம் என்பதால், உறுதியான ஆதாரங்களை தற்போது சேகரித்து வருகிறோம். அருணின் வாக்குமூலத்தை அடுத்துத்தான், மலைக்கோயிலுக்கும், பள்ளிப்பாளையம் பகுதிகளுக்கும் யுவராஜை அழைத்துச் சென்று நேரடியாக ஒத்திகை பார்த்தோம். ஆனால், யுவராஜிடம் இருந்து இன்னும் சரியான தகவல்களைப் பெறமுடியவில்லை. ஆனாலும், அடுத்தடுத்த விசாரணைகளில் உண்மைகளை எப்படியும் அவர் சொல்லிவிடுவார்’’ என்கிறார்கள்.
இதுபற்றி யுவராஜின் வழக்கறிஞர் பழ.ஆனந்த்திடம் கேட்டபோது, ‘‘யுவராஜையும், அருணையும் கஸ்டடி எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அவர்களிடம் இருந்து எந்த தகவலையும் பெறமுடியவில்லை. அந்த விரத்தியில் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த விசாரணை குறித்து உயர் அதிகாரிகள் யாரும் நேரடியாக விளக்கம் கொடுக்காத நிலையில், கோகுல்ராஜை கொலை செய்ததாக யுவராஜ் ஒப்புக்கொண்டார் என சில நாளேடுகளில் செய்தி வெளியிடுகிறார்கள். இது, சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான தகவல். ஒருவேளை கஸ்டடியில் இருக்கும்போது மிரட்டி வாக்குமூலம் பெற்றிருந்தாலும் அது, நீதிமன்றத்தின் முன்பு செல்லாது.
போலீஸ் கஸ்டடி எடுத்த பிறகு, அவருடைய வழக்கறிஞர்களான எங்களையும், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளையும் சந்திக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்று முழுமையான விசாரணை நடத்தி நிரூபிப்பதற்கு முன்பாகவே, துணியால் முகத்தை மூடி மிகப் பெரிய தீவிரவாதியைப்போல போலீஸார் யுவராஜை அழைத்துச் செல்கிறார்கள். அதைப் பார்க்கும்போது, திட்டமிட்டே காவல் துறை யுவராஜ் மீது பழிசுமத்தி விடுவார்கள்போலத் தெரிகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இந்த வழக்கில் காட்டும் அக்கறையை டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா வழக்கிலும் காட்டினால் நன்றாக இருக்கும். யுவராஜ், அருண் கஸ்டடியில் பல மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதால், இதுபற்றி தனியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் உள்ளோம்’’ என்றார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கில், உண்மைகள் வெளிவர வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது.

No comments:

Post a Comment