சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Oct 2015

சிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மனதிலிருந்து முடியாது!

சினிமா என்று சொன்னவுடன் சிவாஜியின் நடிப்பு நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல உலக சினிமா வரலாறில் நடிப்பு என்றால் சிவாஜியையும், அவர் தமிழினத்தின் அடையாளமாக இருப்பதையும் யாராலும் மாற்ற முடியாது. 

சிவாஜி சினிமா உலகின் சிகரம். பாரதியார், கட்டபொம்மன், திருப்பூர் குமரன்,  வ.உ.சிதம்பரம் பற்றி இன்றைக்குள்ள இளைய சமுதாயத்தினருக்கு தெரிகிறது என்றால், அதற்கு சிவாஜியின் நடிப்பும் ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

கடந்த 2006-ல் சிவாஜி  சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் சிலையை நவம்பர் 16-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் கருத்தில் கொண்டு சிலையை அகற்றச் சொல்லும்  நீதிமன்றம்,  அரசியல்வாதிகளின் 100 வகையான கார்களின் அணிவகுப்பால், விளம்பர ப்ளெக்ஸ் போர்டு, நடு ரோட்டில் பொதுக்கூட்டம் என்று பல வகையில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு முடிவு கட்டுமா? அரசியல்வாதி விமானத்தில் பறக்கும் வரையிலும், தரையில் கால் வைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்ற பெயரில் நிறுத்தப்படும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அன்றாடம் அலுவலகம், வீடு திரும்ப முடியாத பல லட்சம் பேரின் உள்ளக் குமுறலை நீதிமன்றம் கண்டுகொள்ளுமா?

சென்னையில் காரில் சிவப்பு விளக்கு சுழலும்போதெல்லாம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பல தெருக்களை சுற்றி வீடு வந்து சேரும் அப்பாவிகளின் கதை தெரியுமா? தெருவிற்குத் தெரு டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, டாஸ்மாக் கடை முன் எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க முடியுமா? டாஸ்மாக் குடிகாரர்களால் ஏற்படும் விபத்தின் தன்மையையாவது அரசு சொல்ல முடியுமா?
சிவாஜி சிலையால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு  என்பதை  நினைத்துப் பார்க்கும் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மோசமான சாலையால் வண்டி ஓட்டுபவர்களின் அன்றாட  அவல  நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு சிலையால் போக்குவரத்து நெரிசலுக்காகக் கவலைப்படும் நீதிமன்றம்,  தமிழகத்தின்  பிற பகுதிகளின் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்களை பற்றி கவலைப்படாமல்   போய் விட்டது. 
அரசின் ஆதரவு பெற்ற  சாலை  போடும் ஒப்பந்த வேலைகளின் தரம் பற்றி நீதிமன்றம் கணக்கு கேட்க முடியாமல் போய் விட்டது. இதுவரை சாலைகளுக்கு  செலவு செய்த தொகையை, தரச் சான்றை  நீதி மன்றம் அறிக்கையாக கேட்டுப்பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும், ஆண்டுக்கு பல கோடிகள் சாலை  போட்டதாகச் சொல்லும் சாலையில்,   நடக்கக் கூட முடியாத அவலத்திற்கு என்ன காரணம்?

சிவாஜி சிலை,  போக்குவரத்திற்கு  இடையூறாக  இருக்கும் என்று இப்போது வழக்கும் போட்டு பரபரப்பாக வாதம் செய்யும் நாகராஜன்,  சிலை வைக்கும்போதே தடை கோராதது ஏன்?  சிலை ஒன்றும் ஒரு சில மணி நேரத்தில் வைக்கவில்லை. பல மாதங்கள் அரசின் ஒப்புதல் பெற்றுதானே திறந்தார்கள். அப்போது காவல் துறை ஆணையர், சிலை போக்குவரத்திற்கு இம்சையாக இல்லை என்றுதானே சொன்னார். கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர், கடந்த 9 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை.
சிலையால் போக்குவரத்து பாதிப்பு என்று சொல்லும் சட்டம், வருங்காலத்தில் எந்த ஒரு நபருக்கும் சிலை வைக்கத் தடை என்று உத்தரவிட முடியுமா? சிவாஜி சிலையை அகற்ற ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசு, இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் சாலையில் ஆர்ச்சுகள், ப்ளெக்ஸ் போர்டுகள், விளம்பரப் பலகைகள், கொடிகள், தோரணங்கள் கட்ட மாட்டோம் என நீதிமன்றத்திடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். 

போக்குவரத்து நெரிசல், விபத்து  ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு அமைப்பும் மாநாடு, கட்சிக்கூட்டம், சாதனை விளக்கக் கூட்டம், கண்டனக் கூட்டம் நடத்தவும் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இது போன்ற கூட்டங்கள் நடத்த கண்மாய், ஏரிகள், சுடுகாட்டை பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
சிவாஜி சிலையை அகற்றுவதால் அவரது புகழ் அழிந்து விடாது. சிலை இடமாறுதலால் தமிழகத்தில் நடக்கும் சாலை ஊழல்கள் குறையாது, தமிழகத்தின் குடிகார சமூகம் திருந்தி விடாது. சிவாஜி நிரந்தரமாக மக்கள் மனதில் குடியேறி விட்டார். அவரை மனதில் இருந்து இட மாற்றம் செய்ய முடியாது.
போக்குவரத்து, வாகன விபத்தை தவிர்க்க நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது, வாகன அனுமதியை முறைப்படுத்த வேண்டும். ஷேர் ஆட்டோக்களை நகருக்குள் காலை 10 மணி முதல் மலை 6 வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 

மதுக்கடைகளின் முன் குவியும் வாகனத்திற்கு தடை வேண்டும். சாலையின்  தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். கட்சி, இதர பிரிவினர் நகருக்குள் ஆர்ப்பாட்டம், சாதனை விளக்க கூட்டம், சோதனை  முழக்கப் பிரசாரம் செய்ய தடை வேண்டும். ப்ளெக்ஸ் போர்டு, கம்பம், ஆர்ச்சுகள் வைக்க தடை  செய்தால் மட்டுமே விபத்து, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.

No comments:

Post a Comment