சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Oct 2015

ஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும் அதிமுக!

மிழக சட்ட மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது ஆளும் கட்சியான  அதிமுகவும் சேர்ந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தின் எதிர்கட்சிகளான பாமக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அனைத்துக் கட்சிகளும், ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள்,  அறிக்கைகள் என்று பரபரப்பாக இருந்தாலும் அதிமுக அமைதியே காத்தது.
இந்நிலையில் 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து,   அதிமுக தலைமை வாக்காளர்களைச் சந்திக்க கட்சியினருக்கு சமிக்ஞை காட்டியுள்ளது. நேற்று (செவ்வாய்) முதல்வர் ஜெயலலிதா தலைமையில் போயஸ் கார்டனில் நடந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரின் அவசர ஆலோசனைக் கூட்டம்,  சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்த கூட்டம் என்றே கூறப்படுகிறது. இதில் சில 'சீக்ரெட்' பிளான்கள் குறித்து கட்சியினருடன் ஜெயலலிதா விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக அதிமுகவின், கிளைக் கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தமிழகத்தின் 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தற்போது  பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளனர் அதிமுகவினர். பூத் வாரியாக  ஏஜென்ட்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்ட்கள் மற்றும் முகவர்களின் பணி மேற்கூறியவற்றுக்காக என்பது ஒருபுறம் இருந்தாலும், வாக்காளர்களை கவரும் சில திட்டங்களை அரங்கேற்றுவதற்கான பொறுப்பும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
முந்தைய 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று,  திமுகவை படுதோல்வி அடையை செய்து ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது அதிமுக. அதே போல அடுத்துவந்த உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்களிலும் பெரும் வெற்றிகளைக் குவித்து  தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நின்ற அதிமுக, 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் 37 இடங்களைப் பெற்று தமிழகத்தில் பலமிக்க கட்சியாக மாறியது.
இந்நிலையிலேயே அடுத்த ஆண்டு நடக்கும்  சட்டமன்ற தேர்தலிலும்  தனிப்பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் நோக்கில் கட்சி பிரநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திட்டமும் தயரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது  ஒவ்வொரு மாவட்டமாகச்  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தைப் போல இப்போதும் சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து  சூறாவளி சுற்றுப்பயண ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

நடந்துவரும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்துள்ள நன்மைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்றும், அடுத்து புதிதாகச் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் பிரசாரத்தில் அவர் பட்டியலிடுவார் என்றும் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணம் 2 கட்டமாக 30 நாட்களுக்கு மேல் இருக்கும் வகையில் பயண திட்டம் ஏற்பாடுகள் அமையும் என்று அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது. சட்டமன்ற  தேர்தல் 2016 ஏப்ரல் -  மே மாதங்களில் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகி விடும் என்று தெரிகிறது.

இதனால் இன்னும் 4 மாதங்களில் கூட்டணிகளை முடிவு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்பட அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு கட்சியும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். அதில் முதல்கட்ட பயணத்தை தென்மாவட்டங்களில் முடித்துவிட்டு, தற்போது மேற்கு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து வருகிறார். வரும் 8-ம் தேதி காஞ்சிபுரத்தில் பயணத்தை முடிக்கிறார். பாமகவின் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி மக்களை சந்தித்து வரும் நிலையில்,  அக்கட்சியின் சார்பில் மண்டல மாநாடுகள் நடத்தியும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகியுள்ளனர் அக்கட்சியினர்.
   
அதே போல் தமாகா  தலைவர் ஜி.கே.வாசன், ஒவ்வொரு மாவட்டமாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக முடித்து, மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கம்,  ஊர் ஊராக பொதுமக்களை சந்தித்து வருகிறது. இந்த அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்று உள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் என்று பரபரப்பாக உள்ளனர். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் 2016 தேர்தலை மனதில்கொண்டு தங்கள் செயல்பாடுகளைத்  தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதனால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடேறத் தொடங்கிவிட்டது.


No comments:

Post a Comment