சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Oct 2015

உளவாளிகளின் உலகம்!

ரு முதியவர், தன்னையே கண்ணாடியில் பார்த்து வரைந்துகொண்டிருக்கிறார். அவருக்கு இடதுபக்கம் கண்ணாடியும் வலதுபக்கம் ஓவியமும் இருக்கின்றன. இரண்டுக்கும் நடுவில் இருக்கும் முதியவருக்குப் பின்னால் கேமரா அல்லது பார்வையாளன் இருக்கிறான். அவரின் முகம் தெரிவதில்லை. கண்ணாடியில் ஒரு பிம்பம், ஓவியத்தில் இன்னொரு பிம்பம்... இவற்றைத்தான் பார்வையாளனால் பார்க்க முடிகிறது. ஆனால், உண்மை இரண்டுக்கும் நடுவில் உள்ளது. வருடத்தின் மிகச் சிறந்த படம் எனக் கொண்டாடப்படும் 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ இப்படித்தான் தொடங்குகிறது. படத்தின் இயக்குநர்... கிளாசிக் மாஸ்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! 
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நிலவியது. பெரிய அளவில் ஆயுதப்போர் நடக்கவில்லை என்றாலும், இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்கள் வைத்திருந்தது பதற்றத்தை அதிகப்படுத்தியது. எதிரியின் பலத்தை அறிந்துகொள்வதற்காக இரண்டு நாடுகளும் கணக்கே இல்லாமல் பணத்தைச் செலவுசெய்தன. நிறைய உளவாளிகளை அனுப்பிவைத்தன. அப்படி சோவியத் ரஷ்யா அனுப்பிய உளவாளிகளில் ஒருவர்தான் ருடால்ஃப் ஏபெல் (முதல் காட்சியில் தன்னையே வரைந்துகொண்டிருந்த அந்த முதியவர்தான்). அவரை கைதுசெய்கிறது எஃப்.பி.ஐ. சர்வதேசக் குற்றவாளியாக அறிவிக்கப்படும் அவருக்காக வாதாட, இன்ஷூரன்ஸ் அட்வகேட் ஆன ஜேம்ஸ் டானவனை (டாம் ஹேங்க்ஸ்) நியமிக்கிறது அமெரிக்கா. ஆனால், மக்களின் விருப்பப்படி ஏபெலுக்கு மரண தண்டனை கொடுக்க, நீதிமன்றம் தயாராகவே இருக்கிறது.
இந்த நிலையில் ஜேம்ஸ் டானவன், அந்த வழக்கையே திசை திருப்புகிறார். 'உளவாளி என்பவன், அவனது நாட்டுக்கு விசுவாசி. உலகமெங்கும் அமெரிக்காவும் உளவாளிகளை வைத்திருக்கிறதுதானே... அவர்கள் மாட்டிக்கொண்டால் கொல்லப்பட வேண்டும் என்பதை ஏற்போமா? ஏபெலை மனரீதியாக வதைப்பதைப்போல் அமெரிக்க உளவாளிகளையும் சித்ரவதைக்கு ஆளாக அனுமதிப்போமா?’ எனக் கேட்கிறார். இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவின் வான் எல்லைக்குள் கேமரா பொருத்திய விமானத்தைப் பறக்கவிடுகிறது.
ஏபெலுக்கு மரண தண்டனை விதிக்கத் தயாரான நீதிபதியிடம் ஜேம்ஸ் பேசுகிறார்... 'நான் ஒரு இன்ஷூரன்ஸ் அட்வகேட். எதிர்காலத்தில் நம் உளவாளிகள் ரஷ்யாவிடம் சிக்கலாம். அப்போது பரஸ்பரம் இவர்களை மாற்றிக்கொள்ளலாம். அதற்காகவாவது ஏபெலை உயிரோடு விட்டுவையுங்கள்’ என்கிறார். நீதிபதியும் ஏபெலுக்கு 30 வருட சிறைத் தண்டனை மட்டும் கொடுத்து, தீர்ப்பு வழங்குகிறார். சொந்தக் குடும்பமும் நாட்டு மக்களுமே டானவனை எதிரியாகப் பார்க்கிறார்கள்; நாட்டுக்கு துரோகம் இழைத்ததாக நினைக்கிறார்கள்; டானவனின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடுகூட நடத்துகிறார்கள். அப்போது அமெரிக்க பைலட் ஃப்ரான்ஸிஸ் பவர்ஸ் சோவியத் ரஷ்யப் படையிடம் சிக்கிக்கொள்கிறான். இரு நாட்டு அரசுகளும் பரஸ்பரம் தங்களது உளவாளிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அமெரிக்க அரசு, தங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜேம்ஸ் டானவனைத் தேர்வுசெய்கிறது. டானவன் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான், இன்று உலகமே பாராட்டிக்கொண்டிருக்கும் 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’-ன் கதை!
'உங்களுக்குக் கவலையாகவே இல்லையா?’ என டானவன் கேட்கும்போது எல்லாம், 'அது எப்படி உதவும்?’ என நிதானமாகப் பதில் அளிக்கிறார் ருடால்ஃப் ஏபெல். ஓர் உளவாளியாக கச்சித நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் ரைலான்ஸ். இருவரில் ஒருவருக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது நிச்சயம் என்கின்றன ஹேஷ்யங்கள்!
உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது என்பது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்கு 'ஃப்ரீ ஹிட்’ உற்சாகம் தரும். அதுவும் தனது ஆஸ்தான நாயகன் டாம் ஹேங்க்ஸ், பிரபல ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் கோயன் பிரதர்ஸ், இசை முதல் எடிட்டிங் வரை தனது ஆதர்ச அணி என்றதும் 'டீன் ஏஜ் இளைஞன்’ போல உற்சாகத்துடன் சுற்றிச் சுழன்றிருக்கிறார்
68 வயது ஸ்டீவன். மனிதாபிமானம், கருணை, துரோகம், காதல், நம்பிக்கை என மனித குணங்கள் அனைத்தையும் ஒருசேரக்கொண்ட கதை, ஸ்பீல்பெர்கின் புத்திசாலித்தனமான சினிமா மேக்கிங்குக்கு நல்ல தீனியாக அமைந்திருக்கிறது.
மரண தண்டனை, குற்றவாளிகளை சித்ரவதை செய்வது போன்ற விஷயங்களால் 50 ஆண்டுகால பழைய கதை இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. ஏனெனில், உலகம் தொழில்நுட்பத்தில் வளர்ந்தாலும், மனிதத்தில் வளரவே இல்லைதானே!

சமாதானத் தூதுவர்!
அமெரிக்க வீரரை மீட்டுக் கொண்டுவந்த டானவனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அடுத்து க்யூபா நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு அவரை அனுப்பியது. ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்துப் பேசி, க்யூபா சிறையில் இருந்த 1,113 பேரை 53 மில்லியன் அமெரிக்க டாலர் தந்து மீட்டு வந்தார் டானவன். இதனால் அமெரிக்க அரசு, அவருக்கு 'இன்டெலிஷென்ஸ் மெடல்’ தந்து கௌரவித்தது!


No comments:

Post a Comment