பெண்களின் உள்ளம் கவர்ந்த பண்டிகைகளில் முதல் இடம் பிடிப்பது நவராத்திரிதான். வீட்டை தோரணங்களால் அலங்கரித்து, எழில் கொஞ்சும் கொலு வைத்து, அக்கம்பக்கம், நட்பு, உறவு என அழைப்புவிடுத்து, கொண்டாட்டமும் குதூகலமு மாக... ஒன்பது நாட்கள், ஒரு நிமிடமாக பறந்து விடும் அதிசயத்துக்கு ஈடு இணை கிடையாது!
இந்த நவராத்திரி சமயத்தில், இல்லத்தில் சிறப்பாக தயாரித்து, அம்மனுக்கு படைத்து, வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி, நமக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களின் பாராட்டு மழையில் நனைய வைக்கும் விதத்தில் 30 வகை சுண்டல், ஸ்வீட், பாயசம் என வாரி வழங்கி அசத்துகிறார் சமைல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
முப்பெரும் தேவியரின் அருளால், உங்கள் இல்லத்தில் முப்பொழுதும் உற்சாகம் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்!
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
காராமணி - தேங்காய் சுண்டல்
தேவையானவை: காராமணி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (கீறிக்கொள்ளவும்), கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை 8 மணி நேரம் ஊறவிட்டு, சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கி எடுக்கவும்.
பருப்பு பாயசம்
தேவையானவை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், பால் - 2 கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
ஆப்பிள் பாயசம்
தேவையானவை: ஆப்பிள் - 2 (மீடியம் சைஸ் - தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்), பால் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்), நெய் - 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - கால் கப், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்தது), வெனிலா எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை: வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
சிவப்பு அவல் பாயசம்
தேவையானவை: சிவப்பு அவல் - ஒரு கப், பால் - 2 கப், முந்திரி - 8 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), சர்க்கரை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு சிவப்பு அவலை லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பொடித்த அவல், முந்திரி விழுது சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானதும் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
நெல்லிக்காய் பாயசம்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, பால் - 2 கப், சர்க்கரை - அரை கப், முந்திரி, பாதாம் - தலா 8 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, தேன் - கால் கப்.
செய்முறை: நெல்லிக்காயை வேகவிட்டு, கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும். இதை தேனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் முந்திரி - பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த தும் தேனில் ஊறவைத்த நெல்லிக் காயை சேர்த்து, ஒரு கிளறு கிளறி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற் பூரம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
நேந்திரம் பழ இனிப்பு
தேவையானவை: கெட்டியான நேந்திரம் பழம் - 2 (நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - அரை கப், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, யெல்லோ ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: எண்ணெய், பழத்துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அன்னாசி கேசரி
தேவையானவை: அன்னாசிப் பழம் - ஒரு சிறு துண்டு, (தோல், முள் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும்), ரவை - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), யெல்லோ ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகளுடன் சர்க்கரையைக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ரவையை கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வாணலியில் பால், 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, யெல்லோ ஃபுட் கலரை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து, கட்டித் தட்டாமல் நன்கு கிளறி, அடுப்பை 'சிம்'மில் வைத்து வேகவிடவும். வெந்ததும் அன்னாசி - சர்க்கரை கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். கலவை சற்று கெட்டியானதும், பொடித்த முந்திரி, அன்னாசி எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
பூவன் பழ பணியாரம்
தேவையானவை: கனிந்த பூவன் வாழைப்பழம் - 3 (துண்டு செய்து மிக்ஸியில் அடிக்கவும்), கோதுமை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம் - 2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவை ஒன்றாகக் கலக்கவும். மிக்ஸியில் அடித்த பூவன் பழம், வறுத்த தேங்காய் இரண்டையும் மாவில் சேர்க்கவும். வெல்லத்தில் அரை கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாக மாவில் ஊற்றவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நெய், எண்ணெயைக் கலந்துகொள்ளவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, நெய் - எண்ணெய் கலவையை விட்டு, கொஞ்சம் மாவு ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
குலாப் ஜாமூன்
தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கிலோ, மைதா மாவு - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நெய் - பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை - 4 கப், ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை: சர்க்கரை சேர்க்காத கோவா, மைதா மாவு, சமையல் சோடா மூன்றையும் சேர்த்து அழுந்தப் பிசைந்து, ஈரப்பதம் போகாமல் அரை மணி நேரம் மூடி வைக்கவும். நெய்யை மிதமாக சூடாக்கி, பிசைந்து வைத்துள்ள கலவையைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் 2 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்ததும் கீழே இறக்கி, அழுக்கு போக வடிகட்டவும். ரோஸ் எசன்ஸ், பொரித்து வைத்துள்ள ஜாமூன் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். 2 மணி நேரம் ஊறிய பின், சூப்பர் சுவையில் இருக்கும்.
இனிப்பு பூரி
தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், வாழைப்பழம் - 2, முந்திரி - 8 (ரவை போல பொடிக்கவும்), சர்க்கரை - கால் கப், தயிர் - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பால் - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரைத்தூள் - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைத் தூள், எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவையான நீர் விட்டு, பூரி மாவு பதத்தில் பிசைந்து, சற்று கனமான சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். பொரித்த பூரியின் மேல் சர்க்கரைத் தூள் தூவி பரிமாறவும்.
புழுங்கல் அரிசி வெல்ல கேசரி
தேவையானவை: புழுங்கல் அரிசி, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் புழுங்கல் அரிசியை பொரி மாதிரி நன்றாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி, வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்துடன் 3 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். அரிசி மாவு நன்கு வெந்ததும் நெய், ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பஞ்சாப் கோதுமை அல்வா
தேவையானவை: பஞ்சாப் கோதுமை - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - 150 கிராம், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 50 கிராம்.
செய்முறை: பஞ்சாப் கோதுமையை 4 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். ஊறிய கோதுமையை ரவை போல அரைத்துக்கொள்ளவும் (அரைத்த விழுது இட்லி மாவு பதத்தில் இருப்பது அவசியம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த கோதுமை விழுது சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்த பிறகு சர்க்கரை, 100 கிராம் நெய் சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வந்த பின் ஏலக்காய்த்தூள், முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ரவா பர்ஃபி
தேவையானவை: ரவை - கால் கிலோ, சர்க்கரை - 100 கிராம், முந்திரி - 12 (மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.
செய்முறை: ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். இதனுடன் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். வாணலியில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சி... ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறவும் (அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறவும்). திரண்டு வரும் சமயம் நெய் தடவிய தட்டில் பரப்பி தட்டிவிடவும். ஆறியதும், கத்தியால் கீறி சிறு துண்டுகள் போடவும்.
தேங்காய் பர்ஃபி
தேவையானவை: தேங்காய் - ஒன்று, சர்க்கரை - 200 கிராம், நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: தேங்காயை வெள்ளைப் பூவாகத் துருவிக்கொள்ளவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து தேங்காய்த் துருவலை லேசாக வதக்கிக்கொள்ளவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். முற்றிய பதம் வந்ததும் (பாகை உருட்டி நீரில் போட்டால் கரையக் கூடாது) வதக்கிய தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும். நன்கு நுரைத்து கெட்டியாக வரும் சமயம் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
தால் பர்ஃபி
தேவையானவை: உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், முந்திரிப்பருப்பு - 10, பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, முந்திரிப்பருப்பை தனித்தனியே வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டவும். மிக்ஸியில் அரைத்த மாவுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இதனுடன் சூடான நெய், வெல்லக் கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து, சின்ன அச்சுகளில் மாவை அடைத்து பர்ஃபி செய்யவும். அல்லது, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
விளாம்பழ அல்வா
தேவையானவை: விளாம்பழ கூழ் - ஒரு கப் (மிக்ஸியில் அரைத்தது), தேங்காய் துருவல் - அரை கப், ரவை - ஒரு கப், நெய் - ஒரு கப், முந்திரி - 10 (நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), சர்க்கரை - இரண்டரை கப்.
செய்முறை: ரவையை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, சுருண்டு வரும் சமயம் இறக்கிப் பரிமாறவும்.
இனிப்பு அப்பம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், பொடித்த வெல்லம் - ஒன்றேகால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். வெல்லத்துடன் அரை கப் நீர் சேர்த்து சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டவும்.
ஊறிய அரிசி, பருப்புகளுடன் தேங்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கரைத்த மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றி, இருபுறமும் திருப்பி விட்டு, வெந்தபின் எடுக்கவும்.
கோயில் புளியோதரை
தேவையானவை: பச்சரிசி - 2 கப், புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உப்பு, நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
பொடி செய்ய: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய விரலி மஞ்சள் - 2, மிளகு - 2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்து ஆறவிடவும். புளியை ஒன்றரை கப் நீரில் கரைத்து வடிகட்டவும். பொடி செய்யக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கறிவேப்பிலை சேர்த்து வைக்கவும். சாதத்தில் புளிக்கலவை, வறுத்துப் பொடித்த தூள் சேர்த்து நன்கு கிளறினால்... மணக்க மணக்க கோயில் புளியோதரை தயார்.
உலர்திராட்சை பர்ஃபி
தேவையானவை: உலர்திராட்சை - ஒரு கப் (வெந்நீரில் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), சர்க்கரை - அரை கப், முந்திரி - 10 (சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), பால் - 3 கப், நெய் - 50 கிராம்.
செய்முறை: அடி கனமான வாணலியில் நெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் ஒட்டாமல் வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
டூட்டி ஃப்ரூட்டி பர்ஃபி
தேவையானவை: டூட்டி ஃப்ரூட்டி - அரை கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், நெய் - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் நெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கிளறவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). அவ்வப்போது நெய் சேர்த்து ஓரங்களில் ஒட்டாமல் வரும்வரை கெட்டியாக கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறிய பின் துண்டு கள் போடவும்.
கல்கண்டு பாத்
தேவையானவை: பச்சரிசி - ஒன்றரை கப், பால் - ஒரு லிட்டர், டைமண்ட் கல்கண்டு - 2 கப் (பொடித்துக்கொள்ளவும்), நெய் - 50 கிராம், முந்திரி - 10 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அரிசியுடன் பால், ஒரு கப் நீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும் வெந்ததும் பொடித்த கல்கண்டை சேர்த்து நன்கு கிளறவும். கல்கண்டு கரைந்து சாதத்தோடு நன்றாகக் கலந்ததும் இறக்கவும். இதனுடன் நெய்யில் வறுத்துப் பொடித்த முந்திரி, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
மிளகு தாளிதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், முந்திரி - 10, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, நெய் - தேவையான அளவு.
பொடி செய்ய: மிளகு, சீரகம், துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை: பச்சரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து உதிர் உதிரான சாதமாக வடித்துக்கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடி செய்யவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து கடுகு, முந்திரி, கறிவேப்பிலையை தாளிக்கவும். சாதத்துடன் தாளித்த கலவை, வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு, கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
வெல்ல அவல்
தேவையானவை: வெள்ளை அல்லது சிவப்பு கெட்டி அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், முந்திரி - 10 (நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அவலை சுத்தம் செய்து ஒரு கப் சூடான நீரில் ஊறவிடவும். பொடித்த வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டவும். ஊறிய அவலுடன் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கிளறி பரிமாற வும்.
பாதாம் பர்ஃபி
தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - சிறிதளவு.
செய்முறை: பாதாம் பருப்பை ஊறவைத்து, தோலெடுத்து, ஈரம்போக காயவைத்து மிக்ஸியில்பொடி செய்யவும் (மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி பொடித்தால்... நைஸான பொடி கிடைக்கும்). வாணலியில் சர்க்கரையை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்தவுடன் பாதாம் பருப்பு பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கிளறிக்கொண்டே வரவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியதும் டைமண்ட் ஷேப்பில் துண்டுகளாக்கவும்.
வெள்ளை மொச்சை சுண்டல்
தேவையானவை: காய்ந்த மொச்சை - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப் பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த மொச்சை, உப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவலாம்.
பீட்ரூட் பாயசம்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், பால் - இரண்டே கால் கப், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: முந்திரியை நெய்யில் வறுத்து, ஒன்றிரண்டாக பொடிக்கவும். பீட்ரூட் துருவலுடன் கால் கப் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பாலை நன்கு காய்ச்சி... பீட்ரூட் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, இதனுடன் வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
கலர்ஃபுல்லான இந்த பாயசம், விட்டமின் சத்து நிறைந்தது.
கடலைப்பருப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை உப்பு சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண் ணெய் விட்டுகடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, நறுக்கிய வெங்காயத்தா¬ளை மேலே தூவவும்.
கறுப்பு உளுந்து சுண்டல்
தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறுப்பு உளுந்தை 6 மணி நேரம் ஊறவிட்டு, உப்பு சேர்த்து மலர வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, வேகவைத்த உளுந்தை சேர்க்கவும். இதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய மல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி... இறுதியாக துருவிய பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கார்ன்ஃப்ளேக்ஸ் பாயசம்
தேவையானவை: கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து, ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கார்ன்ஃப்ளேக்ஸை வறுக்கவும். பிறகு முக்கால் கப் கார்ன்ஃப்ளேக்ஸை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை, பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யில் வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, பரிமாறும் சமயம் மீதமுள்ள கார்ன்ஃப்ளேக்ஸை தூவி பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் ராணி
டபுள் டெக்கர் ட்ரீட்
தேவையானவை: ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸ் - 2 கப், வெண்ணெய் - 4 டேபிஸ்ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 2 சொட்டு, சாக்லேட் எசென்ஸ் - 2 சொட்டு, வெள்ளரி விதை - அலங்கரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸை இரண்டு பாகங்களாகப் பிரித்து ஒரு பகுதியுடன் கோகோ பவுடரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பகுதியை தனியாக வைக்கவும்.
வாணலியில் முக்கால் கப் சர்க்கரையைப் போட்டு ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு வைத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் இறக்கி, தனியாக வைத்த ஒரு பகுதி ஜாமூன் மிக்ஸை சேர்த்து நன்கு இறுகி வரும் வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் சிறிதளவு வெள்ளரி விதையைத் தூவி, அதன் மேல் இந்த கலவையைக் கொட்டி பரப்பிவிடவும்.
மீதமுள்ள சர்க்கரையில் ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய், சாக்லேட் எசென்ஸ் சேர்த்து இறக்கவும். கோகோ பவுடர் கலந்து வைத்த ஜாமூன் மிக்ஸை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். இதனை, தட்டில் பரப்பி வைத்த கலவையின் மீது மேல் கொட்டி சமப்படுத்தி, கொஞ்சம் வெள்ளரி விதையைத் தூவி அலங்கரித்து, ஆறிய பின் துண்டுகள் போடவும்.
No comments:
Post a Comment