சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Oct 2015

ஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....

கிழந்த உடை, பிசுக்கேறிய சடைமுடி, குளிக்காத உடம்பு, முகம் சுளிக்க வைக்கும் முகத்தோற்றம் இப்படி நாடெங்கும், ஊரெங்கும் திரியும் மனநோயாளிகளைக் கண்டால் யார் பெற்ற பிள்ளையோ...? என்ற பரிதாபத்துடன் கடந்து விடுகிறோம்.. சிலர் பயந்து விடுகிறோம்... சிலர் முடிந்ததை கொடுத்து உதவி செய்கிறோம்..

பாவம்... அவர்கள் தன்னை மறந்தவர்கள், தன்னிலை இழந்தவர்கள்... அவர்களைக் குணப்படுத்தமுடியாமல் அவர்களின் குடும்பத்தாரே கைவிட்ட நிலையில்தான் இவர்கள் தெருவுக்கு வருகிறார்கள். மாநிலங்கள் கடந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏதோ ஒரு பகுதியில் தள்ளிவிடப்படுகிறார்கள்.

இப்படி அலைந்து திரியும் அபலைகளின் செயல்கள் சில நேரம் முகம் சுளிக்க வைக்கும். எல்லை மீறும்போது கோபம் வரவும் செய்யும். அப்படி எல்லை மீறிய மனநலம் பாதித்த ஒரு இளைஞருக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே நடந்த கொடுமையைக் கேளுங்கள்.

8-10-2015, வியாழக்கிழமை- நண்பகல் 1.30 மணி. புதுக்கோட்டை புதியபேருந்து நிலையம் எதிரே மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனை– நல்ல உடல் தோற்றம் கொண்ட ஒருவர் மிகப்பெரிய கட்டைக் கம்பு கொண்டு மூர்க்கமாகத் தாக்குகிறார். அந்த இளைஞன் ‘ஐயோ..அம்மா’ என அலறுகிறான். கத்துகிறான். மரணக் கூச்சலிடுகிறான். விடுவதாக இல்லை. அடிமேல் அடி தொடர்கிறது.அவன் குப்பைத் தொட்டியில் சேகரித்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. 

அரைக்கால் சட்டையுடன், இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டுக் கொண்டே சாலையில் படுத்துக் கதறுகிறான். விளாசித்தள்ளும் கம்பின் வேகம் குறையவே இல்லை. வேடிக்கை மனிதர்களின் கூட்டம் சுற்றி நிற்கிறது.

பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட நான் ஆயத்தமானபோதுதான் இந்தக் கொடுமை என் கண்ணில்பட்டது. கோழிக்குஞ்சை கொத்திக் கொத்தி வேட்டையாடிய அந்த ராட்சஷ கழுகின் கம்பினைப் பறித்தேன். “ஏன் இவனை இப்படிப் போட்டு அடிக்கிறீர்கள் ? எனக் கேட்டேன். அவ்வளவுதான்...

“ வாய்யா காந்தீயவாதி.... இவன் என்ன பண்ணுனான் தெரியுமா? இவனை எல்லாம் கொல்லாம விடக்கூடாது... உன் வேலையைப் பார்த்துட்டுப் போய்யா...” எனச் சீறினார் கம்போடு தாண்டவம் ஆடிய தடியர்.
அடுத்து, வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட், நெற்றியில் விபூதி, சந்தனம், கண்ணாடி அணிந்த பெரிய மனிதரோ... “ உன் வீட்டில கூட்டிக்கிட்டுப் போய் வச்சுக்கய்யா... அப்பத் தெரியும்...” என சித்தாந்தம் பேசினார் அந்த சில்லறை மனிதர்.

அடுத்து ஒரு நடுத்தர வயது அம்மா, “ உங்க வீட்டுப் பொம்பளைகளுக்கு இப்படி நடந்தா நீ சும்மா இருப்பியா? “ பந்தினை என் மீது திருப்பி அடித்தது.

“அவனுக்கு என்ன தெரியும்...அவனுக்கு மொழி இல்லை... உணவில்லை...உடை இல்லை... அவன் அவனாவே இல்லை... அவன் எல்லாம் இழந்து நிக்குறான். அவன் தப்புச் செஞ்சாக்கூட அவனை அடிக்க நீங்க யாரு? உங்க வீட்டில இப்படி ஒருத்தன் இருந்தா என்ன பண்ணுவீங்க... உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா? இந்த மண்ணுல மனிதாபிமானம் சுத்தமா செத்துப்போச்சா “ என கோபத்தில் நானும் கத்தினேன்.

ஆனால் யாரும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. என் குரல் கேட்டு சாலையில் நடந்து சென்ற சிற்சில வெகுக்குறைவான மனிதர்களும், குறிப்பாய் என் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் மட்டும் அந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அப்புறம்தான் அந்த இளைஞனை அவர்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தது.
இந்தக் கொடுமை நடக்கும் இடத்திற்கு எதிரேதான் காவல்துறை “ சார் அந்தக் காரு யாரு... மூவ் பண்ணுங்க... ஆட்டோ இங்கே நிக்காதே கிளம்பு....” என ஒலிபெருக்கியில் கடமை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் காட்சி மட்டும் அங்குள்ள காக்கிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

'அப்படி அவன் என்னதான் செய்துவிட்டான்?' என விசாரித்தபோது ஒரு பெண்மணியின் சேலையில் காறித் துப்பிவிட்டனாம்... அதற்குத்தான் இந்தத் தண்டனையாம்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் உடைகளில் அசிங்கம் செய்து விட்டால்... இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? சிறுவயதுப் பிள்ளைகளுக்குக் கூட ஓரளவு நல்லது, கெட்டது தெரியும் இப்படி மனநலம் பாதித்த இந்தப் பாவஜீவன்களுக்கு என்ன தெரியும்? இவர்களின் செயல்பாடுகள் சமூக நலனுக்கு எதிராக இருந்தால் இவர்களைத் திருத்துவதற்கும், துரத்துவதற்கும் இதுதான் வழியா? நாட்டில் நடக்கும் எவ்வளவோ கொடுமைகளுக்கு கண்மூடிக் கிடக்கும் மனிதா.... மனநலம் பாதித்த அப்பாவிகள்மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தாக்குதல் அணிலை கோடரி கொண்டு வெட்டிக் கூறுபோடுவதற்கு சமம்...

வாழ்க உங்கள் ரௌத்ரம்(?)..

No comments:

Post a Comment