சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்!

நைட் டியூட்டி... நாண்டுகிட்டு சாகலாம்...” “கண்ணு வச்சிட்டா அடையாம விடமாட்டார்...
டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை, பெண் காக்கிகள் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை உண்டாகிவிட்டது. போலீஸ் துறைக்குள் நடக்கும் மனக்குமுறலை கொட்டத் தொடங்கிவிட்டார்கள் பெண் போலீஸார். ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் பெண் போலீஸாரிடம் இருந்து நமது அலுவலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. பல கடிதங்களில் பெண் போலீஸார் ரத்தக்கண்ணீர் வடித்து இருக்கிறார்கள்.
‘நாங்க அனுபவிக்கிற டார்ச்சர் கொஞ்சம் நஞ்சமில்ல. அதையெல்லாம் உங்ககிட்ட நேர்ல சொல்லணும்’ என்று அழைத்தார், போனில் நம்மைத் தொடர்புகொண்ட பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர். மெரீனா கடற்கரையில் சந்திக்கலாம் என்று முடிவுசெய்தோம். கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் பின்புறத்தில், அந்த இன்ஸ்பெக்டருடன் மேலும் இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களும், மூன்று பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் இருந்தனர். ‘எங்க பெயர்களை மட்டும் போட்டுராதீங்க’ என்ற நிபந்தனையை வைத்துவிட்டு, தங்கள் வேதனைகளைக் கொட்ட ஆரம்பித்தார்கள்.
“நைட் டியூட்டி போட்டாலே பிரச்னைதான்!”
“நான், சென்னை மண்டலத்துல இன்ஸ்பெக்டராக இருக்கேன். பெண்களோட பிரச்னைகளுக்காக மகளிர் காவல் நிலையங்களை ஆரம்பிச்சாங்க. அங்கே வர்ற பெண்கள் அவங்களோட பிரச்னைகளை எங்ககிட்ட மனம்விட்டுச் சொல்றாங்க. அவங்க கொடுக்குற புகார்கள் மேல, உடனே நடவடிக்கை எடுக்கிறோம். ஆனா, எங்களோட பிரச்னைகளை யார்கிட்ட போய் சொல்றதுனுதான் தெரியல. என்னதான் போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும், நாங்களும் பெண்கள்தானே. எங்களுக்கும் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு. அதை எல்லாம் எப்படியோ சமாளிச்சிட்டு வர்றோம். வேலைக்கு வர்ற இடத்துலயும் நிம்மதியா வேலை செய்ய முடியல. இதுக்கு வீடே பரவாயில்லைபோல. அந்தளவுக்கு தாங்க முடியாத பிரச்னைகள் இருக்கு” என்று வேதனையோடு பேசினார், இன்ஸ்பெக்டர் ஒருவர்.
“எனக்கு நைட் டியூட்டி போட்டாலே எங்க வீட்டில் பிரச்னை ஆரம்பிச்சுடும்” என்று ஆரம்பித்தார் எஸ்.ஐ. ஒருவர்.
“கவர்மென்ட் சம்பளம் வாங்குறவனு என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டார் என் கணவர். என்னோட ஏ.டி.எம். கார்டு எப்போதுமே அவர்கிட்டதான் இருக்கும். ஆனா, நான் நைட் டியூட்டிக்குப் போனா மட்டும் அவருக்குப் பிடிக்காது. நைட் டியூட்டிக்குக் கிளம்பினாலே, என் மாமியார் ஒரு மாதிரி சந்தேகமாகப் பார்ப்பார். அவர் கேட்குற கேள்விகளுக்கு நாண்டுகிட்டு செத்துறலாம்னு இருக்கும். அதையெல்லாம் தாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு வந்தா, எங்க மாமியாரோட டார்ச்சர் எவ்வளவோ மேல் என்று நினைக்கிற அளவுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகள் எல்லோருமே ஒரே மாதிரியாக இருக்கமாட்டாங்க. நமக்கு மேல இருக்கிற அதிகாரிகள், மன்மத ஆசாமிகளா இருந்துட்டா நாங்க செத்தோம். அவங்களுக்குக் கீழ் பணியாற்றுவது நெருப்புக்கு மேலே நடக்குற மாதிரி. அங்கே நாங்க படுற அவஸ்தைகளை வீட்டுல போய் யார்கிட்டயும் சொல்லவும் முடியாது” என்று சொல்லியபோது, அவருக்கு விழியோரம் கண்ணீர் கசிந்தது.
“சார் கண் வச்சிட்டார்னா...”
அவரைத் தொடர்ந்து பேசினார் இன்னொரு இன்ஸ்பெக்டர்.
“போலீஸ் டிபார்ட்மென்ட்ல 15 வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். சப்-இன்ஸ்பெக்டராக தென்மாவட்டத்தில டியூட்டியில் சேர்ந்தேன். அப்போ, எனக்கு மேலதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் கொடுத்த டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமல்ல. வாரத்துல ரெண்டு மூணு நாள் நைட் டியூட்டி போட்டுருவாரு. எல்லாரையும் ரோந்துப் பணிக்கு  அனுப்பிடுவாரு. அப்புறம், என்னை மட்டும் அவரோட ரூமுக்குக் கூப்பிடுவாரு. ஏதாவது கேஸ் தொடர்பான விஷயங்களைப் பத்தி கேட்பாரு. அப்புறம் அப்பா, அம்மா எப்படி இருக்காங்க என்று ஆரம்பித்து என் குடும்ப நிலவரங்களைப் பத்தி கேட்பார். அவரைப் பத்தி எனக்கு தப்பா எதுவும் தோணலை. ஏதோ அக்கறையில கேட்கிறாருனு நெனைச்சு எல்லாத்தையும் சொல்லிட்டேன். என் குடும்பமே என்னோட வருமானத்தை நம்பித்தான் இருக்கு... தம்பியையும், தங்கச்சியையும் நான்தான் படிக்க வைக்கிறேன்னும் அவர்கிட்ட சொல்லிட்டேன். உடனே அவரும் அக்கறையா தங்கச்சியை சயின்ஸ் குரூப்ப எடுத்துப் படிக்கச்சொல்லுனு அட்வைஸ் பண்ணினார்” என்று சொல்லி ஒரு பெருமூச்சுடன் சற்று இடைவெளிவிட்டார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்தவர், “சில வாரங்களுக்குப்பின் ஒரு நாள் நைட் டியூட்டிக்குப் போனேன். ஸ்டேஷன்ல நானும், அவரும் மட்டும்தான் இருந்தோம். அப்போ, என் அருகே வந்தார். சாராய நெடி வீசியது. அவரோட பார்வையும் சரியில்லை. எனக்கு தர்மசங்கடமா இருந்துச்சு. எழுந்து நின்னேன். உட்காரும்மான்னு என் வலது கையைப் பிடிச்சாரு. என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியலை. அப்படியே உட்கார்ந்தேன். அவரு மேஜையில் ஏறி உட்காந்தாரு. ‘என்னம்மா...டியூட்டி எல்லாம் எப்படிப் போகுது.. ஸ்டே பண்ணியிருக்கிற ரூம் வசதியா இருக்கா’ என்று ஆரம்பிச்சார். நானும் ஒப்புக்கு பதில் சொன்னேன். திடீர்னு என் மேலே கையை வெச்சார். உடனே நான் வெளியே வந்துட்டேன். அவரும் பேசாம அறைக்குப் போயிட்டார். அந்த சம்பவத்தை யார்கிட்டயும் சொல்ல முடியாம தவிச்சேன். ரெண்டு மூணு நாள் கழிச்சு, அதே ஸ்டேஷன்ல வேலை செய்யிற இன்னொரு லேடி போலீஸ்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அப்போ, அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு.
‘ஆமா மேடம், என்கிட்டயும் ஆரம்பத்துல இதே மாதிரிதான் நடந்துகிட்டார். சார் கண்ணு வச்சிட்டார்னா அவ்வளவுதான். அடையாம விடமாட்டார். அவருக்கு ஒத்துழைக்கலைனா நமக்குத் தேவையில்லாத பிரஷர் கொடுப்பார். ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. இப்போ பழகிப்போச்சு. உங்களுக்குப் பிடிக்கல்லன்னா வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிடுங்க. சாரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது’னு அவர் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்ருச்சு. அங்கிருந்து நகர்றதுதான் நல்லதுனு முடிவு செஞ்சேன். என்னோட குடும்பச் சூழ்நிலையை காரணம் காட்டி டிரான்ஸ்ஃபர் கேட்டேன். அது தெரிஞ்சதும் அந்த இன்ஸ்பெக்டர் எனக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாரு. தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்தி டிரான்ஸ்ஃபருக்கு தடை போட்டாரு. அவரோட தொல்லைகள் அதிகமாச்சு. உடனே மெடிக்கல் லீவு எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன். லீவு முடிஞ்சு மறுபடியும் டியூட்டிக்குப் போனேன். அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சார். அதை என்னால தாங்க முடியலை. வேலையை விட்டுறலாம்னுகூட நெனைச்சேன். ஆனா, அந்த வேலைய விட்டுட்டா எங்க வீட்டுல அடுப்பு எரியாது. அதனால எனக்கு வேற வழியே தெரியலை. இன்ஸ்பெக்டரை அட்ஜட்ஸ்ட் பண்ணிக்க வேண்டியதாப் போச்சு” என்று வேதனையுடன் சொன்னார்.
அந்தப் பெண் எஸ்.ஐ-க்கு பதவி உயர்வு கிடைத்து, இப்போது இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அந்த ‘மன்மத’ இன்ஸ்பெக்டர், இப்போது டி.எஸ்.பி-யாகி, பெண் போலீஸாரிடம் தன் லீலைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறாராம்.
காந்தி சிலையின் பின்புறத்தில் நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் தமிழ்நாடு காவல் துறைத் தலைவரின் அலுவலகம் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்தபடியேதான், இந்தப் பெண் போலீஸ் அதிகாரிகளின் கண்ணீர் கதைகளை வேதனையோடு கேட்டுக்கொண்டிருந்தோம்.
“போலீஸ் வேலையை பெருமையா நெனைச்சேன்!”
வட மாவட்டம் ஒன்றில் எஸ்.ஐ-யாக பணியில் சேர்ந்து வேலை செய்த காலத்தில், தான் சந்தித்த செக்ஸ் டார்ச்சர்களை நம்மிடம் சொல்ல ஆரம்பித்தார், இன்ஸ்பெக்டர் ஒருவர்.
“போலீஸ் வேலையை ரொம்பப் பெருமையா நெனைச்சேன். சப்-இன்ஸ்பெக்டராக செலக்ட் ஆனேன். பயிற்சி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனில் வேலைக்கு வந்த சில நாள்லயே உயரதிகாரிங்களால பிரச்னை வந்துச்சு. அங்கிருந்த டி.எஸ்.பி. பெண்கள் விஷயத்துல ஒரு மாதிரினு கேள்விப்பட்டேன். ஒரு தடவை, ஒரு வழக்கு சம்பந்தமா அவரை சந்திக்கப்போனேன். என்கிட்ட ரெட்டை அர்த்தத்துல பேச ஆரம்பிச்சார். ‘என்ன...இப்படி டிரஸ் பண்ணியிருக்க. புழுக்கமா இல்லையா? புழுக்கமா இருந்தா சட்டை பட்டனைக் கழற்றி விட்டுக்க’ன்னு சொன்னார். உயரதிகாரிங்குறதால எதிர்த்து ஒண்ணும் சொல்லமுடியல. சில மாதம் கழிச்சு அவரைத் தனியா சந்திக்கிற சூழ்நிலை வந்துச்சு.  அப்போ, கேஸ் பத்தி பேசாம, அவரோடு பெர்சனல் விஷயங்களை எங்கிட்ட ஷேர் பண்ண ஆரம்பிச்சார். நானும் வேறுவழியில்லாம, கேட்டுட்டு இருந்தேன். கடைசியாக டாப்பிக், செக்ஸ் பக்கமா வந்து நின்னுச்சு. அந்த டாப்பிக்கை மாத்துறதுக்கு நானும் என்னென்னமோ பேசிப்பார்த்தேன். ஆனா, செக்ஸை மையப்படுத்தியே அவர் பேசிக்கிட்டு இருந்தார். திடீர்னு இன்னொரு உயரதிகாரிக்கிட்ட இருந்து அவருக்கு போன் வந்துச்சு. அதனால நான் தப்பிச்சேன். கொஞ்ச நேரத்துல ஒரு ஆபாச எஸ்.எம்.எஸ்ஸை அனுப்பினார்.
ஒரு வாரம் கழிச்சு, ‘ஒரு முக்கியமான கேஸ் விஷயமா டிஸ்கஸ் பண்ணணும் வா’னு போன் பண்ணினார். போனேன். ‘வாம்மா... நல்லாருக்கியா?’னு ரொம்ப கனிவா பேச ஆரம்பிச்சார். அப்புறம் அவரோட பெர்சனல் விஷயங்களைப் பேச ஆரம்பிச்சார். ‘என்னோட ஒய்ஃப் ஒரு ஆஸ்துமா பேஷன்ட். அதுனால ஒரு பிரம்மச்சாரி மாதிரிதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’னு சொன்னார். நான் அதிர்ச்சியாயிட்டேன். அந்த நிமிஷமே எதுவும் சொல்லாம ரூமைவிட்டு விறுவிறுன்னு வெளியே வந்துட்டேன்.
அந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கழிச்சு எங்களோட காவல் சரகத்துல ஆய்வுக்கூட்டம் நடந்துச்சு. டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் இருந்தாங்க. என்னைப் பார்த்து டி.எஸ்.பி. கோபமா முறைச்சுப் பார்த்தார். மீட்டிங்கில் ஒவ்வொருவரைப் பத்தியும் டி.எஸ்.பி. பேசிக்கொண்டு வந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘குற்றவாளியைப் பிடிக்க துப்பில்ல. கண்ட இடத்துல கைநீட்டுற. கும்மாளம் போடுற. உன்கிட்ட யார் யார் போனில் பேசுறாங்க... யாருக்கு எல்லாம் நீ தகவல் கொடுக்கிற... எல்லாம் எனக்குத் தெரியும். போன மாசம் நடந்த க்ரைம்ல இதுவரை குற்றவாளிய பிடிக்கல. நீ எல்லாம் எதுக்கு இந்த வேலைக்கு வர்ற. பேசாம வேற ஏதாவது ‘தொழில் செய்ய வேண்டியதுதானே...’னு எல்லார் முன்னாடியும் ரொம்ப அசிங்கமாத் திட்டினார். அவமானத்துல நான் கூனிக்குறுகி நின்னேன். எனக்கு அழுகையே வந்துருச்சு. மீட்டிங் முடிஞ்சு வெளியே வந்தப்போ, ‘மேடம், இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க. உங்களை மட்டுமில்ல, அவருக்கு ஒத்துப்போகாத எல்லாம் பெண் போலீஸையும் அப்படித்தான் பேசுவாரு’னு ஒரு பெண் ஏட்டு சொன்னாங்க” என்று சோகமாகச் சொன்னார் அந்தப் பெண் இன்ஸ்பெக்டர்.
பெண் போலீஸாருக்கு அதிகமாக செக்ஸ் டார்ச்சர் நடக்கும் இடம் ஆயுதப்படை என்று சொல்கிறார்கள். அதுபற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள்...


No comments:

Post a Comment