சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2015

முதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்!

2016 தேர்தல் நெருங்கிவிட்டது. வரலாறு காணாத அளவில் நிறைய முதலமைச்சர் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள். அ ஃபார் அன்புமணியில் ஆரம்பிக்கும் பட்டியல்,  247 எழுத்துகள் வரை நீள்கிறது.
இரண்டு மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் நின்றது அந்தக் காலம். இப்போது ஒரே கட்சிக்கு இரண்டு வேட்பாளர்கள் என்பதுதான் டிரெண்ட். ஜெயலலிதா உள்ளே சென்றால் ஓ.பன்னீர்செல்வம். கலைஞர் ஓய்வு பெற்றால் ஸ்டாலின் என பேக்-அப் பலமாகவே இருக்கின்றன.

இந்த சூழலில்தான் எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க 'நரேந்திர மோடி மொபைல் ஆப்' பை அவர் இந்த ஆண்டு வெளியிட்டார்.  அது ஹிட் அடிக்க, இப்போது எல்லா முதலமைச்சர் கனவு ஹோல்டர்களும், ஆளுக்கொரு ஆப் வெளியிட்டிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது? எல்லா ஆப்பிற்கும் ஒரு விர்ச்சுவல் டூர் அடித்தோம்

ஸ்டாலின்

ஆப்பின் அடையாள படமே ஸ்டாலினின் கையெழுத்துதான். க்ளிக்கி உள்ளே சென்றால் ஸ்டாலின் புகைப்படம். மின்னல் வேகத்தில் ஆப் செயல்படுகிறது. முகப்பில் ஸ்டாலின் பற்றிய அறிமுகம். 'Stalin connect' மூலம் புகார்கள், கருத்துகளை தெரிவிக்கலாம். அவருடன் வாலண்டியராக சேர விரும்பினால் மட்டும் நம் பெயர், மொபைல் நம்பர் போன்ற தகவல்களை கேட்கிறார்கள். ஆன்லைன் மற்றும் களப்பணிக்கென தனித்தனியே ஆள் எடுக்கிறார்கள். 'Follow the leader' ஆப்ஷனை க்ளிக்கினால் தமிழக மேப் வருகிறது. எந்த தேதியில் எங்கே இருப்பார் ஸ்டாலின் என காட்டுகிறது. 'My kolathur' என அவரது சட்டமன்ற தொகுதி மக்களுக்கு என பிரத்யேக பகுதியும் உண்டு. ஸ்டாலினின் சாதனைகளில் முக்கியமானவற்றையும் தருகிறார்கள். மக்கள் வாக்கெடுப்பு எடுக்க 'Poll' பகுதி, புகைப்படங்களுக்கு 'Gallery' என நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.
மொத்தத்தில், கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால சம்பவங்களையும் கையடக்கமாக தருகிறது 'M.K.Stalin app'. ஒரேயொரு குறை... எல்லா தகவல்களும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. கடைக்கோடி கிராமம் வரை ஸ்மார்ட்ஃபோன் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. எல்லா மொபைலிலும் தமிழ் இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மூத்த கழகத்தின் முக்கிய தலைவரின் ஆப்-ல் அவர் கையெழுத்தை தவிர வேறு எங்கும் தமிழில்லை. இருக்கும் தகவலை வைத்து பார்த்தால் 24 எம்.பி ( Mb) என்பது அதிகம். மெமரி குறைவான மொபைல் வைத்திருப்பவர்களுக்கு இது சிரமமான விஷயம்.

 அன்புமணி ஃபார் சேஞ்ச் 

போஸ்டர் பாய் அன்புமணியின் ஆப்,  பச்சை நிறத்தில் மின்னுகிறது. தமிழக மேப்பில், வானத்தை பார்க்கும் அன்புமணியின் படத்தை  வாட்டர்மார்க்காக வைத்திருக்கிறார்கள். வெறும் 3 எம்.பி தான் என்பதால் வேகமாக திறக்கிறது. முதல் முறை உள்ளே நுழையும் போது பெயரையும், மொபைல் நம்பரையும் கேட்கிறார்கள். அதுதான் ஆப்பின் 'அண்டாகா கசம்'. அதை கொடுத்தால்தான் உள்ளேயே விடுகிறார்கள். ஆனால், அது நம் மொபைல் எண்ணாக இருக்க வேண்டியதில்லை. ஏதோ ஒரு எண்ணை கொடுத்தால் போதும் என வைத்திருப்பது டெக்னிக்கலி ராங்.
முகப்பு ஐகான்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உள்ளடக்கம் எல்லாமே தமிழில் தந்திருப்பது சிறப்பு. அன்புமணி பற்றி, பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு, மருத்துவர் ராமாதஸ் வரலாறு என விரிவாக தமிழில் இருக்கின்றன. வெறும் முதலமைச்சர் கனவு மட்டுமில்லாமல் அன்புமணியின் 'விஷன்' என்ன என்பதற்கு தனிப்பகுதி. மது ஒழிப்பு, கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில் வளர்ச்சி என எல்லா துறைகளை பற்றியும் எழுதி இருக்கிறார்கள். 'wall' என்ற பகுதிதான் சுவாரஸ்யம். மாம்பழத்தின் படம்தான். அதை க்ளிக்கினால் ஒவ்வொரு படமாக திறக்கிறது. அதை சமூக வலைத்தளங்களில் பரப்ப அங்கயே ஷேர் பட்டன். அடுத்த மாம்பழத்தில் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் எழுகிறது. படங்கள், வீடியோ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் சுட்டி என சம்பிரதாய விஷயங்கள் எல்லாமே உண்டு.
கட்சியில் உறுப்பினர் ஆக ஆன்லைன் படிவமும் தருகிறார்கள். எந்த மாவட்டம், ஊர் எனத் தொடங்கி எந்த பூத் என்பது வரை தகவல்கள் கேட்பதை பார்த்தால், ஏதோ வில்லங்கம் என்பது போல் தெரிகிறது. சில மீட்டிங்குகளை நேரலை செய்யவும் திட்டமிடுகிறார்கள். இந்த ஆப் மூலமே அதைக் காண வசதி இருக்கிறது. அன்புமணிக்கு ஏதாவது ஐடியா தருவதென்றால் ஆப் மூலமே அனுப்பலாம். மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் இணைப்புகள் மட்டும் வேலை செய்யவில்லை. இது எதோ குறியீடு போல என நினைத்துக் கொள்ளலாம்.

எளிமையாக,  அதே சமயம் சொல்ல வந்த எல்லா தகவலையும் சரியாக சொன்னதில் இந்த ஆப் வெற்றி பெற்றுள்ளது. சரியாக அப்டேட் செய்து வந்தால் இளைஞர்களை நிச்சயம் கவரும்.
 அ.தி.மு.க

அம்மாவின் பெயரில் ஆப் இல்லை. கட்சிக்கு என்றுதான் இருக்கிறது. ப்ளே ஸ்டோரில் அ.தி.மு.க ஆப் என இருந்தாலும், வேறு எங்கும் இது அதிகாரபூர்வமானது என குறிப்பிடப்படவில்லை. தமிழ், ஆங்கிலம் என மொழியை தேர்வு செய்யும் வசதி உள்ள ஒரே ஆப் என்பதுதான் இதன் முக்கிய சிறப்பு. மற்றபடி, எந்த சுவாரஸ்யமும் இல்லாத தகவல் கிடங்கு. அன்றாட அப்டேட், தேவைப்படும் விஷயங்கள் எதுவும் இல்லை. ஆன்லைன் உறுப்பினர் வசதி இருக்கிறது. ஆனால், அதை க்ளிக்கினால் அ.தி.மு.க.வின் இணையதளத்திற்கு நம்மை இழுத்து செல்கிறது. 'எங்கக்கிட்டயும் சீப் இருக்குப்பா' என்பதை தாண்டி செல்ஃப் எடுக்காத ஆப்.
கேப்டன்

ஆப் பெயரே 'கேப்டன் விஜய்காந்த்' தான். இவர்களும் மொபைல் நம்பர் தந்தால்தான் அட்மிஷன் என்கிறார்கள். ஆனால், அதே டெக்னிக்கல் மிஸ்டேக். லே-அவுட் விஷயத்தில் மற்றவர்களை விட கேப்டன் டீம் ரசனையானவர்கள். திரையின் நடுவில் கை எடுத்து கும்பிடும் கேப்டன் படம். அந்த பகுதியில்,  கேப்டனிடம் நாம் சொல்ல விரும்பும் விஷயத்தை தட்டிவிட்டால் அவர் பார்வைக்கு போய்விடும் என்கிறார்கள். 'DMDK timeline' என நெட்டிசனுக்கு பிடித்த வார்த்தையில் தே.மு.தி.க.வின் வளர்ச்சிப்பாதையை விளக்குகிறார்கள்.
சிரமம் இல்லாமல் 10 ஆண்டு வரலாற்றை படிக்க முடிகிறது. கேப்டனின் நிகழ்ச்சிகள், படங்கள், வீடியோக்கள் என ஃபுல் எண்டெர்டெயின்மெண்ட்தான். 'Biography' பகுதியில் 1980-களில் வெளியான  கேப்டனின் அழகு படங்கள். பார்ட்டி அஜெண்டா என தேர்தல் அறிக்கைகளை தந்திருக்கிறார்கள். மற்றபடி எதிர்கால செயல்பாடுகள் பற்றி எதுவும் இல்லை. கேப்டன் என்பதை தவிர வேறு விஷயமே இல்லை என்பது குறை. அண்ணியார் படமும் இல்லை.

வைகோ 

ஸ்டாலின்  - ஸ்டைலிஷ், அன்புமணி - கன்டென்ட், கேப்டன் - என்டர்டெயின்மென்ட் என சுற்றி வந்தால் வைகோ ஆப் கண்ணீருடன் வரவேற்கிறது. அவரது சிறைவாழ்க்கை வரலாற்றை தேதி வாரியாக பட்டியிலிட்டிருக்கிறார்கள். அவர் என்ன படித்தார், என்ன எழுதினார் என 'தன் வரலாறு கூறுதல்' பக்கமாக இருக்கிறது வைகோ ஆப். 'சமீபத்திய செய்திகள்' பகுதி மட்டும் அப்டேட் செய்யப்படுகிறது. மற்றபடி புகைப்படங்களோ, வீடியோக்களோ இல்லாமல் காலியான மைதானமாக காட்சி அளிக்கிறது வைகோ ஆப்.

 
அதுக்கும் மேல...

சிலரின் ஆப் நன்றாக இருந்தாலும்,  இன்னமும் பல விஷயங்களை சேர்க்க முடியும். 

1) கழக பாடல்களின் ரிங்டோன்களை வழங்கலாம். 

2) கட்சிக் கொடியோடு கூடிய டீ-ஷர்ட் மாதிரியான உடைகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் கொடுக்கலாம்.

3) மொபைல் வால்பேப்பராக தலைவர்களின் படங்களை தரலாம்.

4) தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ரேடியோ போல தொண்டர்களுடன் பேசலாம். அவர்களை உற்சாகப்படுத்த அது உதவும்.


No comments:

Post a Comment