சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Oct 2015

பாம்புகள் நம்ம ஃப்ரெண்ட்ஸ்

''வீட்டுக்குள்ளே பாம்பு நுழைஞ்சிடுச்சா... கூப்பிடுங்க தமிழ்ச் சகோதரிகளை' என்ற குரல், கோயம்புத்தூர் ஏரியாவில் பிரபலம். படையே நடுங்கும் பாம்புகளுக்கு, தோழிகளாக இருக்கிறார்கள் தமிழ்ஈழம் மற்றும் ஓவியா.
 ''நான், கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கச்சி ஓவியா, 5-ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த நான்கு ஆண்டுகளாக, பாம்புகளைப் பாதுகாக்கும் அமைப்புடன் இணைந்து, பாம்புகள் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்துறோம். பொம்மனாம்பாளையத்தில், ஆஷ்ரயா சாரிட்டபிள் சொசைட்டியின் 'அன்பு இல்லம்’ இருக்கு. அங்கே, ஒரு பாம்பு புகுந்துடுச்சாம். வாங்களேன், பாம்பைப் பிடிச்சுட்டு, அங்கேயே பேசலாம்' என  அழைக்கிறார் தமிழ்ஈழம்.
கொஞ்சம் உதறல், நிறைய ஆவலோடு சென்றோம். அன்பு இல்லத்தில் நுழைந்த சில நிமிடங்களில்,  கைகளில் நெளியும் ஒரு சாரைப் பாம்புடன் வந்தார்கள்.
'எங்கள் அப்பா சாந்தகுமார், 'தோழர் அமைப்பு’ என்ற அமைப்பை நிறுவி, அனாதையாக இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளை ஏற்று நடத்துகிறார். 'நீங்கள் எப்பவும் தைரியமாகவும் பொதுநலத்துடனும் இருக்க வேண்டும்’ என்பார். அவர்தான் எங்களுக்குத் தூண்டுகோல். ஆரம்பத்தில், எங்களுக்கும் பாம்புகளைப் பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஆனால், பாம்புகளைப் பற்றி தெரிந்துகொண்டதும்  பயம் போய்விட்டது. வீரியம் குறைந்த பாம்புகளை நாங்களே பிடிச்சிருவோம். பெரிய பாம்புகளை எங்க பயிற்சியாளர், ரத்தீஷ் அண்ணா பிடிப்பார். பிடிச்சதும், அந்தப் பகுதி மக்களிடம் பாம்புகளைப் பற்றி பேசிப் புரியவைப்போம். பிறகு, அவற்றை காட்டுப் பகுதியில் விட்டுவிடுவோம். பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்துவோம்' என்கிறார் தமிழ்ஈழம்.
அடுத்த சில நிமிடங்களில், அன்பு இல்லக் குழந்தைகள் அனைவரும் அங்கே கூடினார்கள். பாம்பைக் கண்டதும் எல்லோர் கண்களிலும் பயம்.
''யாரும் பயப்படாதீங்க. பாம்புகளைப் பற்றி நாங்க சொல்ற விஷயத்தைக் கேட்ட பிறகு, உங்க பயம் 'புஸ்’னு போயிடும்' எனச் சிரித்தார் ஓவியா.
''மண்புழுவைப் போலவே பாம்பும் விவசாயிகளின் தோழன். பயிர்களை நாசமாக்கும் எலிகளைச் சாப்பிட்டு, அவற்றின் இனப்பெருக்கத்தைக் குறைக்குது. பாம்பின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகப் பயன்படும். இதய நோய், புற்றுநோய்களுக்கு பாம்பின் விஷத்திலிருந்து  மருந்து தயாரிக்கப்படுகிறது' என்றார் ரத்தீஷ்.
'எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் இருக்கா?' எனக் கேட்டாள், சரண்யா என்ற சிறுமி.
''இந்தியாவில், 270 வகையான பாம்புகள் இருக்கு. தமிழகத்தில், நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், ராஜநாகம், குழி விரியன், பவளப் பாம்பு என ஏழு பாம்புகளே கொடிய விஷம் உள்ளவை. சாரைப் பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, மலைப்பாம்பு என 80 சதவிகிதப் பாம்புகள் விஷம் அற்றவை. பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க' என்றார் தமிழ்ஈழம்.
''பாம்பு, பால் குடிக்கும். முட்டைனா அதுக்கு ரொம்பப் பிடிக்கும். மனிதர்களைத் தேடிவந்து பழிவாங்கும்'' எனக் குரல்கள் எழுந்தன.
''சினிமாவில்தான் கிண்ணத்தில் வெச்ச பாலை, பாம்பு குடிக்கிற மாதிரி காட்டுவாங்க. நிஜத்தில், அப்படி இல்லை. தண்ணீர் கிடைக்காத அரிதான நேரத்தில்தான், பாலைக் குடிக்கும். குடிச்ச கொஞ்ச நேரத்திலேயே, கக்கிவிடும். முட்டையை முழுசாக விழுங்கும். கருவைக் குடிச்சுட்டு, ஓட்டை வெளியே தள்ளிடும். பாம்புக்கு 12.5  நிமிடம் மட்டுமே ஞாபகத்திறன் இருக்கும். அப்புறம் எப்படி  பழிவாங்க முடியும்?'என்றாள் ஓவியா.
''பச்சைப் பாம்புகள் கண்ணைக் கொத்தும் என்பது பொய். மாணிக்கக் கல்லை கக்கும் பாம்புகளும் கிடையாது. மண்ணுளிப் பாம்புக்கு இரண்டு தலைகள், ராசியானது எனச் சொல்வதும் பொய். இவை, விவசாயத்துக்கு உதவி செய்கின்றன. மண்ணைச் சுழற்சிசெய்து, மண்ணில் உள்ள சத்துக்களை சீராகப் பரவச்செய்கின்றன. 1,000 மண்புழுக்கள் செய்யும் வேலையை, ஒரு மண்ணுளிப் பாம்பு செய்துவிடும்' என்றார் ரத்தீஷ்.
''பாம்புகளின் விஷம், அவை உண்ணும் உணவை செரிக்க உதவுது. அப்படி இருக்கிறப்போ, தேவையில்லாமல் மனிதனைக் கடிச்சு, விஷத்தை வீணாக்காது. மற்ற வனவிலங்குகள் மாதிரி  பாம்புகளும் உணவைத் தேடி, வழி தெரியாமல் வந்துவிடும். அதைப் பார்த்ததும் அடிக்கிறோம். தம்மைக் காத்துக்கொள்ளவே, கடிக்க வருது' என்றார் தமிழ்ஈழம்.
''ஒருவேளை பாம்பு கடிச்சுட்டா என்ன செய்யணும்?'' எனக் கேட்டாள் பிரியா.
''விஷப் பாம்பு கடிச்சா, அந்த இடம் வீங்கிவிடும். அதுதான் அறிகுறி. பாம்பு கடிச்சதும் பயப்படுவதால், ரத்த ஓட்டம் அதிகமாகி, விஷம் உடல் முழுக்கப் பரவும். பயப்படாமல், அதிக அளவு தண்ணீரைக் குடிக்கணும். விஷம், சிறுநீர் வழியாகவும் வெளியேறும். பாம்பு கடிக்கு முதலுதவியாக, கடித்த இடத்தில் கயிற்றால் இறுக்கிக் கட்டுவது, கத்தியால் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது, வாயால் உறிஞ்சுவது எல்லாம் தவறான செயல். கயிற்றை இறுக்கிக் கட்டுவதால், கட்டை அவிழ்க்கும்போது, அதிக அழுத்தம் காரணமாக, உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தம் பரவும். இதயம் பாதித்து, உயிரிழப்பு ஏற்படும். கத்தியால் கிழிக்கும்போது, நரம்புகள் பாதிக்கும். ஊசியின் முனையைவிட, பாம்பின் பற்கள் நுண்ணியவை. எனவே, விஷமும் மிகவும் நுண்ணிய முறையில் உடலில் பரவிவிடும். அவற்றை வாயால் உறிஞ்சித் துப்பிவிட முடியாது.
அப்புறம் என்னதான் செய்வது என்றால்? முதலுதவியாக, கடிபட்ட இடத்தை நன்றாகக் கழுவிவிட வேண்டும். பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி, நடுநிலையான இறுக்கத்தில் துணியால் கட்டணும். அதுக்கு மேலே குச்சிகளை வெச்சுக் கட்டணும். உடனடியாக மருத்துவமனைக்குப் போகணும். அப்படிப் போகும்போது, 5 நிமிடத்துக்கு ஒருமுறை கட்டைத் தளர்த்திக் கட்டணும்' என்றாள் தமிழ்ஈழம்.
பாம்புகளைப் பற்றி மேலும் பல தகவல்களைச் சொல்லி முடித்ததும், எல்லோர் முகத்திலும் ஒரு தெளிவு. ''நாங்க பாம்பைத் தொட்டுப் பார்க்கலாமா?' எனக் கேட்டார்கள்.
'தாராளமாகத் தொடலாம். ஆனா, நாங்க உங்களுக்கு இவ்வளவும் சொன்னது, பாம்பைப் பற்றி தேவை இல்லாமல் பயப்படக் கூடாது, மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கக் கூடாது என்பதற்காகத்தான். நாங்க, பாம்புகளைப் பற்றி பயிற்சி மூலம் தெரிஞ்சுக்கிட்டவங்க. நீங்க அப்படி இல்லை. தனியா இருக்கிறப்ப, எங்காவது பாம்பைப் பார்த்துட்டு பிடிக்கப் போயிடக் கூடாது. பெரியவங்ககிட்டேதான் சொல்லணும். புரிஞ்சதா?' என்றார் ரத்தீஷ்.
''ஓ... நல்லாப் புரிஞ்சது' என்ற சுட்டிகள், பாம்பைத் தொட்டுப் பார்த்து, உற்சாகக் கூச்சலிட்டார்கள்.
 தமிழ்ஈழம் மற்றும் ஓவியாவின் பயிற்சியாளரும், பாம்புகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ரத்தீஷ் எங்கள் அமைப்பில் 30 பேர் இருக்கிறோம். அனைவரும் வெவ்வேறு தொழில் செய்தாலும், பாம்புகளைக் காப்பதுதான் முக்கிய நோக்கம். கடந்த 15 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பாதுகாத்தும், விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறோம். இதற்காக, யாரிடமும் பண உதவியைப் பெறுவது இல்லை' என்றார்.


No comments:

Post a Comment