சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் !

ணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.

60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

மதுரையை அடுத்த சேடப்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். 

தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பயிற்சி பெற்றார். பின் அவரது தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தரப்பட்டது. தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சில வருடங்களில் அங்கிருந்து விலகி, நாடக உலகில் அப்போது புதுமைகளை புகுத்திவந்த பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.

சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு, நாயகன் சிவாஜியின் தம்பி வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் வெளிப்பட்ட இவரின் நடிப்பு,  சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். எஸ்.எஸ். ஆர்.
'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி',  'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.

பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பலரும் விரும்புவர். ஆனால் பிரபலமான கதாநாயகனான பின்பும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கதாநாயகனாக தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர்.  வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன். 

அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொற்பமே. இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டவரான அவர், ஈரோட்டில் 'சந்திரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்க, அது இன்னமும் தீவிரமானது. பின்னாளில் திமுகவில் இணைந்தார்.
அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று இறுதிவரை அவரை கொண்டாடி மகிழ்ந்தவர். திமுக முதன்முறை போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. வெறுமனே உறுப்பினராக இல்லாமல், கட்சி மேடைகளில் அண்ணா புகழ்பாடி கட்சியை வளர்த்த அவர், திமுவிற்காக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்திருக்கிறார். 

தன் இல்லத்தில் எந்த நிகழ்வானாலும் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். 

உச்சகட்டமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு ஆதரவாக பகுத்தறிவு கொள்கையில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக புராண, இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார். இதனாலேயே தமிழ்த்திரையுலகின் லட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றார்.
திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக திகழ்ந்த ராஜேந்திரன், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகர் என்ற புகழுக்குரியவர். 1962- ம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த  பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில்  குழந்தை பிறந்த கையோடு, இருவரும் மனமொத்து பிரிந்தனர். 

திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி, அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. அண்ணாவின் 'ஓர் இரவு', 'சந்திரமோகன்', மு.கருணாநிதி எழுதிய 'அம்மையப்பன்' ஆகிய நாடகங்களை நடத்தினார். திரையுலகில் அவரால் பலர் ஏற்றம் பெற்றனர். அவர்களில் சமீபத்தில் மறைந்த மனோரமா மற்றும் நடிகர் முத்துராமன் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழகத்தில் அறிமுகமாகி, பின்னாளில் கேரளாவில் பிரமலமடைந்த ஷீலா இவரது அறிமுகமே. அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 -ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் போனது.  தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல், வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். 

முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ஆரை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவாஜி, “சம்பிரதாயமாத்தான் உங்களை வாழ்த்தறேன். பதவி, அதிகாரம்னு சினிமாவிலிருந்து ஒதுங்கிடாதீங்க. அதெல்லாம் வயசான பின்னாடி பார்த்துக்கலாம். திரும்பவும் நடிக்க வந்திடணும்” என்றார் வாஞ்சையாக. தொழில்முறை போட்டியாளரிடமும் அவர் பேணிய ஆரோக்கியமான நட்புக்கு இது சான்று.

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'முதலாளி'  எஸ்.எஸ்.ஆருக்கு திருப்புமுனை கொடுத்த திரைப்படம். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'மறக்க முடியுமா' திரைப்படத்தில் தன் சொந்த சகோதரியையே யார் எனத் தெரியாமல் பெண்டாள முயற்சிக்க,  அப்போது அவள் தன் கழுத்தை அறுத்துக்கொள்வாள். அப்போது எஸ்.எஸ்.ஆர் வெளிப்படுத்தும் உணர்ச்சிவயப்பட்ட நடிப்பை வேறு எந்த நடிகரிடத்தும் எதிர்பார்க்க முடியாதது. வெளிப்படங்களில் வாய்ப்பு குறைந்தபோது, தன் சொந்தப்பெயரில் படம் தயாரித்து நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.
திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களில் நடித்தார். 

தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குணம். திரையுலகில் பந்தா இல்லாமல், சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.
திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களைபோல  எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று உண்டு. அது, அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்! 


No comments:

Post a Comment