சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

ரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: பரபரப்பு கிளப்பும் கருணாநிதி!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் மேலும் பல திரையரங்குகளை வாங்கிட உள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன.

சென்னை வேளச்சேரியில் “ஃபீனிக்ஸ் மால்” என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வணிகவளாகம் ஜனவரி 2013 ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் “லுக்ஸ்” சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன.
வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டன. சென்னை மாநகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரை “ஜாஸ்” சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது.
மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.

முன்பு தமிழகமெங்கும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்....
தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா? இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment