சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Oct 2015

பிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப்பு முத்து' பீலே!

' கருப்பு முத்து 'என்ற செல்லப்பெயரும்  எடிசன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயரும் கொண்ட பீலே, 1940-ம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலில் உள்ள ட்ரஸ் கராகஸ் என்ற சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தை டோன்டின்ஹோ ஒரு தொழில் முறை கால்பந்தாட்டக்காரர். இதனால்  பீலேவின் ரத்தத்திலேயே கால்பந்தும் கலந்திருந்தது.
கடந்த 1934-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணிக்காக விளையாடிய பிரிட்டோவின் கண்களில் இளம் வயது பீலே தென்பட, அவரை பிரேசில் நாட்டின் தொழில் நகரமான சான்டோசுக்கு அழைத்து வந்தார். சான்டோஸ் எப்.சி என்ற  புகழ் பெற்ற கால்பந்து அணி, இங்குதான் இயங்கி வந்தது.

அந்த அணியின் இயக்குனர்களை சந்தித்த பிரிட்டோ, உங்களுக்காக ஒரு கோல் மெஷினை கண்டுப்பிடித்து  கொண்டு வந்திருக்கிறேன் என்றார். பீலேவை பார்த்த அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். இந்த சிறுவனா? என்று கேள்வி எழுப்பினர். எனினும் அவர்களுக்கு பீலேவை பிடித்து போனது.  இள வயது பீலே, சான்டோசுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
1956 செப்டம்பர் 7- ம்தேதி கொரிந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சான்டோசுக்காக முதன் முதலாக பீலே களம் இறங்கினார். முதல் ஆட்டத்திலேயே  ஒரு கோலும் அடித்து அசத்தி விட்டார்.  சான்டோசில் பீலே இணைந்து பத்து மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் தேசிய அணியில் இருந்து அழைப்பு வந்து விட்டது. எடிசன் அரான்டஸ் டி நாசிமண்டே என்பவர்  பீலே   என்ற  கால்பந்து ஜாம்பவனாக உருவெடுக்க ஆரம்பித்தது இங்கேதான்.


பீலேவின் உலகக் கோப்பை பயணம்

1958-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான பிரேசில் அணியில் பீலே இடம் பெற்றிருந்தார். ஆனால் முதல் இரு போட்டிகளில் அவர் களம் இறக்கப்படவில்லை.சோவியத் யூனியன் அணிக்கு எதிரான 3வது ஆட்டத்தில்தான் களம் கண்டார். இவருடன் இணைந்து களம் இறங்கிய மற்றொரு  ஜாம்பாவன் 'மறக்கப்பட்ட மாவீரன்' என்ற அடை மொழி கொண்ட கரிஞ்சா. இந்த போட்டியில் பீலேவும் கரிஞ்சாவும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனாலும் இருவரும் களத்தில் காட்டிய ஆட்டமும் ஆவேசமும் பயிற்சியாளர்களுக்கு திருப்தி அளித்தது.

இளம் வயதில் உலகக் கோப்பையில் கோல்

அடுத்ததாக வேல்ஸ் அணிக்கு எதிரான கால் இறுதி போட்டியில், பீலே உலக கோப்பை போட்டியில் தனது  முதல் கோல் கணக்கைத் தொடங்கினார்.இந்த கோலினை அடிக்கும் போது பீலேவுக்கு வயது 17 ஆண்டுகள் 235 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை வரலாற்றில் மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற பெருமையும் அப்போது பீலேவுக்கு இந்த கோலால் கிடைத்தது. அரை இறுதி ஆட்டத்தில் பிரான்சுக்கு எதிராக பீலே 'ஹாட்ரிக் கோல்' அடிக்க உலகமே உன்னிப்பாக கவனிக்க தொடங்கியது. இளம் வயதில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் பீலே சொந்தக்காரர் ஆனார். தொடர்ந்து பீலே என்ற மந்திர பெயர் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், பிரேசில் அணி ஸ்டாக்ஹோம் நகரில் சுவீடன் அணியை எதிர்கொண்டது.  சொந்த மண்ணில் விளையாடிய சுவீடனை 5-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் துவம்சம் செய்தது. இறுதிப் போட்டியிலும்  பீலே இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இத்தகைய இளம் வயதில் பீலேவின் அற்புதமான ஆட்டம் உலக கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் வியப்பை அளித்தது. இந்த தொடரில் மட்டும் பீலே 6 கோல்களை அடித்து டாப் ஸ்கோரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார்.
 
அசத்திய பீலேவின் நெருங்கிய நண்பர் கரிஞ்சா

தொடர்ந்து 1962-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோ அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். செக்கஸ்லோவாகியா அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் காயமடைய, மீதி உள்ள  போட்டிகளில் அவர் பங்கெடுக்கவில்லை. பீலேவின் நெருங்கிய நண்பரான கரிஞ்சா இந்த முறை விஸ்வரூம் எடுத்து விளையாடி, 2வது முறையாக பிரேசிலுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.1962-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஜுவான்டஸ், ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் போன்ற அணிகள் பீலேவை ஒப்பந்தம் செய்ய முயன்றன. ஆனால் பீலே வேறு நாட்டில் கால்பந்து விளையாடுவதை விரும்பாத பிரேசில் அரசு, பீலேவை தங்கள் நாட்டின் தேசிய சொத்தாக அறிவித்தது. 

3 முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர்

 
1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. இந்த தொடரில் பிரேசில் அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது. பின்னர் 1970-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். இந்த போட்டியிலும் அசத்திய பீலே, பிரேசில் அணிக்கு மூன்றாவது முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்தார். மூன்று முறை உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேவுக்கு கிடைத்தது. வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது. கடந்த 1971ம் ஆண்டு பீலே சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார். யூகோஸ்லோவாகியா அணிக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஆட்டம். பிரேசில் அணிக்காக 92 சர்வதேச போட்டிகளில் விளையாடி 77 கோல்களை பீலே அடித்துள்ளார். 

கால்பந்தில் இருந்து ஓய்வு 

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தொடர்ந்து சான்டோஸ் அணிக்காக பீலே விளையாடினார். பின்னர் 1975-ம் ஆண்டு சொந்த விருப்பத்தின் பேரில்,  அமெரிக்காவின் நியூயார்க் காஸ்மோஸ் அணியில் இணைந்தார். இந்த அணிக்காக 3 சீசன்கள் விளையாடிய பீலே, 1977ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கால்பந்தில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார்.
அன்றைய தினம் பீலே விளையாடிய இரு கிளப் அணிகளுக்கு இடையேயான ஒரு கண்காட்சி போட்டி நியூஜெர்சியில் நடந்தது. இந்த போட்டியில் முதல் பாதியில் காஸ்மோஸ் அணிக்காக விளையாடிய பீலே, பிற்பாதியில் சான்டோசுக்காக ஆடினார். போட்டி முடிந்ததும், நியூயார்க் காஸ்மோஸ் அணி பீலே அணிந்து விளையாடிய 10ம் எண் ஜெர்சிக்கு நிரந்தர விடை கொடுத்தது. இந்த போட்டியைக் காண பீலேவின் பெற்றோர்களும் நியூஜெர்சி வந்திருந்தனர். அந்த ஜெர்சியை வாங்கிய பீலே தனது பெற்றோர் கையில் கொடுத்து கண்ணீர் மல்க கால்பந்துக்கு விடை கொடுத்தார்.

பீலேவின் முதல் இந்திய வருகை 

இதே ஆண்டில்தான் பீலேவின் நியூயார்க் காஸ்மோஸ் அணி கொல்கத்தா வந்தது. ஏடன் கார்டன் மைதானத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து அணியான மோகன் பகான் அணிக்கும், நியூயார்க் காஸ்மோஸ் அணிக்கும் மோதல் நடைபெற்றது. இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பீலேவின் ஆட்டத்தை காண மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். 

ஆயிரம் கோல்கள் அடித்த பீலே
தனது கால்பந்து வாழ்க்கையில் பீலே ஆயிரம் கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். ரியோடி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில்  1969-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பீலே தனது ஆயிரமாவது கோலினை வாஸ்கோடாகாமா அணிக்கு எதிராக அடித்தார். உலக கால்பந்து வரலாற்றில் 1120 போட்டிகளில் விளையாடி, 1087 கோல்களை அடித்து பீலே சாதனை புரிந்துள்ளார்.அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளின் போது பீலே அடித்த கோல்களின் உண்மையான எண்ணிக்கை இதுதான். 1280 கோல்கள் என்பது தவறானது. 

தொடரும் ஜாம்பவானின் பயணம் 
பீலேவின் ஓய்வுக்கு பிறகு ரியோடி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா ஸ்டேடியத்தில் அவரது காலடித்தடம் பதிக்கப்பட்டு  நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. பீலே பெறாத விருதுகளும் கிடையாது.தற்போது 74  வயது நிரம்பிய பீலே பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறைக்கு  நிரந்தர கவுரவ அமைச்சராக உள்ளார். ஃபிபா தூதுவராக உலகின் எந்த நாட்டுக்கும் பீலே பயணம் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment