சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Oct 2015

'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் பேனரால் சர்ச்சை!

என்றும் அம்மாவின் ஆட்சி என அரசியல் பிரசாரம் செய்யும் வகையில், பேனர் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் திருப்பூர் மாவட்ட கலெக்டர்.

இந்தியாவின் அரசியல் சாசனப்படி எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல், நடுநிலையாகச் செயல்பட வேண்டியது கலெக்டரின் பொறுப்பு. ஆனால், இதை மீறி இப்படி பண்ணலாமா என திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜை கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அப்படி என்ன செய்தார் என கேட்கிறீர்களா? மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர் தான் இத்தனைக்கும் காரணம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனரில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடும் வகையில், 'அம்மாவின் ஆற்றல் மிக்கத் தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி', 'என்றும் அம்மாவின் ஆட்சி' என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தான் சர்ச்சைக்கு காரணம்.

இவர் என்ன மாவட்ட ஆட்சியரா? இல்லை அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளரா? என கலெக்டரை சரமாரியாக விமர்சிக்க துவங்கி விட்டன எதிர்கட்சிகள். இவரை சும்மா விடக்கூடாது. இவர் மேல குடியரசுத்தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கணும் என கொந்தளித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், "தமிழக அரசின் நான்காண்டு நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பாக ஒரு விளம்பரத் தட்டி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் பெயரைக் குறிப்பிட்டு, 'அவரது ஆற்றல் மிக்கத் தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி', 'என்றும் அம்மாவின் ஆட்சி' என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு சின்னம் பொறித்து, அரசு நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளில் இதுபோன்ற வாசகங்கள் இடம் பெறுவது தவறானது. அரசியல் சட்டப்படி தமக்குள்ள வரம்பையும், நெறிமுறையையும் மீறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அரசியல் பிரசாரம் செய்யும் விதத்தில் இந்த விளம்பர பலகையை வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, உடனடியாக அந்த விளம்பர பலகையை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். நெறிமுறை தவறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது இந்திய அரசுத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்றார்.


No comments:

Post a Comment