சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

தீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா?

ன்னாபின்னா என்று எகிறிக் கிடக்கிறது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலைகள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது 52 ரூபாயாக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 ரூபாயாக இருந்தது. அது இப்போது 210 ரூபாயைத் தொட்டுவிட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், துவரம் பருப்பு விலை குறையுமா என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். தீபாவளிக்குள் பருப்பு விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எதார்த்த நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது என்கிறார்கள் வியாபாரிகள்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கே.மோகனிடம் கேட்டோம்.     
“இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 2.10 கோடி டன் துவரம் பருப்பு தேவை. ஆனால், இந்த ஆண்டு உற்பத்தியாகி இருக்கும் துவரம் பரப்பு 1.70 கோடி டன் மட்டுமே. மும்பையில் சில இடைத்தரகர்களின் பதுக்கல், தொடர் வணிக பேரங்காடிகளை நடத்திவரும் பெரும் முதலாளிகள், விவசாயிகளுடன் ஏகபோகமாக முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டு கொள்முதல் செய்ததாலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலைகள் உயர்ந்துள்ளன.
உளுந்து விலை உயர்வால் அப்பளத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி போன்றவற்றை கண்காணிக்க விவசாயிகள், வணிகர்கள், அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். கோமா நிலையில் இருக்கும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும் உயிர் கொடுத்து செயல்பட வைத்தால், நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்கள் சென்றடையும்’’ என்றார்.
தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், ‘‘முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளைப்போல துவரம் பருப்பும் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் பொருளாகிவிட்டது. துவரம் பருப்பின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சாலையோரக் கடைகளில் வடை போடுவதையே நிறுத்திவிட்டார்கள். நவம்பர் 1-ம் தேதியில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை என பெருநகரங்களில் 91 கூட்டுறவுக் கடைகள் மூலம் துவரம் பருப்பு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அப்படியானால், மற்ற ஊர்களில் இருப்பவர்கள் துவரம் பருப்பு பயன்படுத்த மாட்டார்களா?
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் அளவில் 40 முதல் 50 விழுக்காடு மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஒதுக்கப்படும் பருப்புகளும் சில நூறு கார்டுகளுக்குக்கூட போதவில்லை. இந்தத் திட்டம் தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அதை ஜெயலலிதா அரசு கவனிக்கவே இல்லை. நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் தாராளமாக விநியோகிக்கப்பட்டால்தான் வெளிச்சந்தையில் பருப்புக்கான தேவை குறைந்து விலையும் குறையும்’’ என்றார்.
தமிழ்நாடு ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு, ‘‘பருப்பு இல்லாமல் ஹோட்டலில் எந்தப் பொருட்களையும் தயாரிக்க முடியாது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு  ஆகியவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்கின்றன. தற்போது, பதுக்கப்பட்டுள்ள பருப்புகளை அரசு பறிமுதல் செய்துவருகிறது. அதேநேரத்தில் பருப்பை இறக்குமதியும் செய்துள்ளனர். இதை முன்கூட்டியே செய்திருந்தால் விலை உயர்வு ஏற்பட்டிருக்காது. மூன்று மடங்கு விலை உயர்ந்து இருந்தாலும் அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இருப்பதால் ஹோட்டல் பண்டங்களின் விலையை குறைந்தபட்சம் 10 சதவிகிதம் அளவுக்குள் உயர்த்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து உள்ளோம். இருந்தாலும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது’’ என்றார்.
தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சொரூபன், ‘‘கடந்த அக்டோபர் 1-ம் தேதி 100 கிலோ துவரம் பருப்பு ரூ.13,500. இன்றைய விலை ரூ.20 ஆயிரம். பருப்பு உற்பத்தி வீழ்ச்சியை ஆரம்பத்திலேயே அரசாங்கம் கண்காணிக்கத் தவறியதுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். ஆன்லைன் வர்த்தகம் என்ற சூதாட்டமும் இந்தப் பருப்பு வியாபாரத்தில் புகுந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்துக்கு வங்கிக்கடன் தரக் கூடாது. பருப்பு அறுவடை முடிந்து ஜனவரி மாதம்தான் புதுப் பருப்புகள் சந்தைக்கு வரும். அதுவரை விலை ஏறுமுகத்திலேயே இருக்கும்’’ என்றார்.
அப்படி என்றால், தீபாவளிக்குள் பருப்பு விலை குறையாதுபோல... ம்ம்ம்...


No comments:

Post a Comment