சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

ஷேவாக் என்னும் பெரும் கனவு!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் யூ-டியூப்பில் அந்த வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது. ''கமல்ஹாசன் மாதிரி ஒரு ஆள் இருக்கிற தமிழ்நாட்டுல இவன் எப்படி ஒரு நடிகன்னு பேர் வாங்கினான்னு அமிதாப் பச்சன்ல இருந்து எல்லோருக்குமே ஒரு சந்தேகம், ஒரு கேள்வி இருக்கும். கண்ணுங்களா, ரொம்ப சிம்பிள். அவர் தொட்டதை நான் தொடலை, அவர் போன வழியில நான் போகலை. ரூட்டை கொஞ்சம் மாத்திக்கிட்டேன். புத்தியைக் கொஞ்சம் யூஸ் பண்ணேன். அவ்ளோதான்" என்று வெற்றிக்கான ரகசியத்தை சிம்பிளாக சொன்னார் ரஜினி. ஆமாம், ரஜினியின் ஃபார்முலாவில் வந்தவர்தான் வீரேந்திர ஷேவாக். இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் ஷேவாக்.
கங்குலி- சச்சின் ஓப்பன் பார்ட்னர்ஷிப் என்பது மாறி ஷேவாக்- சச்சின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கியபோது ''யார் இவன் சச்சினைப் போலவே விளையாடுறான்'' என ஆரம்பித்து, ''யார் இவன் சச்சினையே தூக்கி சாப்புடுறானே" என்று பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும் தெறிக்க விட்டவர் ஷேவாக். சச்சின் 90 ரன்களைத் தொட்டதும் சென்சுரி அடிப்பதற்காக படபடப்பு ஆட்டம் ஆடும்போது அனாயசமாக சிக்சர்களைத் தூக்கிவிட்டு சதம், இரட்டை சதம், முச்சதம் என எதற்கும் எந்த டென்ஷனும் காட்டாமல் மிரட்டியவர். பூஜ்ஜியத்தில் இருந்தாலும் சரி, 99 ரன்களில் இருந்தாலும், 295 ரன்களில் இருந்தாலும் சரி அவரது பேட், பந்தை பதம் பார்க்குமே தவிர பணியாது.

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஷேவாக். ஆரம்பமே அபசகுனம்தான். 1 ரன்னில் அவுட் ஆனார். பெளலிங் இன்னும் சொதப்பல். 3 ஓவர்கள் வீசி, 35 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகள், அதாவது 20 மாதங்களுக்கு மீண்டும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே ஷேவாக்குக்கு கிடைக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இல்லை. நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி இலங்கை செல்கிறது. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரை களமிறக்குவது என குழப்பம். யுவராஜ் சிங், அபய் குரசியா என யார் யாரையோ எல்லாம் ஓப்பனிங் பேட்ஸ்ஸ்மேனாக இறக்கிவிட்டு கடைசியாக, ஷேவாக்குக்கு வாய்ப்பை வழங்குகிறார் கங்குலி. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 260 ரன்கள் குவிக்கிறது. சுழற்பந்துக்கு சாதகமான, மிகவும் ஸ்லோவான பிட்சில் இந்த ஸ்கோர் என்பது 350 ரன்களுக்கு நிகரானது. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்குகிறார் ஷேவாக். 69 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அந்த ஆட்டத்தில் மேட்ச்வின்னராக உயர்ந்து நின்றார் ஷேவாக். அதன்பிறகு இந்தியாவின் நிரந்தர ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷேவாக்தான்.
கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள். ஆனால், கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களைத் தாண்டி எல்லோரும் ரசிக்கும் விளையாட்டாக மாற்றியவர்கள் ஒரு சிலரே. அதில் மிக முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். கிரிக்கெட் டிப்ளமஸி என்று உண்டு. முதல் நாள் கோட் போட்டு டாஸ் போட்டுவிட்டு, வெள்ளை உடையில் ஐந்து நாட்கள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் ஆடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், 'டெஸ்ட் போட்டியிலும் இவ்வளவு ஆக்ரோஷம் காட்ட முடியும், இப்படி பவுண்டரிகள் அடிக்க முடியும், இப்படி எல்லாம் ஆடி ஒருவரால் 300 ரன்கள் குவிக்க முடியும்' என்று ஆச்சரிப்படுத்தியவர் ஷேவாக். ஆமாம். அவருக்கு கிரிக்கெட் டிப்ளமஸி தெரியாது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரண்டு முச்சதங்களும், மூன்று இரட்டை சதங்களும் விளாசியிருக்கும் அன் டிப்ளோமேட்டிக் பேட்ஸ்மேன் ஷேவாக்.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அஜெந்தா மென்டிஸ் என்னும் புதிய சுழற்பந்து வீச்சாளரைப் பார்த்து இந்திய வீரர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மென்டிஸை துவம்சம் செய்தார் ஷேவாக். ''சுழற்பந்து வீச்சாளர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. ஸ்பின்னர் என்பவர் பேட்ஸ்மேனால்தான் உருவாகிறார். பேட்ஸ்மேன் ஒரு பந்தை சுழல்வதற்கு முன்பே அடித்துவிட்டால் அப்புறம் ஏது சுழற்பந்து. பந்து சுழல்வதற்கு முன்பாகவே தூக்கி கிரவுண்டுக்கு வெளியே அடித்தால் ஒருவர் எனக்கு வாழ்நாள் முழுக்க ஸ்பின்னே போடமாட்டார்" என்று சொன்னார் ஷேவாக்.

''எனக்கு டெக்னிக்ஸ் மீது நம்பிக்கை கிடையாது. நான் பர்ஃபாமென்ஸின் மீது நம்பிக்கை கொண்டவன். நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்போதும், டெக்னிக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களால் சமாளிக்க முடியும். என் வாழ்க்கையில் நடந்தது அதுதான். பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின்னர்தான் நான் சீரியஸாக கிரிக்கெட் விளையாட பயிற்சியாளரிடம் சேர்ந்தேன். டெக்னிக்ஸை கற்றுக்கொள்ள எனக்குப் பொறுமையில்லை. பந்தை எப்படி போட்டாலும் வெள்ளைக் கயிற்றைத் தாண்டி அடிக்கவேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தபோதும் என் ஸ்டைலை நான் மாற்றிக்கொள்ளவில்லை. சில தொடர்களில் நான் சரியாக ஆடாதபோது டெக்னிக்ஸ் வேண்டும் என்று சொல்வார்கள். அடுத்தப்போட்டியிலேயே சதம் அடித்துவிட்டால் ஷேவாக்கின் ஸ்டைல் இதுதான் என்பார்கள். இங்கே எதற்குமே இதுதான் ஃபார்முலா என்று இல்லை. ஃபார்முலாக்களை நம்பினால் சில நேரங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நம்பினால் எப்போதுமே வெற்றிதான்" என்பது ஷேவாக்கின் சக்ஸஸ் சீக்ரெட்.
மிகச்சிறந்த என்டர்டெய்னர், அசைக்கமுடியாத மேட்ச் வின்னர் ஷேவாக். அப்பர் கட் ஷாட்டை மிகச்சரியாக விளையாடியவர். ''பிட்சில் ஒரு இடத்தில் ஷேவாக் நிலையாக நின்று ஆடவே மாட்டார். கால்கள் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அவரது பின்காலில் ஒரு பெரிய கோதுமை மூட்டையைக் கட்டி விட்டுவிட்டு முன் காலைப் பயன்படுத்தி ஆடவைத்தோம். அதன்பிறகு ஃப்ரன்ட் ஃபூட்  மட்டும் அல்ல, பேக் ஃபூட், அப்பர் கட், அக்ராஸ் தி லைன் என பந்துகளை நொறுக்கித்தள்ள ஆரம்பித்துவிட்டார் ஷேவாக்" என்கிறார் ஷேவாக்கின் பயிற்சியாளர் அமர்நாத் ஷர்மா.

கிரிக்கெட் மைதானத்தில் ஷேவாக் அடித்த முச்சதங்கள், இரட்டை சதங்களைத்தாண்டி அவரது முக்கியமான இன்னிங்ஸ்கள் பல இருக்கின்றன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, அதுவும் தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபான்டின் மைதானத்தில் 105 ரன்கள் விறுவிறுவென அடித்து டெஸ்ட் போட்டியில் தனக்கான இடத்தைப் பதிவு செய்தார் ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்தியர் ஷேவாக்தான்.

ஷேவாக் என்பவர் யார்? ஷேவாக் ஒரு கிரிக்கெட் ஜீனியஸ். அவரது ஆட்டத்தை அவரது ஸ்டைலில் இன்னொருவர் எந்த காலத்திலும் இனி ஆடவே முடியாது. ஷேவாக் என்பது பெரும்கனவு. அது கொஞ்சம் சீக்கிரமே முடிந்துபோனதில் வருத்தமே!

No comments:

Post a Comment