சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா !”

''பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இருக்கும் தொழில் சினிமா. ஆனால், அதன் வெற்றி சதவிகிதம் என்னவோ உலகெங்கும் 8 முதல் 10 சதவிகிதம்தான். மற்ற வியாபாரங்கள் போல இல்லாமல் சினிமாவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.அது ஏன்?' என்ற கேள்வியை முன் வைக்கிறார் யூகிசேது. கதாசிரியர், நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர்... எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். இப்போது, ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை முன்னரே கணிக்கும் மாடல் ஒன்றை எழுதி, அதன் மூலம் பிஹெச்.டி பட்டமும் பெற்றிருக்கிறார். 
'சென்னையில் ஒரு சீனுக்குக் கைதட்டல் கிடைச்சா, நெல்லையிலும் அது நடக்குது. கோவையில் ஒரு படம் முடியும் முன்னாடியே மக்கள் எழுந்து வெளியே போனா, தஞ்சாவூர்லயும் அதுதான் நடக்குது. அப்ப வெற்றிப் படங்களுக்கு ஒரு பேட்டர்ன் இருக்கு. அதைக் கண்டுபிடிக்கணும். பல நூறு படங்கள் பார்த்து, இதுக்கு நான் சில விஷயங்களை லிஸ்ட் போட்டேன். அந்த மாடல்படி பார்த்ததில் 95 சதவிகிதம் அதோட முடிவுகள் சரியா இருந்திருக்கு. அதைத்தான் முறையாக சப்மிட் பண்ணி மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் டாக்டரேட் வாங்கியிருக்கேன்' என்கிறார் யூகி சேது.
'' 'ஒரு சினிமாவின் வெற்றியைக் கடவுளாலும் நிர்ணயிக்க முடியாது’ என்பார்களே... அதற்கு ஒரு தீர்வு என்பது சாத்தியமா? என்னென்ன விஷயங்கள் ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவை?''
''நிர்ணயிக்க முடியும்னு சொல்லலை. ஆனா, ஒரு ஸ்க்ரிப்ட் ஓடுமா இல்லையா என்பதை நிச்சயமாகக் கணிக்க முடியும். ஒரு படத்தை உதாரணமாக வெச்சு, என் மாடலை விவரிக்கிறேன். 'குணா’ படத்தை எடுத்துப்போம். முதல் பாயின்ட், கதை என்ன வகை? நேராக சொல்லப்படுகிறதா, நான்-நேரேட்டிவ் வகையா, அல்லது என்டெர்டெய்ன்மென்ட் அதிகம் இருக்கும் கதையா? இதற்கு எவ்வளவு மார்க் போடலாம் என்பது. 'குணா’வைப் பொறுத்தவரை நல்ல கதை, நேரேட்டிவ் வகை. ஆனால், கிளைக் கதைகள் அதிகம். இதற்கு ஐந்துக்கு, நான்கு மார்க். அடுத்து கதை நாயகனின் பிரச்னை, பார்வையாளனால் அடையாளம் காணமுடிகிறதா? ஐடெண்டிஃபிகேஷன் என்பது மிக முக்கியம். இதில் அது கிடையாது.
150 படங்கள் நடித்த ஒரு நடிகனை அசிங்கமாகப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. எனவே, இதற்கு ஜீரோ மார்க். அடுத்து முடிவு. எஸ்டாபிளிஷ் ஆன நடிகர்கள் படத்தில், நெகட்டிவ் க்ளைமேக்ஸ் வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் தயங்குவார்கள். அதனால் இதற்கும்  ஜீரோ மார்க். இந்த மூன்று தலைப்புகளில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. அதை எல்லாம் வைத்துத்தான் மார்க். கடைசியாக வேறு ஏதாவது சிறப்பு அம்சங்கள் உண்டா? உதாரணமாக, 'அபூர்வ சகோதரர்’களில் குள்ளமாக நடித்தது, 'மைக்கேல், மதன, காம, ராஜன்’-ல் நான்கு வேடங்கள் என்பது போல. 'குணா’வைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை. எனவே, இதன் ஆவரேஜ் மார்க் 1.3 வருகிறது. இது ஹை ரிஸ்க் படம்!''
''அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட இதே கதை இருந்த 'காதல் கொண்டேன்’ ஓடியதே?''
''மிகச் சரி. அதில் நடிக்கும்போது தனுஷின் இமேஜ் என்ன? 'துள்ளுவதோ இளமை’யில் அவரது தோற்றம்தானே அதிகம் கிண்டலடிக்கப்பட்டது? அப்படி என்றால், அந்தக் கதைக்கு அவர் சரியான சாய்ஸ். அங்கே பார்வையாளனுக்கு ஐடெண்டிஃபிகேஷன் கிடைக்கிறது. முடிவில் தனுஷ் சாவதும் பார்வையாளனுக்குப் பிரச்னையாக இல்லை.  என் மாடல் வெறும் கதையை மட்டும் அலசுவது இல்லை. ஸ்க்ரிப்ட், கேஸ்ட்டிங், புரொமோஷன், வெளியாகும் நேரம் எனப் பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதன்படி 'குணா’ ஹை ரிஸ்க் படம், ஆனால், 'காதல் கொண்டேன்’ ரிஸ்க் இல்லாத படம்.
இது மட்டுமில்லாமல் ஒரு நல்ல படத்துக்கு காரணங்களும் விளைவுகளும் தேவை. 'ராஜா இறந்தார்... ராணியும் இறந்தார்’ என்பது கதை. 'ராஜா இறந்தார். அதனால் ராணியும் இறந்தார்...’ என்பது களம். ராஜா இறந்ததன் விளைவு... ராணியும் இறந்தார். ராணி இறக்கக் காரணம்... ராஜாவின் இறப்பு. காரணங்களும் அதனாலான விளைவுகளும் இல்லாத கதை நிச்சயம் ஜெயிக்காது.''
''உங்க மாடல் தமிழுக்கு மட்டுமா அல்லது மற்ற சினிமாக்களுக்கும் பொருந்துமா?''
''நான் வகைப்படுத்தி இருக்கும் காரணிகள் உலக சினிமாக்கள் அனைத்துக்குமே பொருந்தும். ஆனால், விடைகள் மாறும். அதாவது, பார்வையாளனால் அந்தப் பிரச்னையை அடையாளம் காண முடியுமா என்பது பொது. ஆனால், தமிழ் ரசிகனுக்குப் பொருந்தும் ஒரு களம், தெலுங்கு ரசிகனால் ஏற்க முடியாமல் போகலாம். அது மாறும்.''
''ஒரு ரசிகன் சினிமாவில் எதிர்பார்ப்பது என்னவென்று நினைக்கிறீர்கள்?''
''உலகத்திலேயே ஒரு புராடக்ட் குறித்து முழுசாகத் தெரியாமல் முழுக் காசையும் கொடுக்கிற ஒரு தொழில் சினிமா. அதுக்கு ரீஃபண்டும் கிடையாது. ஆக, ரசிகன் உள்ளே வரும்போதே 'என்னோட பங்கை நான் செஞ்சிட்டேன். இப்ப நீ என்னை திருப்திப்படுத்து’ என்ற மனநிலையில்தான் வருகிறான். டிரெயிலர், விளம்பரங்கள் மூலமா நாம என்ன சொன்னோமோ, அது படத்தில் இருக்க வேண்டும். சினிமா என்பதே ரசிகன் 'என்னை ஏமாற்று... நான் மகிழும் வகையில் என்னை ஏமாற்று’ என்பதுதான். அதை மட்டும்தான் ரசிகன் எதிர்பார்க்கிறான்.''

'குசேலன்’ எவ்வளவு மார்க்?
'குசேலன்’ படத்தை யூகி சேதுவின் மாடலை வைத்து ஆராய்ந்து பார்த்தோம். கதை, ஏற்கெனவே தெரிந்த புராணக்கதை. மேலும் அந்தச் சின்னக்களம் 3 மணி நேரத்துக்குப் போதாது. எனவே, முதல் பாயின்ட்டில் ஜீரோ மார்க்தான். அடுத்து, 'சினிமாவுக்குள் சினிமா’ என்ற விஷயத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வரலாறு. இது தமிழுக்கே உரிய பிரச்னை. இது நெகட்டிவ். முடிவை எதிர்நோக்க எந்தக் காரணமும் இல்லை. ரஜினி என்பதால் எதிர்பார்த்த முடிவுதான் நடக்கும் என ரசிகன் அறிவான். ரஜினியை இதற்கு கேஸ்டிங் செய்தது தவறு. இதுவும் நெகட்டிவ். ஆக, 'குசேலன்’ தமிழில் ரஜினி நடித்தால் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்கிறது இந்த மாடல்.

No comments:

Post a Comment