சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

தாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்

மும்பை மாஃபியாவின் வரலாறு அரபிக்கடல் அளவுக்கு ரத்தங்களால் சூழ்ந்து நிறைந்தது. குறிப்பிட்ட இடத்தில்தான் சண்டைகள் வரும் என்று யாரும் நினைக்க முடியாது. நீதிமன்றம், காவல் நிலையங்கள், ரயில் நிலையம், உணவு விடுதிகள், தேநீர் விடுதி என்று மும்பையின் மதிப்பு மிகுந்த இடங்கள் முதல் சாதாரண தெருக்கள் வரை, அதிகார போட்டியில் நடந்த சண்டைகளில் ரத்தங்கள் சிந்திய நீண்ட வரலாறு மும்பைக்கு உண்டு. இன்று வரை முடிவில்லாமல் தொடர்வது காலத்தின் அகோர கோலம்.

ஐந்து ஆண்டுகளில் ஒரு இடம், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு புதியதாக உருமாற்றிக் கொள்கிறது. ஆனால், ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் மும்பை மாநகரில் ரத்தம் ஓடுவது மட்டும் நிற்கவே இல்லை. தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் குடும்பத்துடன் குடியுரிமை பெற்று, ஐ.எஸ்.ஐ அமைப்பின் பாதுகாப்பில் இருந்து கொண்டு, துபாயை தலைமை இடமாகக் கொண்டு, உலகத்தின் பல்வேறு நாடுகளில் தனது மாஃபியா சாம்ராஜ்யத்தை கன கச்சிதமாக நடத்தி வந்தாலும், தாவூத்தின் கண்கள் எப்பொழுதும் அவனது சொந்த ஊரான மும்பையை பார்த்துக்கொண்டே இருக்கும். உலகத்தின் பல்வேறு முக்கியமான தலைவர்களையும், அதிகாரம் பொருந்திய முக்கிய புள்ளிகளையும் சந்திக்கும் தருணங்களில், அவர்களுடன் இயல்பாக பேசும் பொழுதும் தாவூத், மும்பையை பற்றி பேசாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு மும்பை மீது தாவூத்திற்கு அளவு கடந்த காதல்.
தமிழ்நாடு, குஜராத் போன்ற இந்தியப் பகுதிகளில் இருந்து மும்பைக்கு வந்தவர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த பல்வேறு நபர்களும் ஆரம்பகாலம் முதல் இன்று வரை தங்களது இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள பல்வேறு யுத்தங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். இதன் பலன் பல்வேறு உயிர்கள் போனதுதான் மிச்சம். எவன் கை ஓங்கி வருகிறதோ அவனது கையை உடைக்கவும், அவனை சிதைக்கவும், போலீஸ் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த பல்வேறு நபர்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்து, பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க வைத்து வளர்த்து விட்டது. அதில் முக்கியமான துருப்பு சீட்டு தாவூத்.

தாவூத் ஆரம்ப காலங்களில்,  போலீஸுக்கு பல்வேறு இன்பார்மர் வேலைகள் செய்து வந்தது பிறகுதான் தெரிந்தது. அவனது சிறு வயது காலம் முதல் பல்வேறு தாதாக்களின் வேலைகளை போட்டுக்கொடுத்து வந்தான். அதன் மூலம் அவனுக்கு போலீஸ் வட்டாரங்களில் செல்வாக்கு இருந்தது என்று, அவன் வளர்ந்த பிறகுதான் பல்வேறு நபர்களுக்கு தெரிய வந்தது. ஆடு புலி ஆட்டம் போல யார் யாரை, எப்பொழுது எங்கு வெட்டி சாய்ப்பார்கள் என்று தெரியாத மர்ம உலகமாக இருந்து வந்தது மும்பை மாஃபியா உலகம். இருந்தாலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். தொண்டைக்குழி வரை மது, அளவிற்கு மீறிய பணம், மிதம் மிஞ்சிய பேரழகிகள் என்று அவர்களின் வாழ்க்கை நிஜமான வாழும் சொர்க்கமாக இருந்து வந்தது.

சிறையில் இருந்து வந்ததும் நடந்த தொழில் சண்டையில் அதிக உயிர்கள் பலியாகின. இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த மஸ்தான், கரீம் லாலா, தாவூத் மற்றும்  ஜீனாபாய் என்கிற லேடி உள்பட ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் ஒன்றாக கூடி இருந்தார்கள். ஜீனாபாய் மும்பையின் மாஃபியா வட்டாரங்களில் தவிர்க்க முடியாத முன்னோடி லேடி. பல்வேறு தாதாக்கள் ஜீனா பாய் பெயரை கேட்டால் பதுங்கி போவார்கள். மஸ்தான், கரீம் லாலா, தாவூத் உள்பட பல்வேறு நபர்கள் ஜீனா பாயை சகோதரி, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதுண்டு. கடைசியில் எழுதப்படாத மாஃபியா உடன்படிக்கை ஒன்று அங்கு உருவானது. குர்ஆன் மீது சத்தியம் செய்து கொண்டு, இனி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அனைவரும் சத்தியம் செய்து கொண்டு அவர்களின் தொழில்களை நடத்த தொடங்கினர்.
காலம் உருண்டு ஓடியது. தாவூத் தனது தொழிலை விரிவுபடுத்த தொடங்கினான். அதிக பணமும் புகழும் சேரும் பொழுதே எதிரிகளும் உருவாகி விடுகின்றனர். அப்படி சத்தமில்லாமல் பல்வேறு எதிரிகள் வந்ததும், கண்ணக்கு தெரிந்த எதிரிகளை மெல்ல மெல்ல கொலை செய்ய ஆரம்பித்தான் தாவூத். ஆனால், தாவூத்தின் நிழலாக வலம் வந்த சோட்டா ராஜன்,  பின்னாளில் தாவூத்தின் டி கம்பெனியை ஆட்டம் காண வைத்தான். அதிகாரத்தின் மறுபக்கம் ஒளிந்து கொண்டு தாவூத்தை பல்வேறு நாடுகளுக்கு துரத்தினான். நிம்மதி இல்லாமல் ஓடிய தாவூத், சோட்டா ராஜனின் தலைக்கு பல்வேறு வழிகளில் குறிவைத்தான். 1994ல் வைத்த குறி 2015 வரை தொடந்து கொண்டே இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம்தான், கடந்த வாரம் இந்தோனேசியாவில் உள்ள பாலீத்தீவில், சோட்டா ராஜன் போலீஸ் கைகளில் சிக்கியது. இந்த ஒரு சம்பவம் போலீஸ் வட்டாரங்களில் ‘கைது’ என்றும், மாஃபியா வட்டாரத்திலும், சில பத்திரிகை வட்டாரங்களில் தாவூத்தின் கைகளில் இருந்து தப்பிக்க ‘சரண்டர்’ என்றும், இது தாவூத்திற்கு விரித்த ‘வலை’ என்றும் பேசப்படுகிறது.

தாவூத்தின் முன்னணி தளபதியும், அவனுக்கு மிகவும் பிடித்தவனுமான சோட்டா ராஜன் ஏன் தாவூத்திற்கு எதிரியானான்?

சோட்டா ராஜனின் அப்பா சதாஷ் ஒரு சாதாரண மில் தொழிலாளி. மும்பையை ஒட்டிய சிறு கிராமம் ஒன்றில் இருந்து மும்பைக்கு பிழைக்க வந்த குடும்பம் சதாஷிவின் குடும்பம். சதாஷிவின் ஆறு பிள்ளைகளில் ஒருவன்தான் ராஜேந்திர நிகல்ஜி என்னும் சோட்டா ராஜன். தனது இளமைக்காலத்தில் மும்பையில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் விற்று வந்தான். அப்பொழுது நடக்கும் அடிதடி சண்டைகள் மூலம் தெரு ரவுடியாக மாறினான். அதன் பிறகு படா ராஜன் என்பவனிடம் இருந்து தெற்கு மும்பை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டை காலி பண்ண செய்யும் வேலை வந்ததும், அந்த வேலையை எந்தவித அதிர்வுகளும் வராமல் செய்து கொடுத்தான் சோட்டா ராஜன். அதன் பிறகு படா ராஜனின் எதிரி ஒருவனை மார்க்கெட்டில் வைத்து தாக்கிய சம்பவம், இன்னும் பிற முக்கியமான சம்பவங்கள் மூலம் படா ராஜனின் இதயத்தில் இடம் பிடித்து, படா ராஜனிடம் நிரந்தரமாக வேலை பார்க்க ஆரம்பித்தான். அதன் பிறகு படா ராஜனின் எதிரியான அப்துல் குரூப்பில் உள்ள முக்கியமான ஒருவனை படா ராஜன் கொலை செய்ததால் படா ராஜனை, அப்துல் நீதிமன்றத்தில் வைத்து ஒரு போலீஸ் அதிகாரி மூலம் சுட்டுக்கொன்றான். சில கொலைகளை யார் செய்வார்கள், எதற்கு செய்வார்கள் என்று தெரியாது. அது போலதான் காவல்துறை அதிகாரி மூலம் படா ராஜனை சுட்டுக்கொன்றனர்.

அதன் பிறகு படா ராஜனை கொலை செய்த அப்துலை பழிவாங்க துடித்தான் சோட்டா ராஜன். சோட்டா ராஜன் ஆட்கள் தேடுவது தெரிந்த அப்துல் போலீஸில் சரணடைவதற்காக, நீதிமன்றம் சென்று வரும் வழியில் காரில் வைத்து சோட்டா ராஜன் மற்றும் அவனது ஆட்களால் சுடப்பட்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக  ஒரு சில குண்டடிகளோடு உயிர் தப்பித்தான் அப்துல். அதன் பிறகு இரு வாரங்கள் கழித்து குண்டடிப்பட்ட காயத்திற்கு மருதத்துவம் பார்க்க வந்த அப்துலை, நோயாளிகள் போல சென்று சோட்டா ராஜனின் ஆள் மருத்துவமனையில் வைத்து சுட்டான். அப்பொழுதும் அவன் குண்டடிப்பட்டு தப்பித்து விட்டான். இந்த சம்பவங்கள் மூலம் தாவூத்தின் மனதில் இடம் பிடித்தான் சோட்டா ராஜன். அதன் பிறகு சோட்டாராஜனை தன்னுடைய குழுவில் சேர்த்துக்கொண்டான் தாவூத். மூன்று வருடங்கள் கழித்து தனது ஆட்களுடன் மைதானம் ஒன்றில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்த அப்துலை, பல்வேறு நபர்கள் முன்னிலையில்,  கிரிக்கெட் வீரர்கள் போல வந்து சத்தமில்லாமல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தனர் சோட்டா ராஜனும் அவனது ஆட்களும். அதன் பிறகு இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
சோட்டா ராஜன் எதிலும் மிக உஷாரான பேர்வழி. தாவூத் ஒரு விஷயத்தை நினைத்து பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அதை செய்து முடித்து விடுவான். அதனால் தாவூத் குரூப்பில் அவனை எல்லோரும் ‘ஸ்பீட்’ என்றும், நாணா என்றும் அழைப்பதுண்டு.

மும்பை மாஃபியா வட்டாரங்களில் பெரும்பாலும் டான்களாக இருந்தது பதான்களும், முஸ்லிம்களும், சில இந்துக்களும்தான். அதனால் அவர்களுக்குள் இந்து, முஸ்லிம் சண்டைகள் உண்டு. தாவூத்தின் வளர்ச்சி சிவசேனா அமைப்பை சேர்ந்த பால்தாக்கரேவிற்கு பிடிக்கவில்லை. தாவூத்தை தாண்டி அவர்களால் மும்பையில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. அதற்கு முழுக்காரணம் சோட்டா ராஜன்தான். பால்தாக்கரேவிற்கு பல்வேறு வழிகளில் டஃப் கொடுத்தான் சோட்டா ராஜன். அதனால் சோட்டா ராஜனை முழுவதுமாக நம்பினான் தாவூத். அதன் பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதை சோட்டா ராஜன் கையில் கொடுத்தான்.

துருக்கியை சேர்ந்த ஆயுதங்கள் விற்கும் பிரபல பிசினஸ் மேன் ஒருவனிடம் பல்வேறு ஆயுதங்களை வாங்க சோட்டா ராஜன் திட்டமிட்டான். ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வாங்கி பல்வேறு நாடுகளில் விற்று வந்தான் அந்த துருக்கிகாரன். மும்பை தாதாக்களிடம் இருந்த  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எல்லாம் அரதபழசாக  இருந்தது. 'மும்பையில் நமது இருப்பை நிலை நிறுத்த வேண்டும் என்றால் அதிநவீன ஆயுதங்கள் வேண்டும் ' என்று தாவூத்திடம் சொல்லி,  பயங்கரமான ஆயுதங்களை வாங்கினான். இதனால் மும்பை வட்டாரமே கதிகலங்கி போனது. பல்வேறு தாதாக்கள் தாவூத்திடம் மோத பயந்தார்கள். எல்லாம் சோட்டா ராஜனின் மூளை என்று இருந்தனர்.
இந்நிலையில் சோட்டா ராஜனின் வளர்ச்சி, தாவூத்திடம் இருந்த மற்ற தளபதிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் சோட்டா ராஜனின் சோலியை முடிக்கும் வேலைகளில் இறங்கினார்கள். விளைவு தாவூத் – சோட்டா ராஜன் இடையே  பிளவு உண்டானது.
இப்பொழுது சோட்டா ராஜனை போலீஸ் கையில் எடுத்துள்ளது.

No comments:

Post a Comment