சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

அழகான ஆரோக்கியமான சருமத்துக்கு...

வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்; பொலிவான, அழகான சருமம் வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. நிறத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால்,  சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிப்பதன் மூலம் பொலிவான தோற்றத்தைப் பெற முடியும். கறுப்போ சிவப்போ தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தோலில் ஏற்படும் சில முக்கியமான பிரச்னைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத எளிய தீர்வுகள் சித்த  மருத்துவத்தில் உள்ளன.
முகப்பரு: பதின்பருவத்தில் இருபாலருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றும். ஹார்மோன் மாற்றங்களால்தான் இவை ஏற்படுகின்றன. பருக்கள், தேவையற்ற கொழுப்பால் ஆனவை. உள்ளே சீழ் முளையுடன், வீக்கத்துடன் காணப்படும். பருக்கள் உடைந்தால், இதில் உள்ள சலத்தால் சருமத்தின் பிற பகுதிகளுக்கும் முகப்பரு பரவும். பருக்கள் மறைந்த பின்னர், அந்த இடத்தில் கருநிறத் தழும்புகள் உண்டாகும்.
தவிர்க்க: குளிர்ந்த, சுத்தமான நீரில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். பருக்களை உடைக்கக் கூடாது. பருக்களைப் போக்க, கருஞ்சீரகம், சீரகத்தைப் பசும்பாலில் அரைத்து, முகத்தில் தடவலாம். சங்கை அரைத்துப் பூசலாம். புனுகை அரைத்து, பருவின் மீது பூசலாம். பச்சைக் காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். பருக்கள் முகம் முழுவதும் வந்து பாதிப்பை ஏற்படுத்தினால், வீட்டு வைத்தியம் செய்வதைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
சிலருக்கு, முகப்பரு மறையும்போது, முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும். இதைப் போக்க, ரோஜா இதழுடன், பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்துப் பூசலாம். வெள்ளரிச் சாறு, புதினா சாறு, எலுமிச்சைப்பழச் சாற்றை சம அளவில் கலந்து கரும்புள்ளிகள் மீது தேய்த்துவந்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.
வியர்க்குரு: வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வியர்வையால் வியர்க்குரு ஏற்படுகிறது. இது சாதாரணமாக சில நாட்களில் மறைந்துவிடும். அதுவே, உடல் முழுவதும் ஏற்பட்டு, அரிப்பை ஏற்படுத்தும்போது பிரச்னையாகிறது.
தவிர்க்க: தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். பருத்தியால் ஆன ஆடையை அணிய வேண்டும். வியர்வை அதிகம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். வியர்க்குருவைப் போக்க, சந்தன ஊரல் நீரைப் பூசுலாம். ‘பதனி’ எனப்படும் பனை நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இளநீர், நன்னாரி ஜூஸ், வெட்டிவேர், விலாமிச்சைவேர் குடிநீர் மற்றும் குளிர்ச்சி தரக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.
தோல் வறட்சி: சிலருக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இருக்கும். சிலருக்கு, ஏதாவது பாதிப்பு அல்லது சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் சரும வறட்சி ஏற்படும். இதனால் சருமத்தில் வெண்ணிறக் கோடு ஏற்படும். பொதுவாக, கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சருமம் வறண்டு வெள்ளை வெள்ளையாகத் தெரியும். தொடர்ந்து இதைக் கவனிக்காமல் விடும்போது அரிப்பு ஏற்படலாம்; சொரி சிரங்காக மாற வாய்ப்பு உள்ளது.
தவிர்க்க: போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்து குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிக்கும்போது உடலில் எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறையாவது எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். அருக்கன் தைலம், திரிபலா தைலம் ஆகிவற்றைத் தடவலாம். வறட்சியான சருமத்தில் அழுத்தித் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவு உட்கொள்ள வேண்டும்.

மங்கு: முகத்தில், குறிப்பாக கன்னங்களில் ஆங்காங்கே கறுப்பு நிறமாகப் படர்ந்து காணப்படும். பொதுவாக, பூப்பு முடிந்த நிலை, ஹைப்போதைராய்டிசம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்கும்போது இவை ஏற்படும். இவற்றால் அரிப்பு இருக்காது. ஆனால், முகத்தின் அழகைக் கெடுத்தபடி இருக்கும்.
தவிர்க்க: நலுங்கு மாவைப் பாலில் கலந்து முகத்தில் பூசலாம். இரண்டு டீஸ்பூன் பசும்பாலில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தால் பால் திரிந்துவிடும். இந்த திரிந்த பாலைக் குழைத்து மங்கு மீது பூசிவந்தால் மங்கு மறையும்.
பாலுண்ணி: முகத்தில் சில குருக்கள் வெண்மையாக மொளுமொளுவென இருக்கும். உள்ளே பால் போன்ற திரவம் நிரம்பி இருக்கும்.
தீர்வு: அமிர்த வெண்ணெய், நலங்கு மாவு, சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கார்போக அரிசி, கிச்சிலிக் கிழங்கு, பாசிப்பயறு, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, ரோஜா இதழ் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும். இதைப் பாலில் கலந்து பூசினால் பலன் கிடைக்கும்.

காணாக்கடி
சிறு பூச்சிகள், சிலந்தி போன்ற விஷப் பூச்சிகள் கடிப்பதால், தோலில் அரிப்புடன்கூடிய தடிப்புகள் தோன்றி மறையும்.
சிகிச்சை-உள்மருந்து: பறங்கிப் பட்டை, பலகரை பஷ்பம், சங்கு பஷ்பம் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அருங்கன் தைலம், புங்கன் தைலம் பூசினால் பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment