சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2015

'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சிக்கிக்கொண்ட சப்-கலெக்டர்!

'லஞ்சம் வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு மணி நேரத்தில் லஞ்சம் வாங்கிய கடலூர் மாவட்ட சப்-கலெக்டரும், அவரது டிரைவரும் கைது செய்யப்பட்டனர்.
 
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் ராஜா (31). விவசாயியான இவர், அதே பகுதியில் 35 சென்ட் நிலம் வாங்கினார். அதனை பத்திரப்பதிவு செய்வதற்காக குள்ளஞ்சாவடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு,  பத்திரப்பதிவிற்கான முத்திரைதாள் கட்டணத்தை, கடலூரில் உள்ள தனித் துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்தில் சென்று கட்டுமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு சென்று, தனித் துணை ஆட்சியர்  தாஸ்(52) என்பவரை சந்தித்தார். அப்போது அவரிடம், "முத்திரைதாள் கட்டணத்தை குறைத்து கட்ட ஏற்பாடு செய்கிறேன். அதற்கு லஞ்சமாக ரூ.11,500 தர வேண்டும்" என தாஸ் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உதயசங்கரிடம் புகார் அளித்தார்.
அவரது ஆலோசனைபடி, ரூ.11,500க்கான நோட்டுகளை விவசாயி ராஜா, தனித் துணை ஆட்சியரிடம் கொடுத்தார். அதனை அவர் தன்னுடைய டிரைவர் பிரபாகரனிடம் கொடுக்குமாறு கூறினார். அவ்வாறே ராஜா அந்த பணத்தை டிரைவரிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், டிரைவரையும்  தனித் துணை ஆட்சியரையும் கைது செய்தனர். லஞ்சப் பணம் டிரைவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று முன்தினம் தொடங்கியதை முன்னிட்டு,  கடலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர். இதில் தனித் துணை ஆட்சியர் தாஸும் கலந்து கொண்டார். உறுதி மொழி ஏற்றுக் கொண்ட ஒரு மணி நேரத்தில்  தாஸ் கைதாகியுள்ளார். 

தாஸ் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். கடலூரில் தங்கி பணியாற்றி வந்தார். கைதான 2 பேரும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment