காம்பேக்ட் சொகுசு கார்களால்தான் பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்கள் தங்கள் விற்பனையைக் கூட்ட ஆரம்பித்திருக்கின்றன. பென்ஸ் முதலில் முந்திக்கொண்டு விலை குறைவான 'ஏ’ கிளாஸ் காரை அறிமுகப்படுத்த, பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார்களுடன் போட்டி போட ஹேட்ச்பேக் / செடான் கார்கள் ஏதும் இல்லாமல், Q3 காருடன் போட்டி போட்டுக்கொண்டிருந்த ஆடி, இப்போது A3 காருடன் கம்பீரமாக களம் இறங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஆடியின் விலை குறைவான கார் A3. எப்படி இருக்கிறது ஆடி A3? விடை காண கோவையில் ஆடி A3 காரை டெஸ்ட் செய்தேன்.
டிஸைன்
வெளியில் இருந்து பார்த்த உடனே இது 'A6 காரோ’ என்று யோசிக்க வைப்பதிலேயே வெற்றி பெற்றுவிட்டது ஆடி. A6 என்பது 50 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் விற்கப்படும் ஆடியின் விலை உயர்ந்த கார். இதன் டிஸைனை அப்படியே 30 லட்சம் ரூபாய்க்குள் கொண்டு வந்திருப்பதில் 'லைக்ஸ்’ அள்ளுகிறது A3.
ஆட்டோமேட்டிக் அட்ஜெஸ்ட் கொண்ட முன்பக்க இருக்கைகளில் ஒருநாள் முழுக்கப் பயணித்தால்கூட அலுப்பு தெரியாத வகையில் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீல் 'செம டிரைவ் எக்ஸ்பீரியன்ஸுக்குத் தயார்’ என சவால்விடும் வகையில் கிரிப்பாக இருக்கிறது. காரை ஆன் செய்தவுடனே டேஷ்போர்டின் மேலே இருந்து எழும் மல்ட்டி மீடியா ஸ்க்ரீன், ஏ.சி வென்ட்களின் ஜெட் இன்ஜின் வடிவ டிஸைன் என ஆடி கார் என்பதை உணர்த்தும் பிரமிப்புகள் உண்டு. ஆனால், டேஷ்போர்டில் பட்டன்கள் மிகவும் சிறிதாக இருப்பதோடு, ஒழுங்கற்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால், மிகவும் சின்ன காருக்குள் உட்கார்ந்திருக்கிறோம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறது, ஆடி காரின் உள்பக்க டிஸைன்.
இன்ஜின்
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் ஆடி A3 காரில், நாம் டெஸ்ட் டிரைவ் செய்தது டீசல் இன்ஜின் மாடல். 1,968 சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின் 141 bhp சக்தியை அளிக்கிறது. இது பென்ஸ் ஏ கிளாஸைவிட 33bhp சக்தி அதிகம் என்பதோடு, பிஎம்டபிள்யூ 1 சீரிஸைவிட 2bhp குறைவு. 1,600 ஆர்பிஎம் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கும் டீசல் இன்ஜின் அதன் பிறகுதான் சீறுகிறது. மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் மிகவும் சிறப்பாக இருப்பதால், நெடுஞ்சாலைகளில் கூலாக ஓவர்டேக் செய்யலாம். அதிகபட்சமாக 130 கி.மீ வேகம் வரை ஓட்டினேன். இதற்கு மேலும் பவர் இருந்தது.
கையாளுமை
இதன் பிரேக்கும் ஸ்டீயரிங்கும் நேரான சாலையில் பறக்கும்போதும், குறுகலான சாலையில் வளைத்துத் திருப்பும்போதும், துளி பயமும் இல்லை. ஆடிக்கே உரிய கட்டுமானத் தரம், வளைவுகளில் காரைத் திருப்பும்போது தெரிகிறது.
கோவையில் 28 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் ஆடி A3 டீசலின் விலை உயர்ந்த மாடல், 41 லட்சம் ரூபாய். கொடுக்கும் விலைக்கு அதிக இடவசதி, சொகுசான இருக்கைகள் மற்றும் தரமான உள்பக்கம், பில்டு குவாலிட்டி என சிறப்பான காராகவே இருக்கிறது A3. 28 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் A3 அட்ராக்ஷன் மாடல்தான் போட்டியாளர்களைவிட விலை குறைவான கார் என்பதால், காம்பேக்ட் சொகுசு கார் மார்க்கெட்டை ஆடி கைப்பற்றும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment