சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்!

இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாம் என அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சுமார் 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டாம் என அ.தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''காங்கிரஸ் கட்சி மக்களால் கைவிடப்பட்ட நிலையிலும், தமிழக காங்கிரஸ் கட்சி சிதறுண்ட நிலையிலும், காங்கிரஸ் கட்சியினைப் பற்றியும், தன்னைப் பற்றியும் ஊடகங்களில் தினந்தோறும் செய்திகள் வர வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக பல்வேறு முறையற்ற கருத்துகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், என்னை நரேந்திர மோடி 7.8.2015 அன்று எனது இல்லத்தில் சந்தித்துப் பேசியதை கொச்சைப்படுத்தி, நாகரிகமற்ற, பண்பாடற்ற, கீழ்த்தரமான முறையில் அவதூறாக பேசியிருந்தார். 14.8.2015 அன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவையின்றி மிகவும் ஆபாசமான ஒரு கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருந்தார். பரபரப்பு அரசியலுக்காக பேசட்டிருந்தாலும், வேண்டுமென்றே என்னைக் கொச்சைப்படுத்த வேண்டுமென்று பேசப்பட்டிருந்தாலும், அல்லது நிதானமிழந்து பேசப்பட்டிருந்தாலும், இந்தக் கருத்து வன்மையாக கண்டிக்கத் தக்கது ஆகும்.

நாலாந்தர அரசியல்வாதிகளே பேச கூச்சப்படும் வார்த்தைகளை இளங்கோவன் பேசியுள்ளதைக் கண்டிக்கும் வகையிலும், இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும், எனது அருமை கழக உடன்பிறப்புகளும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும், பொது மக்களும், மாணவ - மாணவியரும் அறப் போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் பிரதமருக்கு நான் கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செய்தி வெளியிடப்பட்ட போது, அதனை காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் கண்டித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசும் அந்தச் செய்தியை இணையதளத்திலிருயது எடுத்ததோடு மட்டுமல்லாமல், நாகரிகமற்ற செய்தியை வெளியிட்டதற்கு வருத்தமும் தெரிவித்தது. 

இலங்கை அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை விஞ்சும் வகையில், நானும், பிரதமரும் சந்தித்ததை அநாகரீகமாக, அருவருக்கத்தக்க வகையில், நாராசமான முறையில், அரசியல் நாகரிகத்தையே குழிதோண்டி புதைக்கும் விதத்தில் இளங்கோவன் விமர்சித்து இருக்கும் போது, இந்த நாகரிகமற்ற செயலை சில கட்சிகள் ஆதரித்து பேசுவதும், சில கட்சிகள் விமர்சனம் செய்யாமல் இருப்பதும் அவர்களது அரசியல் ஆதாயம் தேடும் நிலையையே வெளிப்படுத்துவதாக அமையதுள்ளது. 

இளங்கோவனின் அருவருக்கத்தக்க பேச்சினைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், மனம் வெதும்பிய நிலையில், என் மீது அளவற்ற அன்பும், பாசமும், பரிவும் கொண்டுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அருமை உடன்பிறப்புகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில், இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் உணர்வுகளை தூண்டும் விதமாக இளங்கோவன் பேசி இருந்தாலும், மிகவும் நாகரீகமான முறையில், கழகத்தின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அறப்போராட்டங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேற்கொண்டுள்ளனர். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தும் அறப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த இளங்கோவன், 'தன்னுடைய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன' என்று சப்பைக் கட்டு கட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதிலிருந்தே இளங்கோவனின் நாகரிகமற்ற செயல் தவறானது என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. 

எனது அருமை கழக உடன்பிறப்புகள், தங்கள் இதயத்திலே ஏற்பட்ட வலியினை வெளிப்படுத்தும் விதமாக அறப்போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன். எனினும், கழக உடன்பிறப்புகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்ட நிலையில் இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனியும் தொடர வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment