துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் ஆபத்தான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உட்பட பல அரசியல்தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.
நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் சோ ராமசாமி இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்தார்.
தொடர்ந்து சோ மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து மிகவும் ஆபத்தான நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகி்ன்றன.இந்திய அளவில் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் அறிந்தவர் சோ ராமசாமி. இவரது முயற்சியால் பல்வேறு அரசியல் திருப்பங்கள், ஆட்சி மாறறங்கள் ஏற்பட்டுள்ளன. மிகச் சிறந்த நகைச்சவை நடிகர், எழுத்தாளர், அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர் என்றெல்லாம் புகழப்படுபவர் சோ ராமசாமி. அவர் எழுதி நடித்த நாடகஙகள் பல புகழ்பெற்றவை. அதிலும் முகமது பின் துக்ளக் என்ற நாடகம், திரைப்படமாகவும் வந்து பெரும் வரவேற்பை பெற்றது.
அதே நேரம், பிராமண பற்றாளரான இவர் சாதி வேறுபாடுகளை விரும்புபவர், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கருதப்பட்டும் மிடாஸ் சாராய ஆலை உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்தவர், பெண் சமத்தவத்தை விரும்பாதவர், பிரச்சினைகளை கிளறிவிடுவாரே தவிர அதற்கு தீர்வு சொல்லமாட்டார் என்பன போன்ற விமர்சனங்களும் இவர் மீது உண்டு.
பாராட்டும் விமர்சனமும் கலந்து இருந்தாலும், தமிழக அரசியலிலும், திரையுலக நகைச்சுவையிலும், பத்திரிகைத் துறையிலும் தவிர்க்க முடியாத நபர், சோ ராமசாமி.
No comments:
Post a Comment