எஃப்.எம் பின்னணி, மதுரை மொழி, கார்பரேட் ஐடி கார்டோட தினேஷ், அவர் கூட ஐடி கார்டுகளோட கருணாகரன், ரமேஷ் திலக், பால சரவணன், இப்படி அறிமுக இயக்குநருக்கான சாயல் துளியும் இல்லாமல் வெளியான டீஸரப் பார்த்த உடனேயே அட நல்லாருக்கே பாஸ், ஆமா என்ன சொல்ல வர்றீங்க அப்டீனு அவர் கிட்டயே கேப்போமேனு ஒரு நாள் கூத்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கிட்ட சில கேள்விகள தெளிச்சபோது,
உங்களைப் பத்திச் சொல்லுங்களேன் , இப்படிக் கேக்கறதுக்கு முன்னாடி அவரே ஸ்டார்ட் பண்ணிட்டாரு?
10 வருஷங்களுக்கு முன்னாடியே சினிமா இயக்குநராகணும்னு விரும்பின சாதரணமான அக்மார்க் சென்னைவாசி நான். சினிமா எடுக்கணும் ஆனால் அது அவ்ளோ ஈஸி இல்லையே. சந்தர்ப்ப சூழ்நிலையால மீடியா எண்ட்ரி, பிக் எஃப்.எம், சூரியன் எஃப்.எம் இப்படி ஆர்.ஜே.அப்பறம் சொந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணி ரேடியோ ஸ்டடீஸ் அந்த ஃபீல்ட்ல என்னால எவ்ளோ பெஸ்ட் குடுக்க முடியுமோ குடுத்தேன். இப்ப என்னோட கனவான ஃபிலிம் மேக்கிங்குக்கு வந்துருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும் ஆரம்பமே எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு.
சினிமா எண்ட்ரிக்கு மீடியா உங்களுக்கு எந்த அளவுக்கு உதவி பண்ணிச்சு?
நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கு. ஒரு நூறு பேர ஒரே டைம்ல மேனேஜ் பண்ணியிருக்கேன். ஒவ்வொருத்தர் கிட்டயும் எப்படி கம்யூனிகேட் பண்ணனும், எப்படி அவங்கள ஹேண்டில் பண்ணனும், நிறைய ஈவண்ட் நடத்தியிருக்கேன் அதனால டீம் வொர்க்கோட அருமை நல்லாவே தெரியும், முக்கியமா எப்படி மார்க்கெட் பண்ணனும், டார்கெட் ஆடியன்ஸுக்கு எப்படி புராடெக்ட குடுக்கணும் இப்படி நிறைய விஷயங்கள மீடியாதான் எனக்கு சொல்லிக் குடுத்துச்சு.சொல்லப் போனா ஒரு இயக்குநருக்கு முக்கிய தேவையான டீம் மேனேஜ்மெண்ட் மீடியாதான் குடுத்துச்சுன்னு சொல்லலாம்.
மீடியாவுலருந்து சினிமா இயக்குநரா எண்ட்ரி குடுத்தப்போ எந்த விஷயம் சவாலா இருந்துச்சு?
முக்கியமா எக்ஸ்பீரியன்ஸ் இல்ல. சூரியன் எஃப்.எம்ல இருந்து ரேடியோ ஸ்டடீஸ் பிஸ்னஸ்க்கு ஓகே, ஆனா சினிமா எண்ட்ரிக்கு நான் இத செஞ்சிருக்கேன்னு காட்ட என் கிட்ட ஒண்ணுமே இல்ல. அதுதான் சேலஞ்சா இருந்துச்சு. ஆனாலும் நான் ரொம்ப கஷ்டப்படல எனக்கு சரியான நேரத்துல நல்ல , ரொம்ப நல்ல புரொடியூஸர் செல்வகுமார் கிடைச்சாரு. என் வேலை மேல, திறமை மேல அவருக்கு இருந்த முழு நம்பிக்கை இந்த வாய்ப்பு கிடைச்சது. ஒருவேளை அவர நான் சந்திக்கவே இல்லைன்னா நான் ரொம்ப கஷ்டப்பட்டுருக்கலாம்.அனுபவம் இல்லாம இருந்தது மட்டும் தான் ஒரு சின்ன தடைக்கல்லா இருந்துச்சு. ஆனா மீடியா சினிமாவைப் பத்தி நிறைய சொல்லிக் குடுத்துருக்கு.
உங்க ஃபேமிலி பத்தி?
ஃபேமிலி பத்தி பேசவே கூடாதுன்னு நினைக்கற சாதாரண ப்ரைவஸி மனுஷன் தான். ஒயிஃப் பயங்கர சப்போர்ட். அவங்களும் மீடியா தான். லவ் மேரேஜ்.மீடியானால என்னோட வேலைகள் அவங்களுக்கும் தெரியும். நான் என் கேரியர வளர்த்துகிட்டதுல அவங்களுக்கும் முக்கியமான பங்கு இருக்குன்னு சொல்லலாம்.
ஒரு நாள் கூத்து ,ஏன் இந்த தலைப்பு?
ஒரு நாள் கூத்து நம்ம பேச்சு வழக்கத்துல தினமும் சொல்ற ஒரு வார்த்தை. இந்தக் கதைக்கு ரொம்ப கரெக்டா பொருந்துச்சு. டைட்டில் ரொம்ப பிடிச்சுச்சு. எல்லாருக்கும் தெரிந்த வார்த்தை, ஒரு முக்கியமான நாளுக்காக படத்துல என்ன நடக்குதுங்கிறதுதான் கதை, இவைதான் இந்தத் தலைப்புக்குக் காரணம்.
கமர்ஷியல் படமா?
சினிமாவை கமர்ஷியல் , நான் கமர்ஷியல்னு பிரிக்கறதுல எனக்கு உடன்பாடில்ல. இந்த படம் முழுக்க பிராக்டிகல் வாழ்க்கைய காட்டும். இயல்பான அதே சமயம் ,என்னோட உணர்வுகளோட வெளிப்பாடுன்னு கூட சொல்லலாம். ஹீரோயிஸமான சீன் கிடையாது, அடிதடி அட்ராசிட்டி இருக்காது. நம்ம வாழ்க்கைக்கு ரொம்பப் பக்கத்துல நடக்குற ஒரு கதை.
கேமரா மேன் கோகுலுடன்
ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியம் கேமராமேன்.கோகுல் கிட்ட எந்த விஷயத்துல இன்ஸ்பைர் ஆனீங்க?
பட வேலைகள் ஆரம்பிச்சு ரொம்ப முக்கியமான ஒரு கட்டத்துல நாங்க சந்திச்சோம். என்னோட ஃப்ரண்ட் தான் இந்தப் படத்துக்கு கேமராமேனா வொர்க் பண்ண வேண்டியது. அவரு இன்னொரு பெரிய படத்துல மாட்டிக்கிட்டாரு.அப்பறம் புரொடியூஸர் செல்வகுமார்தான் கோகுல அறிமுகப்படுத்தினாரு. கேமராமேன் தான் ஒரு படத்துக்கு சரியான பார்ட்னர்னு சொல்லலாம். எனக்கு நல்ல பார்ட்னரா கோகுல் கிடைச்சாரு. கதைய புரிஞ்சிகிட்டு வேலை செய்யற கேமராமேன் வேணும்னு நினைக்கும் போது கோகுல் வந்தாரு, உண்மைய சொல்லணும்னா அவருக்கு நல்ல திறமை. இந்த படத்தோட ஒவ்வொரு ஃப்ரேம்லயும் நான் அத பார்த்தேன், பார்த்துட்டு இருக்கேன். நீங்களும் ரசிப்பீங்க. அதுவும் இந்தக் கதை ஒரு கேமராமேன்னுக்கு மிகப்பெரிய சவால். ஏன்னா நிறைய பேக்ரவுண்ட்ஸ், லோகேஷன்ஸ், ஒரு ஃப்ரேம்லயே ஏகப்பட்ட கேரக்டர், சூழல்னு இருக்கும். கோகுல் எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா ஹேண்டில் பண்ணாரு. இந்தப் படத்துக்கு பெரிய பலம் கோகுல் தான்.
பேக்ரவுண்ட்னு சொன்னவுடனேதான் தோணுச்சு, டீஸர்ல எஃப்.எம்.ஒரு கேரக்டராவே வருதே, நீங்களும் எஃப்.எம் வாசி தான். உங்க சொந்தக் கதையா?
இல்ல சத்தியமா என் கதை இல்ல. வேற யாரோட கதையும் கூட இல்ல. இந்தப் படத்தோட கதைக்களத்துல எஃப்.எம்’உம் ஒரு முக்கிய களம். என் லைஃப்ல எனக்கு நெருக்கமா எஃப்.எம் இருந்ததுனால அந்தக் களம் எனக்கு பிடிச்சது. இன்னொன்னு எஃப்.எம் பேக்ரவுண்ட்ல படங்கள் ரொம்பக் கம்மி. ஒரு சின்ன பார்ட்டாதான் கடந்து போகும். அத கதைக்களமா வெச்சு ஒரு முழுமையான படம் எடுக்கணும்னு நினச்சேன். ஒரு படத்தோட கதைக்கு பேக்ரவுண்ட் ரொம்ப முக்கியம். கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனா நடக்குற களம், ஏன் எதுக்குங்கற கேள்விகள், சேரும் போதுதான் ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்யாசம் உண்டாகுது. ஆனால் இந்தப் படத்தோட கதையும், களமும் வேற மாதிரிதான். உங்களுக்கு புதுசா இருக்கும். என் கண் எதிர்க்க நடந்த விஷயங்கள், கேரக்டர்களோட கோர்வை, அதெல்லாம் சேர்த்து ஒரு நல்ல கதை, அதுக்கு நல்ல திரைக்கதை ஷங்கர் எழுதியிருக்காரு.
ஹீரோ தினேஷ் இதுவரைக்கும் கிராமத்து இளைஞன், கொஞ்சம் சி கிளாஸ் கேரக்டர் இப்படிதான் பாத்துருக்கோம். எப்படி அவர கார்பரேட் கம்பெனி வொர்க்கரா, ஸ்டைலா காமிக்கணும்ன்னு தோணுச்சு?
தினேஷை ஒரு சராசரி மனிதராத்தான் நான் சந்திச்சேன். ரொம்ப எளிமையான மனிதர். இந்தக் கதைக்கு அப்படி ஒரு நபர் தான் எனக்கு தேவைப்பட்டாரு. கதை நமக்கு பக்கத்துல நடக்குறதுனால , பக்கத்து வீட்டு பையன் சாயல்ல ஒரு ஹீரோ வேணும்னு தேடினப்ப எனக்கு தினேஷ் சரியா பொருந்தினாரு. கிராமத்து இளைஞனா இருந்தவர்னு சொன்னீங்க இல்லையா, இன்னிக்கு நகரத்துல இருக்கிற பெரும்பாலான மக்கள் கிராமத்துலருந்து வேலைக்காக, படிக்கன்னு வந்தவங்கதான். அப்படி ஒரு இளைஞனா தினேஷ் கச்சிதமா பொருந்தினாரு. ரொம்ப இயல்பான நடிகரும் கூட. இன்னொன்னு தினேஷ எல்லாரும் கொஞ்சம் அழுக்குப் பையனா அல்லது, கிராமத்து இளைஞனாவே பார்த்துட்டோம், எனக்கு வேற ஒரு கலர்ல, அழகான பையனா காட்டணும்னு ஆசை.
ஹீரோயின் மியா ஜார்ஜ், மதுரைத் தமிழ் பேசுறாங்களே?
மதுரையும் ஒரு களம், சென்னை, மதுரை, எஃப்,எம், திண்டுக்கல்ல ஒரு சின்ன சீன் இதெல்லாமே படத்தோட களங்கள். மியா ஜார்ஜ் , தேவதை மாதிரி ஒரு பொண்ணா , லட்சுமிங்கற கேரக்டருக்கு லட்சுமி கடாட்சமான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. அமரகாவியம் படத்துல மியா ஜார்ஜோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இந்த கேரக்டருக்கு ரொம்ப அழகா பொருந்தினாங்க. மியா ஜார்ஜ்தான் வேணும்னு வெயிட் பண்ணி கதை சொல்லி ஓகே பண்ணோம். நிவேதா மிஸ் இந்தியா யுஏஇ, அவங்களும் ஒரு கேரக்டர் பண்ணியிருக்காங்க. மிஸ் இந்தியா யுஏஇ’ன்னு சொன்னவுடனே கொஞ்சம் தயக்கம், மிஸ் இந்தியாவா? எப்படி அவங்களையெல்லாம் மேனேஜ் பண்ண முடியுமான்னு யோசிச்சேன், ஒரு ஃப்ரண்ட் மூலமா பேசினப்போ மதுரக்கார ஸ்லாங் பேசிகிட்டு நம்மூரு பொண்ணு ஸ்டைல்ல, எனக்கு மிஸ் இந்தியாங்கற தயக்கத்தையே மாத்தினாங்க.
அதென்ன மிஸ் இந்தியா, மியா ஜார்ஜ் இவங்கல்லாம் கிராமத்து ஸ்டைல், தினேஷ், ரமேஷ் திலக், பாலசரவணன் எல்லாரும் நகரத்து ஸ்டைல், எதுவும் பிளானிங்கா?
இவங்களையெல்லாம் பார்த்துப் பழகின கேரக்டர்லருந்து வேற ஒரு களத்துக்கு கொண்டு போயி என் கதைக்கும், களத்துக்கும் இன்னொரு புது கலர் குடுக்கணும்னு தோணுச்சு. ஒரு விதமான பிளான்னு கூட சொல்லலாம். பாலசரவணன், அவரும் அப்படித்தான், ரமேஷ் திலக் ஆர்.ஜே அப்படின்னா டக்குன்னு என் மைண்டுக்கு தோணின கேரக்டர் இந்தப் படத்துக்கு சரியான பொருத்தம் அவர் தான். முக்கியமா கருணாகரன் ஒரு நல்ல குணச்சித்திர வேடத்துல நடிச்சிருக்காரு, சார்லி ரொம்ப வித்யாசமான ஒரு ரோல். இப்படி எல்லாமே இந்தப் படத்துல வித்யாசமாதான் இருக்கும். ரொம்பப் பெரிய கேரக்டர் கூட்டம் இருக்கங்க.
எல்லாத்தையும் முழுமையா மாத்தி ஒவ்வொரு கேரக்டருக்கும் மெனெக்கெடறது இயக்குநரா ரொம்ப சவாலாச்சே?
இத நான் சவாலா பாக்கலை, ஒரு இயக்குநரா கடமையா பார்த்தேன். அத எனக்கு கிடைச்ச என்னோட டீமும் நல்லா சப்போர்ட் பண்ணி ஈஸியாக்கிட்டாங்க.
ஒரு நாள் கூத்து என்ன மெஸேஜ் குடுக்க போகுது?
மெஸேஜ் சொல்ற அளவுக்கு நான் காந்தியோ, மகானோ இல்ல. நல்ல பொழுதுபோக்கு படம், என் மனசுல தோணுன பல விஷயங்கள் கேள்விகள், கொஞ்சம் கோபம், அதெல்லாம் முன் வைக்கப்போற படம். கொஞ்சம் சிந்தனைய தூண்டக் கூடிய படம்.
ஆடியன்ஸ் மாறல ஆனா அவங்களோட அப்டேட் லெவல் மாறிடுச்சு, ஒரு அறிமுக இயக்குநரா எப்படி தயாராகியிருக்கீங்க?
100 சதவீதம் எனக்கு பயமில்லை, ஏன்னா இந்தப் படம் எங்கருந்தும் தழுவி எடுக்கப்பட்டதோ, அல்லது சீன்கள் காப்பியோ இப்படி எதுவும் இல்ல. ஹாலிவுட் தரத்துக்கோ, உலக தரத்துலயோ ஒரு படம் குடுக்கணும்ன்னு நினைக்கலாம், ஆனா அங்கருக்க சினிமாவை அப்படியே குடுக்கணும்னு நினைச்சாதான பயப்படணும். இந்தப் படம் வாழ்க்கைல இருந்து எடுக்கப்பட்ட கதை , காட்சிகள் அதனால ரொம்ப நம்பிக்கையா இருக்கேன்.
சமூகவலை தளங்கள்ல இப்பல்லாம் ஒரு படம் ரிலீசானாலும் ஆளாளுக்கு விமர்சனம்னு ஏதோ எழுதுறாங்களே?
ஊர் வாய அடைக்க முடியாது. அத நான் விமர்சனம்னு சொல்ல மாட்டேன், விமர்சனம் எழுத நிறைய இலக்கியம் இருக்கு. அனுபவம் வேணும்.ஆனா கருத்து சொல்ல எல்லாருக்கும் ரைட்ஸ் இருக்கு, நானும் கருத்து சொல்றவன் தான், கமெண்ட் சொல்றது தனிப்பட்ட சுதந்திரம். நல்ல விஷயம் தான். சினிமா அப்டேட் ஆகும் போது அத பார்க்கற ஆடியன்ஸும் அப்டேட் ஆனா தான் நல்லா இருக்கும்.
அடுத்த படம் எந்த மாதிரி இருக்கும்?
அத பத்தி நான் இன்னும் யோசிக்கலை, முதல்ல இந்தப் படத்த முழுமையா ரசிக்கற மாதிரி நல்ல முறைல ரிலீஸ் பண்ணனும். அப்பறம் தான் அடுத்த படம், நிறைய படம் இயக்கணும்னு ஆசை இல்ல , ஒண்ணு ரெண்டு படம் எடுத்தாலும் காலம் தாண்டி நிக்கற படங்கள் குடுக்கணும்னு ஆசைப் படறேன்
No comments:
Post a Comment