சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Sept 2015

இதுதான் அதிமுக: காலையில் கட்சியில் சேர்ந்தார்...மதியம் எம்.பி. ஆனார்!

 புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. சார்பில் தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. 

தற்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் கண்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 28 ஆம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.
செப்டம்பர் 18 ஆம் தேதி ((இன்று) மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. 19 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 21 ஆம் தேதி கடைசி நாள். 28 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் அப்போதே  எண்ணப்பட்டு 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இந்த தேர்தலில்  என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தொழிலதிபரான கோகுல கிருஷ்ணன் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து, அவரை எம்.பி. தேர்தல் வேட்பாளராக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கோகுலகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான மனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன்தாஸிடம் அவர் வழங்கினார். அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணனுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாஸ்கரன், அன்பழகன் உள்பட பலர் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலகிருஷ்ணனுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும். அவர் புதுச்சேரிக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவார்'' என்றார்.
மனுத்தாக்கல் நிறைவு
இந்நிலையில், இன்று மாலை 3 மணியுடன் புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. சார்பில் கோகுலகிருஷ்ணனும், சுயேட்சையாக பத்மராஜன், சிட்டிபாபு ஆகியோரும் போட்டியிருகின்றனர்.
கோகுலகிருஷ்ணனுக்கு வெற்றி உறுதி

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவை தவிர்த்து வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த  யாரும் போட்டியிடாததால், காலையில் அ.தி.மு.க.வில் இணைந்து, மதியம் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன், போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.


No comments:

Post a Comment