2016 சட்டமன்றத் தேர்தலுக்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டணி பேரங்கள் திரைமறைவில் ஆரம்பமாகிவிட்டன. இது எதையும் கண்டுகொள்ளாமல், அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, மண்டல மாநாடுகளை நடத்தி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தனி வழியில் 2016-தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.
‘‘2016 தேர்தலை நீங்கள் தனியாகத்தான் சந்திக்கப்போகிறீர்களா?’’
‘‘தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்துவிட்டோம். அதன்பிறகு பிப்ரவரி 15-ம் தேதி அன்புமணி ராமதாஸை சேலத்தில் நடந்த எங்கள் கட்சிப் பொதுக்குழு, முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது. அதன்படி நாங்கள் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எங்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டு தேர்தலைச் சந்திக்க சம்மதிக்கும் கட்சிகள், எங்களோடு தாராளமாகக் கூட்டணியில் இணையலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். மக்கள் எங்களை அமோகமாக வெற்றிபெற வைப்பார்கள். பா.ம.க தலைமையில் தமிழக அரசு அமையும். அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக இருப்பார்.’’
‘‘பா.ம.க தேர்தல் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது? இதையே உங்களின் தேர்தல் அறிக்கையாக எடுத்துக்கொள்ளலாமா?’’
‘‘தமிழகத்தின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில்கொண்டு நாங்கள் பல திட்டங்களை வகுத்துள்ளோம்; அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஓர் அறிக்கையைத் தயார் செய்துள்ளோம். அதைத்தான் ‘புதியதோர் தமிழகம் செய்வோம்’ என்ற பெயரில் தேர்தல் வரைவு அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இதில் உள்ள திட்டங்கள் குறித்து, எங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் விவாதிக்க உள்ளார். அதற்காக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். கோவையில் தொழிலதிபர்கள், தஞ்சையில் விவசாயிகள், காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள், கன்னியாகுமரியில் மீனவர்கள் என எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கேட்பார். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் சேர்த்து, இறுதித் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து ஜனவரியில் வெளியிடுவோம்.’’
‘‘தேர்தல் அறிக்கைகள் என்பது தேர்தல் நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் வெளியிடுவது வாடிக்கையான ஒன்றுதானே... அதைத் தாண்டி நீங்கள் வெளியிட்டுள்ள இதில், வேறு என்ன சிறப்பு இருக்கிறது?’’
‘‘நாங்கள் வாடிக்கையான தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்கவில்லை. மாற்றத்துக்கான ‘மக்கள் சாசனம்.’ வலிமையான தலைமையை முன்னிறுத்தி, தெளிவான பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் தமிழகத்தில் ஒளிமயமான - அதிக பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் தயாரித்துள்ள அறிக்கை இது. பூரண மது ஒழிப்பு, வேளாண்மை, நீர் வளம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, தடையற்ற போக்குவரத்து, மின்துறை மேம்பாடு, சமூக நலன், மீனவர் நலன், சமூக நீதிக்கொள்கை என்று எல்லாவற்றையும் இதில் விரிவாக விவரித்துள்ளோம்.
தாயின் கருவறையில் இருப்பது முதல் முதியவராகும் வரைக்கும் ஒருவருக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் இலவசமாக நிறைவேற்றித் தருவதற்கான திட்டங்கள் இதில் உள்ளன. அவற்றை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதற்கான செயல் திட்டங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளோம். எங்கள் ஆட்சியில் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர் ஒரு ரூபாய்கூட செலவழிக்கத் தேவையில்லை. தற்போது இருக்கும் கல்வி முறை அடியோடு மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைத் தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் கொண்டு வருவோம். கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவிகித நிதியை ஒதுக்குவோம். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயித்து அதை அரசாங்கமே செலுத்தும். பயிற்சியுடன் கூடிய கல்விதான் உண்மையான கல்வி. அதனால், கல்வி கற்கும்போதே அந்தக் குழந்தையின் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்போம். ‘சும்மா இருக்கிறேன்’ என்று சொல்லும் இளைஞர்களே இல்லாத நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம்.
மது, புகை விஷயத்தில் எங்கள் கொள்கை பற்றி நாங்கள் சொல்லவே தேவையில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவை இரண்டும் உடனடியாக ஒழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு ஒரு பைசாகூட ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். பொறுப்புள்ள நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற நிர்வாகமாக அது இருக்கும். வெளிப்படைத்தன்மை இல்லாததுதான் இங்கு நடக்கும் ஊழல் முறைகேடுகளுக்குக் காரணம். அதை மாற்றியமைப்போம். ஆட்சிக்கு வந்ததும் லோக் அயுக்தா என்று சொல்லப்படக்கூடிய மக்கள் நீதிபதி சட்டத்தை நிறைவேற்றி, அதற்கு தன்னாட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிடுவோம். அதன்மூலம் முதலமைச்சர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஊழல்செய்வது தெரியவந்தால், அந்த அமைப்பு தானாக முன்வந்து வழக்குத் தொடுத்து, அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.’’
‘‘அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த என்ன காரணம்?’’
‘‘அதற்குப் பல காரணங்கள் உள்ளன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, கடந்த 50 ஆண்டுகளில் இந்திய மருத்துவத் துறையில் நிகழ்த்தப்படாத சாதனைகளை 5 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திக் காட்டினார். அதை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ஓர்ஆய்வரங்கில் பாராட்டினார். நான்கு சர்வதேச விருதுகளை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். பொது இடத்தில் புகைப் பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை பல இன்னல்களுக்கு இடையில் உறுதியாக நின்று நடைமுறைப்படுத்தினார். உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையைக் கொண்டு வந்தார். அன்றைய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, “நமக்குக் கிடைத்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வெறுமனே அமைச்சர் மட்டுமல்ல. அவர் ஒரு மெடிக்கல் என்சைக்ளோபீடியா” என்று பாராட்டினார். எனவேதான், வலிமையான தலைமையை முன்னிறுத்த நினைத்த எங்கள் கட்சி, அன்புமணி ராமதாஸை தேர்வு செய்தது.’’
‘‘மதுவுக்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நீங்கள், சசிபெருமாள் மரணத்தை அடுத்து தீவிரமடைந்த மது எதிர்ப்பு போராட்டங்களின்போது மௌனமாக இருந்தது ஏன்?’’
‘‘சசிபெருமாளை சாகடித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவரை அந்த டவரில் ஏறவிட்டு இருக்கக் கூடாது. அவர் இறந்ததும் அதுவரை மதுவுக்கு எதிராக ஓர் அறிக்கைகூட விடாத கட்சிகள் எல்லாம், அவருடைய சடலத்தை வைத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்தன. அந்த விளம்பர வியாபாரத்தில் நாங்கள் இணைந்துகொள்ளவில்லை. மாணவர்கள் நடத்திய போராட்டம் என்பது நல்ல விஷயம். அவர்கள் மதுவுக்கு எதிராகப் போராடத் துணிந்ததற்கு நாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய போராட்டங்களும் விழிப்பு உணர்வும்தான் காரணம். அது எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.’’
‘‘தி.மு.க - அ.திமு.க-வை முற்றிலுமாக நீங்கள் ஒதுக்குகிறீர்களா? இல்லை, அவர்கள் உங்களை ஒதுக்கிவிட்டார்களா?’’
‘‘எங்களை யாரும் ஒதுக்கவில்லை; ஒதுக்கவும் முடியாது. கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது. மதுவை விற்று அரசாங்கம் நடத்தும் வெட்கக்கேடு வேறு எங்காவது இருக்கிறதா? டி.வி., ஆடு - மாடு, மிக்ஸி, கிரைண்டரை இலவசமாகக் கொடுத்துவிட்டு கல்வியையும் மருத்துவத்தையும் விற்கிறார்கள். இவர்களோடு தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்ளக்கூட பா.ம.க. தயாராக இல்லை.’’
‘‘2016 தேர்தலை எதிர்கொள்ள, விஜயகாந்த்தின் தே.மு.தி.க-வோடு கூட்டணி அமைக்க பல பெரிய கட்சிகளே போட்டியிடுகின்றனவே?’’
‘‘யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் முக்கியத்துவம் தரட்டும். அதைப்பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் கொள்கையை முன்வைத்து நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம்.’’
‘‘பி.ஜே.பி கூட்டணியில் இருக்கிறீர்களா?’’
‘‘தேர்தல் நேரத்தில் செய்யப்படும் உடன்பாடுகள் தேர்தலோடு முடிந்துவிடும். பி.ஜே.பி-யோடு நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு கொண்டு தேர்தலைச் சந்தித்தோம். சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் எங்கள் முடிவைச் சொல்லிவிட்டோம்.’’
‘‘கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலைமையிலான மக்கள் நல கூட்டியக்கத்தோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளதா?’’
‘‘எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு, அவர்கள் எங்களோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்பினால் தாராளமாக சந்திக்கலாம். ஆனால், அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். அதனால் அதற்கு வாய்ப்பில்லை. மேலும் அவர்களைக் காட்டிலும் கூடுதலாக நாங்கள் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறோம்.’’
‘‘வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பா.ம.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளதா?’’
‘‘வட தமிழகத்தில் மட்டுமல்ல, பா.ம.க-வுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. தற்போது மதுரையில் நடந்த மாநாடு தென் தமிழகத்தில் எங்களுக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டியது. அதுபோன்ற மாநாடுகளை திருச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் நடத்த உள்ளோம். மண்டல மாநாடுகள் முடிந்ததும் மாநில மாநாட்டை நடத்த உள்ளோம். இதுவரை நிழல் பட்ஜெட் வெளியிட்ட நாங்கள், விரைவில் நிஜ பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப் போகிறோம்.’’
No comments:
Post a Comment