சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sep 2015

அஜித்துக்கு தல என்கிற பெயரைக் கொடுத்தவர் முருகதாஸ்- அவர் பிறந்தநாளையொட்டி சிறப்புக்கட்டுரை

கஷ்டத்தின் விளிம்பிலிருந்து புகழின் உச்சத்திற்குச் சென்றவர்கள் பலர். இன்னும் சொல்லப்போனால் சாதனை படைத்த எல்லார் வாழ்க்கையிலும் சோதனைக் காலம் என நிச்சயம் ஒரு பகுதி இருக்கும். இதற்கு எடுத்துகாட்டாக நாம் கூறும் பல பெயர்கள் கொண்ட பட்டியலில் கட்டாயம் இருக்கும் பெயர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.திறமையும் விடாமுயற்சியும் ஒன்று சேர்ந்த மனிதர் .
கஜினி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தித் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கள்ளக்குறிச்சிக்காரர். அமீர் கான் முதல் இளையதளபதி விஜய் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். பாலிவுட்டில் 100 கோடி மைல்கல்லை தொட்ட வெகு சில இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. 


தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை முருகதாஸ் 9  படங்களை இயக்கியுள்ளார். 4 படங்களைத் தயாரித்துள்ளார். ஏறத்தாழ அனைத்துமே சூப்பர் ஹிட். அதிலும் தமிழில் இவர் இயக்கிய துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் வேறு மொழி பதிப்பில்லாமல் 100 கோடியைத் தொட்டவை.
முருகதாஸ் பல நடிகர்களுக்கு திருப்புமுனை படங்களை அளித்துள்ளார்.  ரமணா திரைப்படம் வசூலில் ஹிட் அடித்ததோடு நடிகர் விஜயகாந்திற்கு ஒரு முக்கியப் படமாக அமைந்தது. இது தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் தயாரித்த படங்களில் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் போன்ற சூப்பர் ஹிட் படங்களும் அடங்கும். இளையதளபதி விஜய்யால் ‘குட்டி மணிரத்னம்’ என்று அழைக்கப்படுபவர்.
 
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார். திருச்சியில் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போதும் மிமிக்ரி, ஓவியம் என கலைப் போட்டிகளில் கலக்குவாராம். அந்தக் காலகட்டத்தில் தான் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்தார்.
ஆனந்த விகடனில் அவை பிரசுரமாகத் தொடங்கியபோது தான் கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகரித்தது என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர முயற்சி செய்தும் இடம் கிடைக்காததால் தனது சினிமா வாழ்கையை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து தொடங்கியுள்ளார். அவரின் கீழ்  கிட்டத்தட்ட 13 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
அப்போது கிடைத்த அனுபவம் தான் அவர் படங்களில் அமையும் வலுவான வசனங்களுக்குக் காரணம் என கூறுகிறார் முருகதாஸ். இதன் பிறகு எஸ். ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அந்தக் கால கட்டத்தில் இவருக்கு ஊக்கம் அளித்து தட்டிக் கொடுத்தவர் இவர் தந்தை அருணாசலம். ஆனால் இவர் திரை உலகத்தில் சாதிப்பதை அவரால் பார்ப்பதற்குள் தவறிவிட்டார். தன் தந்தையாரின் நினைவாகத்தான் தன் பெயருக்கு முன்னால் ‘ ஏ.ஆர்’ என வைத்துக் கொண்டார்.

அஜித்குமாரை வைத்து இவர் இயக்கிய தீனா இவரது சினிமா வாழ்கையின் முதல் மைல்கல்லாக அமைந்தது. அந்த படத்தில் அஜித்திற்கு இவர் அளித்த ‘தல’ என்னும் பெயர், இன்று அவருக்கு ஒரு பட்டமாகவே அமைந்து விட்டது.
இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் ‘கமர்ஷியல்’ படங்கள் என்றாலும், வெறும் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல் நிச்சயம் ஏதேனும் ஒரு வசனமோ அல்லது காட்சியோ நம் மனதை தொட்டுப் பதிந்து விடும். சமுக பிரச்சனையை மிக தைரியமாக அழுத்தமாக ரசிக்கும்படி கொடுப்பத்தில் வல்லவர்.
இவர் படங்களில் அதிகம் மது அருந்தும் காட்சிகளோ இரட்டை அர்த்த வசனங்களோ இருப்பதில்லை. தன் குடும்பத்தோடு சென்று மற்ற படங்களை தியேட்டரில் பார்க்கும் போது இதுபோன்ற காட்சிகளைக் காணும்போது சங்கோஜமாக உணர்வதாகவும் அதனாலே தான் அதுபோன்ற காட்சிகளைத் தன்படத்தில் அதிகம் வைப்பதில்லை என்றும் கூறுகிறார்.
இவரின் இன்னொரு பெருமை இவரது உதவி இயக்குநர்கள்.  எந்த மேடைக்குச் சென்றாலும் தவறாமல் தன் உதவிஇயக்குநர்களின் பங்களிப்பை பதித்து விடுவார். மேலும் பேட்டிகளில் தனது உதவி இயக்குநர்கள் தான் என் வெற்றிக்குக் காரணம் என அடிக்கடி கூறுவார்.
எங்கேயும் எப்போதும் ‘ சரவணன்’ ,’அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘டிமாண்டி காலனி’ அஜய் ஞானமுத்து என இது வரை 5 இயக்குநர்கள் இவர் பட்டறையிலிருந்து வெளிவந்துள்ளனர்.

இன்னும் சில இயக்குநர்களின் படம் வெளிவரக் காத்திருக்கிறது. ஒரு இயக்குநர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதர். அதிக ஆடம்பரத்தை விரும்பாதவர். எத்தனை வெற்றிகளைக் கண்டாலும் தலைக்கனம் இல்லாமல் தன்னடக்கதோடு நடந்து கொள்வார்.

தனது 14 வருட இயக்குநர் பயணத்தில் பல வெற்றிக் கொடிகளை நாட்டியவர் வருங்காலத்தில் மென்மேலும் வெற்றிகளை நிலை நாட்ட வாழ்த்துகிறோம்!!


No comments:

Post a Comment