பக்கத்து வீட்டு ஒல்லி பெல்லி கல்லூரிப் பெண் போல இருக்கும் அன்னம் ஹஷீமிடம், பைக்கைக் கொடுத்தால் மிரளவைக்கிறார். அந்தரத்தில் பைக்கோடு பறப்பது, பைக் மீது நின்றுகொண்டு ஓட்டுவது, வீலி, பர்ன் அவுட், டிரிஃப்ட் என பைக் ஸ்டன்ட்டில் அசத்துகிறார். 20 வயதான அன்னம் ஹஷீம், தனது அப்பாச்சி RTR180 பைக்கை பொம்மையைப்போல டீல் செய்வதைப் பார்த்து, ஸ்டன்ட் பாய்ஸே கொஞ்சம் மெர்சலாகி இருக்கிறார்கள்.
‘‘நான் கான்பூர் பொண்ணு. சின்ன வயசில் அப்பாகூட பைக் பெட்ரோல் டேங்க்கில் உட்கார்ந்து போவேன். கியர், பிரேக் கன்ட்ரோலை எல்லாம் அப்பா பார்த்துக்கொள்ள... நான் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓட்டுவேன். வளர்ந்த உடனே அப்பாவே பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அப்பா எங்கே போனாலும் பைக்கில்தான் போவார். கான்பூரில் இருந்து ஆண்டுதோறும் நேபாளத்துக்கு பைக்கிலேயே போவார். என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அவரிடம் இருந்து ஆரம்பித்ததுதான் இந்த பைக் காதல்.
ப்ளஸ் ஒன் படிக்கும்போது, ஹோண்டா ஸ்டன்னர் பைக் வாங்கிக் கொடுத்தார் அப்பா. ஸ்டன்னர் பைக்கின் எடை குறைவாக இருக்கும் என்பதால்தான், இந்த பைக்கைத் தேர்வு செய்திருந்தார். இப்போ சொந்தமா ஒரு பைக் வந்துடுச்சு, பைக் ஓட்டுறதைத் தாண்டி எதாவது பண்ணணும்னு மண்டைக்குள்ள மணி அடிச்சது. டிவியில பைக் ஸ்டன்ட் நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். நாமும் ட்ரை பண்ணலாமேன்னு எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே பைக் ஸ்டன்ட்ஸ் ட்ரை பண்ண ஆரம்பிச்சேன்!’’ என்று பைக் ஸ்டன்ட்டராக மாறிய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘எனக்கும் எங்க அப்பாவுக்கும்தான் பைக் பிடிக்கும். எங்க அம்மா, நான் பைக் எடுக்கும்போதெல்லாம் முறைச்சிக்கிட்டே இருப்பாங்க. அப்பாகிட்ட இந்த பைக் ஸ்டன்ட் ஆசையைச் சொன்னேன். ‘விழுந்து அடிபடுறதுக்குத் தயாரா இருந்தா பண்ணு’னு சொல்லிட்டுப் போயிட்டார். எங்க ஊரில் உள்ள பசங்களோட சேர்ந்து, பைக் ஸ்டன்ட் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். ஒரு டீமா உருவாகி கான்பூரிலேயே பைக் ஸ்டன்ட் நிகழ்ச்சி நடத்தினோம். பெட்ரோல் டேங்க்கில் உட்கார்ந்து பைக்கின் முன்பக்கம் வானத்திலும், பின் டயர் தரையில் இருப்பதுமான ‘ஹை சேர் வீலி’ ஸ்டன்ட் செய்தேன். சில விநாடிகளில் பைக் கன்ட்ரோலை இழந்து வானத்தில் பறந்தது. அவ்வளவுதான் தெரியும். கண் விழித்துப் பார்க்கும்போது ஹாஸ்பிட்டலில் இருந்தேன். கை, கால் முட்டி என 12 தையல் போட்டார்கள்.
அம்மா இனிமேல் பைக்கையே தொடக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஸ்கூல் படிச்சு முடிச்சேன். பைக் ஸ்டன்ட்டர்ஸ் எங்க அதிகமா இருக்காங்கன்னு விசாரிச்சேன். புனேதான் ஸ்டன்ட்டுக்குத் தலை நகரம்னு சொன்னாங்க. உடனே காலேஜ் படிக்க புனேவுக்கு வந்துட்டேன். காலேஜ்ல சேர்ந்த அதேநேரம், இங்க ஒரு பைக் ஸ்டன்ட் கிளப்ல சேர்ந்துட்டேன். இங்கதான் ஸ்டன்ட்டை முழுமையா கத்துக்கிட்டேன்.
புனே, மும்பை, டெல்லி, திருவனந்தபுரம்னு இந்தியா முழுக்க பல இடங்கள்ல ஸ்டன்ட் ஷோ பண்ணிட்டேன். ஹை சேர் வீலி, ஹை சேர் என்டோ, ஸ்டாப்பி, பர்ன் அவுட்னு இப்போ எல்லா ஸ்டன்ட்டும் பண்றேன். என்னுடைய ஸ்டன்ட் ஷோவை டிவியில் பார்த்துட்டு எப்பவுமே திட்டிக்கிட்டு இருந்த அம்மா, இப்போ சப்போர்ட் பண்ணலைன்னாலும் ‘பார்த்து பத்திரமா பண்ணு’னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க!’’ என்றார் அன்னம்.
‘‘ஒரு பெண்ணா பைக் ஸ்டன்ட் பண்றது எவ்வளவு சவாலா இருக்கு?’’ என்று கேட்டபோது, ‘‘இந்த ஸ்டன்ட் ஷோவில் ஒரு பொண்ணும் ஓட்டப் போறாங்கன்னு தெரிஞ்சா, கூட்டம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே கூடும். சில பேர் பொண்ணு எப்படி ஸ்டன்ட் பண்றானு பார்க்க ஆர்வத்துல வருவாங்க; சில பேர் கிண்டல் பண்றதுக்காகவே வருவாங்க. ஸ்டன்ட் பண்ணிட்டு இருக்கும்போதே சத்தமா கத்தி கிண்டலும் பண்ணுவாங்க. அதை எல்லாம் கண்டுக்கிறது இல்லை!’’ என்று தைரியமாகச் சொல்கிறார் ஹஷீம்.
‘‘உங்களது அடுத்த டார்கெட் என்ன?’’ என்று கேட்டால், ‘‘இந்தியாவிலேயே ப்ரொஃபஷனலா பைக் ஸ்டன்ட் பண்ற ஒரே பொண்ணு நான்தான். என்னுடைய ரோல் மாடல் லியா பீட்டர்ஸன். அமெரிக்காவைச் சேர்ந்த லியா, சூப்பர் பைக் ஸ்டன்ட்டர். அவங்களை மாதிரி வரணும்ங்கிறதுதான் டார்கெட்.
இப்போ ஸ்டன்ட் ஷோ மூலமா கிடைக்கிற காசை எல்லாம் சேர்த்துக்கிட்டு இருக்கேன். விரைவில் கவாஸாகி நின்ஜா ZX6R பைக் வாங்கணும்கிறது என்னுடைய ஆசை. இன்னும் சில மாதங்களில் என்னை நின்ஜா ஸ்டன்ட்டரா பார்க்கலாம்!’’ என்றார் அன்னம்.
செம தில் பேபி!
No comments:
Post a Comment