''ஒரு ஊர்ல ஒரு ராஜா’னு கதையை ஆரம்பிச்சா, 'ஆங்... அவருக்கு ஒரு ராணிதானே’னு எல்லாரும் சொல்வாங்க. நம்ம கதையில் 'ஒரு ஊர்ல ஒரு ராஜா. ஆனா, அவருக்கு ஊரே கிடையாது’னு மாத்தி யோசிக்கிற மேஜிக்தான் ஸ்பெஷல். படத்துல விக்ரம் கேரக்டருக்கு என்ன பேர்னு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு தடவையும் ஒரு பேர் சொல்வார். 'பாண்டு... ஜேம்ஸ்பாண்டு’னு சொல்வார். இன்னொரு முறை, 'கோஹ்லி... விராட் கோஹ்லி’னு சொல்வார். 'ஹாசன்... கமல் ஹாசன்’னு சொன்னவர் அப்புறம், 'ரத்னம்... மணிரத்னம்’னு சொல்வார். இப்படி மாத்தி மாத்திச் சொல்லிட்டே இருக்கிறவர் க்ளைமாக்ஸ்லதான் தன் நிஜப் பேர் சொல்வார். இப்படிப் படம் முழுக்கப் பத்து நிமிஷத்துக்கு ஒரு பளிச் பன்ச் இருக்கும்'' - '10 எண்றதுக்குள்ள’ கவுன்ட்-டௌன் தொடங்குகிறார் 'கோலிசோடா’ கலக்கிய விஜய் மில்டன்.
''நான் முதன்முதலில் ஷாட் வெச்சு இயக்கிய ஹீரோ விக்ரம் சார்தான். அவர் கல்லூரிப் படிப்பு முடிச்சுட்டு நடிக்க வாய்ப்புத் தேடிட்டிருந்த சமயம், நான் திரைப்படக் கல்லூரி மாணவன். ஒரு புராஜெக்ட்டுக்காக குறும்படம் பண்ணேன். அதுக்கு ஹீரோ விக்ரம். ஆனா, அப்ப அவர் விக்ரம் இல்லை... கென்னி! போட்டோஷூட் முடிச்சுட்டு ஒருநாள் ஷூட் எல்லாம் பண்ணோம். ஆனா, பொருளாதார சிக்கல். படம் டிராப். அப்புறம் 'சாமுராய்’ படத்துல 'மூங்கில் காடுகளே...’ பாடலை நான் ஒளிப்பதிவு பண்ணப்ப சந்திச்சோம். 'கோலி சோடா’ படத்தைக் குடும்பத்தோடு பார்த்த விக்ரம், போன் பண்ணி வாழ்த்திட்டு, 'ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’னு கேட்டார். 'ஒரு டிரைவர் கதை இருக்கு’னு சொன்னேன். உடனே வரச் சொன்னார். அவர் வீட்ல உட்கார்ந்து கதை சொல்லி முடிச்சதும் அவர் முகத்துல திருப்திப் புன்னகை. அந்த நிமிஷம்தான் '10 எண்றதுக்குள்ள’ கவுன்ட்-டௌன் ஆரம்பிச்சது!''
''விக்ரம்-விஜய் மில்டன் கூட்டணியில் ஏ.ஆர்.முருகதாஸ் எப்படி வந்தார்?''
'' இந்தக் கூட்டணியில் முதல்ல சேர்ந்ததே அவர்தான். 'கோலிசோடா’ படத்துக்குப் பிறகு முருகதாஸ் சார் தயாரிப்பில் படம் பண்ண கமிட் ஆகியிருந்தேன். டி.ராஜேந்தர் சார்தான் ஹீரோ. எல்லாம் பேசி முடிச்சு ஷூட்டிங் போகலாம்னு வேலைகள் நடந்துட்டிருந்தப்பதான் விக்ரம் சார் கதை கேட்டார். அவருக்குக் கதை பிடிச்சிருக்குன்னு சொன்னதும் முருகதாஸ் சார் சந்தோஷமாகிட்டார். 'அந்தப் படத்தையும் நாமளே பண்ணுவோம்’னு விக்ரம்கிட்ட பேசி இந்த புராஜெக்ட் ஆரம்பிச்சோம். முழுப் படமும் முருகதாஸ் இப்போ பார்த்துட்டார். அவர் வெரி வெரி ஹேப்பி!''
''விக்ரம், முருகதாஸுக்குப் பிடிச்ச அந்தக் கதை என்ன? 'ரோடு மூவி’னு கேள்விப்பட்டோமே..?''
''ஆமா! இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்குச் செல்லும் விக்ரம் - சமந்தாவின் பயணம்தான் படம். சென்னையில் தொடங்கி, நேபாளம் எல்லை வரை போகும். கதை என்னன்னு தியேட்டர்ல பார்த்துக்கங்க. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புமே செம சவால் சுவாரஸ்யம். நேபாளத்தில் 'பக்தாபூர்’னு ஒரு இடத்துல 24 நாட்கள் ஷூட் பண்ணோம். நாங்க படப்பிடிப்பு முடிச்சுட்டுத் திரும்பின எட்டாவது நாளே அங்க மிகப் பெரிய பூகம்பம். பக்தாபூர்தான் பூகம்பத்தின் மையப்புள்ளி. நாங்க ஷூட் பண்ணின இடம், நினைவுச் சின்னங்கள், பழங்காலக் கட்டடங்கள் எல்லாமே தரைமட்டம் ஆகிருச்சு. அதை எல்லாம் கடைசியாப் படம்பிடிச்சது அநேகமா நாங்களாத்தான் இருக்கும். ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர்ல நடக்கிற ஒட்டகச் சந்தை உலகப் பிரபலம். அங்கே படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கலை. இயல்பா படம் பிடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். சந்தையில் அன்னைக்கு விற்பனைக்கு வந்தது 22 ஆயிரம் ஒட்டகங்கள். விக்ரம், சமந்தாகிட்ட சீன் சொல்லி ரிகர்சல் பார்த்து கூட்டத்துல இறக்கிவிட்டோம். மூணு 5டி கேமராக்கள் மூலம் ஃபாலோ பண்ணோம். ஒரு லோக்கல் அரசியல்வாதியின் பையில் இருந்து, விக்ரம் பர்ஸை அடிக்கணும். இதுதான் சீன். விக்ரம் பர்ஸை அடிச்சுட்டார். ஆனா, ஷூட்டிங்னு தெரியாம விக்ரமை உண்மையான திருடன்னு நினைச்சு, ஒரு ஒட்டக வியாபாரி பிடிச்சுக்கிட்டார். களேபரம் ஆகிருச்சு. உண்மையை விளக்கி ஷூட்டிங்கை முடிச்சுட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு. இப்படி ஒவ்வொரு நாள் அனுபவமுமே செம சினிமா!''
''விக்ரமுக்கு இதில் என்ன வேலை?''
''ஜாலியா இருக்கிறதுதான் வேலை! ஹீரோ ஒரு 'டோன்ட் கேர் மாஸ்டர்’. எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டான். ஆனா, அவனுக்குள்ள ஒரு பெரிய சோகம் இருக்கும். எல்லா சாகசங்களையும் செய்யக்கூடியவன். 'சிம்பிளா இருக்கணும்... ஆனா நச்னு இருக்கணும்’னு மட்டும் சொன்னேன். கழுத்துல ஒரு துணி, ஒரு செயின், கையில வித்தியாசமான கிளவுஸ்னு எளிமையும் இனிமையுமா வந்தார். 'ஐ’ கெட்டப் மாற்றங்களின் களைப்பை மொத்தமா துடைச்சுட்டு அழகா, இளமையா வந்து நின்னார். இந்தப் படத்துக்கு சிம்பிளா இருந்தா போதும். ஆனா, இப்பவும் ஜிம், டயட், ஃபிட்னஸ் பயிற்சிகள், கேரக்டருக்கான ஹோம் வொர்க்னு அவர் மெனக்கெடுறதைப் பார்த்தா... அவரை ஒரு சினிமா தீவிரவாதினுதான் சொல்லணும்!''
''விக்ரம் இருக்கிறப்ப, ஸ்கோர் பண்ண சமந்தாவுக்கு என்ன சவால் வெச்சிருக்கீங்க?''
''சில படங்கள்ல ஹீரோயின் வந்து நின்னா போதும். அவங்க பெர்ஃபார்ம் பண்ணணும்னு கட்டாயம் கிடையாது. ஆனா, இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு 10 மடங்கு வேலைகள் இருக்கு. கெட்டப் மாற்றத்துல ஆரம்பிச்சு சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூடப் பெரிசா உழைக்க வேண்டியிருக்கும். இத்தனைக்கும் படத்துல டூயட் கிடையாது; குரூப் டான்ஸ் கிடையாது; ஃபாரின் சாங் கிடையாது. காதலைப் பத்திப் பேச மாட்டாங்க; 'ஐ லவ் யூ’ சொல்லிக்க மாட்டாங்க. ஆனா, லவ், டூயட் இருக்கிற படத்தைவிட இதுல காதல் அதிகமா இருக்கும். காரில் சர்க்கஸ் காட்டும் விக்ரமுக்கு, கதைப்படி சைக்கிள், பைக்னு டூ வீலர் ஓட்டத் தெரியாது. கத்துட்டிருப்பார். அதை ஒருநாள் சமந்தா பார்த்துடுவாங்க. 'டேய்... நாலு வீல் இருக்கிறதால கீழ விழ மாட்டோம்கிற தைரியத்துல நீ கார் ஓட்டிட்டிருக்க... தைரியம் இருந்தா டூ வீலர் ஓட்டு பார்ப்போம்’னு செம பரேடு விடுவாங்க. இப்படிப் படம் முழுக்க சமந்தாவுக்கு செம ஸ்கோப். ஒவ்வொரு சீன் முடிச்சதும், 'படத்துல சமந்தாதான் ஹீரோ. நான் சும்மா சப்போர்ட் பண்றேன்’னு சொல்லி விக்ரம் ஓட்டுவார். சமந்தாகிட்டயும், 'படத்துல நீ சூப்பர். எல்லா அவார்டும் உனக்குத்தான்’னு செமத்தியா கலாய்ப்பார்!''
''பசுபதி, ராகுல் தேவ், அபிமன்யூ சிங்னு படத்தில் பவர்ஃபுல் வில்லன்கள் நிறையப் பேர் இருக்காங்களே~?''
''ஒரு ஹீரோ, ஒரு வில்லன்னு இருந்தா, படம் மெக்கானிக்கலா இருக்கும். அதனால விதவிதமான வில்லன்கள்... வித்தியாசமான சவால்கள். பசுபதிகிட்ட, 'நீங்க கெட்டவன் கிடையாது சார், கெட்டவனா நல்லவனானு சந்தேகத்துல இருக்கிற கெட்டவன்’னு சொன்னேன். கச்சிதமா கேட்ச் பண்ணிட்டார். ராகுல் தேவ் முதல் ரெண்டு நாட்கள் பயங்கர ஹைபிட்ச்ல கத்தி டயலாக் பேசிக்கிட்டே இருந்தார். 'சத்தம் வேணாம் சார்... சும்மா பாருங்க’னு சொன்னேன். 'ஏன்?’னு கேட்டார். 'டோன்ட் ஆக்ட். ஜஸ்ட் பிஹேவ்’னு சொன்னேன். அவருக்குப் புரிஞ்சிருச்சு. மறுநாள்ல இருந்து, 'ஐ லவ் மில்டன்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டார். 'மில்டன் சார்... ராகுல் தேவ் உங்களைக் காதலிக்கிறாராம். என்ன சார் நடக்குது?’னு சமந்தாவே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. கதை சென்னையில நடக்கும்போது சென்னை ஆர்ட்டிஸ்ட் மட்டும்தான் இருப்பாங்க. வண்டி ஆந்திராவுக்குள்ள நுழைஞ்சதும் அந்த ஊர் வில்லன், அந்த ஊர் காமெடியன் இருப்பாங்க. அப்படித்தான் படத்துக்குள்ள சார்மி வந்தாங்க. வண்டி மும்பைக்குப் போனால் அபிமன்யூ சிங், அங்க உள்ள காமெடியன் இருப்பாங்க. இப்படி படத்தோட பேக்கிரவுண்டு மாறும்போது, ஆட்களும் மாறுவாங்க.
நடிகர்கள் அளவுக்கு டெக்னீஷியன்களும் படத்துக்கு பெரிய பலம். அதுவும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சார்... எடிட் சூட்ல இருந்துகிட்டே ஒவ்வொரு ஃப்ரேம்லயும் மேஜிக் பண்ணணும். அதுல பின்னிட்டார். ஒவ்வொரு பிரதேசத்துக்குமான மியூசிக் தேவைப்பட்டது. அப்பதான் படத்துல கமர்ஷியல் சாயல் இருக்காது. அந்தச் சவாலை இமான் அடிச்சு தூள் பண்ணிட்டார். இவங்களோட சேர்த்து லிங்குசாமி சாருக்கும் பாண்டிராஜுக்கும் நன்றி சொல்லணும். அவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா 'கோலிசோடா’ இல்லை. 'கோலி சோடா’ இல்லைன்னா, '10 எண்றதுக்குள்ள’ இல்லை!''
'' 'கோலிசோடா’வும் ஓடுது. 'பாகுபலி’யும் பட்டையைக் கிளப்புது. ஆனா, தியேட்டர் கிடைக்கலை, யூனியன் பிரச்னை, சேட்டிலைட் ரைட்ஸ் வாங்க ஆள் இல்லைனு சினிமாவில் பல சிக்கல்கள்... ஏன்?''
''சினிமா ஒரு பெரிய மாற்றத்தின் நுழைவாயிலில் இருக்கு. நிச்சயம் இது சினிமாவுக்குச் சோதனையான காலகட்டம். கும்பல் கும்பலா வண்டி கட்டிட்டுப்போய் படம் பார்த்த கோல்டன் பீரியடும் இல்லை; இனிமேல் வரப்போற அதிநவீனத் தொழில்நுட்பக் காலமும் இல்லை. கூடிய சீக்கிரமே வெள்ளித்திரையின் எண்ணிக்கை குறைஞ்சு தனிநபர் திரைகள் அதிகரிச்சுடும். கரெக்ட்... செல்போன் ஸ்க்ரீன்தான் இனி சினிமா திரையா இருக்கும். நேரடி வாடிக்கையாளர்தான். அது வந்துட்டா, சினிமாவுக்கான பொற்காலம் திரும்ப வந்துடும்னு தோணுது. இன்னைக்கு தியேட்டர் மூலம் வசூலாகிறதைவிட, பல மடங்கு வருமானம் வரலாம். ஆனா, அதுக்கு இன்னும் சில வருஷங்கள் ஆகலாம். அதுவரை இந்த மாதிரியான பிரச்னைகளைப் பத்தி பேசிப் புலம்புறதைத் தவிர வேற வழி இல்லை!''
''விக்ரமின் மகன் துருவ் நடிக்க வர்றார்னு சொல்றாங்க... அப்படியா?''
''துருவ், விக்ரம் சார் பையன்... சொல்லவா வேணும்! அப்பா மாதிரியே திறமைசாலி. ஒரு டப்ஸ்மாஷ் வீடியோ பண்ணியிருக்கார். அதாவது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்னு பல மொழி சினிமாக்களில் இருந்து நச் நச் காட்சிகளை எடுத்து, அவரே டப்ஸ்மாஷ் பேசி ஒரு ஷார்ட் ஃபிலிம் மாதிரி எடிட் பண்ணியிருக்கார். வெவ்வேற படங்களின் வெவ்வேறு வசனங்களை பக்காவா இணைச்சு ஒரு மினி படம். செம கிரியேட்டிவ். திறமையான பையன். ஆளும் அழகன். கண்டிப்பா நாலைஞ்சு வருஷத்துல பெரிய ரேஞ்சுல இருப்பார். ஆனா, அவர் சினிமாவுக்கு எப்ப, யார் மூலமா வருவார்னு விக்ரம் சார்தான் சொல்லணும்!''
No comments:
Post a Comment