''நான் இதுவரைக்கும் 13 படங்கள் பண்ணியிருக்கேன். அதுல 'காதல் மன்னன்’, 'பார்த்தேன் ரசித்தேன்’, 'ஜே! ஜே!’ இதெல்லாம் காதல் ஜானர். 'அமர்க்களம்’, 'அட்டகாசம்’, 'அசல்’... ஆக்ஷன் ஜானர். இப்போ 'ஆயிரத்தில் இருவர்’ எனக்கு 14-வது படம். இதில் ஹீரோவுக்கு ரெண்டு கேரக்டர். அந்த ரெண்டு கேரக்டரையும் எவ்வளவு யதார்த்தமா வித்தியாசப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முயற்சி பண்ணியிருக்கேன்.
ரெட்டை வேஷம் என்பது, ரசிகர்கள் தெரிஞ்சே சந்தோஷமா ஏமாறுகிற ஒரு விஷயம். பி.யூ.சின்னப்பாவில் ஆரம்பிச்சு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜித்னு பல நட்சத்திரங்கள் எப்படி எல்லாம் ஏமாத்துவாங்கனு நாம பார்த்திருக்கோம். ஆனா, ஒரு பெரிய ஸ்டார் படத்தில் ரெட்டை வேஷம் பண்றதுக்கும், வினய் மாதிரியான வளர்ந்துவரும் ஒரு நடிகரை வெச்சுக்கிட்டு ரெட்டை வேஷம் பண்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அப்படிப் பார்த்தா, இது என் சினிமா கேரியர்ல புதிய, பெரிய முயற்சி'' - மென்மையாக, தன்மையாகப் பேசுகிறார் இயக்குநர் சரண்.
''ஏன் நடுவுல அஞ்சு வருஷ இடைவெளி?''
''இந்தி படம் பண்ணலாம்னு மும்பையிலயே தங்கிட்டேன். ஆனா, பலப்பல காரணங்களால் அது தள்ளிப்போயிட்டே இருந்தது. சரி... இந்தி படம் அப்புறமா பண்ணிக்கலாம்னு, இந்தப் படத்தை ஆரம்பிச்சுட்டேன். ஒரு விஷயம் புதுசா சிக்கியது. இந்தப் படத்தில் ஆறு லேயர்கள் வெச்சிருக்கேன். அதில் உள்ளுக்குள்ளே வளையம் மாதிரி திரைக்கதை ஒண்ணை ஒண்ணு இழுத்துட்டு வரும். 'அமர்க்களம்’ படத்தில் ரகுவரன் மகன்தான் அஜித்னு ரசிகர்களை கடைசிவரை நம்பவெச்சுட்டு, கடைசியில 'இல்லை... ஷாலினிதான் அவர் பொண்ணு’னு ட்விஸ்ட் காட்டியிருப்பேன். அதில் ரெண்டு லேயர்கள்தான். இந்தப் படத்தில் அப்படி ஆறு லேயர்கள். மொத்தக் கதையும் ஆறு பெண்களைச் சுற்றிவரும். இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் வடிவேல் நடிக்க ஆர்வமா இருந்தார். அவர் ஹீரோவா நடிச்ச படம் ரிலீஸ் ஆகிறவரைக்கும் வேறு படத்துல நடிக்கக் கூடாதுனு அவரோட அக்ரிமென்ட் இருந்தது. அதனால் அவரால் நடிக்க முடியலை... எங்களால காத்திருக்க முடியலை. ஸாரி வடிவேல் சார். படத்தில் டாட்டூக்களுக்கு பெரிய ஸ்பேஸ் உண்டு. ஹீரோயின் உடம்பில் முக்கியமான இடத்தில் ஒரு டாட்டூ உண்டு. அது சாதாரண டாட்டூ இல்லை; சுவிஸ் சீக்ரெட் கோட் உள்ள டாட்டூ. இப்படிப் படம் முழுக்க நிறைய கலர்ஃபுல் விஷயங்கள் உண்டு.''
''அஜித்தை வெச்சு நீங்க இயக்கியதில் 'அசல்’ படம் பெருசா போகலை... அதில் எதுவும் வருத்தம் உண்டா?''
''அந்தப் படம், பார்க்க ஐரோப்பிய ஃபீல்ல இருக்கணும்னு திட்டமிட்டுப் பண்ணது. அப்போ எல்லாரும் படங்களில் பன்ச் டயலாக் பேசிட்டு இருந்தாங்க. அந்தச் சமயம்தான் அஜித் சார் அதிரடியா தன் ரசிகர் மன்றங்களைக் கலைச்சார். படத்துல பன்ச் டயலாக் வேணாம்னு 'அசல்’ படத்துக்கு 'பவர் ஆஃப் சைலன்ஸ்’னு கேப்ஷன் கொடுத்தார். ஒரு மாஸ் நடிகர் ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாரான சமயம் அது. அதனால் அந்தப் படத்தில் வழக்கமான மசாலாக்களைக் குறைச்சுட்டோம். அஜித் சாரின் முந்தைய படங்களைப் பார்த்தவங்களுக்கு, 'அசல்’ படத்தில் கொஞ்சம் வேகம் குறைவா இருக்கும். ஆனா, அதுவும் செம ஸ்டைல் சினிமாதான்!''
''நிறையக் கடன் பிரச்னைகளில் சிக்கிட்டு இருந்தீங்களே... அதுல இருந்து வெளியே வந்தாச்சா?''
''சினிமாவில் கடன் இல்லாம யாரும் இல்லை. எவ்வளவு கடன் இருக்குங்கிறதுதான் மேட்டர். இப்போ கொஞ்சம் கொஞ்சமா அதிலே இருந்து வெளியே வந்துட்டேன். ஆனா, நம்பிக்கை துரோகத்தின் வலி மட்டும் இன்னும் போகலை. இருந்தாலும் அதான் என்னை ஓடவெச்சுட்டே இருக்கு!''
No comments:
Post a Comment