சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Sept 2015

ஆர்.எஸ்.எஸ் வளையத்தில் பி.ஜே.பி.!

டெல்லியில் நடந்த அதிரடி ஆலோசனை
‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்கிற தமிழ் பழமொழிக்கு இணையாக ஆங்கிலத்தில், cat is out of the bag என்பார்கள். சமீபத்தில் மத்திய அமைச்சர்களும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் என்கிற ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தியபோதுதான் எதிர்க் கட்சிகள் இப்படி விமர்சனம் செய்தன.
‘‘ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் பி.ஜே.பி இல்லை என்று கூறப்படுவது பொய் என இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்தப் பழமொழியையும் சொல்லி வருகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் டெல்லி வசந்த் குஞ்ச்சில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சொந்தமான மத்தியாஞ்சல் பவனில்தான் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-யினருக்கிடையே பரபரப்புக் கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், மகேஷ் சர்மா, ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா, அனந்த குமார், கெலாட் போன்ற பல அமைச்சர்களும் கட்சித் தலைவர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தக் கூட்டத்தில் ஆஜராகி ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக்கள் முன்பு அமர்ந்தனர். ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் பி.ஜே.பி-க்கும் ஒருங்கிணைப்பாளாராக இருப்பவர் கிருஷ்ண கோபால். இவர் மூலம்தான் இந்த samanvay Biathak என்கிற ஒருங்கிணைப்பு அமர்வு கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான மோகன் பாகவத் மட்டுமல்ல, மற்ற தலைவர்களான சுரேஷ் பையாஜி ஜோஸி, சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹொசபலே போன்றவர்களுடன் 15 சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் பங்கேற்று, மத்திய ஆட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு உள்ளனர்.

ஏன் இந்த சந்திப்பு?
எல்லாம் பீகார்! பீகார் சட்டமன்றத் தேர்த​லில் பட்டிதொட்டிகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பரிவாரங்கள் முழு மூச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். மோடிக்கு இந்தத் தேர்தல் ஒரு தன்மானப் பிரச்னை. இதன்விளைவு பரிவாரங்களை நோக்கி மோடியும் அமைச்சர்களை நோக்கி பரிவாரங்களும் அமர்ந்து கலந்துரையாடல் செய்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியது 15 நிமிடங்கள்தான். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் 40 நிமிடங்கள் பேசினார். இவர்கள் பேச்சுகள் சமரசத்துக்கான காரணத்தைக் கொடுக்கிறது. ‘‘நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நமக்கு வெற்றி. நாம் மோதிக்கொண்டால், அது மற்றவர்களுக்கு வெற்றி’’ என்கிறார் மோகன் பாகவத். இந்தப் பேச்சைக் கேட்ட பிரதமர், ‘நான் உங்களுடைய ஆள்(சுயம்சேவக்)தான். நான் கீழே இறங்கி உங்களைத் தேடி வருவேன். ஆனால், நாங்கள் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறோம் என்பதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும். எங்களை வெளிப்படையாக விவாதிக்காதீர்கள். நான் உங்களுடைய பிரதிநிதிதான்’’ என்று பிரதமரும் பதில் சொல்லியுள்ளார். ஆக, இருதரப்பும் ஒரு நாடகத்தில் குதித்து இருக்கிறது.
சங் தரப்பில், ‘‘நாங்கள் மோடிக்கு முட்டுக்கட்டை​யாகவும் தடையாகவும் இருக்க விரும்பவில்லை. பி.ஜே.பி ஆட்சிக்கு வர மோடியின் பாப்புலாரிட்டி உதவியது என்றால், எங்களது கடினமான உழைப்பும் வெற்றிக்கு உதவியது என்பதே உண்மை. அதே உழைப்பை இப்போது பீகாரிலும் கொடுப்போம். இருதரப்பும் முறையான வழிமுறைகளைக் கையாளவும் கட்சிக்கும் சங்கிற்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவே இப்போது கூடினோம்’’ என்கின்றனர்.
நாங்கள்தான் அவர்கள்!
எதிர்க் கட்சிகள் எழுப்பி வரும்  கேள்வி​களுக்கு  ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே பதிலளித்தார். ‘‘நாங்கள் ஒன்றும் சட்டவிரோத அமைப்பு அல்ல. எங்களோடு பேசுவது விவாதிப்பது தவறும் அல்ல. ராஷ்டிரிய சுயம் சேவக் சங் என்பது 90 வருட அமைப்பு. மூன்று முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம். நாட்டிலுள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு என்னென்ன பிரச்னைகள் உண்டோ, அதுமாதிரிதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் உண்டு. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அந்த அந்தஸ்தை மறைமுகமாகப் பெறுகிறது. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறத்தான் ஜனசங்கம் கட்சி உருவாகி, பின்னர் பாரதிய ஜனதா கட்சி ஆனது. இதனால் ஆர்.எஸ்.எஸ் தவிர்க்க முடியாத அமைப்பாகவும் உருவாகியுள்ளது. நாடு தழுவிய தொழிலாளர்கள் அமைப்பைக் கொண்டது பி.எம்.எஸ் என்கிற பாரதிய மஸ்தூர் சங்கம். சிறு தொழில்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு லகு உத்யோக் பாரதி, பொருளாதார நடவடிக்கைகளுக்கு சுதேசி ஜாக்ரன் மன்ச், சுமார் 25,000 பள்ளிகளை நிர்வாகிக்கும் அமைப்பு வித்ய பாரதி, விவசாயிகளுக்கு பாரதிய கிசான் சங்கம், பழங்குடி இன மக்கள் பணிகளுக்கு வனவாசி கல்யாண் ஆசிரமம், மாணவர்களுக்கு ஏ.பி.வி.பி., சமூகப் பணிகளுக்கு சேவா பாரதி, கோயில்களைக் கட்டவும் பசுக்களைப் பாதுகாக்கவும் வி.ஹெச்.பி., இஸ்லாமியர்களுக்குரிய பயிற்சிக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச், அதிரடிப் பணிகளுக்கு பஜ்ரங் தள்’’ என்று அனைத்து அமைப்புகளின் பிரிவுகளையும் பட்டியல் இட்டுள்ளனர்.
கட்டளைகளும் கடமைகளும்!
நகர்ப்புறத்துக்கு மக்கள் குடிபெயர்வதைத் தடுக்கக் கோரிக்கை வைத்தனர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். கிராமப்புறங்களில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகளை செய்து இந்தக் குடிபெயர்வைத் தடுக்கவும் கோரினர். அன்றைய தினம் பெருவாரியாக அலசப்பட்டது, மனிதவள மேம்பாட்டுத் துறை.
ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் கல்வி நிறுவனங்களில் காங்கிரஸ்காரர்களும் இடதுசாரிகளும் தொ​டர்ந்து ஆக்கிரமித்து வருவது பற்றி அமைச்சர் ஸ்மிருதி இரானியைத் துருவினர். குறிப்பாக, மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிகளுக்குக் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் காயை நகர்த்தியது. ஆர்.எஸ்.எஸ்-ஸில் கல்வி பண்பாடுகளைக் கவனிக்கும் மற்றொரு அமைப்பு சரஸ்வதி சிசு மந்திர். இதன் தலைவரான தினநாத் பத்ரா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கல்வித் துறையில் கொண்டுவரும் மாற்றங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ‘புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் பெற விரைவில் வருவதாக’ ஸ்மிருதி இரானியும் சங் காரியகர்த்தாக்களுக்கு உறுதி கொடுத்துள்ளார். இதற்கு சங் தலைவர்கள், ‘‘கல்வியை நவீனப்படுத்தலாம். ஆனால், அதில் இந்தியத்துவம் தேவை’’ என்று ஸ்மிருதிக்கு கட்டளை போட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பற்றி பேசியது என்ன?
எல்லைப்பகுதியில் குறிப்பாக பங்களாதேஷ்​வாசிகள் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் வந்து குடியேறுவதைத் தடுக்கவும், அங்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி குடிபெயர்வைத் தடுப்பது போன்ற நடவடிக்கையோடு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடப்பது குறித்தும் விவாதித்தனர். பாகிஸ்தானைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகக் கூறியது வேறு. பத்திரிகைகளில் வெளியானது வேறு.
பத்திரிகையில், ‘இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றதோடு, கௌரவர்களும் பாண்டவர்களும் சகோதரர்கள்’ என்றது ஆர்.எஸ்.எஸ்.
ஆனால், உள்ளே நடந்த கூட்டத்தில் கூறிய கருத்துகள் வேறு. ‘‘பாகிஸ்தானை எந்தக் காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். அமெரிக்கா சொல்லியது என்பதற்காக  பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். ஆனால், அதில் பலனே இல்லை. பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை நிறுத்துவது கிடையாது. சமீபத்தில் பஞ்சாப் வழியாக தீவிரவாதிகளையும் அனுப்புகிறது. அவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். அந்த நாட்டின் மீது எப்போது கவனமாக இருக்கவேண்டும்’’ என்பதை பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அலாட் செய்து ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோளை வைத்தது.

இனி இப்படித்தான்!
‘மத்திய அரசின் கொள்கைகள், நிர்வாகம், நியமனங்கள், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள்... என இதில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதால் காங்கிரஸும் இடதுசாரிகளும் கொதித்தெழுந்துள்ளன. ‘ஆர்.எஸ்.எஸ்-தான் மத்திய ஆட்சியின் ரிமோட் கன்ட்ரோல். இது அமைச்சர்களின் ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிய செயல். நாட்டை ஆள்வது டெல்லி அல்ல; நாக்பூர் (ஆர்.எஸ்.எஸ் தலைமையகம்). அங்கிருந்துதான் கட்டளைகள் வருகின்றன” என விமர்சனங்களை வைத்தனர்.
இப்படித்தான் இன்னும் 3 வருடங்களைக் கடக்க வேண்டி இருக்கிறது.


No comments:

Post a Comment