சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Sep 2015

பேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர் உகுத்தார் பிரதமர் மோடி

மெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, ஃபேஸ்புக் தலைமையகமான மெல்னோ பார்க்கில், அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர்  மார்க் ஸகர்பெர்க்குடன்  ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தியாவை 20 ட்ரில்லியன் பொருளாதார இயங்குதளமாக மாற்றுவதே இச்சந்திப்பின் மூலம் தெரிவிக்க விரும்பும் தனது இலட்சியம் என்றார் பிரதமர்.

இச்சந்திப்பை பொதுஇடத்தில் வைத்துக்கொள்ளச் சம்மதித்தத் மோடி, ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் விருப்பம் தெரிவித்தார். அந்தக் கேள்வி- பதில் கலந்துரையாடலின் விவரங்கள் இதோ: 
மார்க் ஸகர்பெர்க்: இந்திய அரசியலிலும், அரசு செலுத்துவதிலும், திட்டங்கள் தயாரிப்பதிலும், சமூக வலைதளங்களின் பங்களிப்பு என்ன?

பிரதமர் மோடி:
 'ரியல்டைம் நியூஸ்’ எனப்படும் உடனடிச் செய்திகளைப் பகிர்வதில் பெரும் பங்காற்றுகின்றன சமூக வலைதளங்கள். முன்பெல்லாம் ஆட்சியாளர்கள் தவறு செய்தால், மக்கள் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்; தற்போது ஐந்து நிமிடங்களில் மக்கள் தீர்ப்பளித்து விடுகின்றனர்; என் செயல்பாடுகளையே கூட, சமூக வலைதளங்களில் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர். பன்னாட்டுக் கொள்கைகளிலும் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இஸ்ரேல் பிரதமரை நான், ஹீப்ரூ மொழியில் வாழ்த்தியதும், அவர் எனக்கு ஹிந்தியில் நன்றி தெரிவித்ததும் சமூக வலைதளங்களின் சாதனையே.

வீர் கஷ்யப் (பாபாஜாப்ஸ் நிறுவனம்): டிஜிட்டல் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், இந்தியாவில் டிஜிட்டல் கட்டுமானங்களுக்காக நீங்கள் செய்யவிருக்கும் முதலீடு என்ன?
பிரதமர் மோடி:  இன்றைய சூழலில், ‘ஹை-வே’ எந்த அளவு முக்கியமோ அதே அளவு ‘ஐ-வே’ வும் முக்கியம். அதாவது, வெளியுலகக் கட்டுமானங்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இணையக் கட்டுமானம் விளங்குகிறது.
இந்தியாவிலுள்ள 6,00,000 கிராமங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ‘ஆப்டிக் ஃபைபர்’ வசதியுடன் கூடிய இணையதள வசதி ஏற்படுத்தித் தருவதே எனது திட்டமாகும். பணத்தை எங்கு முதலீடு செய்வதென்று தெரியாமலிருக்கும், உலகப் பெரு முதலீட்டாளர்களுக்கு நான் இந்தியாவின் விலாசத்தை வழங்குகிறேன்.

டி.எஸ். கரோனா (அமெரிக்க வணிகர்): 'மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றி அடையும் என்று நினைக்கிறீர்களா?
பிரதமர் மோடி:  தடம்புரண்ட இரு சக்கர வாகனத்தைத் திருப்புவது எளிது; ஒரு பெரிய ரயிலைத் தடம் திருப்புவது கடினம்; அரசாங்கத்திற்கு கொஞ்சம் அவகாசம் தேவை. 40 ஆண்டுகளாக வங்கிக் கணக்குக் கூட இல்லாத, 180 மில்லியன் குடிமக்களுக்கு, இந்த அரசு, 100 நாட்களுக்குள் வங்கிக் கணக்குத் திறந்து கொடுத்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் 3டி மந்திரத்தை நம்புகிறோம். அது முறையே, டெமாகிரஃபி, டெமாக்ரசி, டிமாண்ட் அதாவது, மக்களியல், குடியரசு மற்றும் பொருளாதாரத் தேவை இங்கு நிறைந்திருக்கிறது.

நான்காவது ’டி’ யாக ‘டி-ரெகுல்ரைசேஷன்’  அதாவது, முறைச்சுருக்குதல் யுக்தியைக் கையாள்கிறேன். இதன் மூலம் அரசாங்கத்தைச் சுருக்கி, வளர்ச்சியை மேம்படுத்துவேன். எனவே ’மேக் இன் இந்தியா’ திட்டம் நிச்சயம் வெற்றியுடன் நிறைவேறும்.

இரஞ்சனா குமாரி (
முனைவர்)பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்கு என்ன?
பிரதமர் மோடி:  உலகிலேயே, பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாடு நம் பாரத பூமிதான். 50 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கும் இந்த மனித சக்தியை, வீட்டிற்குள் பூட்டி வைக்க இயலாது. ‘பேட்டி பசாஓ, பேட்டி படாஓ’ திட்டத்தின் மூலம் எத்தனையோ கிராமத்துப் பெண்கள் கல்வி பெற்று முன்னேறி வருகின்றனர். அடுத்த கட்டமாக, முடிவெடுக்கும் பொறுப்புகள் இருக்கும் பணியிடங்களுக்குப் பெண்கள் வர வேண்டும் என்பதே என் கனவு.
மார்க் ஸகர்பெர்க்: எனக்கும், உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. நாம் இருவருமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள்; எனவேதான் என் தாய்- தந்தையரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் தாயைப் பற்றிய உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?
பிரதமர் மோடி: முதலில் உங்கள் தாய்க்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தையே இணைக்கும் ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக அவர் பெருமைப்பட வேண்டும். என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் இரண்டு பேரை மறக்க முடியாது. ஒன்று ஆசிரியர்; மற்றொன்று தாய்.
என் தாய்தான் என் வாழ்வின் ஆக்க சக்தி. சிறிய வயதில், நான் டீ விற்றுக்கொண்டிருந்தேன். இன்று உலகின் மாபெரும் குடியரசின் பிரதமராக வீற்றிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் என் தாய்தான். என்னைப் பொறுப்புடன் வளர்ப்பதற்காக அவர் உழைக்காத நாளேயில்லை.
(இந்தச் சொற்களை உதிர்க்கையில் தன்னையும் மீறித் தொண்டை செருமி, கண்ணில் சிறு துளிகள் பனிக்கின்றன. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதிலளிக்கிறார் பிரதமர்.)


என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லுவார். தள்ளாத இந்த வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். தினந்தோறும் செய்திகள் கேட்பார். என் தாய் மட்டுமல்ல; நம் நாடு முழுவதும் இலட்சக்கணக்கானத் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகின்றனர். அந்தத் தாய்மார்களின் ஆசீர்வாதம் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கட்டும் என்று, பிரதமர் தன் பதிலை நிறுத்திக்கொண்டவுடன், அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

முகநூலுடன் இணைந்திருப்பது உலகத்துடன் இணைந்திருப்பதற்குச் சமம் என்று கூறிய பிரதமர், இந்த சந்திப்பின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment