சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sept 2015

'டூரிங் டாக்கீஸ்' -சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார்

ரு பெரிய மணல் பரப்பில் மக்கள் அமர்ந்து, படுத்துக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும்  படம் பார்க்கும் இடமே டூரிங் டாக்கீஸ் என்று சொல்லுமளவிற்கு சொகுசான திரை அரங்கம். இயற்கையான காற்றோட்டமும், குளுகுளு மணலும் பல நூறு குளிர் சாதனப்பெட்டிகளில் கிடைக்காத குளிர்ச்சியை மக்கள் அன்று அனுபவித்தனர்.

ஜாதி, மத இன வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைத்ததில்  டூரிங் டாக்கீஸ்களின் பங்கு மிக அதிகம். கூட்டுக் குடும்ப ஒற்றுமைக்கு, உறவுகளின் வலிமைக்கு அடித்தளமாக மாட்டு வண்டியிலும், பல கிலோ மீட்டர் நடந்து சென்றும் சென்று  சினிமா பார்ப்பதை சொல்லலாம்.

'சினிமா' காலம் கடந்தாலும் நம்மோடு தொடர்ந்து வரும்  கலையாத கனவுலகம். தமிழ் சினிமாவிற்கு இந்திய அளவில்  தனி மரியாதையை கொடுத்தவர்கள் தமிழர்கள். சினிமாவில் மன்னாதி மன்னனாக வாழ்ந்த எம்.ஜி.யாரை நாட்டை ஆளும் முதல்வராக முடி சூட்டி அழகு பார்த்தது,  மக்கள் திரைப்பட நடிகர்கள் மேல் வைத்த அன்பை  காட்டுகிறது.


காலத்தின் ஓட்டத்தை பிரதிபலிக்கும் நவீன ஊடகம். பல கோடி  பேர்  நல் ஒழுக்கமுடன் வாழ 3 மணி நேரம் காட்டப்படும் ஒரு திரைப்படத்தால் முடியும். அதே நேரத்தில் பல கோடி பேர் டாஸ்மாக் சரக்கிற்கு அடிமையாக்கியதிலும், மோசமான நடிகர்களின் தூண்டுதலும் காரணம் என்றால் மிகையாகாது. திரைப்படத்தில் நல்லவராக நடித்த நடிகரால் மக்கள் நல்ல   சிந்தனைகளோடு வாழ்ந்தார்கள் என்று சொல்லவும் முடியும். அப்படிப்பட்ட சினிமாவை காண வைத்த 'டூரிங் டாக்கீஸ்' 'சினிமா கொட்டகை', 'கீற்று கொட்டகை', 'டென்ட் கொட்டகை' என பல செல்லப் பெயர்களில் அழைக்கப்பட்ட திரை அரங்குகள் இன்றைக்கு அழிந்து போய் விட்டாலும் அவற்றின் நினைவுகள் அழியவில்லை.

பெரிய திரையில் முன் வரிசையில் படம் பார்ப்பதை பெருமையாக நினைத்தவர்களும் உண்டு. தமிழகத்தில் 1940 முதல் 1970 வரை தமிழகத்தில் டூரிங் டாக்கீஸ்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, திரை அரங்காக டூரிங் டாக்கீஸ் மாற்றப்பட்டாலும், சில ஊர்களில் டூரிங் டாக்கீஸ் சென்று படம் பார்ப்பதை 1990 வரை மக்கள் விரும்பினார்கள். தரையில் அமர, சேரில் அமர, மர  நாற்காலியில் அமர என தனித்தனியாக காசும் வாங்குவார்கள். வீட்டில் மூட்டை பூச்சி வந்தால் எந்த படத்திற்கு போனார்கள் என்று கேட்கும் அளவிற்கு சில டூரிங் டாக்கீஸ் புகழும் உண்டு.

இன்றைக்கு திரை அரங்கம் நவீனமயமாகி விட்டாலும் அன்றைய 'டூரிங் டாக்கீஸ்' என்றழைக்கப்பட்ட திரை அரங்கில் சினிமா பார்த்தவர்கள்  அடைந்த  மகிழ்ச்சி, இன்றைக்கு நவீன மால்களில், அதி நவீன தொழில் நுட்ப திரை அரங்குகளில் சினிமா பார்த்தாலும் அது போன்ற இனிமையான காலம் வருமா? என கேட்காமல் இருப்பதில்லை.
அன்றைய டூரிங் டாக்கீஸ் படங்களைப் பார்க்க அடிக்கப்படும் சுவரொட்டிகளும், தெருத் தெருவாக மட்டு வண்டியில் விளம்பரம் செய்து படத்தை  காண வாருங்கள், அபிமான நட்சத்திரங்களை தரிசிக்க வாருங்கள்  என்று அழைக்கும் தமிழின் அழகே தனி. அதிலும் நடிகர், நடிகையரின் கொஞ்சும்  தமிழ் பேச்சும், பாடல்களும் இசையை ரசிக்க வைக்கும்.

இன்றைக்கு சுமார் இரண்டே கால் மணி நேர படத்தை பார்க்கவே எப்போது கதவை திறப்பார்கள் என நினைக்கும் அளவிற்கு உள்ள நிலையில் அன்றைய கால  கட்டத்தில் வள்ளி திருமணம், ஹரிதாஸ், சத்தியவான் சாவித்திரி, சம்பூர்ண ராமாயணம் ராமாயணம், லவகுசா போன்ற நீளமான 4  மணி நேரத்திற்கு மேல் ஓடும் படங்களை சாப்பாடு கட்டிக் கொண்டு பார்த்தவர்கள் அதிகம். பத்து நிமிடத்திற்கு ஒரு பாடலும், ஆடலும் கொண்ட அன்றைய டூரிங் டாக்கீஸ் படங்களை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது.

அன்றைய டூரிங் டாக்கீஸ் படங்களை பார்க்க கால் வலிக்க நின்று, டிக்கெட் எடுத்து சென்று உள்ளே விரும்பிய இடத்தில் அமரும் போது போடப்பட்டுள்ள ஆற்று மணலால் உடலின் அசதி மறைந்து, படம் போடும் வரை குட்டித் தூக்கமும் கிடைக்கும். குள்ளமானவர்கள் மணலை குவித்து அதன் மேல் அமர்ந்து பார்ப்பதும் ரசிக்க வேண்டிய ஒன்று. இடைவேளையில் நம்மைத் தேடி வரும் சீடை, முறுக்கு, கடலை உருண்டை, தட்டை போன்றனவற்றை வாங்க கூட்டம்  அலை மோதும். சிலர் வீட்டில் இருந்தே கடலை உருண்டை, அப்பம், முறுக்கு போன்றவற்றை தனியாக வேட்டி,சேலை, துணிப் பையில் கொண்டு வந்து படம் முடியும் வரை வாய்க்கு வேலை கொடுத்தவர்களும் உண்டு.

படம் பார்ப்பவர்கள் நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிப்பதும், வில்லன் நடிகருக்கு எதிராக உணர்ச்சி வேகத்தில் குரல் கொடுப்பதும், கைதட்டி ஆரவாரம் செய்வதும், கலர் கலரான வண்ண காகிதங்களை வீசுவதும் சாதரணமாக டூரிங் டாக்கீஸ்களில் நடக்கும். இன்றைக்கு சிரிப்புக் காட்சிகளில் இரட்டை அர்த்த வசனமும், குடிபோதையில் சிரிப்பு நடிகர்கள் தோன்றுவதும் ரசிகர்களை அழ வைக்கிறது. கை தட்டி ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் அளவிற்கு படங்கள் தரத்துடன் இல்லாததும்  டூரிங் டாக்கீஸ்களின்   காலத்தோடு முடிந்த கனவாகவே  தோன்றுகிறது.
கால மாற்றத்தில் டூரிங் டாக்கீஸ்கள் நவீன திரை அரங்காக மாறின. பின்னர் என்றைக்கு கேபிள் டிவி, தனியார் தொலைகாட்சிகள் திரைப்படங்கள் மூலம் வீட்டிற்குள்  மக்களை முடங்க வைத்தனவோ அன்றே திரை அரங்குகளும் காணாமல் போனவைகளில் சேர்ந்து கொண்டன. 1998-2000 வரை தமிழக திரை அரங்குகளுக்கும், திரைத்துறைக்கும் பொற்காலம் எனச் சொல்லுமளவிற்கு இருந்த நிலை மாறி 2001 முதல் இன்று வரை பல திரை அரங்குகள் கல்யாண மண்டபமாகவும், வணிக வளாகமாகவும் மாறின.

1990ல் சுமார் 2800 திரை அரங்கம் இருந்த தமிழகத்தில் இன்று 860 திரை அரங்கம் மட்டுமே உள்ளது. சினிமாவின் சொர்க்க பூமியான மதுரையில் 1990ல் 54 திரை அரங்கமும், இன்றைக்கு 22 திரை அரங்கமும் உள்ளது. 1930ல் கட்டப்பட்ட மதுரையின் முதல் திரை அரங்கமான இம்பீரியல் இடிக்கப்பட்டதும், ஆசியாவில் மிகப்பெரிய திரை அரங்கம் எனப் பெயர் பெற்ற  தங்கம் திரை அரங்கம் வணிக வளாகமாகவும் மாறியதும்  காலத்தின் மாற்றம் தான் என்றாலும் சந்தோஷக் கனவுகளின் கடைசிக்கட்டமாகும்.


இருக்கின்ற மிகப் பழமையான டூரிங் டாக்கீஸ்களை அரசு விலைக்கு வாங்கி பழமையான நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டியது அவசியமானது. 'எங்கள் தாத்தா, பாட்டி' இந்த திரை அரங்கில் படம் பார்த்தார்கள் எனச் சொல்லும் உறவை   மறக்காத நினைவுச் சின்னமாக டூரிங் டாக்கீஸ் திகழ வேண்டும்.

இன்றைக்கும் மிகப் பழமையான டூரிங் டாக்கீஸ், திரை அரங்கை கடந்து செல்லும் போது ஏதோ ஒரு சந்தோஷத்தை  தொலைத்து விட்டது போலவும், வீடு தேடி தொலைகாட்சியில் வந்த திரைப்படத்தால் உறவுகளின் அர்த்தமும், கூட்டுக் குடும்ப ஒற்றுமையும், நிம்மதியும் தொலைந்து போனது போலத்  தோன்றுவதும் உண்மை தான்.

அன்று ரூ.1 கொடுத்து படம் பார்த்த போது இருந்த சந்தோசம் இன்றைக்கு 100 முதல் 500 வரை கொடுத்தது பார்க்கும் போது இல்லை. டூரிங் டாகீஸ் போலவே தற்போதைய படங்களில் சந்தோஷமும், நல் எண்ணங்களை வளர்க்கும் கருத்துக்களும் காணாமல் போய் விட்டது.


No comments:

Post a Comment